Wednesday, December 29, 2004

அரங்கனுக்கு 'ஓ' போட்ட கிருஷ்ணனுக்கு ஒரு 'ஓ'

திருச்சி சங்கரனும், நாகை முரளிதரனும் பக்கவாத்யம் வாசிக்கும் கச்சேரியை flop ஆக்குவதென்பது அமேதியில் ராஜீவ் காந்தியைத் தோற்கடிப்படுதைவிடக் கடினமான காரியம். இந்த இரண்டு ஜாம்பவான்களும் மேடையில் இருந்த பொழுதும், Centre-Stage-ஐ டி.எம்.கிருஷ்ணா தனதாக்கிக் கொண்டார் என்று சொன்னாலே அவர் எப்படிப் பாடினார் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த சீஸனில் கிட்டத்தட்ட 15 கச்சேரிகள் கேட்டவிட்ட நிலையில், My Concert of the season என்று தயங்காமல் இதைச் சொல்வேன்.

அட் தாள வர்ணம் ரீதிகௌளையில் விளம்ப காலத்தில் முழங்க அதற்கேற்றார் போல திருச்சி சங்கரன் இடது கை ம்ருதங்கத்தின் தொப்பிப் பகுதியை கொஞ்ச, வலது கை ம்ருதங்கத்தின் வலந்தலையிலிருந்து அவருக்கே உரிய இனிய நாதத்தை எழுப்ப, கச்சேரி வர்ணத்திலேயே களைகட்டிவிட்டது. கிருஷ்ணா அவ்வப்பொழுது புயல் போலப் பொங்குகிறார் அடுத்த நொடியே பூங்காற்றாய் மாறிவிடுகிறார். கன்னட ராகத்தில் 'ஸ்ரீ மாத்ருபூதத்தை' மத்யம காலத்தில் பாடி கல்பனை ஸ்வரங்களை துரிதமான காலப்ரமாணத்தில் பாடி முன்னால் ஒலித்த ரீதிகௌளைக்கு நல்ல contrast கொடுத்தார்.

கன்னடவைத் தொடர்ந்து வந்த முகாரி ஆலாபனையைக் கேட்டவுடனேயே கிளம்பிவிடலாமா என்று கூட நினைத்தேன். அவ்வளவு நிறவாக இருந்தது. முகாரி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது செம்மங்குடி சீனிவாச ஐயர்தான். அவரது சிஷ்யரான டி.எம்.கிருஷ்ணா பாடிய முகாரி would have made his Guru proud. முகாரி என்றாலே மூக்கால் அழ வேண்டும் என்ற வகையில் சிலர் பாடுவார்கள். உண்மையில் முகாரி ஒரு சோகமான ராகம் மட்டுமன்று, தியாகராஜர் சபரியின் ஆனந்தத்தை அந்த ராகத்தில்தான் விவரிக்கிறார். அந்த ராகத்தில் ஒரு மங்களம் கூட அமைத்துள்ளார். அந்த ராகத்தை கிருஷ்ணா பாடும் பொழுது அத்புதம் என்னும் ரஸம் அரங்கெங்கும் பரவியது. ஒரு ஸ்வரத்தை விட்டு இன்னொரு ஸ்வரத்துக்கு ராகம் செல்லும் பொழுது, இரண்டு ஸ்வரங்களும் பிரியும் காதலர்களைப் எத்தனை நிதானமாக பிரிவைத் தள்ளிப் போடுவார்களோ அதைப்போல ஒவ்வொரு ஸ்வரத்தையும் இழுத்து இழைத்து குழைத்ததில் பொங்கிய ராகப்பிரவாகத்தில் கரையாத உள்ளங்களே இருந்திருக்காது. ஆலாபனையைத் தொடர்ந்து கிருஷ்ணா செம்மங்குடியின் favourite-ஆன 'க்ஷீணமை'-யை எடுத்துக் கொண்டாரானால், அவர் செய்த ஆலாபனையுடன் அது சரியாக ஒட்டாதே என்று கவலையின் ஆழ்ந்திருக்கையில், விளம்ப காலக் கிருதியான 'காருபாரு'-வை எடுத்துக் கொண்டு என் மனதில் பாலை வார்த்தார். கீர்த்தனையிலும் ஆலாபனையிலுமே முகாரியின் ராகத்தை முழுவதும் காட்டியாகவிட்டது, பிறகு நிரவல் ஸ்வரம் எல்லாம் பாடியிருந்தால் கச்சேரி கொஞ்சம் தோய்வடைந்திருக்கும். இதனை உணர்ந்த கிருஷ்ணா, சொக்கிப் போய் உட்கார்ந்திருந்த கூட்டத்தை எழுப்ப மத்யம காலத்தில், செம்மங்குடியின் இன்னொரு favourite-ஆன 'பிரான ப்ரோவ'-வை (கல்யாணி ராக ஆலாபனையெல்லாம் இல்லாமல்) பாடி, அதி வேகமாக நிரவல், கல்பனை ஸ்வரம் எல்லாம் செய்தார். நாகை முரளீதரனின் வயலின் கிருஷ்ணாவை நிழல் போலத் தொடர்ந்த, சில சமயத்தில், அவர் பாடாத சில இடங்களையும் தொட்டு அப்ளாஸ் மேல் அப்ளாஸாக வென்று கொண்டிருந்தது. (அப்ளாடிங் க்ளப்பின் முதல் உறுப்பினரே டி.எம். கிருஷ்ணாதான். மிருதங்கத்தையும் வயலினையும் பார்த்து 'பலே சபாஷ் பேஷ் பேஷ்' போன்ற வார்த்தைகளை உதிர்த்தது போக மிச்ச நேரத்தில்தான் பாடினார் என்றுச் சொல்ல வேண்டும்).

இந்தக் கீர்த்தனை முடிந்ததும் பல இரசிகர்கள் speaker volume ரொம்ப அதிகமாக இருப்பதாகக் கூறினார்கள். நான் மேடை டிக்கட் வாங்கி கலைஞர்களுக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டதால் எனக்கு ஒன்றும் சத்தமாகத் தெரியவில்லை. In fact, நடுவில் மின்சாரம் அணைந்த பொழுது கேட்ட இசை மின்சாரம் இருந்த பொழுது கேட்ட இசையைவிட நன்றாக இருந்தது;-)

First course, Second course எல்லாம் முடிந்தபின் Main Course-க்கு வர வேண்டியதுதானே. டி.எம்.கிருஷ்ணா மெய்ன் ராகமாக காம்போதியைத் தொட்டவுடனேயே அவர் 'ஓ ரங்கசாயி'-தான் பாடப் போகிறார் என்பதைப் பலர் ஊகித்திருப்பார்கள். ஆலாபனையை ரொம்பவே நிதானமாய் விஸ்தாரமாய் ஒரு பெரிய ஓவியம் தீட்டுவது போலப் பாடினார். முதலில் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாய் காம்போதி என்கிற ஓவியத்தின் முதல் புள்ளிகளும் கோடுகளும் மலர்ந்தன, பின்பு படிப்படியாக ஸ்வரம் ஸ்வரமாய் உருவங்கள் மலர்ந்து, அவ்வுருவங்களைச் சுற்றி அலங்காரங்கள் பிறந்து முழுமையடைந்த பொழுது, இதைத் தாண்டி யாரும் காம்போதியின் ஏதாவது பாட முடியுமா என்று கண நேரம் நினைத்திருக்கலாம். முடியும் என்பதைக் காட்டினார் நாகை முரளீதரன். கிருஷ்ணா ஆலாபனையில் ஏற்படுத்திய நிறைவை, இவர் அவர் எடுத்துக் கொண்டதில் பாதி நேரத்திலேயே கொண்டு வந்துவிட்டார். குறிப்பாக, டி.எம்.கிருஷ்ணாவின் ஆலாபனையிலும் சரி, நாகை முரளீதரனின் ஆலாபனையிலும் சரி மேல் ஸ்தாயி காந்தாரத்தில் நின்று கொண்டு பிருகா மழையை உதிர்த்து ராகத்தின் எல்லா எல்லைகளுக்கும் விரைந்தது வெகு ஜோர்! கிருஷ்ணா, மேல் ஸ்தாயி பஞ்சமத்தை இப்போ தொட்டுவிடுவார் தொட்டுவிடுவார் என்று ஆவலாக இருக்கையில், அதைத் தொடாமலேயே விட்ட குறையை நாகை முரளீதரனின் ஆலாபனை பூர்த்தி செய்தது.

திருச்சி சங்கரன் சிறந்த மிருதங்க வித்வானாக இருக்கலாம். ஆனாலும், அவரது திறைமையெல்லாம் பாடகர் என்ன காலப் ப்ரமாணத்தில், என்ன தாளத்தில் விடுகிறாரோ அதில்தானே காட்ட முடியும். இதனை உணர்ந்த கிருஷ்ணா அதி விளம்ப காலத்தில் கிருதியைத் தேர்வு செய்து அரங்கனுக்கு ஓ போட ஆரம்பித்தார், அதாவது, 'ஓ ரங்கசாயி' பாட ஆரம்பித்தார். பல்லவி வரியிலேயே திருச்சி சங்கரன் பல வித்தைகள் காட்டினார். குறிப்பாக பல்லவி முடிவடையும் கடைசி அரை ஆவர்த்தனத்தில் அவர் ஒவ்வொரு முறையும் வேறு வேறு விதமாகக் கொடுத்த flourish வெகு அற்புதமாக இருந்தது. 'பூலோக வைகுந்தம்' என்கிற இடம் வந்ததும், டி.எம்.கிருஷ்ணா திருச்சி சங்கரனைத் தனி ஆவர்த்தனம் வாசிக்கச் சொன்னார். அதற்கு சங்கரனோ, 'நீங்கள் பாடுங்கள் அப்புறம் வாசிக்கிறேன்' என்று மறுத்தளித்தார். பூலோக வைகுந்தம் என்ற வரியில் நிகழ்ந்த நிரவலும் அதனைத் தொடர்ந்த ஸ்வரப்ரஸ்தாரமும் வைகுந்தத்தை பூலோகத்துக்கே இட்டு வந்தன. வெகு விஸ்தாரமான காம்போதிக்குப் பின் திருச்சி சங்கரனின் தனி ஆவர்த்தனம் ஆரம்பித்தது.

இரண்டு களை ஆதி தாளம், விளம்ப காலத்தில் தனி வாசிக்க கசக்குமா என்ன? (Hardly anybody left the hall when the thani started.)தொப்பி பக்கத்தில் பல இனிமையான நாதங்களை எழுப்பிய deft strokes-யையும், மின்னல் வேகத்தில் பொழிந்து தள்ளிய அவரது வலது கரத்தின் ஆற்றலையும் என் வார்த்தைகளுள் அடக்க முடியாது. அன்ன நடை என்பதா? அழகியப் பெண்ணின் ஒய்யார நடை என்பதா? மதம் பிடித்த யானையின் ஓட்டம் என்பதா? தீவிழித்து சிலிர்தெழுந்த சிங்கமென்பதா?சதுஸ்ர நடையில் பல வித்தைகள் காட்டி பின்பு மிஸ்ர நடைக்கு மாறி அதிலும் பல சாகசங்கள் புரிந்தார். கஞ்சிரா வாசித்த சுந்தர்குமார் (அட அவர் இருததே இப்பொழுதான் தெரிகிறது), தனி ஆவர்த்தனத்தில் எந்த தோய்வும் ஏற்படாத வண்ணம் நன்றாக வாசித்தார். குறையில் கொஞ்சம் திஸ்ர நடைஅயையும் காட்டிவிட்டு, அற்புதமான ஒரு கோர்வையை வைத்து தனி ஆவர்த்தனத்தை சங்கரன் முடித்த பொழுது அரங்கமே அதிர்ந்தது.

அமைதிக்குப் பின் வரும் புயல் போல காம்போதிக்குப் பின் பூர்வி கல்யாணி தொடங்கியது. அப்பொழுதே மணி 6.30-ஐ தாண்டிவிட்டது. 7.00 மணிக்குதான் கச்சேரியை நிறைவு செய்ய வேண்டுமென்று தவறாக நினைத்திருந்த கிருஷ்ணா பூர்விகல்யாணியில் ராகம் தானம் பல்லவி பாட ஆரம்பித்தார். கிருஷ்ணா ராகம் பாடி அதை நாகை முரளீதரன் வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது வந்தார் யக்ஞராமன், ஏதோ சைகையில் சொன்னார். "ஆறரைக்கா? நான் ஏழு-ன்னு நினைச்சேன்" என்று கிருஷ்ணா வழிந்தபடி ஐந்தே நிமிடத்தில் தானம் பல்லவி இரண்டையும் முடித்துக் கொண்டார்.

வர்ணத்தையும் ஒப்புக்குப் பாடிய RTP-யையும் ஒதுக்கிவிட்டல், நான்கே பாடல்களைக் கொண்டு ஒரு கச்சேரி முழுவதும் பாடியிருப்பது தெரியும். பாடிய அனைத்தையும் தீர்க்கமாக, விஸ்தாரமாக எந்த குறையுமின்றி பாடி அந்த மாலை வேளையை ஒரு மறக்க முடியா மாலையாக மாற்றிய கிருஷ்ணாவுக்கும், நாகை முரளீதரனுக்கும், திருச்சி சங்கரனுக்கும் எனது நன்றிகளை உரைத்தபடி, வழக்கமாக செல்லும் 7.30 மணி கச்சேரிக்குக் கூட செல்லாமல் வீடு திரும்பினேன்.

இந்த சீஸனில் சஞ்சய் சுப்ரமணியமும், டி.எம்.கிருஷ்ணாவும் பாடியது போலத் தொடர்ந்து பாடுவார்களேயானால் கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம் ஒருவேளை திரும்பி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பாடாத பாட்டெல்லாம்

விஜய் சிவாவின் கச்சேரிகளுக்கு வேறெதற்காகக்ச் செல்லாவிடினும், அவர்பாடும் கீர்த்தனைகளைக் கேட்பதற்காகவே செல்லலாம். இன்று வேறு யாருமே பாடாத, மணி மணியாய் இருக்கும், பல கீர்த்தனைகளைப் பாடுபவர் விஜய் சிவா. ராயப்பேட்டையில் இருக்கும் ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில், வலையப்பட்டி நாதலயா ட்ரஸ்ட் நடத்தும் இசை விழாவில், 4.30 மணி ஸ்லாட் விஜய் சிவாவுக்கு. நான் செல்லும் பொழுது, 'சரோஜ தள நேத்ரியை' முடித்துவிட்டு, சங்கீர்ண ஜாதி அட்ட தாளத்தில் ஒரு திருப்புகழைப் பாடிக் கச்சேரியை முடித்துக் கொண்டிருந்தார் ஒரு இளம் வித்வான்.

அந்தக் கச்சேரி முடிந்ததும், சரியாக 4.30-க்கு மேடையேறி, 4.35-க்கு 'கணநாயகம் பஜேஹம்' பாடலை ருத்ரப்ரியாவில் ஆரம்பித்தார். (என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாமி, நான் 'பூர்ண ஷட்ஜமம்' என்று குறித்துக் கொளவதைப் பார்த்து, தீக்ஷதர் கிருதினா ருத்ரப்ரியானுதான் சொல்லணும் என்றார்.) ருத்ரப்ரியாவில் கல்பனை ஸ்வரங்கள் சரங்களாய் விஜய் சிவாவின் வாயிலிருந்தும், எம்பார் கண்ணனின் வில்லிருந்தும் பெருக்கெடுத்த வண்ணம் இருந்தன. ருத்ரப்ரியாவைத் தொடர்ந்து, ஆலத்தூர் சகோதர்கள் அடிக்கடிப் பாடிய, 'எந்துகு நிர்தய' பாடல் ஹரிகாம்போஜியில் தொடர்ந்தது. (காம்போஜி கோலோச்சும் இந்தக் காலத்தில், யார் ஹரிகாம்போஜியெல்லாம் பாடுகிறார்கள்.)

ஒரு ராகம் கேட்டால் கிடைக்கும் நிறைவை வார்த்தைகளில் சொல்வது கடினம். சில சமயம் 1 மணி நேரம் கேட்டால் கூட நிறைவேற்படுவதில்லை, சில சமயம் 10 நிமிடத்திலேயே நிறைவேற்பட்டுவிடுகிறது. விஜய் சிவா பாடிய முதல் மூன்று ராகங்களும் (ருத்ரப்ரியா, ஹரிகாம்போஜி, உசைனி) 20 நிமிடத்துள் பாடப்பெற்றன. விறுவிறுப்பான மத்யம காலத்தில், இரண்டு தீக்ஷதர் கீர்த்தனைகள், 1 தியாகராஜர் கீர்த்தனையை அழகாகத் தேர்வு செய்து, அதில் தேவையான அளவு ஸ்வரப்ரஸ்தாரமும் ஆலாபனையும் செய்து கச்சேரியை களை கட்ட வைத்தார். இதற்கு பக்கபலமாக எம்பார் கண்ணனின் வயலின் வாசிப்பும், மனோஜ் சிவா மற்றும் புருஷோத்தமனின் தாள வாத்திய வாசிப்பும் இருந்தன.

சப் மெயினாக சிம்மேந்திரமத்யமத்தை எடுத்துக் கொண்டு, வெகு நாளாக பிரதி மத்யம ராகத்தைக் கேட்க ஏங்கிக் கொண்டிருக்கும் எனக்கு இது கர்ணாம்ருதமாக இருந்தது. இது கீரவாணியா, ஷண்முகப்ரியாவா என்றெல்லாம் குழப்பாமல் எடுத்த எடுப்பிலேயே சிம்மேந்திர மத்யமம் தெளிவாகத் தெரியும்படி அழகாக பாடினார். எம்பார் கண்ணனின் response, விஜய் சிவா உருவாக்கிய விறுவிறுப்பைக் மேலும் ஏற்றி, மின்னல் வேகத்தில் பறக்கும் ஸ்வர அம்புகளை உதிர்த்துத் தன் வில் வித்தையைப் பறை சாற்றினார். ஆலாபனையைத் தொடர்ந்து, 'குஹ சரவண பவ' என்னும் மற்றொரு அரிய கீர்த்தனையைப் பாடி, நிரவல் ஸ்வரம் செய்து முடிக்கும் பொழுது, நான் விரும்பும் கிரிக்கெட் அணி முதல் 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்தால் எழும் மனநிலையை ஏற்படுத்தியது. இன்னும் ஸ்லாக் ஓவர்ஸில் விளாசுவதுதான் பாக்கி. (சிம்மேந்திரமத்யம கீர்த்தனை செய்ய ஆரம்பித்த பொழுது மனோஜ் சிவாவின் மிருதங்கத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டது, அடிக்கடி மிருதங்கத்தின் தொப்பியை சரி செய்த வண்ணம் இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் தனது முயற்சியைக் கைவிட்டு வாசிக்க அதே நிலையில் வாசிக்க ஆரம்பித்தார். திருச்சி சங்கரன், காரைக்குடி மணி போன்ற சீனியர் வித்வான்கள் கச்சேரி மேடையிலேயே ஒரு spare மிருதங்கம் வைத்திருப்பதன் அவசியம் அப்பொழுதுதான் எனக்கு விளங்கியது. மனோஜ் சிவாவுக்கும் விளங்கியிருக்கும் என நம்புகிறேன்.)

சப் மெய்னுக்கும், மெய்னுக்கும் இடைப்பட்ட காலமான 2 நிமிடத்தில், இன்னொரு அரிய ஷ்யாமா சாஸ்த்ரியின் தோடி ராகக் கிருதியன 'கருணாலனி'-யைப் துரித காலத்தில் பாடினார். கச்சேரியின் பிரதானமாக சங்கராபரணத்தை எடுத்துக் ஒண்டார் விஜய் சிவா. போன சீசனில் நான் சென்ற இடத்திலெல்லாம் காம்போஜி ஒலித்தது போல இந்த வருடம் சங்கராபரணம் துரத்துகிறது. இருந்தாலும், சங்கராபரணம் அப்படி ஒன்றும் அலுப்பை ஏற்படுத்தக் கூடிய ராகம் அல்ல. அதுவும் விஜய் சிவா நிதானமாக, விஸ்தாரமாக, இழைத்து இழைத்துப் பாடும் பொழுது அப்படியொன்றும் கேட்க கஷ்டமாக இல்லை. (இருப்பினும், அவருக்கு முன் அந்த மேடையில் கச்சேரி செய்தவரும் சங்கராபரணத்தையே பிரதானமாகப் பாடியதை மனதில் கொண்டு வேறேதும் பாடியிருக்கலாம்.) ஆலாபனையை மெதுவாக வளர்த்து உச்சஸ்தாயியை அடைந்ததும், அதுவரை உருவாக்கிய ரதத்தில் இரண்டு அரபிய குதிரைகளைக் கட்டியது போல, அவர் குரலிலிருந்து புறப்பட்ட புரவி வேக பிருகாக்கள், சங்கராபரணம் என்ற தேரை இழுத்துக் கொண்டு அரங்கெங்கும் ஓடின. ஆலாபனையின் போதே என்ன பாட்டு பாடுவார் என்று பலர் அனுமானித்துக் கொண்டிருக்கையில், எல்லார் அனுமானத்தையும் பொய்யாக்கி ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார் விஜய் சிவா.

சுத்தாநந்த பாரதியின் 'துக்கிய திருவடி' பாடலை இந்நாளில் கேட்பது துர்லபம். மதுரை மணி ஐயர் அந்த பாடலில் 'எத்தனையோ பிறவி' என்கிற இரு வார்த்தையை வைத்துக் கொண்டு செய்த நிரவல் காலத்தைக் கடந்து ரசிகர்களின் நெஞ்சில் நிற்கும். விஜய் சிவா இந்தப் பாடலை, பிரதோஷ வேளையில் (சுமார் 6.00 மணிக்கு) அரங்கமே மகிழ்ச்சியில் துள்ளியது. துர்திருஷ்டவசமாக, விஜய் சிவா சங்கராபரண ராகம் பாடி கீர்த்தனையைப் பாடி 'எத்தனையோ பிறவியில்' நிரவல் ஆரம்பிக்கும் பொழுது கச்சேரியை முடிக்க கைவசம் அரை மணி நேரம்தான் இருந்தது. அந்த அரை மணியில் கடைசி 10 நிமிடம் துக்கடாவுக்கும் 5 நிமிடம் தனி ஆவர்த்தனத்துக்கும் போக, எஞ்சிய நேரத்தில் எவ்வளவு நன்றாகப் பாட முடியுமோ அவ்வளவு நன்றாகத்தான் பாடினார். ஆனாலும் கேட்டவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பாடியிருக்கலாமே என்ற எண்ணம் நிச்சயம் இருந்திருக்கும். என்னதான் 280 ரன் நல்ல ஸ்கோர் என்றாலும், கடைசி 10 ஓவரில் 60 ரன் மட்டுமே அடித்தால் கொஞ்சம் நிறைவில்லாமல்தானே போகும்? (அவசர அவசரமாக வாசித்த தனியைப் பற்றிக் குறிப்பிடும்படியாகச் சொலல் ஒன்றுமில்லை).

துக்கடாவில் கூட Vintage Musiri Special 'என்றைக்கு சிவ கிருபை' பாடலைப் பாடி, கர்நாடக இசையின் பொற்காலத்தை நினைவுபடுத்தினார். அடுத்த கச்சேரி செய்ய வேண்டிய டி.வி.சங்கரநாராயணன் க்ரீன் ரூமுக்குள் பிரவேசித்துவிட, ஒரு விருத்தத்தைப் பாடி, திருப்புகழுடன் கசேரியை முடித்துக் கொண்டார் விஜய் சிவா. அடுத்த சீஸனில் (முடிந்தால் இந்த சீஸனிலேயே) விஜய்சிவாவின் ஒரு 3 மணி நேரக் கச்சேரிக்குச் செல்ல வேண்டும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 28, 2004

இரட்டை மாட்டு வண்டி

மாம்பலம் சிஸ்டர்ஸ் மாமி டாக்கில் நம்பர் 1 ஆக இருப்பதை முன்னால் கூறியிருந்தேன். 22-ஆம் தேதி மதியம் ம்யூசிக் அகாடமியில் அவர்கள் கச்சேரி இருந்தது. எனக்கும் அன்று மாலை ம்யூசிக் அகாடமிக்கு அருகிலுள்ள நாரத கான சபாவுக்குச் செல்ல வேண்டியிருந்த்தால், கொஞ்சம் முன்னாடியே சென்று மாம்பலம் சிஸ்டர்ஸையும் கேட்ட்டுவிடுவது என்று புறப்பட்டேன். நான் நுழையும் பொழுது 'வல்லப நாயகஸ்ய' என்ற பேகடா ராகப் பாடல் முழங்கிக் கொண்டிருந்தது. எங்கே உட்காரலாம் என்று அந்த முக்கால்வாசிக்கு மேல் காலியாய் இருந்த ஹாலை ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது இரண்டு மாமிகள் ரொம்ப serious-ஆக பேசிக் கொண்டிருந்தார்கள். பேசினது அரங்கிற்கே கேட்டதால் என் காதிலும் கொஞ்சம் விழுந்து தொலைத்தது. "ரஞ்சனி - காய்த்ரி பார்த்திருக்கியோ? அவா கச்சேரில, ஒருத்தி புடவையோட பார்டர் இன்னொருத்தி புடவையோட கலரா இருக்கும், இவா ரெண்டு பேரும் ஒரே மாதிரி புடவை கட்டிண்டு இருக்காளே, அதுவும் ·ப்ளாரசண்ட் க்ரீன்ல" புடவை செலக்ஷன் எப்படியானால் என்ன ராக செலக்ஷன் நன்றாக இருந்தால் சரி என்று அந்த மாமிகள் சத்தம் என் காதில் விழா இடமாகப் பார்த்து உட்கார்ந்தேன்.

பேகடாவைத் தொடர்ந்து ரேவகுப்தியில் 'க்ரஹ பலமேமி' ஆரம்பமானது. ஒருவர் பாடுவதைவிட இருவர் சேர்ந்து பாடுவதற்கு நிறைய உழைப்பு தேவை. ஒவ்வொரு சங்கதியையும் எத்தனை தடவை பாட வேண்டும் என்று முன்பே முடிவு செய்தி அதற்கேற்றார் போல பயிற்சி செய்து பாட வேண்டும். சபையில் பாடும் பொழுது ஒருவருக்கு திடீரென புதிதாக ஒரு சங்கதி தோன்றினால் அதை உடனே அரங்கேற்ற முடியாது. இதைப் போன்ற சில தடைகளும் இரட்டையர் கச்சேரியில் உண்டு. எல்லாவற்றையும் விட முக்கியமாக, இருவர் சேர்ந்து பாடினாலும், கேட்பவர் காதில் ஒருவர் பாடுவது போலத் தோன்ற வேண்டும். மாம்பலம் சகோதரிகள், சித்ரா மற்றும் விஜயலக்ஷ்மி பாடும் பொழுது இரண்டு குரல்கள் தெளிவாகக் கேட்கிறது. இருவர் குரலும் அடிப்படையிலேயே வேறுபடுகிறது. ஒருவருக்கு கனமான சாரீரம், ஒருவர் அதிகம் மூக்கில்தான் பாடுகிறார். இது போதாதென்று கீர்த்தனை பாடும் பொழுதும் இருவருக்கும் slight offset இருக்கிறது. ரேவகுப்தி கீர்த்தனையிலும் வேறு சில இடங்களில் ஒருவர் மேல்ஸ்தாயியிலும் மற்றொருவர் கீழ் ஸ்தாயியிலும் பாடினர். Technically it might have been OK, but was not pleasant to the listener's ears.

இருவரில் யார் விஜயலக்ஷ்மி யார் சித்ரா என்பதை நான் அறியேன். ஆதலால் M1, M2 என்று வைத்துக் கொள்வோம். அன்றைய தினத்துக்குரிய பைரவி ராகத் திருப்பாவையைப் பாடிவிட்டு, M2 சுத்த தன்யாஸி ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். தனது ஆலாபனையை crisp-ஆக வைத்துக் கொள்ள எவ்வளவோ மெனக்கெட்டாலும், அவரது கனமான குரல் அவ்வப்பொழுது சற்றே ஸ்ருதியிலிருந்து விலகிய வண்ணம் இருந்தது. அவரைத் தொடர்ந்து வயலினில் வாசித்த ஹேமலதாவோ, இரண்டே நிமிடத்தில் சுத்த தன்யாசியின் சாரத்தை அழகாக வெளிக்கொணர்ந்தார். 15 நிமிடத்துக்குள் ஆலாபனை, கீர்த்தனை, ஸ்வரம் எல்லாம் முடிந்தாகிவிட்டது. விரிவாகவும் இல்லாமல், சிறிய காலத்துக்குள் நிறைவைத் தரும் precision-உடனும் இல்லாமல், நிறைவளிக்கா வண்ணம் சுத்த தன்யாஸி ஏதோ பேருக்கு வந்து, முடிந்தும் விட்டது.

மின்னல் வேகத்தில் மாளவி ராகத்தில் ஒரு தரங்கத்தைப் பாடிவிட்டு சங்கராபரண ராகத்தை M1 தொடங்கினார். பாடகர்களுக்கு வருஷமாக ஆக தொண்டை கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படும். அப்படி ஒரு நிலைமை உண்டானால், பல காலம் பாடமுடியாமல் போய்விடும். ஆனால் M1-க்கோ அதைப் பற்றிய கவலையே இல்லை, தொண்டையே இல்லாவிட்டாலும் கூட அவர் கச்சேரி நடந்துவிடும். ஏனெனில் அவர் பாடுவதற்கு அதிகம் உபயோகிப்பது மூக்கைத் தானே. மேல் ஸ்தாயி ஷட்ஜமத்தை நெருங்கும் பொழுதே குரலில் ஒருவித strain தெரிகிறது, அதற்கும் மேல் பாடும்போதெல்லாம், பாடகருக்கும் கஷ்டம்...கேட்பவருக்கும் கஷ்டம். 'ஸ்வர ராக சுதா' கீர்த்தனையை அழகாகப் பாடினாலும், நிரவல் ஸ்வரம் எல்லாவற்றிலும் ஒருவித அவசரமும், நிறைவின்மையும் இருந்தது. இந்த ராகத்திலும் அழகாக வாசித்து வயலின் வித்வான்தான் அப்ளாஸ்களை அள்ளிச் சென்றார்.

சங்கராபரணத்தைத் தொடர்ந்து 'M1', நவநீத ராகத்தை லேசாக கோடி காட்ட ஆரம்பித்தார். இதில் ஏதோ துக்கடா பாடப் போகிறார்கள் என்று நினைத்தால், ஆலாபனை தொடரந்து கொண்டே இருந்தது. 'சரி இந்த ராகத்தையாவது விஸ்தாரமாகப் பாடுவார்கள்' என்று நாம் எண்ணும் பொழுது பட்டென்று நிறுத்திவிட்டு வயலினுக்கு சான்ஸ் கொடுத்தார் M1. வயலின் ஆலாபனைக்குப் பின், நல்ல குரலுடைய M2 ஆலாபனையைத் தொடர ஆரம்பித்தார். குரலில் நல்ல வளம் இருப்பினும், நவநீதம் போன்ற அபூர்வ ராகத்தைக் கையாளும் பக்குவம் இவருக்கில்லை. அவ்வப்பொழுது ராகத்தை வெளியில் சென்ற வண்ணம் இருந்தார். 'அபூர்வ ராகத்தை அபூர்வமாகப் பாட வேண்டும்' என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தம், அந்த ராகங்களைப் பாட அதிகம் உழைத்து, அதில் நல்ல ஆற்றல் வந்த பின், எப்பொழுதாவது பாட வேண்டும் என்பதாகும். "நவநீத கிருஷ்ணனை துதி மனமே ஏகாதஸி நாளாம் இன்று' என்கிற பல்லவி கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், வைகுண்ட ஏகாதசி நாளான அன்று பொருந்தி வருவதால் மட்டுமே ஒரு ராகத்தைப் பாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் அபூர்வமே கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. ஆனால், அபூர்வத்தை அலங்கோலப்படுத்துவதைவிட தெரிந்ததை அழகாக பாடுவதே மேல் என்கிற கட்சியைச் சேர்ந்தவன். இரண்டு களை கண்ட ஜாதி திரிபுட தாளத்தில், முக்கால் இடம் தள்ளி எடுப்பு வைத்து, பல்லவியைப் பாடி ராகமாலிகையில், மோகனம், வசந்தா, ப்ருந்தாவனி, சாமா ராகங்களைப் பாடினார்கள். ராகமாலிகை ஸ்வரம் முடிந்து ஸ்வரம் வரும்பொழுது 'வசந்த கிருஷ்ணனை', 'மோஹன கிருஷ்ணனை' என்றெல்லாம் பல்லவியை மாற்றிப் பாடிய பொழுது கூட்டம் ஆரவாரித்தது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடி ஸ்ரீநிவாசனும் (மிருதங்கம்), ரங்காச்சாரியும் (கஞ்சிரா) தனி ஆவர்த்தனம் வாசித்தார்கள் (5 நிமிடத்துக்கும் குறைவாய் இருக்கும் தனியைப் பற்றி தனியாக வேறொன்றும் சொல்வதற்கில்லை). மொத்த ராகம் தானம் பல்லவி, தனி ஆவர்த்தனம் முழுவதும் 25 நிமிடத்துக்குள் முடிந்தேவிட்டது. இரண்டு மணி நேர கச்சேரிகளில் மூன்று ராகத்தை எடுத்துக் கொண்டு, ஒன்றையுமே நிறைவாக பாடாமல் இருந்ததற்கு பதிலாக, ஒரே ராகத்தை விஸ்தாரமாகப் பாடியிருந்தால் கச்சேரி இன்னும் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும்.

நிறைவாக ஆஹிர் பைரவில் ஒரு துக்கடா பாடி, எம்.எஸ்-இன் நினைவாக "வடவரையை மத்தாக்கி' பாடி கச்சேரியை முடித்தனர் மாம்பலம் சகோதரிகள். நானும் விட்டால் போதும் என்று அடுத்த கச்சேரியைக் கேட்க நாரத கான சபாவுக்கு நடையைக் கட்டினேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 23, 2004

விளைந்த பயிர்

21/12/2004, Sanjay Subramaniam @ Indian Fine arts, 7.30 P.M

விளையும் பயிர் முளையிலேயே தெரியுமாம்? முளையில் தெரிந்த பயிர்கள் அனைத்துமே விளைந்துவிடுகின்றதா என்ன? அதுவும் சங்கீதத் துறையில் ஆயிரத்தில் ஒரு பயிரைக் காண்பதே அபூர்வம். அந்தச் சிலரில், சில வருடங்களுக்கு முன் முளையிலேயே தெரிந்த பயிராக இருந்த சஞ்சய் இன்று விளைந்த பயிராய் விருந்தளிக்கும் சஞ்சய் சுப்ரமண்யமும் ஒருவர். சில மாதங்கள் முன்பு சஞ்சயின் கச்சேரியை பெங்களூரில் கேட்டேன். பெங்களூர் பனியானாலோ என்னவோ தெரியவில்லை, குரல் எக்கச்செக்கமாய் மக்கர் செய்து அடிக்கடி ஸ்ருதியிலிருந்து விலகிய வண்ணம் இருந்தது. இதனாலேயே அன்று பாடிய எந்த ஒரு ராகமும் நிறைவாகவில்லை. ஆனால் நேற்றைய கச்சேரியின் theme பூர்ணத்துவம் என்றால் அது மிகையாகாது. 5 நிமிடம் பாடிய பேகடா ஆலாபனையாகட்டும், விஸ்தாரமாய் பாடிய கேதார கௌளை ஆலாபனையாகட்டும், பாடிய விதத்தில் ஒரு completeness இருந்தது. இன்னும் கொஞ்சம் பாடியிருக்கலாமே என்ற எண்ணம் துளியேனும் எழவில்லை.

சஹானா ராகத்தில் அமைந்த 'கருணிம்ப' வர்ணத்தைத் தொடங்கிய பொழுதே ஒரு relaxed ambience உருவாகிவிட்டது. சஹானாவைத் தொடர்ந்து சஞ்சய் ஸ்ரீ ராகத்தை ஆரம்பித்த பொழுது, இன்று ரோலர் கோஸ்டர்ல் எல்லாம் போகப் போவதில்லை, நல்ல வேலைப்பாடுகள் கொண்ட ரதத்தில் கம்பீரமாய் பவனி வரப்போகிறோம் என்பதை ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள். விளம்ப காலத்தில் அமைந்த பாடலில், பல்லவி வரியில் வரும் 'ஸ்ரீ ஸாரஸ பதே ரஸ பதே ஸபதே பதே பதே' (சாஹித்யமும் லய விவகாரமும் கலந்து, ஸாரஸபதே என்கிற வார்த்தையை ஒவ்வொரு எழுத்தாய்க் குறைத்து, அர்த்தமும் கெடாம அமைந்திருக்கும் தீக்ஷதரின் கீர்த்தனையில்தான் எத்தனை அழகு!!!) என்கிற வரியை துரிதகாலத்திலும் பாடிய விதம் வெகு அழகாக இருந்தது.
சுத்த மத்யம ராகங்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் பிரதி மத்யம ராகங்களை மிஞ்சிவிடலாம், அழகில் நிச்சயம் பிரதி மத்யம ராகங்களை மிஞ்ச முடியாது என்பது என் எண்ணம். (என் எண்ணம் மட்டுமே, நிறைய பேருக்கு இதில் மாற்றுக் கருத்திருக்கலாம்). ஸ்ரீ ராகத்துக்குப் பிறகு ஒரு பிரதி மத்யம ராகம் பாடுவார் என்று நான் நினைத்திருக்கையில், சஞ்சய் பேகடாவை ஆரம்பித்ததில் கொஞ்சம் ஏமாற்றம். அந்த ஏமாற்றம் எல்லாம் சஞ்சயின் ஆலாபனையில் கரைந்தோடியது. சஞ்சயின் வாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு ஸ்வரத்தையும் ஸ்ரீராம்குமாரின் வயலின் நிழல் போலத் தொடர்ந்தது. ஆலாபனை மற்றும் ஸ்வரப்ரஸ்தாரத்தின் பொழுது ஸ்ரீராம்குமார் கொடுத்த response அவரது திறைஐயைப் பறைசாற்றும் விதமாக இருந்தது. சஞ்சய், பேகடாவில் தியாகராஜரின் 'நாதோபாசனா' கிருதியைப் பாடிவிட்டு, தோடியை sub-main-ஆக எடுத்துக் கொண்டார்.

சஞ்சயின் தோடி ஆலாபனை, அதனைத் தொடர்ந்து வயலின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பாபநாசம் சிவனின் 'தணிகை வளர் சரவணபவா' என்ற கிரிதி, கல்பனை ஸ்வரம் எல்லாம் அரை மணிக்குள் முடிந்து விட்டது. தோடி என்னும் பிரவாகத்தில் எத்தனை நேரம் வேண்டுமானாலும் முங்கி முத்தெடுத்துக் கொண்டேயிருக்கலாம். இங்கு சிக்கல் என்னவென்றால், நிறை நேரம் பாடியும் திருப்தி ஏற்படாமல் போகக்கூடிய சாத்தியக்கூறு இந்த ராகத்தில் ரொம்பவே அதிகம். அரை மணியில், ஒரு சிறந்த சிறுகதைக்குரிய precision-டன் தோடு அரங்கெங்கும் புரண்டோடி மிளிர்ந்தது.

இத்தனை அற்புதமாய்ப் பாடும் சஞ்சய் சாஹித்யத்தை மாத்திரம் கொஞ்சம் புரியும்படி பாடிவிட்டாரானால், அவரைப் பிடிப்பதற்கு ஆளில்லை. பாடலில் சங்கதிகள் பாடுவதென்பது கம்பியில் நடப்பது போல. ஒவ்வொரு சங்கதியிலும் ராகத்தின் உருவம் விரிவடைந்துகொண்டே போக வேண்டும். ஆனால், அப்படி ராகம் விரியும் பொழுது சாஹித்யமும் குலையாமல் இருக்க வேண்டும். சஞ்சயின் சங்கதிகளில் ராகம் அற்புதமாய் விரிகிறது, ஆனால் சாஹித்யம் செமர்த்தியாய் அடி வாங்கிக் குலைகிறது. நாகநந்தினி (என்கிற சற்றே அபூர்வமான) ராகத்தில் 'ஸத்தலேனி' என்ற பாடலை 'வட்டலேனி' என்று (தோராயமாய் அனுமானித்து) குறித்துக் கொண்டேன். வீட்டிற்கு வந்து புத்தகத்தில் பார்த்தால் 'ஸத்தலேனி' என்றிருக்கிறது.

நாகநந்தினியைத் தொடர்ந்து கேதாரகௌளையை main ராகமாய் எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். பிருகா பிருகா என்றொரு சமாசாரம் இருக்கிறதே, அதைப்போல டேஞ்சர் ஆசாமி உலகத்தில் இல்லை. இவர் ஒன்று எத்தனை பிரயாசைப்பட்டாலும் வரமாட்டார். அப்படியே வந்துவிட்டாரானால், தன் அளவறிந்து நடக்கமாட்டார். அதுவும் கேதாரகௌளை போன்ற ரக்தி ராகங்களில் அவர் இல்லையென்றால் ஆலாபனை தோய்வடைந்துவிடும், அவரின் இருப்பு அதிகமாகிவிட்டால் ராக பாவம் போய்விடும். இதையெலலம் உணர நிறய கச்சேரி கேட்டிருக்க வேண்டும். சஞ்சயின் அன்றைய கச்சேரியை மாத்திரம் கேட்டவர்கள், சஞ்சய் effortless-ஆக ஒரு அற்புதக் கலவையை உருவாக்கி கேதாரகௌளையைப் பார்த்து, இந்த பிருகாவைக் கையாள்வது ரொம்பவே சுலபம் என்றெண்ணியிருக்க மாட்டார்கள். ஆலாபனையைத் தொடர்ந்து, 'சரகுண பாலிம்பவை' நன்றாக இழைத்து இழைத்துப் பாடிவிட்டு (Is there an alternative/equivalent way of expressing இழைச்சுப் பாடறது? Not that I know of.) இரண்டு களை ஆதிதாளத்தில் முக்கால் இட எடுப்பில் பாடிய கல்பனை ஸ்வரங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக, விளம்ப காலத்தில் பாடிய ஸ்வர்ங்களை, முதலில் சதுஸ்ர நடையில் ஆரம்பித்து, கடைசி அரை ஆவர்த்தனைத்தை திஸ்ர நடைக்கு மாற்றி சாஹித்யத்துக்கு வந்தது வெகு அழகாக இருந்தது. இந்த சீஸனில் நடந்த கச்சேரிகள் அனைத்திலும், கல்பனை ஸ்வரம் பாடும் பொழுது, முதலில் சில ரவுண்டு சாஹித்யத்தின் எடுப்புக்குப் பாடிவிட்டு, குறைப்பு பாடும் பொழுது சமத்துக்கு வந்துவிட்டார்கள். சஞ்சய் அன்று பாடிய கேதாரகௌளை கல்பனை ஸ்வரங்களில், குறைப்பை 3/4 இட எடுப்புக்கே பாடி, தனது லய விந்யாசத்தையும் அற்புதமாய் வெளிப்படுத்தினார்.

கல்பனை ஸ்வரத்துக்குப் பின் தஞ்சாவூர் முருகபூபதி ஒரு short and sweet தனி ஆவர்த்தனம் வாசித்தார். அதிக ஜிகினா வேலைகள், அதீதமான வேகமெல்லாம் இல்லாமல், ஆங்காங்கே கொஞ்சம் மிஸ்ரம், கொஞ்சம் திஸ்ரம் எல்லாம் தொட்டுக் கொண்டு அழகாக வாசித்தார். கடைசியில் வைத்த கோர்வை ரொம்பவே சாதாரணமாக இருந்தது, கொஞ்சம் complex-ஆக வைத்திருக்கலாம். தனி ஆவர்தனத்துக்குப் பின் சுசரித்ரா ராகத்தின் சாயையைக் காட்டிவிட்டு கோடீஸ்வர ஐயரின் 'வேலும் மயிலும்' கீர்த்தனையைப் பாடினார். (இதுவும் புத்தகத்தைப் பார்த்துதான் புரிந்தது.) கமாஸ் ராகத்திலும், யமுன கல்யாணியிலும் துக்கடா பாடிவிட்டு. பைரவியில் பரமசிவனின் மேல் ஒரு விருத்தம் பாடினார், அதனை ஸ்ரீராம்குமாரும் அழகாக வயலினில் follow செய்ய, விருத்தம் ஹிந்தோலத்தில் தொடர்ந்தது. ஆனால், விருத்தத்தின் நாயகன் இப்பொழுது நாரயணனாக மாறிவிட்டார். இதென்னடா புதுமை என்று நான் வியந்து கொண்டிருக்கையில், 'மா ரமணன்' ஈர்த்தனையை ஆரம்பித்தார். சிவன், விஷ்ணு இருவர் மேலும் எழுதப்பட்ட பாபநாசன் சிவன் கீர்த்தனையை சஞ்சய் எடுத்துக் கொண்டவுடந்தான், அந்த விருத்தத்தின் காரணம் புரிந்தது.

concert review என்று சொல்லிவிட்டு குற்றம் கண்டுபிடிக்காவிட்டால் எப்படி? கச்சேரிக்கு 200 ரூபாய் டிக்கெட் வாங்கிப் போகும் ஆசாமிகள் மிகக் குறைவு. 30 ரூபாய் டிக்கெட்டுக்குதான் கூட்டம் அதிகமிருக்கும். ஜெர்மன் ஹாலில் முப்பது ரூபாய் டிக்கெட்டுக்குரிய கடைசி வரிசைகள் முழுவதும் பல தகர நாற்காலிகள் நெருக்கி நெருக்கிப் போடப்பட்டுள்ளன. இதனால், ரசிகர்களின் ஒவ்வொரு அசைவின் பொழுதும் தகரம் தரையின் கிரீச்சிடும் நாராசம் நமை இடைஞ்சலில் ஆழத்திக் கொண்டே இருக்கிறது. அடுத்த சீஸனுக்குள் இந்த நிலைமை மாறும் என்று நம்புவோம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 22, 2004

திருவாரூரும் தியாகராஜனும்

21/12/2004, OST @ Krishna Gana Sabha, 4.00 P.M

திருவாரூர் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பிரம்மாண்டமன கோயிலும், அங்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் தியாகராஜப் பெருமானும்தான். தியாகராஜன் என்கிற பெயருக்கும் அவ்வூருக்கும் இருக்கும் உன்னத பந்தம், சங்கீத மும்மூர்த்திகளுள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளால் பலப்பட்டது. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இன்றைய நிலையில் தியாகராஜனின் கசேரிக்குச் சென்றால் திருவாரூர் உடனில்லாதபடிப் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். நான் சொல்லும் தியாகராஜன், பிரபல வித்வான் ஓ.எஸ்.தியாகராஜன். நான் குறிப்பிடும் திருவாரூர் ஊரல்ல, மிருதங்க வித்வான் ஸ்ரீ திருவாரூர் பக்தவத்ஸலத்தைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

கச்சேரி முழுவதும் தோய்வில்லாமல் பாடுவது, ஜிகினா வேலைகளைத் தவிர்த்து ராக பாவத்துக்கு முக்கியம் அளிப்பது, சாஹித்யத்தை சிதைவில்லாமல் பாடுவது என்றெல்லாம் OST-இன் கச்சேரிகளில் பல நல்ல விஷயங்கள் இருப்பினும், நம்மை அதியெல்லாம் ரசிக்க விட வேண்டுமே. 'Bang-the-vessel-um' என்று இணையத்தில் ஒருவர் திருவாரூர் பக்தவத்ஸலத்தின் வாசிப்பை வர்ணித்திருந்தார். அது நூற்றுக்கு நூறு உண்மை. என்னதான் பெரிய மிருதங்க வித்வானாக இருக்கட்டும், பாடகர் ஆலாபனையின் பொழுது மிருதங்கத்தில் ஸ்ருதி சேர்ப்பது அத்தனை நாகரீகமாக இல்லாததோடன்றி நாராசமாகவும் இருக்கிறது. ஏதோ ஒருமுறை செய்தால பரவாயில்லை, எல்லா ராகங்களின் போதும் கொஞ்சம் ரவையை எடுத்துத் தொப்பியில் சேர்த்து, 'தொம் தொம் தொம்' என்று ஆசைதீர அறைய வேண்டியது. ஓ.எஸ்.டி எப்பொழுது எல்லாம் உச்சஸ்தாயித் தொட்டு ஒரே ஸ்வரத்தில் கொஞ்ச நேரம் நிற்கிறாரோ அப்பொழுது மட்டும், 'சபாஷ், பலே' போன்ற வார்த்தைகளை அவுத்து விட வேண்டியது, மத்தபடி, தானுண்டு, தன் கையுண்டு, மிருதங்கத்தின் தொப்பி உண்டு, ரசிகர்களின் காது உண்டு என்று சமர்த்தாக இருந்தார் பக்தவத்சலம். பாடகர் பாடாவது கொஞ்சம் பரவாயில்லை, வயலின் வித்வான் வி.வி.ரவியின் பாடு பெரும் திண்டாட்டமாய்ப் போய்விட்டது. அவர் வாசிக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல் அப்படி ஸ்ருதி சேர்த்தாரா அல்லது 'நீ வாசித்தது போதும், சீக்கிரம் முடி' என்று மறைமுகமாகச் சொல்ல நினைத்தாரா தெரியவில்லை. மிருதங்கத்தைப் போட்டு அந்த அடி அடித்தார் (கவனிக்கவும்: அடித்தார் என்கிறேன், வாசித்தார் என்று சொல்லவில்லை). இப்படியெல்லாம் ஆலாபனையின் பொழுது ஸ்ருதி சேர்த்துவிட்டு, ஆலாபனை முடிந்ததும் வேறு ஒவ்வொரு முறையும் மிருதங்கத்தை திருப்பி வைத்து கல்லால் தட்டி தட்டி வலந்தலைப் பக்கத்தை ஸ்ருதி சேர்க்கிறார். பக்தவத்ஸலம் வாசித்தாரானால் வாத்யத்தில் அத்தனை முறை ஸ்ருதி பிசகி மறுபடியும் சேர்க்க நேரிடாது, அவர் போட்டு அடிக்கிற அடியில் தனது அழுகையை, இந்த ஸ்ருதி விலகல் மூலம் மிருதங்கம் காட்டிவிடுகிறது. இத்தனைக்கும் கச்சேரி முழுவதும் ஒரே மிருதங்கத்தில் கூட வாசிக்க வில்லை. பாதி கச்சேரிக்கு ஒரு மிருதங்கம், அடுத்த பாதிக்கு மற்றொன்று. (அந்த புது மிருதங்கத்தை எல்லோருக்கும் இடைஞ்சலாகும் வகையில் ஸ்ருதி சேர்க்கும் நற் காரியத்தை பக்தவத்சலத்தின் சிஷ்யர் செய்தார்.)

இந்தத் தொந்தரவுகளையெல்லாம் மீறி கச்சேரி ரசிக்கும் படியாக இருந்தது. அன்னமாச்சாரியாரின் ஹம்சத்வனி ராகப் பாடலில் (வந்தேஹம்) தொடங்கி, தியாகராஜரின் 'விநாயகுனி' பாடலில் முடிக்கும் வரை, OST-இன் இசை தங்கு தடையின்றி பொங்கி வழிந்த வண்ணம் இருந்தது. 2.30 மணி நேராத்துக்குள் எக்கெச்செக்கமாய்க் கீர்த்தனைகளைத் திணிக்காகமல், ஏழே ஏழு கீர்த்தனைகளைப் பாடினார். வி.வி.ரவியின் வயலின் வாசிப்பும் கச்சேரியின் வெற்றிக்கு பெரிதும் பலம் சேர்த்தது. கச்சேரி தொடங்கும் முன்பு, கௌரி மனோஹரி ராகத்தைப் பாடுமாறு என்னுடைய request-ஐ வைத்தேன். ஒரு ரசிகனின் கோரிக்கையை புறக்கணிக்காது, கௌரிமனோஹரியில் ஆலாபனை, கல்பனை ஸ்வரம் எல்லாம் பாடி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். கௌரி மனோஹரியைத் தொடர்ந்து, பூர்வி கல்யாணி படிப்படியாக வளர்ந்து, பெரும் காட்டாறாய் மாறி (அதிகம் ஆளில்லா) அரங்கையே நனைத்தாள். OST, தனது பலம், விளம்ப காலக் கீர்த்தனைகளிலும், அவசரமில்லாத ஆலாபனைகளிலும்தான் இருக்கிறது என்பதை நன்குணர்ந்து, தனக்கு சாதகமாக இருக்கும் விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி, அதற்கேற்றார் போல கீர்த்தனைகளைத் தேர்வு செய்து கொள்கிறார். ஜெயதேவரைப் பற்றி ஊத்துக்காடு வெங்கடகவி எழுதியுள்ளப் பாடலான 'பத்மாவதி ரமணம்', தியாகராஜரின் தேவகாந்தாரி ராகப் பாடலான ('க்ஷீர ஸாகர' அல்ல) 'விநராதா' மற்றும் அன்றைய main ராகமான சங்கராபரணத்தில் அமைந்த 'எதுட நிலசிதே'-வும் இதற்குச் சான்று.

சங்கராபரணம், இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக்கும் தங்கமாய் OST-யின் கையில் மாறியது. அதை வைத்து அழகியதொரு ஆபரணத்தை உருவாக்கி அதை அப்படியே வயலினிஸ்ட் வி.வி.ரவியிடம் கொடுக்க, அவர் அந்த ஆபரணத்திற்கு இன்னும் நிறைய அலங்காரங்களை நுணுக்கமாக செய்தார். வெறும் தங்கம் சங்கரன் அணியக்கூடிய 'சங்கராபரணமாய்' அரை மணி நேரத்தில் உருமாறியது. ஓ.எஸ்.டி-இன் சாஹித்ய சுத்தத்தைப் பற்றி போன வருடமே சொல்லியாகிவிட்டது. (மரத்தடி.காம்-இல்படிக்கலாம்). ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகப் புரியும்படி ஓ.எஸ்.டி பாடிக் கொண்டிருக்கையில், பாடலில் எந்த வரியை நிரவலுக்கு எடுத்துக் கொள்வார் என்று அனுமானித்துக் கொண்டிருந்தேன். 'தரான தொரகனி பராகு நாயெட' என்ற சரணத்தின் வரிகளைதான் நிரவலுக்கு எடுத்துக் கொள்வார் என்று நான் நினைத்ததற்கு மாறாக, 'கால் இடம் தள்ளி' எடுப்பு இருக்கும் அனுபல்லவியை எடுத்துக் கொண்டார். ஆலாபனையில் உருவான தங்க ஆபரணத்தில் பொன்னும் மணியும் முத்தும் பதித்தார்போல நிரவலும் ஸ்வரமும் அமைந்தது. அதனைத் தொடர்ந்த தனி ஆவர்த்தனத்தை அப்படிச் சொல்வதற்கில்லை. வேகம் வேகம் வேகம், அதை அடைய சத்தம் சத்தம் சத்தம். கஞ்சிரா வாசித்த பி.புருஷோத்தமன் என்ன செய்வார் பாவம், மிருதங்கக்காரரை ·பாலோ பணீதானே ஆக வேண்டும், அவரும் தனது கஞ்சிராவை முடிந்தவரை அறைந்தார். சதுஸ்ர நடையை திஸ்ரத்துக்கு மாற்றி அதிலேயே குறைப்பும் செய்தார்கள். சமையத்தில் மிருதங்கம் நையாண்டி மேளம் போல ஒலித்தது. தனி ஆவர்த்தனம் முடிந்ததும் பலத்த கைதட்டல், அது தனி ஆவர்த்தனம் முடிந்ததற்கா அல்லது நன்றாக இருந்ததற்கா என்பதை நாமறியோம்.

இந்த அற்புதமான கச்சேரி நேற்றைய தின சந்தோஷத்தின் தொடக்கம்தான். அதனைத் தொடர்ந்த பேரானந்தத்தையும், அதை வஞ்சனையின்றி வழங்கிய சஞ்சய் சுப்ரமண்யத்தைப் பற்றி விரைவில்.....

பின் குறிப்புகள்:
1)
kutcheribuzz.com போன வெள்ளியன்று மட்டும்தான் கச்சேரிக்கு இடைஞ்சலாய் அவர்களது daily update-ஐ விநியோகம் செய்தார்கள், மற்ற நாளெல்லாம், 2-3 பேர் சபா வாசலில் விநியோகம் செய்கிறார்கள்.

2) சமுத்ரா பத்திரிகை போன வருட புத்தகங்களையே இந்த வருடமும் வைத்திருப்பதாக எழுதியிருந்தேன். அது மயிலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸில் மாத்திரம்தான் போல. இன்று முத்ராவில் நவம்பர் 2004 இதழ் வரை அடுக்கி வைத்தொருந்தார்கள். தவறான செய்திக்கு மன்னிக்கவும்.

3) போன வாரம் நான் கேட்டுக் கொண்டது இறைவன் காதுக்கு எட்டிவிட்டது போலும். ஆல் இந்தியா ரேடியோவும் தூர்தர்ஷனும் இப்பொழுது கொஞ்சம் ரெக்கார்டிங்குகளை வெளியிட்டிருக்கின்றன. மியூசிக் அகாடெமியில் இசை விழாவைத் தொடக்கி வைத்த ஜஸ்டிஸ் பக்தவத்சலமும் நிறைய ரெக்கார்டிங் வெளியிடுமாறு ஆல் இந்தியா ரேடியோவை விண்ணப்பித்துள்ளார்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 21, 2004

சும்மா வருவாளா சுகுமாரி?

'இந்த தடவை முத்ரா-ல ·ப்ரீ கச்சேரி இல்லையாமே? ஆஸ்தீக சமாஜத்துல கூட 15-ரூபாய்க்கு டிக்கெட்டாம்?'.

மாமா talk-இல் பிரதானமாய் அடிபடும் டாபிக் இதுதான். (மாமி talk-இல் இந்த வருடம் 'மாம்பலம் சிஸ்டர்ஸ்-ஐப் பத்திதான் நிறைய பேச்சு. கர்நாடிகா ப்ரதர்ஸ், ராகம் சிஸ்டர்ஸ், பத்மா சேஷாத்ரி சிஸ்டர்ஸ் என்றெல்லாம் vocal-duet பாடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதே நிலையில் போனால், kilpakkam kins, kanchipuram cousins என்றெல்லாம் அடுத்த சீஸனில் யாரேனும் கிளம்பினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.)

இந்த முறை நிறைய சபாக்கள் டிக்கெட் விலையைக் கணிசமாக ஏற்றியிருக்கின்றன. ·ப்ரைம் டைம் ஸ்லாட்டில் ஓசியில் கச்சேரி நடக்கக் கூடிய சபைகளும் குறைந்திருக்கின்றன. கிருஷ்ண கான சபையில், மினிமம் டிக்கெட் விலை ரூ.100-ஆக உயர்ந்துள்ளது என்றொரு நண்பர் சொன்னார். பாரத் கலாச்சார், வாணி மகால் போன்ற இடங்களில் மினிமம் 50 ரூபாய். பல காலமாய் சும்மா கிடைத்த சங்கீதத்தைக் கேட்டவர்களுக்கு இந்நிலை அத்தனை சௌகரியமாக இல்லை. 'சங்கீதத்தை வெச்சு வியாபாரம் பண்றான். தியாகராஜர் பாட்டை பாடறானே, அவருக்கு என்ன ராயல்டி குடுக்கறான்? ஷாமியானா பந்தல்-ல 50 சேரைப் போட்டு, ஐம்பது, நூறு-னு டிக்கெட்டுக்கு வாங்கறான். ஆத்மார்த்த சங்கீதம் எல்லாம் போயாச்சு' என்றெல்லாம் இவர்கள் புலம்புவதைக் கேட்க முடியும். இப்படிப் புலம்புவதால் இவர்களெல்லாம் காசில்லா ஓட்டாண்டிகள் என்றெண்ண வேண்டாம். இவர்கள் நினைத்தால் ஆளுக்கொரு சபை ஆரம்பித்து, சென்னையே ஓசியில் கச்சேரி கேட்கச் செய்ய முடியும்.

சங்கீதம் முதலில் கோயில்களில் ஆராதனைக்குரியதாக இருந்தது. பின்பு ராஜாக்கள், மிராசுதார்கள், பிரபுக்களின் ஆதரவில் இருந்தது. அப்பொழுதுதெல்லாம் எவனோ ஒரு புண்ணியவான் எல்லா செலவையும் ஏற்றுக் கொண்டுவிட ஊரே கச்சேரி கேட்டது. அது என்றைக்கு சபைக்கு வந்ததோ அன்றே டாக்டர், சார்டட் அக்கௌண்டெண்ட் என்றெல்லாம் profession இருப்பதுபோல், இசைக் கலைஞராக இருப்பது, சங்கீத சபை நடத்துவது போன்றவைகளும் தொழில்களாகிவிட்டன. ஒரு வேலையை நல்ல வேலை என்று நாம் சொல்வாமாயின், நம் ஊர் அகராதிப்படி, அந்த வேலைக்கு நல்ல சம்பளம் என்று அர்த்தம். சபா வாசலில் அறுசுவையரசு காண்டீனில் ஒரு தோசைக்கு இருபது ரூபாய் கொடுக்க யாரும் தயங்குவதில்லை. குளிர்பதன வசதியுடன் கூடிய ஹாலில் 3 மணி நேரம் உட்கார்ந்து பாட்டு கேட்பதற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் மாத்திரம் மனது வரமாட்டேன் என்கிறது. (அதுவும் சாயங்கால வேளையில் நடக்கும் கச்சேரியைத் தவிர மற்ற கச்சேரிகளுக்கெல்லாம் அனுமதி இலவசம்.)

இந்த இலவசம் என்ற சொல் ஏன் நம்மை இப்படி ஆட்டிப் படைக்கிறது என்று தெரியவில்லை. 'இந்த இதழ் குங்குமத்துடன் சந்திரமண்டலத்தில் 2050-இல் திறக்கப் போகும் சரவண பவனில் ஒரு மசால் வடை இலவசமாகப் பெறுவதற்கான கூப்பன் இலவசம்' என்று அறிவித்தால் கூட, அதற்காக குங்குமத்தை வாங்க சில பேர் நிச்சயம் இருப்பார்கள். இந்த விஷயத்தில் படித்தவர் பாமரர் பேதமெல்லாம் இல்லை. இந்த e-mail-ஐ நூறு பேருக்கு அனுப்பினால் 10 நிமிடம் long distance பேசலாம் என்றொரு stray email நமக்கு வந்தால், அதை forward செய்ய வேலை மெனெக்கெட்டு புதிய மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கும் பிரகஸ்பதிகளை நான் பார்த்திருக்கிறேன். நாம் அனுபவிக்கும் ஒரு சௌகரியத்திற்காக காசு கொடுக்க ஏன் மனசு வரமாட்டேன் என்கிறது?

நம் மக்களின் கலாச்சாரத்தில் ஊரிய விஷயம் என்று இதை முழுமையாக ஒதுக்கிவிட முடியவில்லை. sony, nike போன்ற brand name-களுக்காகவே premium கொடுக்க தயங்காத நாம், சங்கீதம் பாடுபவனும் சபை நடத்துபவனும் மாத்திரம் லாபமே பார்க்காமல் பரோபகாரியாக வெறும் ஆத்ம திருப்திக்காக மாத்திரம் உழைப்பவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் என் சிற்றறிவுக்கெட்டாத ஒன்றாக இருக்கிறது.

கச்சேரி பிரபலமான, தேர்ந்த வித்வானால் இருக்க வேண்டும். அதுவும் நல்ல சௌகரியமான சபையில் இருக்க வேண்டும். அதுவும் ஆபீஸ் முடிந்து கச்சேரிக்குத் தோதாய், 6.00 மணிக்கு மேல் இருக்க வேண்டும். சுதா ரகுநாதன் பாடும் பொழுது பாட்டு சங்கதிகள் மட்டும் கேட்ட்டால் பத்தாது. அவருடைய ஜிமிக்கி அசையும் அழகும் தெரிய வேண்டும். இது எல்லாம் காலணா காசு செலவழியாமலும் கிடைக்க வேண்டும். எனக்கு மட்டும் அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தை இரண்டு மடங்காக்கினால் தேவலாம். என் ஆபீஸ் மாத்திரம் கஞ்சப் பிசிநாரி.

சரி...எது எப்படியோ, இன்றைக்கு வளையப்பட்டியின் நாதலயா ட்ரஸ்ட், ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் இசை விழாவைத் தொடங்கியிருக்கிறது. உன்னிகிருஷ்ணன் கச்சேரியை இன்று பலர் (ஓசியில்) இரசித்திருப்பார்கள். All are welcome வாசகத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடுபவர்கள் ஹேமமாலினிக்குப் போகட்டும். எனது கவலையெல்லாம், சென்னைக்கு வந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு டி.என்.கிருஷ்ணன் கச்சேரி கூட கண்ணில் படவில்லையே என்றும். திருச்சி சங்கரனின் தனியாவர்தனத்தை எப்பொழுது கேட்போம் என்றும்தான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, December 19, 2004

Vani Mahal, 18/12/2004, 6.30 P.M

கச்சேரி எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடைய ஜனரஞ்சகம் தேவைப்படுகிறது. பெரும்பாலும், ஜனரஞ்சகமாக கச்சேரி செய்பவர்கள் மேல் 'இசையை dilute செய்கிறார்' என்ற குற்றச்சாட்டைக் காணலாம். நிறைய விவகாரம் வைத்து பாடும் பலர் பிரபலமேயடையாமல் போய்விடுவார்கள். ஜனரஞ்சகமாகவும் பாடி, அதே சமயத்தில், சம்பிரதாயங்களை மீறாமலும் இருந்து பாமரரையும் பண்டிதரையும் திருப்திப் படுத்தும் வண்ணம் கச்சேரி செய்ய சிலரால்தான் முடிகிறது. இந்த சிலரில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ¤ம் ஒருவர். நேற்று ஒரு 'child prodigy'-இன் கச்சேரி கேட்ட inertia-வில் இன்று மாண்டலின் கச்சேரிக்கு ஜீ.என்.செட்டி தெருவில் இருக்கும் வாணி மகாலுக்கு விரைந்தேன்.

டிசம்பர் 2000-க்குப் பிறகு வாணி மஹாலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. நடுவில் அரங்கம் renovate செய்யப்பட்டது என்பது மாத்திரம் தெரியும். ஆனால் இத்தனை அழகாக மாறியிருக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. வாத்தியக் கலைஞர்களுள் சிலர் கச்சேரிகளுக்குத்தான் அரங்கம் நிரம்பும். அந்த சில கச்சேர்¢களுள் மாண்டலின் ஸ்ரீநிவாஸின் கச்சேரியும் ஒன்று. அரங்கில் அடித்துப் பிடித்து நான் நிழைவதற்கும், almost full-house-க்கு முன் ஸ்ரீநிவாஸ் பேகடா வர்ணத்தை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கு முன்னும், எந்த கிருதியை வாசிக்கப் போகிறார், அந்த கீர்த்தனை அமைந்த ராகம், அது யாருடைய சாஹித்யம், என்பதையெல்லாம் அறிவித்துவிடுகிறார் ஸ்ரீநிவாஸ். கச்சேரிகளில் ராகத்தை கண்டுபிடிப்பது என்பது சுகமான விஷயம். கீரவாணியா/சிம்மேந்திர மத்யமமா என்கிற போராட்டத்தில் ஈடுபட்டு, ஒருவழியாய் முடிவுக்கு வருவதில் தனி சுகம் இருக்கிறது. 'காங்கேயபூஷணி', 'பிரதாபவராளீ' போன்ற ராகத்தை எல்லாம் அறிவித்தால் பரவாயில்லை. மோகனத்தையும், கமாஸையும் அறிவித்து ராகம் கண்டுபிடிப்பதில் இருக்கும் சுகத்தை ரசிகர்களுக்கு ஸ்ரீநிவாஸ் மறுக்காமல் இருக்கலாம்.

ராகம் கண்டுபிடிப்பதில் இருக்கும் சுகம் சிற்றின்பம் என்றால், அவர் வாசிப்பைக் கேட்பது பேரின்பம். சிற்றின்பத்தை ஸ்ரீநிவாஸ் நமக்கு மறுத்துவிட்டாலும், பேரின்பத்தை அளிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை. 'வர்ணம்' என்ற சொல்லே பரவசப்படுத்தும் வகையில் இருக்கிறது. ஆயிரம் பட்டாசுகள் வாங்கினாலும், காலையில் எழுந்தவுடன் சரவெடி ஒன்றை வைத்துவிட்டுதான் மற்றதைப் பார்க்கிறோம். அந்த வகையில் ஆயிரம் பாடல்களில் இருப்பினும், வர்ணங்களைக் காட்டிலும் கச்சேரியை ஆரம்பிபதற்கு தோதான ஒன்று இல்லையென்றே கூறலாம். 'இந்த சால' வர்ணத்திற்குப் பின், brisk ராகங்களில் ஒன்றான ஸ்ரீரஞ்சனியில் அமைந்த பாபநாசம் சிவன் கிருதியான 'கஜவதனா கருணா சதனா' பாடலை எடுத்துக் கொண்டார். (Sriranjani seems to be a strong favourite of Shrinivas. In the last 4 concerts I have attended, he has played Sriranjani thrice) நல்ல அரபியக் குதிரைகளின் சீரான ஓட்டத்தைப் போல ஸ்வர்ப்ரஸ்தாரம் செய்து கச்சேரியைக் களைகட்ட வைத்தார்.

ஸ்ரீரஞ்சனியைத் தொடர்ந்த கமாஸ் நல்ல contrast-ஆக அமைந்தது. விளம்ப காலத்தில் ஸ்ரீநிவாஸ் 'ப்ரோசேவாரெவருரா'-வை இழைத்துத் தள்ளியபின் பட்டணம் சுப்ரமண்ய ஐயரின் 'கோரின வரமு' என்கிற ராமப்ரிய ராகக் கீர்த்தனையை, ஒரு short and sweet ஆலாபனைக்குப் பின் எடுத்துக் கொண்டார். கமாஸ¤ம் ராமப்ரியாவும் மாண்டிலனிலிருந்து சுரந்து அரங்கை நிரப்பிய போது, சற்று முன்பு அதி-துரிதமாய் கட்டுக்கடங்காத காளை போன்ற இசையை எழுப்பிய அதே மாண்டலினா இத்தனை விஸ்ராந்தியுடன் ஒலிக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீநிவாஸ் ஸ்ரீரஞ்சனி ராகத்துக்கும், கிரணாவளி ராகத்துக்கும் ஸ்வரப்ரஸ்தாரம் அதி-அதி-துரித காலங்களில் (break neck speed) ஸ்வரங்கள் வாசித்து, உச்சஸ்தாயியில் ஒருமுறை நிறுத்தி, மறுபடியும் வேகம்பிடித்து, மகுடம் வைத்து ஸ்வரப்ரஸ்தாரத்தை முடிப்பது, முதலில் கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும், அடிக்கடி இவ்வாறு செய்வது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. (பல முறை ஸ்ரீநிவாஸைக் கேட்டிருக்கும் எனக்குத்தான் இவ்வாறு சலிப்பாக இருக்கிறது, கூட்டம் இந்த மாதிரி வாசிக்கும் பொழுதெல்லாம் அப்ளாசை அள்ளி வீசுகிறது). ஸ்வரம், நிரவல், ஆலாபனை எல்லாம் ராகபாவத்தை வெளிப்படுத்தும் வகைதான். மிதமான வேகத்தில் ஸ்ரீநிவாஸ் வாசிக்கும் பொழுது சொட்டும் (bha)பாவம் எல்லாம், அதி துரித ஸ்வரங்களைக் கண்டாலே பாவமாய் ஒதுங்கிக் கொள்கிறது. போன சீஸனில் விஸ்தாரமாய் அரங்கெங்கும் அவசரமே இல்லாமல் படரவிட்ட 'தோடி' ஆலாபனையும், இந்தக் கச்சேரியில் வாசித்த ராமப்ரியாவும்தான் என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் நிற்குமே தவிர, அதிவேக அசகாயசூரத்தனங்கள் எல்லாம் அந்த நிமிட அப்ளாஸோடு abscond ஆகிவிடும். ஸ்ரீநிவாஸ¤ம் இதை உணராமல் இல்லை. பாவத்தை எதிர்பார்ப்பவருக்கு பாவம் சொட்டச் சொட்டவும், மாண்டலினில் சர்க்கஸ் வேலைகள் பார்க்க வந்தவருக்கு அதற்கேற்றார் போல அதி-துரிதமாகவும் வாசித்து அனைவரையும் திருப்திப்படுத்திவிடுகிறார்.

முதல் ஒன்றேகால் மணியில், அதி-துரிதம் அதற்குக் contrast ஆக அதி-பாவம், சுத்த மத்யமம்/ப்ரதிமத்யம ராகங்கள், ஆதி/ரூபகம்/கண்ட சாபு தாளங்கள், தமிழ்/தெலுங்கு கீர்த்தனைகள் என்றெல்லாம் வெரைட்டி காட்டிவிட்டு, பிரதான ராகமாக மோகனத்தை எடுத்துக் கொண்டார். மோகனம் என்ற வார்த்தையைச் சொல்லும்பொழுதே பரவசமாகயிருக்கிறது. அப்படியிருக்க, மோகனம் ராகம் என்றால் அழகு எவ்வளவு கொட்டிக் கிடக்கும்? அதைக் கேட்கையில் எவ்வளவு பரவசம் ஏற்படும். எங்கே சர்க்கஸ் வேலைகளில் இறங்கி, அதி வேகமாய் வாசிக்கிறேன் என்று மோகனத்தின் 'மோகன' ரூபத்தை காட்டாமல் விட்டுவிடுவாரோ என்று நான் பயந்து கொண்டிருக்கையில், மிக மிக பொறுமையாய், அழகு சொட்ட சொட்ட ராக ஆலாபனையை விஸ்தாரமாகச் செய்தார் ஸ்ரீநிவாஸ். ஸ்ரீநிவாஸின் மாண்டலின் அமைப்பு இதற்லு பெரிதும் துணை புரிகிறது. பொதுவாக stringed instruments-இல் ஒரு முறை மீட்டினால், அந்த ஒலி விரைவில் அடங்கிவிடும். அதனால் அடிக்கடி மீட்ட வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக வாசிக்க முடியாது. ஸ்ரீநிவாஸின் மாண்டலினில் விசேஷ அமைப்பு, அவர் ஒரு முறை மீட்டுவிட்டு, ராகத்தின் பல சஞ்சாரங்களை தொடர்ந்து பல கணங்கள் வாசித்துக் கொண்டே இருக்கத் தோதாய் அமைந்திருக்கிறது. நாதஸ்வரத்தில் ராகம் வாசிக்கும் பொழுது, தொடர்ந்து சங்கதிகள் பெருக்கெடுத்த வெள்ளமாய் தடங்கில்லாமல் பொழிந்து கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறோம். அதைப் போன்ற சங்கதிகளையெல்லாம் மாண்டலினில் அடக்கி மோகன ராகத்திற்கு மூழு justice செய்தார். ழ்ழ்ங்காங்கே மேற்கத்திய இசையின் தாக்கத்தையும் லேசாக தூவியது வெகு அழகு. ஆலாபனை முடிந்து, தியாகராஜரின் 'மோகன ராமா' (ஆதி தாளம் 2 களை) வாசித்தார். கீர்த்தனை முடிந்ததும், நிரவலே செய்யாமல் ஸ்வரப்ரஸ்தாரத்தில் இறங்கியதில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்.

வயலினில் பக்கவாத்யம் வாசித்த ஸ்ரீநிவாஸ ராவுக்கு ஒரு special சபாஷ். சென்ற சீசன் முழுவதும் சுமாரான வயலின் வித்வானை பக்கவாத்யமாக வைத்துக் கொண்டதில், ஸ்ரீநிவாஸ் அடக்கியே வாசிக்க வேண்டியிருந்தது. இவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமலும், ஸ்வரங்களில் கணக்கு வைத்து வாசிக்கும் பொழ்து கோட்டை விட்டும் நிறையவே படுத்தினார்கள். ஸ்ரீநிவாஸ ராவின் பக்கவாத்யம் மாண்டலினை நிழலெனத் தொடர்ந்தது. அவர் செய்த ஆலாபனைகளும் மெச்சும் வகையிலேயே இருந்தது. மிருதங்கம், கடம், மோர்ஸிங் என்று லய-பக்கவாத்திய கும்பலே மேடையில் இருந்த போதும், அவர்களது வாசிப்பு கீர்த்தனைகளின் பொழுது subdued-அகவே இருந்தது. தனி ஆவர்தனத்தின் பொழுது அதற்கெல்லாம் சேர்த்து வைத்து கலக்கிவிட்டார்கள்.

இந்த சீசனில் இன்னொரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தனி ஆவர்த்தனத்தின் பொழுது போண்டா சாப்பிட எழும்பும் கூட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நிலை இப்படியே தொடரும் என்றும் நம்புவோம். தனி ஆவர்த்தனத்தின் பொழுது தஞ்சாவூர் முருகபூபதி ஆதி தாளம் இரண்டு களையைப் பல permutation-களில் வாசித்து, கதி பேதம் செய்து கண்ட நடையில் தனது முதல் ரவுண்டை முடித்தார். அவரைத் தொடர்ந்த கட வித்வான் (டி.எச்.சுபாஷ்சந்திரன்) , வழக்கமாய் ஆரம்பிப்பது போல சதுஸ்ர நடையில் ஆரம்பிக்காமல், மிருதங்கக்காரர் முடித்த கண்ட நடையை அப்படியே வாங்கி அதிலிருந்து அழகாக சதுஸ்ரத்திற்கு மாறி, கடத்திற்கே உரிய மின்னல் வேக நடைகளை வாசித்தார். ஸ்ரீரங்கம் கண்ணன் மட்டும் சளைத்தவரா என்ன? அவரும் கட வித்வான் எங்கு விட்டாரோ அங்கிருந்து எடுத்து தன் மோர்சிங்கில் பல ஜாலங்கள் காட்டி நடையை மீண்டுமொருமுறை கண்ட நடைக்கு மாற்றி தனி ஆவர்த்தனத்தின் விறுவிறுப்பை ஏற்றினார். மாண்டலின் ஸ்ரீநிவாஸ¤ம் கடனுக்கு தாளம் போடாமல், தனி ஆவர்தனத்தை அனுபவித்து, தாள வாத்தியக்காரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார். சில ரவுண்டுகளுக்குப் பின், குறைப்பை சமத்திற்கு வாசித்து, அழகாய் முத்தாய்ப்பு வைத்து, பல்லவி இடமான அரை இடத்தில் முடித்தார்கள்.

தனி ஆவர்த்தனத்தைத் தொடர்ந்த 20 நிமிடங்களில் சிந்து பைரவி, தர்பாரி கானடா, மாண்ட் போன்ற துக்கடாவுக்கேவுரிய ராகங்களில், சில பாடல்களும், சாய் பஜன்களும் வாசித்து. அண்மையில் அமரரான எம்.எஸ்-இன் நினைவாய் 'குறையொன்றுமில்லை' வாசித்துவிட்டு மங்களம் வாசித்தார்.

இந்த சீஸன் முதல் இரண்டு நாளிலேயே களை கட்டிவிட்டது. நாளைக்கு ஞாயிற்றுகிழமை, குறைந்த பட்சம் இரண்டு கச்சேரிகளுக்காவது செல்ல வேண்டும். பார்க்கலாம்!

[பி.கு: சாதரணமாகவே என் தட்டச்சில் பிழைகள் அதிகம் வரும். தினமும் கச்சேரி முடிந்து வந்து அவசர அவசரமாய் எழுதுவதால், இந்த கட்டுரைகளில் தட்டச்சு பிழைகள் எக்கச்சக்கமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். தயவு கூர்ந்து பொர்த்துக் கொள்ளவும்.]

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, December 18, 2004

Mylapore Fine Arts - 6.00 PM

சபா கேண்டீனில் நெய் வழியும் அசோகா அல்வாவை (ஏதோ பளபளப்பாய் பிசுபிசு வென்று இருந்தது, அதை நெய் என்று நினைத்துக் கொள்வதில்தான் என்ன முழிகிவிடப் போகிறது) ஒரு பிடி பிடித்துவிட்டு, கச்சேரி ஆரம்பிக்க அரை மணி இருந்ததால், அங்கிருந்த ஸ்டால்களில் மேய்ந்தேன். சமுத்ரா என்றொரு பத்திரிகை ஸ்டால், (பெரும்பாலும்) போன வருஷம் இருந்த அதே புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். காசெட் ஸ்டல்களில், எம்.எஸ்- இன் ஒலிநாடாக்களுக்காக தனி டேபிள். 3-4 வருடங்களாய் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது. டிசம்பரில் நடக்கும் பல நூறு கச்சேரிகளில், பிரபல கலைஞர்களின் ஒரு கச்சேரியாவது ஒலிநாடாவாகவோ, சி.டி-யாகவோ வெளிவருகிறது. டி.எம்.கிருஷ்ணா, சஞ்சய், உன்னிகிருஷ்ணன், அருணா சாய்ராம் போன்றோரின் 'live concert cassettes/CDs'-ஐப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. போன தலைமுறை பாடகர்கள் பாடிய விதத்தைப் பற்றி கேள்விப்படதான் முடிகிறதே தவிர, அவர்கள் எப்படி பாடினார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு சில ரெக்கார்டிங்குகளே நமக்கு கிடைக்கிறது. ஜி.என்.பி 10 நிமிடத்தில் பாடிய வாசுதேவயனி ரெக்கார்ட், அந்த காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது. ஆனால், அவர் கச்சேரியில் எத்தனையோ முறை அந்த பாடலைப் பாடியிருக்கிறார் என்பதை கேள்விப்படத்தான் முடிகிறதே தவிர அப்பாடலைல் கேட்க முடிவதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்! சரியாக ஆறு மணிக்கு 'டாண்' என்று ராகமாலிகை வர்ணத்துடன் வீணை காயத்ரியின் கச்சேரி ஆரம்பமானது. 'மணிரங்கு' - பிரபலமாகாத அழகிய ராகம். மத்யமாவதியின் நெருங்கின உறவினன்(ள்?), அதை 2-நிமிடத்தில் ஒரு sketch காட்டிவிட்டு, 'பரதேவதே' என்ற பாபநாசம் சிவனின் கீர்த்தனையை வாசித்தார். கச்சேரிகளில் 'களை கட்டுதல்' என்று ஒன்று இருக்கிறது. 'களை கட்டுதல்' என்றால் என்னவென்று கேட்டால், அதை வர்ணிப்பது கடினம். ஆனால் ஒரு கச்சேரியை எப்படி களை கட்ட வைப்பது என்று கேட்டால், அதற்கான விடை ரொம்ப சுலபம். தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளில் ஒன்றை வாசித்தால் போதும், கச்சேரி நிச்சயம் களை கட்டிவிடும். விறுவிறுப்பு என்பது வேறு வேகம் என்பது வேறு. ஒரு கச்சேரி களை கட்ட வேகம் தேவையில்லை, விறுவிறுப்பே தேவ. காயத்ரி, பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான 'சாதின்சனே' என்ற ஆரபி ராகக் கிருதியைக் விறுவிறுப்பாக வாசித்தார்.

தர்மவதி ஒரு இனம் தெரியாத சோகம் கலந்த ராகம். அதை sub-main-ஆக எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். முதலில் நிறுத்தி நிதானமாக இழத்து, குழைத்து ஆலாபனை செய்தும், பிறகு மின்னல் வேகத்தில் சில பிரயோகங்கள் வாசித்தும் ராக சௌந்தர்யத்தை அழகாக வெளீப்படுத்தினார். ஆலாபனையைத் தொடர்ந்து தீக்ஷதரின் 'பரந்தாமவதி' என்ற பாடலை எடுத்துக் கொண்டார். தீக்ஷதர் ஒரு வைணிகர். அவர் அமைத்த கிருதியை வீணையில் கேட்க எப்படியிருக்கும் என்று சொல்லவா வேண்டும்? கீர்த்தனையும் அதைத் தொடர்ந்து வந்த கல்பனை ஸ்வரங்களும், ஒரு இனிய மாலைப் பொழுதில் மழை விட்டு, லேசான தூறல் மட்டும் இருக்கும் வேளையில், குளிரும் வெய்யிலும் கலந்து எழுப்பும் ஒரு ஏகாந்த உணர்வை ஏற்படுத்தின.

ஒரு mood-ஐ உருவாக்கினால் போதுமா? அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டாம்? மேற்கூறிய உணர்வை வெளிப்படுத்த ரீதிகைளையை விட எந்த ராகம் பொருந்தும்? அந்த ரக்தி ராகத்தை இழைத்து இழைத்து, 'ஜனனி நினுவினா'-வை உருவாக்கியிருக்கிறார் சுப்பராய சாஸ்திரி. அந்தப் பாடலை அதி-விளம்ப காலத்தில் கேட்கக் கேட்கத் திகட்டா வண்ணம் வாசித்து ரசிகர்களை பரவசமடையச் செய்தார். கச்சேறி களை கட்டி, mood-உம் உருவாக்கியாகிவிட்டது, பிறகென்ன? main-ஐ எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே?

இந்திய இசையின் தனிச்சிறப்பே கமகங்கள்தான். குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டுவது போல, ஸ்வரங்களை அசைக்கும் பொழுது பிறக்கும் இனிய நாதங்களே இந்த கமகங்கள். கமகங்களை வெளிப்படுத்த வீணையைவிட சிறந்த வாத்தியம் ஏதுமில்லை. கமகம் என்பதை விளக்க தோடியின் காந்தாரம் ஒன்றே போதும். வீணையும் சுகம், தோடியும் சுகம், கமகமும் சுகம். மூன்றும் கலந்தால்? புலிக்குப் பூனையா பிறக்கும்?

காயத்ரி வாசித்த தோடி ஆலாபனையை குடந்தை நாகேஸ்வரன் கோயிலில் கொலுவிருக்கும் பெண்களுக்கிணையாகச் சொல்லலாம். அந்த சிற்பங்களில் இருக்கும் நுணுக்கமெல்லாம் தோடியில் கலந்தளித்தார். ஆலாபனை, நிரவல், ஸ்வரம் போல தானம் என்றொரு ஐட்டம் உண்டு. 'ஆ- நன் - தம்' என்ற ஒலிகளைப் பிரதானமாகக் கொண்டு வரும் இந்த semi-rhythamic-syllables, நமது இசையின் மற்றொரு தனிச்சிறப்பு. இன்றைய நிலையில், ராகம் விஸ்தாரமாகப் பலர் பாடுகிறார்கள். பலர் நிரடலான தாள அமைப்பில் பல்லவி பாடுகிறார்கள். பலர் அற்புதமாய் ஸ்வரம் பாடுகிறார்கள். ஆனால் இந்த தானம் மாத்திரம் பிரதானமாக அவர்களுக்கு ஏனோ படுவதில்லை. தானம் is at its best when you play it with a stringed instrument, in particular, the veeNaa. தோடி ஆலாபனைக்குப் பின் விஸ்தாரமான தானம் அரங்கை நிரப்பியது. தூறலாய் ஆரம்பித்து, வெள்ளப் பெருக்காய் விரிவடைந்து, தோடி, பூர்வி கல்யாணி, காபி, சாரமதி, கானடா என்று ராகமாலிகையாய் மலர்ந்து ரசிகர்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது அந்தத் தானம். தானத்தை தொடர்ந்து கீர்த்தனை ஆரம்பமாகியது. தோடியில் எவ்வளவோ கீர்த்தனைகள் இருக்கின்றன. தியாகராஜர் மாத்திரம் 30-க்கு மேல் தோடியில் பாடலமைத்துள்ளார். இதையெல்லாம் மீறி ஏதோ ஒரு அபூர்வ தோடி கிருதியை எடுத்துக் கொண்டார். அபூர்வம் என்பதற்காக அழகிலாமல் போய்விடவில்லை. இரண்டு களை ஆதி தாளத்தில், 3/4 இடம் எடுப்பில் அமைந்த பாடல் நன்றாகவே இருந்தது.

கச்சேரி முழுவதும் பக்கபலமாய் வாசித்து வந்த மாதிரிமங்கலம் ஸ்வாமிநாதன், தனி ஆவர்த்தனத்துக்கு வாய்ப்பு வந்தவுடன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் போலும். என்ன கோபமோ தெரியவிலை, வேகமாய் வாசிக்கிறேன் பேர்வழியென்று அடித்து நொறுக்கிவிட்டார். மிருதங்கம் வாயிருந்தால்தான் அழுமா என்ன? வாயில்லாமலே அழுததை நேற்று காண/கேட்க முடிந்தது. இது வரையில் பெண் கட வித்வானைக் கண்டதில்லை. நேற்று சுகன்யா ராம்கோபால்தான் நன் பார்த்த முதல் பெண் கட வித்வான். மிருதங்கக்காஅரைப் பார்த்து வேகத்தில் மோகம் கொள்ளாமல் ஔக்கியமான காலப்பிரமாணத்தில் அழகாக வாசித்தார். தனி ஆவர்த்தன்ம் சிறிது நேரம் கண்ட கதியில் மாறி பின்பு சதுஸ்ரத்துக்கு வந்து முத்தாய்ப்புடன் இனிதே முடிந்தது.

தனி ஆவர்த்தனம் முடிந்தவுடன் ஒருவர் மைக்கைப் பிடித்தார். இதென்னாடா இது வம்பு? இத்தனை வருஷமா கசேரிக்கு நடுவில் பேசும் பழக்கமெல்லாம் இல்லையே, இந்த சபையும் கெட்டதா?, என்று நினைத்துக்கொணேன். 'கச்சேரிக்கு நடுவில் பேசுவதற்கு மன்னிக்கவும்', என்ற பீடிகையுடன் ஆரம்பித்தவுடன், அரை மணியாவது பேசப் போகிறார் என்று நினைத்தேன். பேசியவர் ரத்தினச் சுருக்கமாய், ஈ.காயத்ரி எம்.எஸ்-இன் நினவாய் வருடா வருடம் போட்டி நடத்த 10,000 ரூபாய் கொடுத்ததை மாத்திரம் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார். கச்சேரியின் கடைசி அரை மணி நேரத்தில் எம்.எஸ் ஹிட்ஸ்களைக் கொண்டு ஒரு மினி-கச்சேரி நடத்தினார் காயத்ரி. 'ப்ரூஹி முகுந்தேதி', 'காற்றினிலே வரும் கீதம்', மாலைப் பொழுதினிலே, 'வடவரையை மத்தாக்கி', 'எந்த மாத்ரமு', 'பாவயாமி கோபால பாலம்' என்று அவர் வாசித்த ஒவ்வொரு பாட்டிற்கும் ஏகப்பட்ட அப்ளாஸ். அவர் குறையொன்றுமில்லை வாசித்த பொழுது, ரசிகர்கள் மனதில் குறையொன்றுமிருந்திருக்காது என்பது நிச்சயம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Mylaopre Fine arts, 4.00 P.M

சென்ற வருட டிசம்பரில் ஆசையாசயாய் எனக்கு விருப்பமான பாடகர்கள் கச்சேரிகளுக்குச் சென்றதில் மிஞ்சியது ஏமாற்றம்தான். பாதி கச்சேரிக்கு மேல் பாடகர் தொண்டையால் ரத்தானது. மீதி கச்சேரியெல்லாம் இருமல், செருமல், கமறலுடன் கலந்து வந்த சங்கீதம் அத்தனை ரசிக்கும்படியாக இல்லை. இந்த வருடமாவது, கேட்கும் முதல் கச்சேரி களைகட்டட்டும் என்று, பாடகர்கள் தொண்டையை எல்லாம் நம்பாமல், 'வாத்தியங்களுக்குச் சளி பிடிக்காது' என்ற தைரியத்தில், வீணை காயத்ரியின் கச்சேரிக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

அதே அரங்கில் 3.00 மணிக்கு பாலக்காடு ராம்பிரசாதின் கச்சேரியும் இருந்தது. சாய்ங்காலம் 3.30 மணிக்கு மேல் வீட்டில் இருப்பு கொள்ளாததால், 4.00 மணிக்கே அரங்குக்குச் சென்றுவிட்டேன். அப்பொழுது 'ஸ்ரீ சுக்கிர பகவந்தம்' என்று கண்ட அடை தாளத்தில் பொழிந்து ரசிகர்களை (3.00 மணி கச்சேரி, அதுவும் வாரயிறுதி இல்லாத நாளில், எவ்வளவு பேர் இருந்து விடப்போகிறார்கள்?) கொண்டிருந்தார் ராம்பிரசாத். 'உனக்கு இந்த வருடம் சுக்கிரதிசைதான், நீ கேட்கப் போகும் கச்சேரியெல்லாம் அற்புதமாய் அமையப்போகிறது' என்று உணர்த்தும் வகையில் அப்பாடல் அமைந்ததாய் ஒரு மனப்பிராந்தி. 'பிராந்தி' என்றால் சிறிது நேரத்தில் தெளிந்துதானே போகும்? ராம்பிரசாத் கல்யாணியை ஆலாபனை செய்ய ஆரம்பித்ததும் என் மனப்பிராந்தி எல்லாம் தெளிந்தது. கல்யாணியை பாட ஆரம்பித்த ராம்பிரசாதுக்கு அப்படி என்ன அவசரமோ தெரியவில்லை, புள்ளி வைத்து, கோடு போட்டு, இழை இழையாய் இழைத்து, வர்ணம் பூசு, காவி மொழுகி விஸ்தாரமாய் வளர்க்க வேண்டிய மார்கழிக் கோலத்தை, அவசர அவசரமாய் கார்டூனில் 4-5 கோடுகளில் காட்டுவது போல பாடிக் கொண்டிருந்தார். உச்சஸ்தாயியில் பாடும் பொழுதெல்லாம் ஒருவித சிரமத்துடன் பாடிய உணர்வு ஏற்பட்டது. அவர் modulaton-க்காக volume-ஐக் குறைத்துப் பாடுகிறாரா அல்லது அவரது குரலே உச்சஸ்தாயி ரிஷபத்துக்கு மேல் அப்படித்தானா என்று தெளிவாகச் சொல்ல முடியாது. ஆனமுட்டும் பிருகா மழை பொழிய ப்ரம்ம ப்ரயத்தனம் செய்தார், தொண்டை கேட்டால்தானே. வெண்கல கலசத்தில் வெள்ளி நாணயங்களை இட்டு கலகலவெனச் சத்தம் எழுப்பினால் விழும் ஓசை போலிருக்க வேண்டிய பிருகா எல்லாம் தேசல் தேசலாய் விழுந்து வாட்டியது. கொஞ்சம் கொஞ்சமாய் கல்யாணியிலிருந்து விலகி என் மனம் அரங்கைப் பார்க்க ஆரம்பித்தது. 53 வருஷமாய் இருந்து வரும் இந்த சபைக்கு 7-8 வருடமாய் நான் சென்று வருகிறேன். இத்தனை வருஷத்தில் ஒரு மாறுதலும் இல்லை. (ரோட்டில் போகும் வாகன இரைச்ச்லைத் தடுக்கவாவது ஏதாவது செய்யலாம், எந்த மஹானுபாவராவது டொனேஷன் கூடிய சீக்கிரம் கொடுக்க வேண்டிக்கொள்வோம்). மத்தியான கச்சேரிகளில் சைகரியம் என்னவெனில் கைகளை வீசி வீசி தாளம் போடலாம், ஜனவர் 1-ஆம் தேதி யேசுதாஸ் கச்சேரியில் கையைத் தூக்கினாலே யார் கண்ணிலாவது குத்தும், அந்த அளவிற்கு கூட்டம் அம்மும். அரங்கெங்கும் co-sposnsor-ஆன RMKV புடவைகளின் பேனர் தொங்குகிறது. மேடைமேல் பரிதாபமாய் 53-ஆம் வருட கலை நிகழ்ச்சியை என்கிற (பழைய) பேனர் தொங்குகிறது. பழைய பேனர் என்றால் முற்றிலும் பழசுஎன்று சொல்ல முடியாது. பேனர் துணி பழையது, அதில் எழுதப்பட்ட எழுத்துக்களில் 95% எழுத்துக்கள் பழையது, 53-இல் இருக்கும் '3' மாத்திரம் புத்தம் புதிய காப்பியய், மற்ற எழுத்துக்களைவிடத் தெளிவாய், "நான் போன வருஷ பேனர்" என்று அறிவித்தவண்ணம் இளிக்கிறது. இவ்வாறு நாம் சுற்றுச் சுழலில் திளைத்திருக்கையில், இன்னும் ஆலாபனையைத் தொடர்ந்தால் கெட்டது குடி என்றி நினைத்தாரோ என்னமோ, சட்டென்று திகஷதரின் 'கமலாம்பா பஜரே' கீர்த்தனையை எடுத்துக் கொண்டார்.

இரண்டு களை ஆதி தாளத்தில் கீர்த்தனை வெகு ஜோராய் ஆரம்பித்தது, பல்லவியில் பல சங்கதிகள் பாடி ஒவ்வொரு முறையும் 'பஜரே' என்னும் பொழுது மிருதங்க வித்வான் 'கும்பகோணம் ராமகிருஷ்ணன்' என்று நினைக்கிறேன், தவறெனில் மன்னித்தருளவும்) கொடுத்த flourish வெகு அற்புதம். கீர்த்தனையை அழகாகப் பாடிவிட்டு 'நித்ய கல்யாணீம் காத்யாயனீம்' என்ற வரியை நிரவலுக்கு எடுத்துக் கொண்டார் ராம்பிரசாத். தார ஸ்தாயியில் அமைந்த வரியை எடுத்துக் கொண்டு அந்த ஸ்தாயியிலேயே பாடிக் கொண்டிருந்தார், கீழே வருவார் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், 'வருவேனா பார்' என்று கல்பனை ஸ்வரங்களில் இறங்கி விட்டார். 2-3 ரவுண்டு முதல் காலத்தில் பாடிவிட்டு இரண்டாம் காலத்துக்குத் தாவினார். நன்றாகப் போய் கொண்டிருந்த ஸ்வரப்ரஸ்தாரம் யாரும் எதிர்பாராத வண்ணம் முடிந்தும்விட்டது. அதனைத் தொடர்ந்து வந்த தனி ஆவர்த்தனத்தில் மிருதங்கக்காரரும் கடவித்வானும் விறுவிறுப்பாக வாசித்தார்கள். ராம்ப்ரசாத் நிரவல் பாடும்பொழுது, 'நித்ய கல்யாணீம்' சமத்தில் ஆரம்பிக்கிறதா அல்லது இடத்தில் ஆரம்பிக்கிறதா என்பது குழப்பமாகவே இருந்தது, தனி ஆவர்த்தனத்தில் அந்த குழப்பமெல்லாம் இல்லாம் இல்லை. நிறைய scope இருக்கும் இரண்டு களை ஆதி தாளத்தில் சௌக்கியமாக வாசித்தனர். தனி ஆவர்த்தனம் முடிந்ததும் கொஞ்சம் துக்கடாவாவது பாடுவார் என்று பார்த்தால், 'கா வா வா' மட்டும் பாடிவிட்டு மங்களம் கூடப் பாடாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டார்.

அவசரத்தை தவிர்த்து, கச்சேரிக்கு முன்னால், என்னென்ன பாடலாம் என்றெல்லாம் நன்காராய்ந்து, நல்ல கலவையில் ஒரு list தயாரித்து வைத்துக் கொண்டால் இவரது கச்சேரி நிச்சயம் சோபிக்கும். அடுத்த சீஸன் பார்க்கலாம்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இசை விழா 2004

77 வருடங்களாய் நடந்து வரும் ம்யூசிக் அகாடமி கச்சேரிகள் இந்த வருடம் நடக்குமா நடக்காதா என்று குழுப்பம் பல நாள் நீடித்து வந்தது.நிச்சயம் நடக்காது என்று பல பத்திரிகைகள் முடிவு கட்டி தெவச மந்திரங்கள் ஓதின. ஒரு கச்சேரிக்கு 2 மணி நேரமே அவகாசம் அளிக்கும் அகாடமி கச்சேரிகளில் எனக்கு அத்தனை விருப்பமில்லை. இருப்பினும், பெரம்பூரில் இருக்கும் நான், மயிலாப்பூரில் உள்ள எந்த சபாவுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் ம்யூசிக் அகாடமியைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஒவ்வொரு டிசம்பரிலும்,ம்யூசிக் அகாடமியைக் கடக்கும் பொழுது, அதன் வளாகம் முழுவதும் ஜன சமுத்திரமாய், கண்கொள்ளா காட்சியாய் இருக்கும். (கூட்டம் இசைக்கா கேண்டீனுக்கா என்பதெல்லாம் வேறு விஷயம்). நேற்று மயிலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸ்-க்குச் செல்லும் பொழுது, டி.டி.கே சாலையும், ராதாகிருஷ்ணன் சாலையும் சேரும் இடத்தில் சிக்னல் சிகப்பாய் மாறி என் பயணத்தை சற்று நிறுத்தி வைத்தது. அந்த இடத்தில் நின்று ம்யூசிக் அகாடமியைப் பார்த்தேன். வளாகமே வெறிச்சோடி களையிழந்து காட்சியளித்தது. என்னதான் அரசியல் என்றாலும் கச்சேரி நடக்காமல் போகுமளவிற்கா என்றெண்ணியவாறே,ஒரு இனம் தெரியாத சோகவுணர்வுடன், வாகனத்தை முசிறி சுப்ரமண்ய ஐயர் சாலைக்குச் செலுத்தினேன். மயிலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸில் ஈ.காயத்ரி தர்மவதி ராகத்தை இழைத்துக் கொண்டிருக்கையில் யாரோ ஒரு புண்ணியவான் ஒரு கத்தை பேப்பரை விநியோகம் செய்யஆரம்பித்தார். ஒவ்வொரு வரிசையிலும் வலப்பக்க முனையில் அமர்ந்திருப்பவரிடம் 20-25 பேப்பரைக் கொடுத்து 'pass' செய்யச் சொன்னார்.நம்மவர்கள் அதை அமைதியாகச் செய்வார்களா என்ன? மொட மொடப்பான பேப்பர் நமது ரசிகர்களின் கையில் அகப்பட்டு சலசல வென்று கதற ஆரம்பித்துவிட்டது. இது என்னடா கச்சேரி கேட்க இடைஞ்சலாய் என்று பேப்பரைப் பார்த்தால், www.kutcheribuzz.com எல்லா வருடமும் அற்புதமாய் செய்வதுபோல், இந்த வருடமும் இசை விழாவைப் பற்றி வெளியிடும் 'daily update' பேப்பரைத்தான் இப்படி விநியோகித்திருக்கிறார்கள். சென்ற வருடம் இதை கச்சேரி ஆரம்பிக்கும் முன்பே சபை வாசலில் விநியோகம் செய்தார்கள். இந்த வருடம் என்ன் ஆயிற்றொ தெரியவில்லை.

ஏற்கெனவே அரங்கில் சுமாரான sound system, அதிலும் கடைசி வரிசைக்கு அருகில் உட்கார்ந்தால், கல்யாணியில் சுத்த மத்யமத்தைக் கலந்தாற் போல் காதில் விழும் வாகன இரைச்சல் வேறு, இதெல்லாம் போதாதென்று அரங்கினுள்ளும் தொந்தரவா என்று பற்றிக் கொண்டு வந்தது. அப்பொழுது, என் அருகில் அமர்ந்திருந்தவர் கையில் 'sangeetha kalaanidhi for Vellore Ramabadhran' என்ற கொட்டை எழுத்து வரி கண்ணில் பட்டது. ம்யூசிக் அகாடமியில் கச்சேரியில்லாமல், விருது மாத்திரம் எப்படிக் கொடுப்பார்கள், இந்த செய்தி உண்மையா பொய்யா என்றறிய கை பரபரத்தது. காயத்ரியாவது வீணையாவது தர்மவதியாவது, முதலில் பேப்பரைப் பார்ப்போம் என்று முண்டியடித்துக் கொண்டு நானும் ஒரு பிரதியை வாங்கிக் கொண்டேன். டிசம்பர் 19-ஆம் தேதி முதல் அகாடமியில் கச்சேரிகள் தொடர்ந்து, ஜனவரி
4-ஆம் தேதி வரை நடை பெறும் என்ற செய்தி எனைப் பார்த்துச் சிரித்தது.செய்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது என்றெல்லாம் சொல்வதற்கில்லை, ஆனால் நிச்சயம் ஒரு நிம்மதிப் பெருமூச்சை வரவழைத்தது.

வேலூர் ராமபத்ரன் ஒரு சீனியர் வித்வான். மதுரை மணி ஐயர் காலத்திலிருந்து இன்றைய இளம் வித்வான்கள் வரை அனைவருக்கும் வாசித்தவர். பாடகருக்கு இடைஞ்சல் இல்லாமல், தன்னுடைய கோபங்களையெல்லாம் மிருதங்கத்தின் மேல் காட்டாமல், சர்வலகுவாய் வாசித்து கேட்பவர் காதில் குளுமையேற்றுவதில் வல்லவர். மதுரை மணி ஐயருக்கு இவர் வாசித்த கச்சேரிகளில் இருக்கும் சௌக்கியம் அலாதியானது. இந்த வருட சங்கீத கலாநிதி ஒரு பழுத்த (சீனியரான-ன்னு எத்தனை தடவை சொல்றதாம்!) ம்ருதங்க வித்வானுக்குக் கிடைத்தது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.

வேறென்ன? தாரணி வருடம், மார்கழி மூன்றாம் நாள், சுபயோக சுபதினமான இன்று சங்கீத உலகுக்கு சந்தோஷமளிக்கக் கூடிய நல்ல செய்தியுடன் இந்தப் பதிவைத் தொடங்கியாயிற்று. இனி, நிதமும் நான் செல்லும் கச்சேரிகளைப் பற்றிய பதிவுகள் (என் சோம்பேறித்தனம் தடுக்காவிடில்) தொடரும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.