Tuesday, December 27, 2005

தேரும் காரும் ஜெட்டும்...

போன வருடம் 'my concert of the season'-ஆக அமைந்தது கிருஷ்ண கான சபாவில் டி.எம்.கிருஷ்ணா, நாகை முரளீதரன் மற்றும் திருச்சி சங்கரனுடன் பாடிய கச்சேரிதான். செண்டிமெண்டை விட்டுவிடா மற தமிழனுக்குரிய இலக்கணத்தை விட்டுவிடாமல் 20-ஆம் தேதி கிருஷ்ண கான சபாவை நோக்கி நடையைக் கட்டினேன். (இன்னாபா செய்ய, மழையில ரண்டு தபா மாட்டிக்கிட்டதால, நம்மளாண்ட இருக்குற பழைய மொபெட்டை நம்பி போவ முடில). இந்த வருடம் கிருஷ்ண கான சபாவில் பக்க வாத்தியங்கள் வேறு எனினும், எம்பார் கண்ணன் நான் விரும்பி கேட்கும் வயலின் வித்வான்களிள் ஒருவரானதாலும், மன்னார்குடி ஈஸ்வரன் சௌக்கியமாய் வாசிக்கும் சீனியர் வித்வான் ஆனதாலும் கச்சேரிக்கு நம்பிச் சென்றேன்.

என் பத்து நிமிட தாமதத்துக்குள் என்னென்ன உருப்படிகள் போனதோ தெரியவில்லை, நான் அரங்கில் நுழையும் போது 'சேஷாசல நாயகம்' ஆரம்பித்தது. சாஹித்யம் தெளிவாய் புரியும்படி விறுவிறுப்பான காலப் பிரமாணத்தில், கொஞ்சம் கூட கள்ளக் குரல் கலக்காமல் பாடி, 'அரவிந்த பத்ர நயனம்' என்னும் இடத்தில் நிரவல் ஸ்வரம் பாடினார். எம்பார் கண்ணன் ஆலாபனைகளில் ஃபாலோ செய்வதிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்த வாய்ப்புகளில் 'சோலோ' செய்ததும் அவரது வாசிப்பின் முதிர்ச்சியைக் காட்டின. கச்சேரியில் இன்னொரு welcome change, டி.எம்.கிருஷ்ணாவின் வாயிலிருந்து போட்டி போட்டு அளவுக்கதிகமாய் வந்து கொண்டிருந்த 'பலே', 'சபாஷ்' போன்ற வார்த்தைகள் கணிசமானதாளவில் குறைந்திருப்பது.

நல்ல விறுவிறுப்பான வராளியைத் தொடர்ந்த 'மார்க ஹிந்தோளம்' (சல மேலரா), நல்ல contrast-ஐ ஏற்படுத்தியது. (மார்க ஹிந்தோளம் சாரமதியின் ட்வின் சிஸ்டர் போல் இருக்கிறது. சில இரட்டையர்களைப் பல முறை கண்டாலொழிய வித்தியாசப்படுத்துவது கடினம். இந்த அந்த வகை. இன்னும் நிறைய கேட்க வேண்டும்.)

மத்யம காலக் கிருதிகளில் இருக்கும் விறுவிறுப்பான சங்கதிகளும், தாள கதிகளும் கேட்க அலுப்பில்லாமலிருப்பினும், ராகத்தின் உண்மை அழகு வெளிப்படும் வழியில் அமைந்திருக்கும் கிருதிகள் விளம்ப காலத்தில் அமைந்திருக்கும் கிருதிகளிலும்தான். (சும்மா சும்மா விளம்பம், துரிதம், மத்யமம்-னு எல்லாம் பீட்டர் உடாத. அப்படீனா இன்னானு சொல்லு மாமே-னு ஒலித்த குரலுக்கு: விளம்ப காலம்-னா சுலோவா பழனில தேரு போற ஸ்பீடு. மத்யம காலம்னா மெர்சடிஸ் பென்ஸு cruise-ல ஹைவேல போற ஸ்பீடு, துரிதம்னா ஜெட்டு ஸ்பீடு. மூணும் சவாரியும் சுகம்தான்.) வசந்தா ராகத்தின் அழகிய படபிடிப்பைத் தொடர்ந்து, கிருஷ்ணாவின் குரு செம்மங்குடியை நினைவுபடுத்திய 'ஹரிஹரபுத்ரம்' பாடலை அதி விளம்ப காலத்தில் பாடினார். (பாடிலின் தாளம் 'கண்ட ஏகம்' என்று நினைக்கிறேன்.). பாடலில் கல்பனை ஸ்வரம் பாடும் போது முதல் கால ஸ்வரங்கள் (முதல் காலம்னா பாட்டோட ஸ்பீடு, இரண்டாம் காலம்னா பாட்டோட ஸ்பீடுக்கு டபுள் ஸ்பீடு, அஷ்டே விஷையாளு). மட்டும் பாடி முடித்தது அவர் அதுவரை ஏற்படுத்திய mood-ஐ தக்க வைக்க வகையில் அமைந்த்தது.

கிருஷ்ணாவின் கச்சேரி எனக்கு மிக மிக நிறைவாக அமைந்தாலும், அவரின் கச்சேரி அமைப்பைப் பற்றி ஒரு விஷயம். விளம்ப காலம் எத்தனை அழகாக இருந்தாலும் ஒரு கச்சேரியில் ஓரிரு கீர்த்தனைகளைக் கேட்டால்தான் அலுப்பு தட்டாமல் இருக்கும். பாவம் சொட்டும் 'மார்க ஹிந்தோளம்', அதனைத் தொடர்ந்து வழக்கமான இரண்டு களை சவுக்கத்தைவிட கொஞ்சம் விளம்பமான காலத்தில் வசந்தா அதே காலப் பிரமாணத்தில் 'க்ஷீர சாகர' தேவகாந்தாரியில். அதனைத் தொடர்ந்து இழைத்து இழைத்துப், மருந்துக்குக் கூட பிருகாக்கள் பக்கம் போகாமல் பாடிய சங்கராபரணம் அதனைத் தொடர்ந்த இன்னொரு இரண்டு களை பாடலான 'எந்துகு பெத்தல', என்று விளம்பத்துக்கு மேல் விளம்பமே அடுக்கினால் அடுக்குமா?

அரியக்குடியும், செம்மங்குடியும், ஜி.என்.பி-யும் (இன்னும் பல ஜாம்பவான்கள்), கச்சேரியில் 70% இட ஒதுக்கீடு மத்யம காலத்துக்குக் கொடுத்ததில் காரணமில்லாமல் இல்லை. அதி விளம்பமாக அமைந்திருக்கும் கீர்த்தனைகளில் கூட மத்யமா கால சரணங்கள் தீக்ஷதர் அமைத்திருப்பது எதனால்? ஜி.என்.பி தனது சங்கீத கலாநிதி ஏற்புரையில் மத்யம கால கீர்த்தனங்களின் முக்கியத்துவத்தைக் கூறும் போது வால்மீகி ராமாயணத்தில் சீதையை அனுமன் சந்தித்த இடத்தைக் குறிப்பிடுகிறார். சீதையிடம் பேசும் போது அனுமனின் குரல் அதிக சத்தமாகவும் அல்லாமல் குறைந்த ஒலியுடனும் அல்லாமல், அவரது பேசும் முறை அதிக வேகமாகவும் அல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் இருந்தது என்கிறாராம் வால்மீகி. இதுவே ஒரு சிறந்த கச்சேரிக்கும் உரிய இலக்கணமாகும் என்கிறார் ஜி.என்.பி.

பல்லவி முடிந்து துக்கடாவில்கூட 12 நிமிடத்துக்கு பைரவி ராகத்தை இழைத்த போது அரங்கைவிட்டு வெளியேறியவர்கள் ஏராளம். முன் சொன்ன உதாரணத்தின் படி பார்த்தால்கூட, வருடத்தில் எத்தனை முறை காரில் செல்வோம், எத்தனை முறை தேரின் மெதுவான ஆனால் கம்பீரமான ஓட்டத்தைக் காணச் செய்வோம் அல்லது எத்தனை முறை ஜெட்டில் செல்வோம் என்று பார்த்தால், மத்யம காலக் கிருதிகளுக்கு கிடைக்க வேண்டிய due என்ன என்பது தெளிவாகிவிடும். 'வேத சாஸ்த்ர தத்வார்தமு' என்ற இடத்தில் நிரவல் செய்த போது, முதல் சில ரவுண்டுகளுக்குப் பிறகு சில விறுவிறுப்பான சங்கதிகளூடன் பாடிய பொழுது அதற்குக் கிடைத்த அப்ளாஸுக்கு அவர் நன்றாக பாடியது மட்டும் காரணமல்ல என்பது என் அபிப்ராயம். சரி மீண்டும் கச்சேரிக்கு....

சங்கராபரண ராகத்தை படிப்படியாய், முதலில் காந்தாரத்தை மையமாக வைத்தும், பின்பு படிபடிப்படியாய் மேலேறி தார ஸ்தாயி ஷட்ஜமத்தில் நின்று கார்வைகள் கொடுத்து, அதன் பின், காம்போதி, சங்கராபரணம் போன்ற ராகங்களைப் பாடும் போது "இங்கே வா, வா" என்று அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கும் தார ஸ்தாயி காந்தாரத்திலும் நின்று அவர் உதிர்த்த முத்துக்கள் கணக்கிலடங்கா. மொத்தத்தில் சங்கராபரண ராகத்தின் சாரத்தைப் பிழிந்து ஒவ்வொரு ஸ்வரமும் ஜொலிக்கும் படி இழைத்து, ஒரு ஸ்வரத்திலிருந்து இன்னொரு ஸ்வரத்திற்குச் செல்லும் போது அந்த transition-ஐ காதலர்கள் பிரியும் போது பிரிவை எவ்வளவு தாமதப்படுத்துவார்களொ, அவ்வாறு இழைத்து இழைத்துப் பாடி அரங்கை இன்பத்தில் ஆழ்த்தினார். கிருஷ்ணா மேல் ஸ்தாயியில் இழைத்ததை எம்பார் கண்ணன் கீழ் ஸ்தாயியில் இழைத்தார். கீழிலிருந்து மேல் வரை சென்று மீண்டும் கீழே வந்ததும் எம்பார் கண்ணன் வாசித்த வேகமான பிரயோகங்களுக்கு பலத்த வரவேற்பு அமைந்தது. தன் லய விந்யாசங்களையெல்லாம் பல்லவி பாடும் போது காட்டிக் கொள்ளலாம். மற்றபடி கல்பனை ஸ்வரங்கள் பாடும் போது ராகத்தின் ஸ்வரூபம் வெளிப்படுத்துவது மட்டுமே பிரதானமாகக் கருது 'சர்வ லகுவாய்' ஸ்வரம் பாடியதும், தனது ஒவ்வொரு செய்கைக்குப் பின்னும் வயலினில் ரெஸ்பான்ஸுக்கு வாய்ப்பு கொடுத்தற்காகவும், கச்சேரியின் நடுவில் எழுந்த போக விரும்புவோற் பாட்லின் நடுவிலோ, தனி ஆவர்த்தனம் ஆரம்பித்தவுடனோ, மங்களம் ஆரம்பித்தவுடனோ செல்ல வேண்டாம், என்று கேட்டுக் கொண்டதற்காகவும் பல சபாஷ்கள் போடலாம். (அப்படியும் மங்களம் ஆரம்பித்தவுடன் கிளம்பிய கூட்டத்தைப் பார்த்து கடுப்பான கிருஷ்ணா "மங்களத்துக்கு மாத்திரம் உட்காருங்கோ-னு சொன்னேன். இரண்டு நிமிஷம் ஆகுமா?", என்ற போட்ட ஒரு மிரட்டலில் இருந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு எழுந்தவர்கள் எல்லாம் மீண்டும் இருக்கையில் அமர்ந்தனர்.) வயலினின் ஒரு ரெஸ்பான்ஸில் எம்பார் கண்ணன், மதுரை மணி ஐயர் தனதாக்கிக் கொண்ட 'க ம ப ம க; ரி க ச ரி க' என்ற இடத்தை வாசித்தது must have kindled nostalgia. அதனால் பல 'ஆஹாகாரங்கள்' புறப்பட்டன.

கல்பனை ஸ்வரங்களைத் தொடர்ந்து தனி ஆவர்த்தனம் ஆரம்பமானது. அன்று வாசித்த கஞ்சிரா கலைஞர் (கணேஷ் குமார்) புதிதாக இருகிறார் (ஹி ஹி எனக்கு புதிது. ஃபீல்டுக்கு சீனியராக இருக்கலாம்). ராக் ஸ்டார் தோற்றத்தில் இருக்கும் அவரின் கைகள் வேகமும் விவகாரமும் நிறைந்ததாக இருக்கின்றன. இரண்டு களை ஆதி தாளம்தான் அடிக்ண்டிக் கேட்கக் கிடைக்கும் தாளமாகினும், மிஸ்ரக் குறைப்பு கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று அன்றுதான் நினைத்தேன். முதல் சில ரவுண்டுகளில் சதுஸ்ரமும், பின்பு திஸ்ர நடையும் வாசித்துவிட்டு, குறைப்பில் மிஸ்ர குறைப்பை வாசித்து என் ஏக்கம் நீங்கச் செய்யும் வகையில் தனி ஆவர்த்தனம் சௌக்கியமாக அமைந்தது.

விளம்ப காலம் கிருஷ்ணாவுக்கே அலுத்ததோ என்னமோ தெரியவில்லை நல்ல விறுவிறுப்பான வகையில் சுருட்டியில் ராகம் தானம் பல்லவி பாடினார். தானம் இன்னும் கூட பாடியிருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும் பாடிய வரையில் அற்புதமாகத்தான் இருந்தது. " ராமசந்திர தயாநிதே ஸ்ர்நிதே சுகுணநிதே" என்னும் பல்லவி சதுஸ்ர ஜம்பை தாளத்தில், முக்கால் இடம் தள்ளி அமைந்த எடுப்புடன் அமைந்திருந்தது. பல்லவியில் வழக்கமாய் நிகழ்த்தப்படும் நிரவல்,மூன்று கால்ப்பிரமாணங்களில் பாடுவது போன்ற விஷயங்களுக்குப் பின் ஸ்வரங்கள் பாடி ராகமாலிகையில் தன்யாசி, சஹானா, காபி ராகங்களை ஏதோ சடங்கு போலப் பாடாமல், அந்த ராகங்களைக் கேட்ட நிறைவை அளிக்கும் வகையில் பாடினார்.

post pallavi pieces-ஆக அதி விளம்ப பைரவியும், மத்யம கால பரஸும், துரித காலத்தில் கமாஸ் ராக தில்லானாவும் பாடி, மேற்கூரிய வகையில் மங்களமும் பாடி கச்சேரியை முடித்தார். போன வருடம் போல இக்கச்சேரியை 'My concert of the season' என்று நான் கூறம் வகையில் இல்லையெனினும், மிக மிக ரசிக்கும் வகையில் gimmick free, pure raga based concert-ஆக கச்சேரி அமைந்தது.

நேற்று இந்த கட்டுரையை எழுதி முடித்துவிட்டு காலையில் ஒரு கையில் காப்பியும் மறு கையில் ஹிந்துவும் கொண்டு நாளைத் தொடங்கிய போது கண்ணில் பட்ட விஷயம் கீழே:

இந்த கச்சேரியைப் பற்றிய விமர்சனம், நான் முன்பு கூறிய விமர்சகர் எஸ்.வி.கே எழுத, இன்றைய (27 dec) இந்துவில் வந்துள்ளது. பிருகாக்களை அரவே தவிர்த்து, விளம்ப காலமாகப் பாடி, தியாகராஜர் கிருதிகளை கணிசமான அளவு பாடினால் சாதகமான விமர்சனம்தான் எழுதுவார் என்று உலகறிந்ததே. இதில் வேடிக்கை என்னவென்றால் அதிசயமாய் தனி ஆவர்த்தனத்தைப் பற்றி ஒரு வரியோடு நிற்காமல், இன்னொரு வரியும் எழுதியுள்ளார். அதில்தான் வந்தது வினை, கச்சேரியில் கடமே இடம் பெறாத நிலையில், கணேஷ் குமாரின் கஞ்சிரா வாசிப்பு இவருக்கு மட்டும் எப்படி கடமாகக் கேட்டிருக்கும்? உண்மையில் கச்சேரியைக் கேட்டுதான் இவரைப் போன்றோர் விமர்சனம் செய்கிறார்களா அல்லது அவ்வப்பொழுது தலையைக் காட்டிவிட்டு எதையாவது இட்டு நிரப்புகிறார்களா என்ற சந்தேகம் வலுக்கிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 10:59 PM, Blogger Nadopasana said...

Thanks Ram for your excellent review
I have noticed that TM Krishna always sings in a slow tempo?
I have not heard his guru Semmangudi sing in such a slow tempo.

 
At 8:28 AM, Anonymous Anonymous said...

வருடா வருடம் ஒரே பாடலை மீண்டும் மீண்டும் வெவ்வேறு
பாடகர்கள் பாட கேட்பது போன்ற அலுப்பு தட்டும் விஷயம்
வேறு இருக்குமா?

 
At 11:09 PM, Blogger Nadopasana said...

Embar Kannan is a sishya of A.Kanyakumari
Sometimes, he plays electrical violin but not sure whether he plays that for carnatic concerts.

 
At 11:14 PM, Anonymous Anonymous said...

Anony
Who said it is boring? Actually , it is inertesting to study how different singers treat the same raga.

 
At 1:25 PM, Anonymous Anonymous said...

it is stupid. Paarppana sathi.

 
At 1:25 PM, Anonymous Anonymous said...

it is stupid. Paarppana sathi.

 

Post a Comment

<< Home