Tuesday, December 20, 2005

இசை விழா 2005 - தொடக்கம் இங்கே! தொடர்ச்சி?.......

December 17 @ Bharathiya Vidhya Vhavan, 2.00 P.M

கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு இந்த வலைப்பூவை ஆரம்பித்து, டிசம்பர் சீசனின் என் கச்சேரி (கேட்கும்) அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அதன் பின் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை எதையோ இட்டு நிரப்பிய வண்ணம் என் எழுத்துப்பணி (அதிகம் எழுதாமல்) தமிழ் கூறும் நல்லுலகு போற்றும் படி தொடர்ந்து வருகிறது. இந்நிலையை மாற்றி, அடிக்கடி எழுதி, எழுத்துலகை துயரத்தில் ஆழ்த்த எண்ணம் இருப்பினும், அவ்வெண்ணத்தை அழுத்தும் வகையில் என் சோம்பேறித்தனம் இருந்து வருகிறது. எல்லோருக்கும் வருடத்திற்கு இரண்டு வாரங்கள் விடுமுறை கிடைப்பது கண்டு, 'எனக்கும் விடுமுறை வேண்டும்', என்று சோம்பலும் கேட்க, 'சரி, முயற்சி செய்கிறேன்', என்று நானும் கூறிவிட்டேன். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேனா என்பது மார்கழியில் 'எல்லே இலங்கிளியே'-வுக்கு உரிய நாள் வருவதற்குள் தெரிந்துவிடும்.

சென்ற வருடம் போலவே, இம்முறையும் டிசம்பர் 17-ஆம் நாள் என் கச்சேரி கேட்கும் படலம் தொடங்கியது. ஆனால், வரலாறு காணாத மழையாலும், 'அம்மா' முயூசிக் அகாடமிக்கு வருவதால், நுங்கம்பாக்கத்தில் உருவான வாகன நெரிசலாலும், 'இனிதே' என்ற பதத்தை 'தொடங்கியது' என்ற பதத்திற்கு முன்னொட்டாக்க முடியவில்லை.

சென்ற வருடம் காயத்ரியின் வீணை இசை கேட்க விழைந்து வீட்டை விட்டு கிளம்பிய வேளை நன்றாக அமைந்ததால், சீசனும் அமர்க்களமாய் அமைந்தது. அதே செண்டிமெண்டை ஃபாலோ செய்யலாம் என்று பார்த்தால், காயத்ரியின் கச்சேரி 18-ஆம் தேதிதான் இருப்பது தெரிந்தது. சரி, வேறு வீணை கச்சேரி இருக்கிறதா என்று பார்த்த பொழுது, ஜெயந்தி குமரேஷின் கச்சேரி இருப்பது தெரிய வந்தது (ஒரு வீடு இரு வாசல் படத்தின் ஒரு வீடு, சாரி, ஒரு ஹீரோவான பிரபல வயலின் வித்வான் குமரேஷின் மனைவிதான் ஜெயந்தி). 2003-இல் இருந்து இவரது கச்சேரிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த போதும், ஏதோ ஏதோ காரணங்களால் செல்ல முடியவில்லை. இவரது இசையைக் கேட்க இதுதான் சமயம் என்று முடிவெடுத்தேன். 4.30 மணி கச்சேரிக்கு, 3.45 வரை வீட்டில் இருக்க இருப்பு கொள்ளாமல், 2.00 மணி வாக்கில் ஏதேனும் கச்சேரி தேறுமா என்று பார்த்த பொழுது, சாகேதராமன் 'கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்' பாரதிய வித்யா பவனில் நடத்தும் இசை விழாவில் பாடுவது தெரிந்தது. பெங்களூரில் இன்டெல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார், நன்றாக பாடுகிறார், என்று எனக்கு நல்ல சங்கீதத்தை அறிமுகப்படுத்தி வைத்த ஒருவர் சொல்ல, முதலில் பாரதிய வித்யா பவன், அங்கிருந்து ஒரு முறுக்கு முறுக்கினால் 5 நிமிடத்தில் சிவகாமி பெத்தாச்சி ஹாலுக்கு சென்றுவிடலாம் என்று கிளம்பினேன்.

வாகன நெரிசலை தாண்டி நான் கச்சேரிக்கு செல்வதற்குள் கச்சேரி ஆரம்பித்து, வலஜி ராகக் கீர்த்தனை (ஜாலந்தர) முடிந்து, 'பவ ரோக நிவாரிணி'-யில் நிரவல் போய்க் கொண்டிருந்தது. சாகேதராமனைப் பார்த்தால் 20 வயது இளைஞர் போலத்தான் தெரிகிறார். நல்ல இனிமையான சாரீரம். லால்குடியிடம் சிட்சையாம். ராகத்தின் ஜீவ ஸ்வரங்களை நன்று உணர்ந்து பாடுவதிலும், இழைத்து இழைத்து கமகங்களைக் கொடுப்பதிலும் குரு பரம்பரை தெளிவாய் தெரிகிறது. ஹாலின் நடு நாயகமாய் ஒரு பெரியவர் (சாகேதராமனின் தந்தையாக இருக்கலாம்), வருகிறவர்களை எல்லாம் வரவேற்று, அவ்வப்போது ஜோராக கைதட்டி, யாரேனும் பேசினால் அதட்டியபடி அமர்ந்திருந்தார். 30-40 பேர் அமரக் கூடிய அளவில் இருக்கும் மினி ஹால் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது.

நிரவலும் ஸ்வரமும் தங்கு தடையின்றி வலஜியின் ஸ்வரூபத்தை அரங்கில் பவனி வர வைத்தன. திடீர் என்று முடிவெடுத்துச் சென்றதால், பக்கவாத்யங்கள் யார் என்று கவனிக்க முடியவில்லை. வலஜியைப் பொருத்த மட்டில சாகேதராமனின் கற்பனைகளை நிழல் போலத் தொடர்ந்தது அந்த இளம் வயலின் வித்வானின் வில். மேடையில் இருந்த இளைஞர் கூட்டணியில், என்னைப் பெரிதும் கவர்ந்தது மிருதங்கம் வாசித்தவர்தான். நிறுத்தி நிதானமாய், பாடகர் பாட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு வாசித்து அசத்தினார். பல்லவி to அனுபல்லவி, அனுபல்லவி to சரணம் transition அனைத்திலும் மோராக்கள் வைக்காவிடினும், வைத்த மோராக்கள் அத்தனையும் 'பளிச்'.

வலஜியைத் தொடர்ந்து, தன்யாசியை sub-main ராகமாக எடுத்து ஆலாபனை செய்தார். முதல் பிடியிலேயே 'இன்ன ராகம் தான் பாடுகிறேன்' என்று முத்திரை பதித்து காட்டியது சிறப்பு. 'தோடி ஆரம்பிக்கறாரோ? இல்லையே பைரவி மாதிரி இருக்கே! ஓ! தன்யாசியா...', என்றெல்லாம் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. படிப் படியாய் விஸ்தாரம் செய்த ராகத்தில், கீழ் ஸ்தாயி ஷட்ஜமத்துக்கு கீழே செல்லும் பொழுது கொஞ்சம் சிரமப் பட்டது தெரிந்தது. (மழையும் பனியும் இருக்கும் காலத்தில் கீழ் ஸ்தாயியில் காத்து வராமல், குரல் கேட்பதே பெரிய விஷமல்லவா?).

ஆலாபனை செய்யும் பொழுது அந்த ராகத்தில் தோன்றும் அனைத்து பிடிகளையும் காட்ட வேண்டும் என்று அவசியம் அல்ல. ஒரு lecture demonstration-இல் ஒரு ஆய்வாளர் கூறியது போல, ஆலாபனைக்கும் 'காலப் பிரமாணம்' உண்டு. அக்காலப் பிரமாணம், ஆலாபனையை தொடர்ந்து வரும் கீர்த்தனத்தை பொருத்தோ, அல்லது பல்லவியைப் பொருத்தோ அமையும். ஆலாபனையில் எந்த அளவு பாடுவதற்கு முக்கியம் தர வேண்டுமோ, அந்த அளவிற்கு எங்கெங்கே எந்தெந்த பிடியை நிறுத்த வேண்டும் என்பதும் முக்கியம். Many a times, the pause enhances the listening experience as it lets the listener grasp the imagination. Like the saying "hatred is the other side of love", probably, "silence is the other side of music". இவ்விஷயம் சாகேதராமனின் ஆலபனையில் மிளிர்ந்தாலும், வயலின் வித்வானின் ஆலாபனையில் சற்று குறைவாகத்தான் தென்பட்டது. தன்யாசி ராகத்தில் தனக்குத் தெரிந்ததையெல்லாம் அவசர அவரமாக நிரப்பியது போலத் தோன்றியது. இளைஞர்தானே, நாள்பட நாள்பட சூட்சமம் பிடிபட்டு விடும்.

தன்யாசி ஆலாபனைக்குப் பின், கேட்பதற்கரிய கீர்த்தனையான 'மீனலோசனி ப்ரோவ'-வைத் தொடங்கினார். பாடலின் பல்லவியின் எடுப்பு மிஸ்ர சாபு தாளத்தில் இரண்டரை இடம் தள்ளி அமைந்திருந்தது (misra chapu is generally rendered as a beat that can be split as 1.5+1+1, the pallavi of this krithi was offset by 2.5 beats) கவனத்தைக் கவர்ந்தது. பல்லவியில் அவர் போட்ட சங்கதிகளும், அதற்கு மிருதங்க வித்வான் கொடுத்த flourish-களும் பெரிதும் ரசிக்கும்படி இருந்தது.

2 மணி நேரக் கச்சேரிகளில் இரண்டு ராகம்தானே பாட முடியும். ஏற்கெனவே தன்யாசியை விஸ்தாரமாய் பாடிவிட்ட நிலையில், அன்றைய கச்சேரியின் பிரதான ராகத்தை தொடுவதற்கு முன், விறுவிறுப்பான காலப் பிரமாணத்தில் 'வர ராக லய' (செஞ்சு காம்போதி) பாடினார். அதனைத் தொடர்ந்து மோகன ராகத்தை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டு, அதில் பல அழகிய கோவைகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக, கமகங்களை இழைத்து இழைத்து பாடிய விதம் படு அற்புதம். மேல் ஸ்தாயியிலும், முன்பு குறிப்பிட்டது போல, மந்தர ஸ்தாயியிலும் சற்றே கஷ்டப்பட்டது போலத் தெரிந்தது. ராகத்தின் சஞ்சாரங்களையெல்லாம் அழகாக படம் பிடித்து காட்டியபின், மீண்டும் ஒருமுறை கீழ் ஷட்ஜமத்தில் தொடங்கி பிருகாக்கள் கொடுக்க முயன்றார் சாகேதராமன். முதல் தர பிருகாவானது, எத்தனை துரிதமாகப் பாடினாலும் அனைத்து ஸ்வரங்களையும் தெளிவாக வெளிப்படுத்தும். அதற்கு ஒரு மாற்று குறைந்த பிருகாக்கள் சற்றே தேசலாய் இருக்கும். இவரின் பிருகாக்கள் முதல் தரத்தை அடுத்த சீசனுக்குள் அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

வயலின் வித்வானுக்கு மோகன ராகம் என்பது 'திலீப் வெங்க்சர்கருக்கு லார்ட்ஸ் மைதானம்' விளங்கியது போல தோன்றியிருக்க வேண்டும். தன்யாசியில் விட்டதையெல்லாம் மோகனத்தில் அற்புதமாய் பிடித்துவிட்டார். ஆலாபனையைத் தொடர்ந்து, எப்பொழுதும் கேட்கக் கிடைக்கும் 'மோஹன ராமா' அல்லது 'நன்னு பாலிம்ப' என்று அரைத்த மாவை அரைக்காமல், அப்பாடல்களுக்கு இணையான அழகிய ஆனால் சற்றே அரிதான 'ரா ரா ராஜீவ லோசன' பாடினார். இவரது கீர்த்தனை பாடும் முறையில் இன்னொரு நல்ல விஷயம், பாடுவது நன்றாகப் புரிகிறது. இப்பாடலுக்கு சிட்டை ஸ்வரம் அமைத்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் அழகாய் அமைத்திருக்கிறார்கள். அனுபல்லவியைத் தொடர்ந்த சிட்டை ஸ்வரத்தை விளம்ப காலத்திலும், சரணத்தை அடுத்து வந்த சிட்டை ஸ்வரத்தை மத்யம காலத்திலும் பாடினார். (சிட்டை ஸ்வரம் பாடும் பொழுது கீழ் ஸ்தாயி ஷட்ஜமத்தைத் தொட்டு அதன் கீழ் இருந்த தைவதத்தைத் தொடும் இடத்தில் எல்லாம் ஸ்ருதி சற்றே விலகியபடியே இருந்தது.) கட்டுரையைப் படிக்கும் பொழுது நிறைகள் அளவிற்கு குறைகளும் இருப்பது போலத் தோன்றின் அது எனது குற்றமே. குறைகள் என்று குறிப்பிட்டது அனைத்தும் கச்சேரியின் 2% நேரத்திற்குக் கூட இருந்திருக்காது, மற்ற நேரங்களில் அவர் பாடியது அனைத்தும் நிறைவாகவே இருந்தது. அதற்கு மற்றுமொரு சான்றாக, அவரது நிரவலும் ஸ்வரமும் அமைந்தது. கல்பனை ஸ்வரங்களில் அவர் செய்த குறைப்பு கொஞ்சம் விவகாரம் கலந்து இருப்பினும், குறைப்பை முடித்து கடைசியில் வைக்க முயன்ற கோர்வையில் அவர் கோட்டை விட்டாரா அல்லது அதை கவனிப்பதில் நான் 'கோல்' விட்டேனா என்று தெரியவில்லை. 2 களை ஆதி தாளத்தில் ஆங்காங்கே கதி பேதங்களுடன் அற்புதமாய் தனி ஆவர்த்தனம் தொடர்ந்தது. அடுத்த முறை இந்த மிருதங்க வித்வானைப் பார்த்தால் விவரங்கள் விசாரிக்க வேண்டும்.

மேற் கூறியவை எல்லாம் நடந்த வேளையில், என் அருகில் உட்கார்ந்து ஆரவாரமாய் ரசித்த கொண்டிருந்த மஹானுபாவரின் செல் ஃபோன் மூன்று முறை சிணுங்கி, ஒருமுறை அந்த மினி ஹாலுக்குள்ளேயே பேச ஆரம்பித்து, நான் ஒருமுறை முறைத்தும், மறுமுறை வெளியே சென்று பேசுங்குள் என்று பணிவாகக் கேட்டுக் கொண்டும், மூன்றாம் முறை ஃபோனை அணையுங்கள் என்று கடுப்பாய் கூறிய படலமும் இனிதே நிறைவேறியது. கைப்பேசியை அணைக்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத இந்த ஜென்மங்கள் உதிர்க்கும் சாபாஷ்களும் பலேக்களும் உள்ளத்தினின்று உதிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.

தனி ஆவர்தனத்துக்குப் பின் 'சுந்தர காண்டத்தில்' வரும் ஸ்லோகமான 'வைதேகி சஹித'-த்தை எடுத்துக் கொண்டு முதலில் சஹானாவிலும், பின்பு ஹமீர் கல்யாணியிலும் பாடினார். அதற்குள் எனக்கு அடுத்த கச்சேரிக்கு செல்ல நேரமாகிவிட கிளம்பிவிட்டேன்.

ஸ்லோகத்தைக் கேட்ட வரையில் எனக்குத் தோன்றியது.......

பாடிய நாலு வரியை அவ்வப்பொழுது ஓரக் கண்ணால் கீழுருந்த பேப்பரில் பார்ப்பது, ரசிகர்களின் பார்வைக்கு மட்டுமல்ல செவிகளுக்கும் சற்று கஷ்டமாகத்தான் இருந்தது. சஹானாவில் சில ஸ்ருதி சறுக்கல்கள் நிச்சயம் பேப்பரைப் பார்த்த பொழுதுதான் நிகழ்ந்தது. இரண்டு மூன்று முறை நிகழ்ந்ததால் இது தற்செயல் என்று ஒதுக்காமல், சாஹித்யத்தைக் பேப்பரில் காணும் பொழுது ஏற்படும் கவனச் சிதைவால் ஏற்பட்ட குறை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஸ்லோகத்தைத்தான் பாட வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே. ஸ்கூல் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் வரும் பெயர் வரிசையை ஸ்லோகமாகப் பாடினால் கூட யாரும் குறை கூறப் போவதில்லை. அரிய, அழகிய பாடல்களை எல்லாம் காகிதத்தின் துணையின்றி பாடிவிட்டு, இந்த 4 வரி ஸ்லோகத்த்கை பேப்பரில் எழுது அதை ஓரக் கண்ணால் பார்த்து மல்லுக்கு நிற்பானேன்?

மற்றவை அடுத்த பதிவில் (எழுதினால்) வரும்....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 12:29 AM, Blogger ஜெ. ராம்கி said...

//பாடிய நாலு வரியை அவ்வப்பொழுது ஓரக் கண்ணால் கீழுருந்த பேப்பரில் பார்ப்பது, ரசிகர்களின் பார்வைக்கு மட்டுமல்ல செவிகளுக்கும் சற்று கஷ்டமாகத்தான் இருந்தது.

:-) Welcome Back!

 
At 12:44 AM, Blogger Nadopasana said...

Dear Ram
Please write more!
Thanks for your effort

 
At 1:43 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//மற்றவை அடுத்த பதிவில் (எழுதினால்) வரும்....//

??????

ராம், எழுதுங்க.

இந்த வருஷம் எங்க போயிட்டீங்கன்னு இரண்டு நாளைக்கு முன்னாடிதான் யோசிச்சேன். வந்திட்டீங்க. அப்படியே எழுதிடுங்க. ;)

-மதி

 
At 10:42 PM, Blogger Yagna said...

இங்கு ஒரு வெஸ்டர்ன் மியூசிக் பாடத்தில் "Music is the spatial arrangement of sound and silence in time" என்று சொல்லுகிறார்கள். நூற்றுக்கு நூறு உன்மை.

 
At 9:43 AM, Blogger க்ருபா said...

இணைய இணைப்பு இல்லாததால் வலைப்பதியவும் பின்னூட்டம் தரவும் இயலாத நிலையில் ராம் இருப்பதால், இங்குள்ளவற்றை காதால் மட்டும் தொலைபேசியில் கேட்டுவிட்ட பொழிதினினும், இரண்டொரு நாளில் எல்லோருக்கும் பதில் அளிப்பதாக ராம் உங்கள் எல்லோரிடமும் சொல்லச் சொன்னதை ஒரே வரியில் இப்பின்னூட்டத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

க்ருபா

 
At 12:47 AM, Blogger லலிதாராம் said...

மதி, ராம்கி, யக்ஞா, ஜெயஸ்ரீ:

அனைவருக்கும் நன்றி. ஜெயஸ்ரீ, "தட்டினாலும் வரும்"-னு என் தலையில ஆளை வெச்சு தட்ட சொல்றதத்தான் மறைமுகமோ சொன்னீங்களோ? நல்ல காலம் நான் அதற்கு அவசியம் வைக்கவில்லை:-).

 

Post a Comment

<< Home