Thursday, December 22, 2005

முதல் நாள் புராணம் - மூன்றாவது நாளாக

Malladi Brothers @ Brahma Gana Sabha, 17/12/05

மழை நன்றாக பெய்து கொண்டிருந்து போதும் மல்லாடி சகோதரர்களின் கச்சேரிக்கு கணிசமான அளவில் கூட்டம் வந்திருந்தது. இவர்களின் கச்சேரியை போன முறையே முத்ராவில் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் (நாலு மணி நேர கச்சேரியில் உமையாள்புரக்காரருடன் சேர்ந்து கலக்கினார்களாம்!), தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. மைசூர் மஞ்சுநாதும், திருச்சி சங்கரனும் பக்க வாத்யம் வாசிக்கிறார்கள் என்பதைப் பார்த்ததும், எந்த கச்சேரிக்கு செல்வது என்று ஹிந்துவின் நான்காம் பக்கத்தை வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் போராடும் இன்ப அவஸ்தை இல்லாமல் போனது.

6.40-க்கு தோடியை சிறிய கீற்றாகக் காட்டி "ஏரா நாபை" வர்ணத்தை இரண்டு காலப்பிரமாணங்களில் பாடி கச்சேரியைத் தொடங்கினார்கள். இந்த வர்ணத்தில்தான் தோடியின் ஸ்வரூபத்தை எத்தனை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்! எத்தனை விதமான பரிமாணங்கள்! ்ஷட்ஜமம் மற்றும் பஞ்சமத்தை வர்ஜமாக்கி (அதாவது இல்லாமல் ஆக்கி) எத்தனை பிரயோகங்கள்! புதுக்கோட்டை பாணி மிருதங்க வாசிப்பில் முதன்மை வித்வானாகிய திருச்சி சங்கரனின் கரங்கள் அழகான வர்ணத்தை இன்னும் மெருகேற்றின. பாடகர் கீர்த்தனை பாடும் பொழுது, பெரும்பாலும் அனுபல்லவியில் மற்றும் சரணங்களில் கார்வைகள் கொடுப்பார், அக்கார்வைகளை இன்னும் மிளிரச் செய்யும் பொருட்டு சில சொற்கட்டுகளை மிருதங்கக்காரர் வாசிப்பார். அதில் சிலவற்றை 'டேக்கா கொடுப்பது' என்று குறிப்பிடுவது உண்டு. சங்கரனின் தனிச் சிறப்பு அவரது 'டேக்கா சொற்களில்' கேட்கும் நாதம். உமையாள்புரம் சிவராமனின் 'சாப்பு' எப்படிச் சிறப்பு வாய்ந்ததோ அத்தனை சிறப்பு சங்கரனின் டேக்காவிற்கும் உண்டு. ஆங்காங்கே ஒலித்த தவில் சொற்கட்டுகளும், சங்கதிகளில் போதும், பல்லவி - அனுபல்லவி - சரணம் transitions போது வாசிக்கப்பட்ட மோராக்களும், கச்சேரிக்கு தனி களையை அளித்தன. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்....சரி மீண்டும் மல்லாடிக்கு வருவோம்.

மல்லாடி சகோதரர்களில், யார் ஸ்ர்ராமபிரசாத் யார் ரவி குமார் என்று (இவர்கள் ஊரில் எதுகையாய் ராமு-சோமு, ஹரி - கிரி, என்றெல்லாம் வைக்கும் ஃபா்ஷன் இன்னும் வரவில்லையோ? இப்படித்தான் என் நண்பர் ஒருவரின் முதல் மகனுக்கு வினீத் என்று பெயர் வைத்துவிட்டு இரண்டாவது பையனுக்கு நவநீத் என்று வைத்து இருக்கிறார். "பையனுக்கு "வெண்ணை-னு" பேரு வெச்சுருக்கியேடா வெண்ணை" என்று கேட்க வேண்டும் போல இருந்தது.) தெரியாத நிலையில், போன வருடம் மாம்பலம் சகோதரிகளைக் குறித்தது போல (இம்முறை தமிழில்)ம1, ம2 என்று குறித்துக் கொள்வோம். தோடியைத் தொடர்ந்து, வசந்தாவில், நல்ல விறுவிறுப்பான காலபிரமாணத்தில் 'வாடே வேங்கடாத்ரி' கல்பனை ஸ்வரங்களுடன் பாடப்பட்டது (அன்னமையா கீர்த்தனையோ?). இருவருக்கும் நல்ல குரல் வளம் அமைந்திருக்கிறது. ஸ்ருதி சுத்தமும், கமகங்களில் தெளிவும் மிளிர்கிறது. வசந்தாவைத் தொடர்ந்து தேவமனோஹரியை விஸ்தாரமாக ஆலாபனை செய்த ம1-க்கு நினத்த சங்கதிகள் எல்லாம் சாரீரத்தில் பேசுகின்றன. தேவமனோஹரி, சிலரால் மத்யமாவதியையும் சுத்த சாவேரியும் சேர்த்த கலவை போலப் பாடப்படுகிறது. அப்படியல்லாமல், அதற்கென தனி உருவம் கொடுத்து, வேறு ராகங்களின் சாயை தெரியாமல் கையாளப்பட்டதற்கு ம1-க்கு ஒரு சபாஷ்!! மைசூர் மஞ்சுநாத் நல்ல தேர்ந்த வயலின் வித்வான். 2003-இல் அவர் சகோதரர் நாகராஜுடன் சேர்ந்து நடத்திய டூயட் கச்சேரியில் வாசித்த காம்போஜி இன்னும் காதில் ஒலிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் முதல் நிலை வயலின் வித்வானாக சில காலமாகவே விளங்கி வரும் இவருக்கு சில சீஸன்களாக சென்னையிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இத்தனை சொன்ன பின்பு அவர் தேவமனோஹரி ஆலாபனையை எப்படி வாசித்திருப்பார் என்று சொல்லத்தான் வேண்டுமா? மிஸ்ர சாபுவில் அமைந்த "எவரிகை" பாடலை சாஹித்ய சுத்தமாய் பாடி விஸ்தாரமாய் ஸ்வரப்பிரஸ்தாரம் செய்தார்கள்.

கச்சேரி தொடங்கியதிலிருந்தே திருச்சி சங்கரனுக்கு அரங்கில் இருந்த ஒலிப்பெருக்கியில் திருப்தி ஏற்படவில்லை. பால்கனியில் உட்கார்ந்து இருந்த எனக்கு அவரது வலந்தலைப் பக்கத்தின் ஒலி அளவைவிட தொப்பி பக்கத்தின் ஒலி அளவு அதிகமாகக் கேட்டது. ரசிகரொருவர், மிருதங்கம் பாடகர் பாடுவதைவிட அதிகமாக ஒலிக்கிறது என்று முறையிடவும் இன்னும் குழப்பம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மிருதங்கத்திலிருந்து கையை எடுத்த திருச்சி சங்கரனின் வேகத்தில் இருந்த கோபம் மின்னல் போல் வெட்டினாலும் அடுத்த நொடியிலேயே மறைந்ததையும் காண முடிந்தது. அவரே பாடச் சொல்லி கேட்டுக் கொண்டும், மைக் மேன் இங்கு வந்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடித்தனர் மல்லாடி சகோதரர்கள். இவை எல்லாம் நடந்த பத்து நிமிடங்களுக்குள்தான் என்றாலும், நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

நான் அதுவரை கேட்டிராத கிருதியான, மைசூர் சதாசிவ ராவின் "நினுவினா", பலஹம்ஸா ராகத்திலும், தீக்்ஷதரின் சாரங்கா ராகக் கிருதியான "அருணாசல நாதம்" short and sweet ஆலாபனைக்குப் பின்னும் பாடப்பட்டன. பல மத்யம கால கீர்த்தனைகளை ஆதி, ரூபகம், மிஸ்ர சாபு தாளங்களில் பாடி கச்சேரியை களை கட்ட வைத்து விட்ட நிலையில், கச்சேரியின் பிரதான ராகமாக முகாரியை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார் ம2. பைரவியின் சாயல் அரவேயில்லாமல், அற்புதமாய் இழைத்து இழைத்துப் பாடிய ம2, தார ஸ்தாயியில் கொஞ்சம் கஷ்டப்பட்டது போலவே தெரிந்தது. ஆங்காங்கே கொடுத்த கார்வைகள் மிளிர்ந்தாலும் அதனைத் தொடர்ந்து கொடுக்க முயன்ற பிருகாக்கள் கொஞ்சம் தேசலாகவே ஒலித்தன. மஞ்சுநாதின் ரெஸ்பானின்ஸில் இக்குறை நீக்கப் பெற்றது. நன்றாக உழைத்து இழைத்து பாடப்பட்ட ஆலாபனைக்குப் பின் "எந்த நின்னே" அல்லது "காரு பாரு" நல்ல விளம்ப காலத்தில் பாடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், விளம்ப காலத்தில், செம்மங்குடி என்றதும் நினைவிற்கு வரும் கிருதியான "க்்ஷீணமை" (some may feel itz other way around) பாடலை அவர் பாடுவதைவிட விளம்பமான காலபிரமாணத்தில் பாடினார்கள். நன்றாகத்தான் இருந்தது என்றாலும், செம்மங்குடிப் இப்பாடலைப் பாடுவது கேட்டுப் பழகிய காதுகளுக்கு இது அத்தனை ருசித்திருக்குமா என்பது சந்தேகமே. இது பாடகர்களின் குற்றமல்ல, கேட்பவர்களின் குற்றமே! "ஏதி ஜேஸின ஜகன் நாதுடு சிரமுன" என்ற இடத்தில் விஸ்தாரமான நிரவலும், ஸ்வரப் ப்ரஸ்தாரமும் அதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்து இருந்த தனி ஆவர்த்தனமும் இடம் பெற்றது. தனியில் தனியாகச் சொல்லும்படி இருந்தது சங்கரனின் "மிஸ்ர நடை". முதல் ரவுண்டிலேயே பலத்த அப்ளாசைப் பெற்ற சங்கரன், தொடர்ந்து வாசித்த ரவுண்டுகளிலும் குறைப்பிலும் வேறு சில கதிகளிலும் பேதம் செய்து வாசித்தார்.

பிரதான உருப்படியைத் தொடர்ந்து கமாஸ் ராகக் கிருதியான "இடது பதம் தூக்கி ஆடும்", காபியில் ஸ்லோகமும், கே.வி.என் புகழ், "ஜானகி ரமணா" பாடலும் பாடப்பட்டன. ரசிகர் குழாமிலிருந்து யாரோ சதாசிவ பிரம்மேந்திரரின் பாடலை வேண்டிக் "கத்த". 'சர்வம் பிரம்ம மயம்' ஹிந்துஸ்தானி பாணியில் தொடர்ந்தது. அதன் பின் பாடிய பாடல் 'ப்ரூஹி முகுந்தேதி'. இந்த பாடலில் இரண்டாவது வரி, எம்.எஸ் பாடியதை வைத்துப் பார்த்தால் 'ப்ரூஹி முகுந்தேதிதான்'. இவர்கள் 'பாஹி முகுந்தேதி' என்று பாடினார்கள். ஏதாவது பாட பேதமாக இருக்கும் என்று நினைத்தேன். கடைசியில் ஒரு சரணத்தில் 'நாராயண தீர்த்தரின்' பெயரும் வர, நான் உட்பட பல ரசிகர்கள் குழம்பினோம். சதாசிவ பிரம்மேந்திரரின் கிருதியில் நாராயண தீர்த்தர் எங்கிருந்து முளைத்தார் என்று. விசாரிக்க வேண்டும்...

'ஜங்கார ஸ்ருதி செய்குவாள்' மெட்டில் அமைந்த 'தெலுங்கு கீர்த்தனையும் (நீ மாட)' (எதைப் பார்த்து எது அமைந்தது என்று நானறியேன்), சுருட்டியில் மங்களமும், மத்யமாவதியில் ஸ்லோகமும் கச்சேரியை அழகுற நிறைவு செய்தன. அப்புறம் மழையில் நான் பட்ட பாடுதான் நேற்றே பாடியாகிவிட்டதே!

இவ்வாறாக என் முதல் நாள் புராணம் மூன்றாம் தவணையில் நிறைவு பெருகிறது!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home