Tuesday, November 08, 2005

வயலின் மேதை மைசூர் சௌடையா

இசை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமெனில், புவியியலின் ஒரு மூலையில் கிடக்கும் பெயரைச் சரித்திரம் படைக்க வைத்த பலரைக் காணமுடியும். கோனேரிராஜபுரம், அரியக்குடி, செம்மங்குடி, உமையாள்புரம் என்று இதற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு மாறாக, இசைச் சரித்திரத்தில் இடம்பிடித்து, பல தலைமுறைப் பாடகர்களுக்கு பக்க பலமாக விளங்கிய ஒருவர் இன்று புவியியலின் ஒரு பகுதியானதால், மக்களிடையில் பிரபலமாக விளங்குகிறார். மேற்கூறிய பீடிகையிலிருந்து, நான் குறிப்பிடும் கலைஞர் வயலின் மேதை மைசூர் சௌடையாதான் என்பதை நீங்கள் பெங்களூர்வாசியெனில் உணர்ந்திருப்பீர்கள். சௌடையா சாலையும், வயலின் வடிவில் அமைந்த சௌடையா ஹாலும் புழக்கத்தில் வைத்திருக்கும் மைசூர் சௌடையாவின் வாழ்வைப் பற்றிய பார்வையே இக்கட்டுரை.

1894-ஆம் வருடத்து புத்தாண்டு தினத்தை உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தது. அவ்வேளையில், காவேரிக் கரையையொட்டிய கர்நாடக மாநிலத்து நரசிபுரா தாலுகாவில் உள்ள திருமகூடலு கிராமத்தில் வசித்த அகஸ்திய கௌடா - சுந்தரம்மா தம்பதியினர், தங்கள் வீட்டில் பிறந்த ஆண் மகவான சௌடையாவை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். சமஸ்கிருதத்திலும் இசையிலும் தேர்ச்சி பெற்ற தகப்பனாருக்கும், நாட்டியத்தில் (அபிநய சாஸ்திரத்தில் தேர்ந்தவர் என்று அவரைப் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன) நல்ல பாண்டித்யம் பெற்றிருந்த தாயாருக்கும் பிறந்த சௌடையாவுக்கு இசையின் பால் நாட்டம் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சௌடையாவின் முதல் இசை ஆசிரியையாக சுந்தரம்மா விளங்கினாலும், மற்ற குழந்தைகளைப் போல சௌடையாவும், தனது கிராமத்திலிருந்து காவேரியின் கிளை நதியான கபில நதியைத் தினமும் கடந்து சென்று பள்ளிக்குச் சென்று வந்தார். பள்ளிப் படிப்பைவிட இசையின் பால் நாட்டம் அதிகம் கொண்டிருந்த இளம் சௌடையாவின் ஒன்பதாவது வயதில் நடந்த நிகழ்ச்சி அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். வழக்கம் போல பள்ளிக்குச் செல்ல வேண்டி, கபில நதியின் கரையில் படகுக்காக காத்திருந்த வேளையில், அவ்வூர் மடத்தைச் சேர்ந்த ஆச்சாரியரும் அங்கு காத்திருந்தார். படகு வர தாமதமானதும், சிறுவனுக்கும் ஆச்சாரியருக்கும் உரையாடல் தொடங்கியது. அவ்வுரையாடலின் மூலம் சிறுவன் சௌடையாவிற்குப் பள்ளிக்கூடம் செல்வதில் நாட்டமில்லாததை உணர்ந்த ஆச்சாரியர், சௌடையாவின் கைரேகைகளை ஆராய்ந்த பின், சிறுவனின் கையில் இருந்த புத்தகங்களைப் பிடுங்கி கபிலை நதியில் எறிந்தார். " உனக்கு நாட்டமில்லாத ஏட்டுக் கல்வியால் எந்த பயனும் இராது. இசைத் துறையின் நீ செல்வாயெனில் பெரும் புகழடைவாய்", என்று கூறியதோடல்லாமல் சௌடையாவின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு அவன் தாயிடம் சென்றார். பள்ளிக் கூடத்திற்குச் செல்லாமல் திரும்பி வரும் மகனைப் பார்த்து குழம்பியபடி, மகனுடன் வந்த ஆச்சாரியரை நமஸ்கரித்தார் சுந்தரம்மா. கபிலை நதிக் கரையின் நடந்தவற்றையெல்லாம் கூறி சௌடையாவின் புகழ் இசையால் இசைவுரும் என்பதைத் தன் கணிப்பாகக் கூறினார் ஆச்சாரியர். ஆச்சாரியரின் கணிப்பை சுந்தரம்மா முழுமையாக நம்பியதால், சௌடையாவின் பள்ளிப் படிப்பு அவரது ஒன்பதாவது வயதில் முடிவிற்கு வந்தது.

இசையையே வாழ்வாக்கிக் கொள்ளத் துடிக்கும் மகனுக்கு அவர் குடும்பத்தார் ஒருவரிடமே இசை கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இசைத் துறையில் இருந்த சௌடையாவின் ஒன்று விட்ட சகோதரரான பக்கண்ணா, தம் குடும்ப பெரியவர்களின் வார்த்தையைத் தட்ட இயலாமல் சௌடையாவிற்கு பாடம் சொல்ல ஆரம்பித்தார். சௌடையாவின் கூர் மதியைக் கண்டு கொண்ட பக்கண்ணாவிற்கு, தன்னை மிஞ்சிவிட தமது சிஷ்யனுக்கு அதிக நாள் பிடிக்காது என்பது புரிந்தது. இதனால் பொறாமை கொண்டு, சௌடையாவின் இசைப் பயிற்சியை நிறுத்த ஒரு உபாயம் செய்தார். அஹோபில மடத்திலிருந்து ஒரு பண்டிதரை ஏற்பாடு செய்து " சௌடையாவால் இசைத் துறையில் சோபிக்க முடியாது, வேறெதாவது துறையில் கவனம் செலுத்துவது நல்லது" என்று சோதிடம் சொல்ல வைத்தார். இதனால் சற்றும் மனம் தளராத சௌடையா, " எப்பாடு பட்டாவது இசைத் துறையில் முன்னேறிக் காட்டுவேன்" என்று சபதம் இட்டார். இதனால், பக்கண்ணாவின் சிக்ஷை முடிவிற்கு வந்தது.


பள்ளிக்கும் செல்லாமல், இசை பயில்வதையும் நிறுத்திவிட்ட சௌடையாவைக் கண்டு சுந்தரம்மா கவலையுற்றார். இந்நிலையில், சுந்தரம்மாவின் சகோதரரான சௌடையா (!), தம் மருமகனை அழைத்துப் போய், மைசூரில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் சேர்ப்பதாக வாக்களித்தார். இதனால் 1910-ஆம் வருடம் தம் மாமாவுடன் மைசூரை நோக்கிப் பிரயாணித்தார் இளம் சௌடையா. அவரது 16-ஆவது வயதில் தொடங்கிய குரு-சிஷ்ய பாவம், 21 வருடங்கள் தொடர்ந்தது. முதலில் சிஷ்யனாக சேர்ந்த்த சௌடையா, சில ஆண்டுகளிலேயே குருவிற்குச் சமமாய் மேடையில் அமர்ந்து வாசிக்கும் பக்க வாத்தியக் கலைஞராய் தேர்ச்சி பெற்றார்.

தனது குரலால் நாடெங்கும் புகழ் பெற்றிருந்த பிடாரம் கிருஷ்ணப்பா, வயலின் வாசிப்பதிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். 1901-ஆம் ஆண்டு நிகழ்ந்த அவரது கச்சேரி ஒன்றுக்கு உடன் வாசித்த திருக்கோடிக்காவல் கிருஷ்ணையரின் வாசிப்பே, இவரை வயலினில் தேர்ச்சி பெற உந்தியது என்பர். சௌடையாவின் குரல் வாய்பாட்டிற்கு தோதானதாக அமையாததை உணர்ந்த கிருஷ்ணப்பா, அவருக்கு வயலின் வாசிக்க கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

நல்ல குரு கிடைக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டுமோ அதே அளவு புண்ணியம், நல்ல சிஷ்யன் அமையவும் தேவைப்படும். அப்பேறினைப் பெற்றிருந்த கிருஷ்ணப்பாவிற்கு சௌடையாவின் மேல் தனிப்பட்ட முறையில் அளவு கடந்த அன்பிருப்பினும், தனது சிட்சையில் மிகவும் கண்டிப்பாகவே இருந்தார். கிருஷ்ணப்பாவின் குருகுலத்தில் பயின்ற அனைத்து மாணவர்களும் அதிகாலை நான்கு மணிக்குள் விழித்து, இசை வளத்தைப் பெருக்கிக் கொள்ள சாதகம் செய்வதுடன், தேக/மன அரோக்கியத்தைத் திடப்படுத்த உடற்பயிற்சி, பிராணாயமம், யோகா போன்றவைகளையிம் செய்தனர். "ஒரு நாளைக்கு குறைந்தது, 9-10 மணி நேரம் சாதகம் செய்ய வேண்டியிருக்கும். பல சமயங்களில் சாதகம் நள்ளிரவு வரை நீடிக்கும். எத்தனை நேரம் ஆனாலும், காலையில் நான்கு மணிக்கு எழுவதில் எந்த மாற்றமும் இருக்காது. பல சமயங்களில் போதுமான அளவு தூக்கம் இல்லாமல் தவித்திருக்கிறேன். எனது ஆரம்ப காலப் பயிற்சியில். சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரங்கள் போன்ற விஷயங்களை இயந்திர கதியில் கற்காமல், அவற்றின் பயன் உணர்ந்து பல் வேறு ராகங்களில் பல முறை சாதகம் செய்திருக்கிறேன். இப்பொழுதும் கூட எனது சாதகங்களில் இவ்விஷயங்களுக்கு இடம் பெரும்.", என்று சௌடையா தனது புகழின் உச்சியில் இருந்த பொழுது கொடுத்திருந்த பேட்டியில் கூறுகிறார்.

இசையின் அடிப்படைகளில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், வாரம் ஒரு ராகம் என சௌடையாவை சாதகம் செய்யச் சொல்வார் கிருஷ்ணப்பா. அந்த ஒரு வாரத்தில், ராக ஆலாபனை, கீர்த்தனைகள், ஸ்வரப் ப்ரஸ்தாரம், தானம், பல்லவி இசைத்தல் போன்ற அனைத்தையும் வாசித்துப் பழக வேண்டுமென்பது அவரது ஆக்ஞை. ஒரு முறை, அந்த வார ராகமாக கரஹரப்ரியாவைத் தேர்வு செய்து வாசிக்கச் சொல்லியிருந்தார் பிடாரம் கிருஷ்ணப்பா. கிருஷ்ணப்பாவின் வீட்டு மாடியில் சௌடையா சாதகம் செய்து கொண்டிருக்க, கிருஷ்ணப்பா தனது நண்பர் ஒருவருடன் மும்முரமாய் உரையாடிக் கொண்டிருந்தார். கரஹரப்ரியாவை இரண்டு நாட்கள் வாசித்துவிட்ட நிலையில், குரு அருகில் இல்லையென நினைத்து, வேறொரு ராகத்தை வாசிக்க ஆரம்பித்தார் சௌடையா. அவரது போதாத காலம்,கிருஷ்ணப்பாவின் வாய் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவரது காதுகள் சிஷ்யரின் வாசிப்பை கவனித்தபடியே இருந்தன. ராகம் மாறியதும், சௌடையாவை கீழே அழைத்து " கரஹரப்ரியாவில் கரை கண்டுவிட்டாயா நீ? வேறொரு ராகத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டாய்?" என்று கேட்டார். அம்புகள் போல சீறிய வார்த்தைகளால் தாக்கப்பட்டு கலங்கி நின்ற சௌடையாவைப் பார்த்து, "போ! கரஹரப்ரியாவை வாசி", என்று பணித்தார். மன வருதத்துடன் சென்ற சௌடையாவின் வயலினிலிருந்து கரஹரப்ரியாவின் பல புதிய பரிமாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வர ஆரம்பித்தன. சற்றைக்கெல்லாம், பிடாரம் கிருஷ்ணப்பா மாடிக்கு விரைந்து வந்து சிஷ்யனை மனதாரப் பாராட்டி, " இசை என்பது ஒரு தவம். அவ்வேள்வியில் 'நான்' என்ற எண்ணத்தை ஒழித்து, நம்மை மறந்த நிலையில் ஒன்றரக் கலக்கும் பொழுதுதான், இசையின் உண்மையான அழகு வெளிப்படுகிறது. உனது நன்மைக்காகத்தான் கடிந்து கொண்டேன்", என்றார் நா தழுதழுக்க.

அன்பைப் பொழிவதில் தந்தையைப் போய் விளங்கினாலும், கிருஷ்ணப்பாவின் பாராட்டைப் பெற கடின உழைப்புத் தேவைப்பட்டது. கிருஷ்ணப்பாவின் இல்லத்திலேயே தங்கி கடுமையாக உழைத்ததின் பயனாய், சௌடையாவின் வில் வித்தை நல்ல தேர்ச்சியையடைந்தது. சிஷ்யனின் இசை முதிர்ச்சியை உணர்ந்த கிருஷ்ணப்பா, தனது கச்சேரிகளிலேயே அதை உபயோகப்படுத்திக் கொண்டார். சௌடையாவின் 21-ஆவது வயதில், மைசூரில் சிவகங்கை மடாதிபதியின் வருகையை கௌரவிக்கும் பொருட்டு நடந்த கிருஷ்ணப்பாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அக்கச்சேரிக்கு வாசிக்க இருந்த வயலின் வித்வான் வராததால் அவரது இடத்தைப் பூர்த்தி செய்ய சௌடையாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. (வரலாற்றைப் பார்க்கும் பொழுது, அரியக்குடி, ஜி.என்.பி போன்ற பல ஜாம்பவான்களின் அரங்கேற்றம் எதிர்பாராத கணத்திலேயே அமைந்திருக்கின்றது!)அக்கச்சேரியில் மடாதிபதி மற்றும் பிடாரம் கிருஷ்ணப்பாவின் திருப்திக்குப் பாத்திரமாய் சௌடையாவின் வாசிப்பு அமைந்தது. அன்று தொடங்கி, கிருஷ்ணப்பாவின் கடைசி காலம் வரை பக்கபலமாகத் சௌடையாவின் வாசிப்பு திகழ்ந்தது. கிருஷ்ணப்பா, தனது மேடையிலேயே சிஷ்யருக்கு இடமளித்த போதும், தனது கண்டிப்பைச் சற்றும் தளர்த்தாதவராய் விளங்கினார். ஒருமுறை, மைசூர் பிரசன்ன சீதா ராம ஆலயத்தில் நடந்த கச்சேரியில் தவறுதலாய் சில அபஸ்வரங்கள் சௌடையாவின் வயலினிலிருந்து வெளிப்பட, கொதிப்படைந்த கிருஷ்ணப்பாவின் கைகள் சௌடையாவின் கன்னத்தைப் பதம் பார்த்தன. அதனைப் பொருட்படுத்தாது, புன்னகையை முகத்தில் வரவழைத்துக் கொண்டு கச்சேரியினைத் தொடர்ந்தார் சௌடையா. தனது செயலால் மனம் வருந்திய கிருஷ்ணப்பா "அடி பலமாக பட்டுவிட்டதா" என்று வினவ, "அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் என் நன்மைக்குத்தானே", என்றார் சௌடையா. (இதே போன்ற நிகழ்வு இராஜரத்னம் பிள்ளை போன்ற பல வித்வான்கள் வாழ்விலும் நடந்திருப்பதிலிருந்து அக்கால குருகுலவாசத்தைப் பற்றி தெரிய வருகிறது).

1920-களில், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு எளிதில் கேட்க கூடிய வகையில் நான்கு கட்டைக்கு குறையாமல் இருந்த பாடகரின் ஆதார ஸ்ருதி, படிப்படியாக குறைய ஆரம்பித்தது. 'sound amplification' பற்றியெல்லாம் நினைத்தும் பார்க்க முடியா அக்காலகட்டத்தில், வயலின் வித்வான்களுக்கு இந்த ஸ்ருதி குறைவு பெரிய பிரச்சனையாக இருந்தது. வயலினிலிருந்து வெளிப்படும் இசை எத்தனை நன்றாயிருப்பினும், அவ்விசை ரசிகரைச் சென்றடைய, அவ்விசையின் அளவு (volume) போதுமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் சௌடையா. அதனால், வயலினைப் பழது பார்ப்பதில் தேர்ந்த மைசூர் ரங்கப்பாவின் உதவியுடன் சப்த-தந்தி வயலினை உருவாக்கினார். இவரது ஏழு தந்தி வயலினில், வழக்கமாய் இருக்கும் நான்கு தந்திகளுள் முதல் மூன்றினை இரட்டித்து, நான்காவதை ஒற்றைத் தந்தியாகவே அமைத்திருக்கிறார். இரட்டிக்கப் பட்ட தந்திகளில், இரண்டாவது தந்தி, முதல் தந்தியின் ஸ்வரத்திலிருந்து சரியாக ஒரு ஸ்தாயி (octave) குறைவான ஸ்வரத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். இதன் மூலம், ரசிகர்களின் காதுகளுக்கு சௌடையாவின் இசை எட்டினாலும், இவ்வயிலினை இசைப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. வயலினை ஸ்ருதி சேர்க்கும் பொழுது இரட்டிக்கப்பட்ட தந்திகளின் ஸ்ருதி சரியாக ஒரு ஸ்தாயி வேறுபட வேண்டும். இதில் இம்மி பிசகினால்கூட வாசிப்பில் அபஸ்வரம் வெளிப்பட்டுவிடும். இவ்வயிலினை வாசிக்கும் பொழுது, வித்வானின் இடது கை விரல்கள் finger board-இல் வைக்கப்படும் பொழுது, இரண்டு தந்திகளுக்கு பொதுவான bridge-க்கு 100% parallel-ஆக இருந்தாக வேண்டும். அப்படியில்லையெனில், ஒரே ஸ்வரத்தில் வெவ்வேறு ஸ்தாயிகளில் கூட்டப்பட்டிருக்கும் இரு தந்திகளில் ஒரே ஸ்வரம் பேசாமல் போய்விடும். சப்த ஸ்வர தேவதைகளை மனதில் கொண்டே ஏழு தந்தி வயலினை சௌடையா உருவாக்கினார் என்கிறார் அவரது பிரதம சிஷ்யர் வி.சேதுராமையா.


சௌடையாவின் கற்பனையில் உருவான ஏழு தந்தி வயலினில் பல காலம் சாதகம் செய்து நல்ல தேர்ச்சி பெற்றிருப்பினும், பாரம்பரியத்தில் ஊரிப்போன குருவிற்கு முன்னால் இதைக் காட்டத் தயங்கினார். ஒருமுறை, பிடாரம் கிருஷ்ணப்பாவின் குருவான வீணை சேஷண்ணாவின் வீட்டில் கிருஷ்ணப்பாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. கச்சேரியின் கடைப் பகுதியில், வழக்கமான நான்கு தந்தி வயலினை கீழே வைத்துவிட்டு, தனது கண்டுபிடிப்பான ஏழு தந்தி வயலினை வாசிக்க தனது குருவிடம் அனுமதி வேண்டினார் சௌடையா. இதனால் கோபமடைந்த கிருஷ்ணப்பா, "முதலில் நான்கு தந்தி வயலினில் முழுமையாகத் தேர்ச்சி பெறு. அப்புறம் புதிய கண்டுபிடிப்புகளில் எல்லாம் உன் கைவரிசையைக் காட்டலாம்", என்றார். மேடையில் நடந்து கொண்டிருந்தவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த வீணை சேஷண்ணா, விஷயத்தை விசாரிக்க, சௌடையா தனது கற்பனையில் உருவான புதிய வயலினை அவருக்கு விளக்கினார். புதிய வயலினிலிருந்து எழும் இசையைக் கேட்க ஆவலடைந்த சேஷண்ணா கிருஷ்ணப்பாவிடம், சௌடையாவை வாசிக்க அனுமதிக்குமாறு கோரினார். குருவின் கோரிக்கையை மீற முடியாத கிருஷ்ணப்பாவும், வேறு வழியின்றி இணங்கினார். அன்று ரசிகர்களின் காதில் விழ ஆரம்பித்த ஏழிசை விரைவில் மிகுந்த பிராபல்யத்தை அடைந்தது. பிடாரம் கிருஷ்ணப்பா, தன்னளவில், சப்த தந்தி வயலினை ஏற்க மறுத்தாலும், தனது குருவின் ஒப்புதலையும், மக்களின் ஆதரவையும் பெற்றுவிட்ட வயலினை தன் சிஷ்யன் வாசிப்பதற்கு தடையேதும் சொல்லவில்லை.

முதலில் பிடாரம் கிருஷ்ணப்பாவின் பக்க வாத்தியமாக தொடங்கிய சௌடையா, நாளடைவின் பக்கா வாத்தியக் கலைஞராக உருவானதும், அக்காலத்தில் பிரபலமாயிருந்த மற்ற சங்கீத வித்வான்களுக்கும் வாசிக்க ஆரம்பித்தார். கிருஷ்ணப்பாவின் மதிப்பைப் பெற்றிருந்த செம்பை வைத்தியநாத பாகவதருக்கு சௌடையா வாசிக்க ஏற்பாடு செய்தார் கிருஷ்ணப்பா. கூடிய விரைவில், சௌடையா வாசிக்காத செம்பைக் கச்சேரிகளைப் பார்ப்பதே அபூர்வம் என்ற நிலை ஏற்பட்டது. அந்நேரத்தில்தான் கர்நாடக இசையுலகின் முடிசூடா மன்னன் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், தனது புகழ்ப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார். ஒருமுறை, சென்னையில் முனிசாமி நாயுடு ஏற்பாடு செய்திருந்த அரியக்குடியின் கச்சேரிக்கு வாசிக்க இருந்த வயலின் வித்வான் கடைசி நிமிடத்தில் வரமுடியாமல் போய்விட்டது. சௌடையா அப்பொழுது சென்னையில் இருந்ததால், அவர் உடன் வாசிக்கலாமா என்று முனிசாமி நாயுடு விண்ணப்பிக்க, அரியக்குடியும் உடனே ஒப்புக் கொண்டார். அழைப்பை ஏற்ற சௌடையா கச்சேரிக்கு வருவதற்குள், அரியக்குடி மிருதங்கத்தின் துணை மட்டும் கொண்டு அரை மணி நேரம் பாடியாகிவிட்டது. கச்சேரிக்கு தாமதமாக வந்த பொழுதும் அவர் வயலினிலிருந்த புறப்பட்ட இசை அரியக்குடி உட்பட அரங்கத்திலிருந்த ஒவ்வொரு மனத்தையும் சுண்டியிழுத்தது. இவ்வாறாக ஆரம்பித்த அரியக்குடி-சௌடையா கூட்டணி, விரைவில் புகழின் உச்சியை அடைந்து, அவர்கள் கச்சேரிக்கு புகைப்படத்துடன் துண்டு பிரசுரம் ஊரெங்கும் வினியோகிக்கும் அளவிற்கு உயர்ந்தது.

விரைவில், மனோதர்மத்திற்கு பெயர் போன மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சங்கீதமாகட்டும், அரியக்குடியின் மத்யம காலத்தை அடிக்கோடிட்டு அமைக்கப் பட்ட சங்கீதமாகட்டும், ஜி.என்.பி-யின் கற்பனையும் அதி துரித சங்கதிகள் நிறைந்த பிருகா மயமான சங்கீதமாகட்டும், மதுரை மணி ஐயரின் அழகிய ஸ்வரக் கோவைகளாகட்டும், ஆலத்தூர் சகோதரர்களின் லய விந்யாசங்களாகட்டும், அனைத்திற்கும் சௌடையாவின் வயலின் பக்கபலமாய் விளங்கியது. கச்சேரிகளில், பாடகரின் பலத்தையொட்டி தனது வாசிப்பை மாற்றிக் கொண்டு, அதே சமயத்தில் தனது தனித் தன்மையையும் விட்டுவிடாமல், பாடகரின் கற்பனையையும் மென்மேலும் பெருக்கக் கூடியதாக சௌடையாவின் பக்க வாத்யம் அமைந்தது எனலாம்.

நான் கேட்ட கச்சேரிகளுள், 1957-இல் ஜி.என்.பி-க்கு வாசித்த கச்சேரியில் அவர் வாசித்திருக்கும் பந்துவராளியும், அக்கச்சேரியின் பிரதான ராகமான பைரவியும், மேற்கூறியதற்கு நல்ல சான்றாகக் கூறலாம். பக்க வாத்யக்காரரின் கற்பனையைக் கண்டு முகம் சுளிக்காமல் பாரட்டக்கூடிய ஜி.என்.பி பந்துவராளியை ஆரம்பித்து, நாகஸ்வரப் பாணியில் பல அழகிய கோவைகளை பிருகாக்களுடன் இணைத்து அளிக்க, அதனைத் தொடர்ந்து வாசித்த சௌடையா, அவரது பிருகா மழையைத் தொடர்ந்து, அவர் விட்ட இடத்திலிருந்து சில புதிய இடங்களைத் தொட்டு தனது ஆலாபனையை முடிக்க, வழக்கமாய் வயலின் ஆலாபனைக்கு பின்னால் கீர்த்தனையை ஆரம்பிக்கும் ஜி.என்.பி, சௌடையாவின் வாசிப்பினால் உந்தப்பட்டு இன்னும் சில புதிய பந்துவராளி பிரயோகங்களைப் பாடியிருக்கிறார். இதே போல, பாடகருக்கு பக்க பலமாகவும், அவரது கற்பனையைத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ள கச்சேரிகளென பலவற்றைக் கூற முடிந்தாலும், குறிப்பிட்டு "இந்தியன் ·பைன் ஆர்ட்ஸில்" அரியக்குடி (1963 என்று நினைக்கிறேன்) இராமானுஜ ஐயங்காருக்கு வாசித்திருக்கும் கல்யாணியும், மதுரை மணி ஐயருக்காக ஒரு ரேடியோ கச்சேரியில் வாசித்திருக்கும் சங்கராபரணத்தையும் கூறலாம்.

சௌடையாவின் நண்பரும், அவரது நினைவில் 1970-ஆம் ஆண்டு 12 நாட்கள் இசை விழா நடத்தியவரும், சௌடையா மெமோரியல் ஹால் எழுவதில் முக்கிய பங்கு வகித்தவரான ஸ்ரீ£காந்தையா, 1987-இல் வெளியான ஸ்ருதி பத்திரிகையில் ஒரு சுவாரசியமான சம்பவத்தை விவரித்துள்ளார். "பிடாரம் கிருஷ்ணப்பா கட்டிய ராமர் கோயிலில் நடக்கும் இசை விழாவில் ஆலத்தூர் சகோதரர்களின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. வயலின் வாசித்தவர் சௌடையா. மிருதங்கம் பாலக்காடு மணி ஐயர். லய விந்யாசங்களுக்கு பெயர் போன ஆலத்தூர் சகோதரர்கள் ஒரு அரிய தாளத்த்¢ல் நெருடலான பல்லவியைத் தொடங்கினார்கள். கச்சேரிக்கு முன்பு தயார் செய்து கொள்ள நேரம் ஒதுக்கி, ஒத்திகை பார்த்து ஒரு நெருடலான பல்லவியை, ஆலத்தூர் சகோதரர்கள் போன்ற தாள ஞானம் கொண்டவர்கள் பாடுவதென்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அப்பல்லவிக்கு, ஒத்திகை ஒன்றுமில்லாத பட்சத்தில், சௌடையாவின் வாசிப்பு அல்லது பதிலளிப்பு எவ்வாறாக இருக்கும் என்பதைக் காண நாங்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தோம். ஆலத்தூர் சகோதரர்கள் பல்லவியைப் பாடுகையில், சற்றும் பதட்டப்படாமல் அனு ஸ்வரங்களை வாசித்து பக்க வாத்யம் வாசித்த சௌடையா, சகோதரர்களுள் ஒருவரான சுப்புடு பல்லவியைப் பாடி முடித்ததும் கன கச்சிதமாக பல்லவியை எடுத்து வாசித்தார். அவரின் வாசிப்பைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரித்து அரங்கத்தையே அதிர வைத்தனர். அன்றைய கச்சேரி அதுவரை கண்டிராத உச்சங்களைத் தொட்டது. அடுத்த நாள், அதே இடத்தில் நானும் சௌடையாவும் வேறொரு கச்சேரியைக் கேட்டபடி அமர்ந்திருந்தோம். சௌடையாவின் கைகள் பாடகரின் பாடலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத தாளத்தை போட்டபடி இருந்தது. திடீர் என்று என்னிடம் திரும்பி, "நேற்று ஆலத்தூர் சகோதரர்கள் பாடிய தாளம் என்ன?", என்றார். " விளையாடதீர்கள் சௌடையா. சிங்கத்தின் குகைக்குச் சென்று, உங்கள் வாசிப்பால் சிங்கத்தை வசப்படுத்தியது போல அப்பல்லவியை வாசித்துவிட்டு, இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்", என்றேன். " நான் விளையாடவில்லை. உண்மையில்தான் கேட்கிறேன். அது என்ன தாளம்?", என்றார். " தாளம் என்ன என்று தெரியாமல் எப்படி அந்த பல்லவியை அத்தனை பிரமாதமாக வாசித்தீர்கள்?", என்று நானும் விடாமல் கேள்வியைத் தொடர்ந்தேன். அதற்கு பதிலேதும் சொல்லாமல், கச்சேரியைக் கேட்க ஆரம்பித்துவிட்டார் சௌடையா. அக்கேள்விக்கான பதில், சௌடையாவின் உள்ளுணர்வு பெரிய iceberg-இன் நுனியைக் கண்டதுமே அதன் முழு உருவையும் அவர் மனதிற்குக் காட்டிவிடும் அற்புத சக்தியைப் பெற்றிருந்தது, என்பதாகும்.

ஒருமுறை அரியக்குடி இராமனுஜ ஐயங்கார் ஒரு ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார், முதலில் பிரதி மத்யமத்தைத் தொட்டு, அங்கிருந்து நேராக தார ஸ்தாயி ரிஷபத்தைத் தொட்டார். அவரை நிழல் போலத் தொடர்ந்த சௌடையாவின் வாசிப்பைக் கேட்டு, ஐயங்காரிடமிருந்து கேட்பதற்கு அபூர்வமான 'பலே!', ஒன்று வெளிப்பட்டது. சௌடையா சிரித்துக் கொண்டே "என்ன, பந்துவராளி பாடறதா, வராளி பாடறதானு முடிவு பண்ணியாச்சா இல்லையா?", என்று ஒரு போடு போட்டார். "சௌடையாவிடம் ஒரு சாகசமும் பலிக்காது", என்று வெளிப்படையாகவே கூறினார் அரியக்குடி. அதற்கு சௌடையா, "நாற்பது வருஷமாக உடன் வாசிக்கிறேன், இது கூட தெரிவில்லை என்றால் எப்படி?", என்றார்.

பார்த்தனுக்கு சாரதியாய் விளங்கி போரில் வெற்றி பெற வைத்த பார்த்தசாரதிக்கு ஒப்பாய் சௌடையாவின் வாசிப்பு பேசப்பட்ட காலகட்டத்தில், பக்கவாத்தியக் கச்சேரிகளுடன் கூட தனிக் கச்சேரிகளும் செய்ய ஆரம்பித்தார். இவரது கச்சேரிகளுக்கு புதுக்கோட்டை தக்ஷ¢ணாமூர்த்தி பிள்ளை, பாலக்காடு மணி ஐயர் போன்றோர் பக்கவாத்யம் வாசித்திருக்கின்றனர். பல கச்சேரிகளில் வீணையை பக்க வாத்யமாகக் கொண்டு வாசித்துள்ளார். சுமார், எட்டு வருட காலத்திற்கு M.J.ஸ்ரீநிவாச ஐயங்காரும், அதன் பின் மைசூர் துரைசாமி ஐயங்காரும் இவருக்கு பக்கவாத்யம் வாசித்தனர். வயலின் வாசிப்பையே சுவாசமாகக் கொண்ட சௌடையா, சமயத்தில் ஒரே நாளில் மூன்று கச்சேரிகள் வாசித்த நாட்களும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அவருடைய பாடாந்திரம் மிகப் பெரியதெனினும், அவரது கச்சேரிகளில் பிரபலமான ராகங்களும் கீர்த்தனைகளுமே நிறைந்திருக்கும். அவருடைய வாசிப்பிற்கு அதிக சன்மானம் கிடைத்த போதும், அதை ஒரு பொருட்டாக எண்ணாதவர் ஆவார். பல சமயங்களில், சில புகழ் மொழிகளே அவரை கச்சேரிகள் ஒப்புக் கொள்ள போதுமானதாயிருந்தன. அடுத்த சந்ததியினருக்கு இசையை எடுத்துச் செல்வதில் மிக்க மகிழ்ச்சியடைந்த சௌடையாவின் கச்சேரிகள், ஏதேனும் கல்லூரியில் நடந்த வண்ணமேயிருக்கும், அதிகம் சன்மானம் கொடுக்க முடியாத மாணவர்கள் இவரை ஒப்புவிக்க, அவரது சமீபத்தைய கச்சேரி அவர்களது கல்லூரியில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி கூறுதே போதுமானதாகயிருந்தது. அதே போல, மைசூரில் எந்த ஒரு கோயிலுக்கும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, சௌடையாவின் சங்கீதத்தால் அலங்கரிக்கப்பட எவ்வித தடையும் இருந்ததில்லை.


அதிகம் காணக்கிடைக்காத சௌடையாவின் மற்றொரு நல்ல குணம், தனக்கு பல வருடம் இளையவராகினும், நல்லன இருப்பின் அதனை வெளிக் கொணர தன்னால் இயன்றதைச் செய்வார். இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பாடகர்களை மைசூருக்கு அறிமுகப்படுத்தி, மைசூருக்கும் தமிழகத்துக்கும் ஒரு பாலமாகவே அமைந்தார் எனலாம். எம்.எஸ்.சுப்புலட்சுமியை கர்நாடக மாநிலத்திற்கு அறிமுகப்படுத்தியவர் சௌடையாதான். "பிரபல பக்க வாத்தியக் கலைஞர் எனில், பெண்களுக்கு வாசிக்கக் கூடாது", என்ற அக்கால/இக்கால மரபைப் பின்பற்றாமல், பெங்களூர் சிவானந்தா தியேட்டரில் நடைப் பெற்ற எம்.எஸ்-இன் முதல் கர்நாடக மாநில கர்நாடக இசைக் கச்சேரியில் தொடங்கி, அதன் பின் நடந்த பல எம்.எஸ் கச்சேரிகளுக்கும் பக்க வாத்தியம் வாசித்திருக்கிறார்.

மைசூர் அரண்மனைக்கு ஆடிஷனுக்குச் சென்றிருந்த ஒன்பது வயது மாலியின் திறனை பரிசோதிக்கக் கூடியிருந்த ஆஸ்தான வித்வான்களான மைசூர் வாசுதேவாச்சாரியார், முத்தையா பாகவதர் முதலானோருடன் சௌடையாவும் இருந்தார். அக்கச்சேரிக்கு வயலின் வாசித்தவர், சௌடையாவின் உறவினரான குருராஜப்பா. மாலியின் குழலின்று பிறந்த இசை வெள்ளத்தை மனதாறப் பாராட்டியதோடல்லாமல், பாதி கச்சேரியில், குருராஜப்பாவிற்கு பதிலாக தானே பக்க வாத்யம் வாசிக்க முன் வந்தார். அதன் பின், மாலிக்கு பல கச்சேரிகள் ஏற்பாடு செய்து கொடுத்து தானே பக்க வாத்யம் வாசிக்கவும் செய்தார்.

அக்காலத்தில், மைசூர் சமஸ்தானத்தில் கச்சேரி செய்வதற்கென்று ஒரு dress-code இருந்தது. கட வித்வானான ஆலங்குடி இராமசந்திரனுக்கு வெற்றுடம்பாக கடம் வாசித்துதான் பழக்கம். இதனால், அரண்மனையில் வாசிக்கும் வாய்ப்பு தட்டிப் போய் கொண்டிருந்தது. இதனை அறிந்த சௌடையா, அரண்மனையின் ஒரு முக்கிய புள்ளியை அணுகி, "அரண்மனைக்கு என்று சில விதிமுறைகள் இருப்பது போல, கச்சேரிக்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதன் படி, கட வித்வான் மேல் சட்டையோ, கோட்டோ அணிய முடியாது. ஆலங்குடி இராமசந்திரன், இங்கு வாசிக்காமல் போனால் இழப்பு அவருக்கு அல்ல, சமஸ்தானத்துக்குதான்", என்று எடுத்துக் கூறி இராமசந்திரனின் கட வாசிப்பை அரண்மணையில் ஒலிக்கச் செய்தார்.

இளகிய மனம் கொண்ட சௌடையா, மைசூரில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு வேண்டி நிவாரண நிதி திரட்ட, பல கச்சேரிகளை தன் முயற்சியால் ஏற்பாடு செய்தார். ஒருமுறை, செம்பை வைத்தியநாத பாகவதர் அவரது குல தெய்வத்திற்கு தங்க கவசம் செய்ய எண்ணினார். அவருக்கு அப்பொழுது இருந்த பண முடையால், அவ்வாசை நிறைவேறாமலே இருந்தது. இதனை உணர்ந்த சௌடையா, தான் தயாரித்த 'வாணி' திரைப்படத்தில், ஒரு கச்சேரிக் காட்சியை புகுத்தி, செம்பை வைத்தியநாத பாகவதரை வற்புறுத்தி நடிக்க வைத்து, தங்கக் கவசத்துக்குத் தேவைப்பட்ட பணத்தை தந்துதவினார். காஞ்சீபுரம் நயினா பிள்ளை, தனது கடைசி காலத்தில் கஷ்டப்பட்டதை அறிந்த சௌடையா, தான் அவருக்கு வாசித்திராத போதும், தனது செல்வாக்காலும் ஒரு ரெக்கார்டிங் கம்பெனியிடம் பேசி, தானும் புதுக்கோட்டை தக்ஷ¢ணாமூர்த்தி பிள்ளையும் பக்க வாத்தியம் வாசிக்க, நயினா பிள்ளையின் பாடலை பதிவு செய்ய ஏற்பாடு செய்து, அதற்கு சன்மானமாக பத்தாயிரம் ரூபாய் தரவும் கம்பெனியை இசைய வைத்தார். துருதிர்ஷ்டவசமாக இத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்பே நயினா பிள்ளையின் மறைவு நிகழ்ந்துவிட்டது. ஜி.என்.பி, ஒரு கடிதத்தில் "Chowdiah's incapacity for being mean"-ஐப் பற்றி எழுதியிருப்பதாக ஸ்ரீகாந்தையா கூறுகிறார்.

சௌடையாவைப் பற்றிய எந்த ஒரு கட்டுரையும், அவருக்கு கார்களின் மேல் இருந்த காதலைப் பற்றி கூறாமல் நிறைவடையாது. வாழ்வின் குறுக்கு வழிகளைப் பற்றி அதிகம் அறியாத சௌடையாவை ஒரு குழந்தை கூட ஏமாற்றிவிடக் கூடும். அவரிடம் காரை விற்கச் சென்றவர்கள், அவர் அச்சமயத்தில் வைத்திருந்த காரைவிட இது பன் மடங்கு உயர்ந்தது என்று வானளாவ புகழ்ந்தால் போதும். உடனே, அக்காருக்கு தாவிவிடுவார். இதனால், பல மோசமான கார்களை வாங்கி, அந்தக் கார் செய்த குளருபடியால், பல கச்சேரிகளுக்கு தாமதமாகச் செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அவருடைய பழைய ஆஸ்டின் தட்டுத் தடுமாறி மைசூர் கோயம்பத்தூர் சாலையில் அடிக்கடி செல்வதைப் பார்த்த மைசூர் மஹாராஜா கிருஷ்ணராஜ உடையார், அவரது காரைப் பற்றி விசாரித்தார். இதனால் உற்சாகமடைந்த சௌடையா, தன் காரின் புகழை உலகளாவ புகழ்ந்த்தார். அதனைப் பொறுமையுடன் கேட்ட மஹாராஜா வெறும் தாம்பூலத்தைக் கொடுத்து விடையளித்தார். பின்னால்தான் தெரிந்தது, தனது காரின் உண்மை நிலையைக் கூறியிருப்பின், மஹாராஜா மனமுவந்து குறைந்த பட்சம் இருபதாயிரம் மதிப்புள்ள காரை பரிசளித்திருப்பார் என்று. வயலின் ஜாலம் புரிந்த அளவிற்கு அவரால் வார்த்தைகளில் ஜாலம் புரிய முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். சற்றும் யோசிக்காமல் மனதில் பட்டதை உடனுக்குடன் கூறி, பின்பு தான் கூறியதற்காக வருதத்தில் ஆழ்பவராக இருந்தார் சௌடையா. காலப் போக்கில், அவருடைய குழந்தை உள்ளத்தை உணர்ந்த இரசகர்களும் சக வித்வான்களும் அவருடைய பேச்சுக்களை அதிகம் பொருட்படுத்தாது, வாசிப்பையே மனதில் கொண்டனர்.

திரேதாயுகத்தில் வில் வித்தைக்கு இராமனெனில், துவாபர யுகத்தில் வில் வித்தைக்கு விஜயன். அவ்வகையில், கலியுகத்தில் வில் வித்தையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சௌடையாவின் வாழ்வில் அவரைத் தேடி வந்த கௌரவங்களும் பட்டங்களும் கணக்கிலடங்கா. 1939-ஆம் ஆண்டு மைசூர் ஆஸ்தான வித்வானாக கௌரவிக்கப்பட்ட சௌடையா, 1940-இல் மைசூர் சமஸ்தானத்தின் சங்கீத ரத்னாகர விருதைப் பெற்றார். 1957-ஆம் ஆண்டு, சங்கீத உலகின் ஆஸ்கரான 'சங்கீதி கலாநிதி' விருதினைப் பெற்றார். அவரது தலைமையுரையில், சக வித்வான்களுக்கிடையில் பரவியிருந்த பொறாமையையும், பக்க வாத்யக் கலைஞர்களும் பாடகர்களும் ஒருவருக்கொருவர் கச்சேரி மேடையில் பலப் பரிட்சை செய்வது போன்ற நிகழ்வுகளையும் அறவே கண்டித்து, ஒரு பக்க வாத்யக் கலைஞனின் இலக்கணத்தை அழகுற வெளிப்படுத்தியுள்ளார். அதே வருடத்தில் சங்கீத நாடக் அகாடமியின் விருதும். 1959-இல் ஜனாதிபதி விருதும் அவரை அலங்கரித்தன.

பக்க வாத்யக் கலைஞர், சோலோ ஆர்டிஸ்ட் போன்ற முகங்களுடன், வாகேயக்காரராகவும் அவருக்கு ஒரு முகம் இருந்தது. 'த்ரிமகுட' என்ற முத்திரையுடன் பல கீர்த்த்னைகள் மற்றும் தில்லானாக்களை இயற்றியுள்ளார். இவரது பாணியை நிலை நாட்டும் வகையில், வி.சேதுராமையா, கண்டதேவி அழகிரிசாமி, மைசூர் ராமரத்னம் போன்ற பல சிஷ்யர்கள் அமைந்து, இசைத் துறையில் பிரபலமடைந்தனர்.

நிறைவான வாழ்வை வாழ்ந்த சௌடையா, 1967-ஆம் வருடம் ஜனவரி 19-ஆம் நாள், தனது 73-ஆவது வயதில் காலமானார். அச்சமயத்திலும் அவர் ஆறு கச்சேரிகளுக்கு ஒப்புக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மறைவிற்கு அடுத்த நாள், அவர் வாசிக்க இருந்த செம்பை வைத்தியநாத பாகவதரின் கச்சேரி, அவர் இல்லாமலேயே நிகழ்ந்தது. அவர் உடல் அங்கு இல்லை எனினும், அவர் நினைவு அங்கு நிறைந்திருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


இக்கட்டுரைக்கு உபயோகப்படுத்தப்பட்ட நூல்கள்:

1. மார்ச் 1987, ஸ்ருதி மாத இதழ்.
2. இருபதாம் நூற்றாண்டில் இசைக் கலைஞர்கள், சு.ரா, அல்லையன்ஸ் பதிப்பகம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

At 8:30 PM, Blogger Alex Pandian said...

ராம்,

நல்ல கட்டுரை - வழக்கம் போலவே :-)
இன்னும் பெங்களூரில் தான் இருக்கிறீர்களா ? இருந்தால் இது தெரிந்திருக்கலாம்
http://kutcheribuzz.com/news/20051104/muthu.asp

- அலெக்ஸ்
பி.கு: ஒரு செய்தி - கன்னட ரிபெல் ஸ்டார் அம்பரீஷ் - சௌடையாவின் பேரன்.

 
At 8:50 PM, Blogger லலிதாராம் said...

Alex,

I'm in Bangalore. I'm hoping to make it to the TNS's concert tomorrow. Will u be around? Thanks for the news on Ambareesh.

 
At 12:19 AM, Blogger Alex Pandian said...

மன்னிக்கவும் ராம்,

தங்கள் பதிலை இப்போதுதான் பார்த்தேன். அலுவலக காரணத்தால், டி.என்.எஸ் கச்சேரிக்கோ (அல்லது வாரநாளில் உள்ள எந்த நிகழ்ச்சியையும்) வர இயலாத நிலை. ஒரு மழையில்லா வார இறுதியில் நிச்சயம் சந்திப்போம்.

- அலெக்ஸ்
PS: my father is a regular in all
these concerts :-)

 
At 5:13 AM, Blogger லலிதாராம் said...

Thanks Priya.

Alex,

Got stuck at work. Missed out on the TNS concert:-((. Sure, we cud meet over a weekend.

 
At 5:39 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அருமையான கட்டுரை ராம்.

என்ன ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம் என்று எழுதுவதுதான் பிடிக்கவில்லை. ;)

உங்களுக்கு பெங்களூர் 'யளனகபக' கண்ணனைத் தெரியுமா? கர்நாடக இசையில் ஆர்வமுள்ளவர் அவர்.

சுட்டி - http://knski.blogspot.com

அவரிடமும் சொல்கிறேன்.

-மதி

 
At 6:47 AM, Blogger Nadopasana said...

Dear Ram
Excellent article! please keep writing more.

 
At 7:41 PM, Blogger லலிதாராம் said...

Mathy, Nadopasana: Thanks. Will try and write similar articles on other maestros as well in the near future.

Priya: you can mail me at ramachandran.mahadevan@ge.com.

anbudan,
Ram

 

Post a Comment

<< Home