Wednesday, December 21, 2005

இசை மழையும் அடை மழையும்

17th December 2005 @ Brahma Gana Sabha, Jayanthi Kumaresh, Arjun Kumar and Sukanya, 4.30 P.M

ஜெயந்தியின் கச்சேரி 4.00 மணிக்கு 4.30-க்கா என்று உறுதியாகத் தெரியாத நிலையில், சகேதராமனின் கச்சேரி முடியும் வரை இருக்காமல் முன்னரே கிளம்ப்பிவிட்டதை போன பதிவில் கூறியிருந்தேன். கச்சேரி 4.30 மணிக்குதான். 4.00 மணிக்கு சிவகாமி பெத்தாச்சி அரங்கிற்குச் சென்ற போது சுபாஷிணி பார்த்தசாரதி பைரவி பாடிக் கொண்டிருந்தார். இன்னும் அரை மணி நேரம் இருக்கையில், காண்டீன் பக்கம் போய் ஃபில்டர் காபி சாப்பிடலாம் என்று பார்த்தால், 'காண்டீன்' என்று பலகை இருந்த புல் வெளி ஆவினங்களுக்குரிய காண்டீனாய் விளங்கியது. (மழை பேய்து கொண்டிருந்ததால் அரங்கின் பின்புறம் காண்டீன் மாற்றியிருக்கிறார்கள். ஜெயந்தி குமரேஷின் கச்சேரி முடிந்த பின் படையெடுத்த கூட்டத்தை பின் தொடர்ந்த போதுதான் எனக்கு விஷயம் விளங்கியது.) காபி கிடைக்காத நிலையில் துக்கடாவில் சுபாஷிணி காபி ராகத்தைத் தொடங்க அரங்கினுள் நுழைந்தேன். வழக்கம் போல 'என்ன தவம் செய்தனை'-தான் இங்கேயும். ஆனால், இந்த பாடல் யசோதையின் தவத்தைப் பற்றியதுதானா என்று சந்தேகமாக இருந்தது. காரணம், யசோதை கண்ணனை உரலில்தானே கட்டினார், சுபாஷிணியோ "குரலில் கட்டி வாய் பொத்தி, கண்ணனைக் கெஞ்ச வைத்த" 'யாரையோ' பற்றி பாடிக் கொண்டிருந்தார்.

4.35-க்கு ஸ்ருதியெல்லாம் சேர்த்து முடித்த ஜெயந்தி குமரேஷின் பார்ட்டி, திரை விலகியவுடன் வணக்கம் தெரிவிக்க, அரங்கில் கைதட்டல் ஒலித்தது. வெளியில் அடை மழை ஆரம்பித்து விட்ட நிலையில் இசை மழையைக் கேட்க பத்து பேராவது இருப்பார்களா என்று பார்த்த போது, சுமார் பத்து பேர் இருப்பது தெரிந்தது:-). பிலஹரி ராகத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டு, நாராயண தீர்த்தரின் "பூரய மம காமம்" பாடலைத் தொடங்கினார் ஜெயந்தி. பெரும்பாலான நாராயண தீர்த்தர் தரங்கங்கள் துக்கடாவாக பாடப்படும் நிலையில், இவரின் முயற்சி இன்ப ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. (இன்னும் பல ஆச்சரியங்கள் தொடரவிருப்பதை அப்பொழுது நான் உணர்ந்திருக்கவில்லை)

வீணை கமகங்களை இழைத்து வாசிக்க அற்புதமான வாத்தியம் எனினும், கீர்த்தனைகள் வாசிக்கும் பொழுது, சாஹித்யங்களை பாடகர் பாடும் பொழுது ஏற்படும் உணர்வை இக்கருவியில் கொண்டு வருவது கடினம். பல சமயங்களில், வாத்திய இசைகளில் சங்கதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சாஹித்யம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். அன்று ஜெயந்தி வாசித்த அத்தனை கீர்த்தனைகளிலும் சாஹித்யத்தை தெளிவாகக் கேட்க முடிந்தது. மத்யம காலத்தில், விறுவிறுப்பான கற்பனை ஸ்வரங்களை ஜெயந்தி வாசித்த போதே கச்சேரி களை கட்டிவிட்டது.

பிலஹரியைத் தொடர்ந்து, குமுதக்ரியாவில் தீக்ஷிதரின் 'அர்த்தநாரீஸ்வரம்' வாசிக்கப் போவதாக ஜெயந்தி அறிவித்தார். மும்மூர்த்திகளுள் வைணிகராக விளங்கிய தீக்ஷிதரின் கிருதியை ஜெயந்தி தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லையெனினும், வழக்கமாய் வரும் பந்துவராளியோ பூர்வி கல்யாணியோ இல்லாமல், பந்துவராளியின் அழகிய அரிய ஜன்யமான குமுதக்ரியாவை எடுத்துக் கொண்டது ஆச்சரியம் நம்பர் 2. ரூபக தாளத்தில் அமைந்த பாடலின் பல்லவியில் விஸ்தாரமான ஸ்வரப்ரஸ்தாரமும், குறைப்பும் செய்தார். அர்ஜுன் குமார் மற்றும் சுகன்யா (முதல் முறையாக ஒரு பெண் கட வித்வானைக் காண்கிறேன். நன்றாகவே வாசிக்கிறார்!).

குமுதக்ரியாவைத் தொடர்ந்து வந்ததும் ஒரு ஆச்சரியம்தான்! முத்தையா பாகவதரின் 'தரு வர்ணத்தை' மூன்றாவது ஐட்டமாக வாசித்தார் ஜெயந்தி. தரு வர்ணம் எனப்படுவது யாதெனில் அந்த வர்ணத்தின் சிட்டை ச்வரங்களில் ச்வரம், ஜதி மற்றும் சாஹித்யம் மூன்றும் வரும். (இதை விளக்கிச் சொன்னதும் ஜெயந்திதான்). இரண்டு களை ஆதி தாளத்தில் விளம்ப கால வர்ணத்தின் மூலம் அழகிய கமாஸ் ராகம் அரங்கை நிறைத்தது. (இதில் ஆச்சரியம் என்ன என்று கேட்பவர்களுக்கு: வர்ணம் 99.99% கச்சேரியின் முதல் ஐட்டமாக பாட/வாசிக்கப்படும் விஷயம், இதை மூன்றாவது இடத்துக்கு தள்ளியதுதான் ஆச்சரியம். கச்சேரி முடிந்தபின், இதை மூன்றாவதாக வாசித்ததன் காரணம் கேட்ட போது, "It is a relatively slow piece. So, I was not sure how it would come out if I had started the concert with it", என்றார்.) வர்ணத்தை மூன்றாவதாக வாசித்து tradition-ஐ உடைத்துதான் ஆச்சரியம் என்றால், இப்பொழுது வர்ணத்தை வாசித்ததால் அதனைத் தொடர்ந்து 'விநாயகர் கீர்த்தனை' வாசிக்கிறேன் என்று மீண்டும் tradition-க்குத் தாவியது கொஞ்சம் comedy-ஆக இருந்தது.

ரீதிகௌளை ஒரு அற்புத ரக்தி ராகம். எப்படி இழுத்தாலும் அழகாக வளரும் வகையில் அமைந்த ராகத்தை எம்.டி.ராமநாதன் எடுத்துக் கொண்டு அதி விளம்ப காலப்பிரமாணத்தில் 'ஜனனி நினுவினா' பாடினாலும் மிளிரும், ஜி.என்.பி எடுத்துக் கொண்டு, பல துரித சங்கதிகள் புகுத்தி "பரிபாலயமாம்" பாடினாலும் மிளிரும், மதுரை மணி மத்யம காலத்தில் "மதி சேகரன் மகனே"-வின் patesnded சர்வலக்ஹு ஸ்வரங்கள் பாடினாலும் களை கட்டிவிடும். அதை சப்-மெயின் ராகமாக தேர்ந்தெடுத்து ஆலாபனை செய்தார். ரீதிகௌளையின் சஞ்சாரங்களை மெல்ல மெல்ல விரிய வைத்த போது, ஆலாபனையில் 'வல்லினம்' 'மெல்லினம்' (அதாவது அழுத்த வேண்டிய இடத்தில் அழுத்தி, அமுக்க வேண்டிய இடத்தில் அமுக்கி வாசிப்பது) உணர்ந்து வாசிப்பது என்று சொல்வார்களே, அதன் பொருள் நன்றாக விளங்கியது. கீர்த்தனை வாசித்த விதத்தையும் அதனைத் தொடர்ந்த கல்பனை ஸ்வரங்களையும் பற்றி சொன்னால், இக்கட்டுரையை எழுதுவது 'லலிதா ராமா?, அல்லது கிளிப்பிள்ளையா என்று ஒரு பின்னூட்டு வருவது நிச்சயம்!

ரீதிகௌளையை முடித்த பொழுது கையில் 45 நிமிடமே எஞ்சியிருந்த வேளையில் கச்சேரியின் பிரதான ராகமாக கல்யாணியை வாசிக்க ஆரம்பித்தார். கல்யாணியின் பல பரிமாணங்களை அரங்கிற்கு ஜெயந்தி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த போது சம்பந்தமேயில்லாமல் முந்தைய நாள் ஃப்ளோரிடா ஸ்டேட் யூனிவர்சிடியிலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்த ஃபொரபசர் 'textile composites'-ஐப் பற்றி கூறியது நினைவிற்கு வந்தது. பல விதமான இழைகளை வலிமைக்காக, நிறத்திற்காக, தோல் மேல் படும் உணர்விற்காக பல விதமான வகைகளை இணைப்பதிலிருந்து மெக்கானிகல் இஞ்சினியர்கள் நிறைய கற்று கொள்ளலாம் என்றார். ஜெயந்தி வாசித்த கல்யாணியின் இழைகளும் அப்படித்தான், பத்து நிமிட ஆலாபனை நிறைவை நெருங்கிய போது, இழைகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு ஒரு அழகிய, கோவை உருவாகியிருந்தது.

தானம் நமது இசைக்குமட்டுமேயுரிய 'semi rythmic item' ஆகும். (ஹிந்துஸ்தானியிலும் தானம் போல சில ஐட்டங்கள் உண்டு என்பதால் நமது என்பதை 'இந்திய' என்று வைத்துக் கொள்வோம்). நிறைவான தானத்தை கேட்க அரிதாகிவிட்ட நிலையில், தானத்திற்கென்றே பெயர் பெற்ற வாத்தியத்தில் விஸ்தாரமான தானத்தை கீர்த்தனத்துக்கு முன் வாசித்தது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கச்சேரி ஆரம்பித்து ஒரு தியாகராஜர் கீர்த்தனை கூட வாசிக்காத நிலையில், பிரதான கீர்த்தனையாக "ஏதாவுனரா" வாசிக்க போகிறார் என்று நினைத்தேன். அதிலும் ஆச்சரியம்தான்! அவர் தேர்ந்தெடுத்தது மற்றுமொரு தீக்க்ஷிதர் கீர்த்தனையான, மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த கிருதியான "பஜரே ரே சித்த'. "தேவீம் சக்தி பீஜோத் பவ மாத்ருகார்ண சரீரிணீம்", என்ற வரியைத் தாண்டிச் செல்வதென்பது almost impossible. ஜெயந்தி மட்டும் விதிவிலக்கா என்ன?, அந்த இடத்தில் இழைத்து இழைத்து நிரவலும், இரண்டு காலங்களில் ஸ்வரமும் வாசித்து, குறைப்பில், மிருதங்க வித்வானுடனும், கட விதூஷியுடனும் சேர்ந்து நடத்திய "sawal javaab type" குறைப்பு மிகவும் ரசிக்கும்படியாகவும், ஜெயந்தியின் arithmetical skills-ஐ சபையோர் உணரும் வகையிலும் அமைந்தது. எத்தனைதான் இரண்டு களை ஆதி தாளத்தில் அமைந்த தனி ஆவர்தனத்தை கேட்டாலும் அலுக்காது என்றாலும், ஒரு மாறுதலுக்காய், பல நாட்களுக்குப் பின் கேட்கக் கிடைத்த மிஸ்ர சாபு தனி ஆவர்த்தனம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

நல்ல அரங்கில், அற்புதமாய் அமைந்த கச்சேரியில் ஒரே குறை, அது இரண்டு மணி நேரக் கச்சேரியாக இருந்ததுதான். இன்னும் ஒரு மணி நேரம் இருந்திருப்பின் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும், அதனைத் தொடர்ந்த கச்சேரியின் எனது fav. திருச்சி சங்கரன் வாசிக்க இருந்ததால் அத்தனை குறை தெரியவில்லை. மைசூர் மஞ்சுநாத், திருச்சி சங்கரன் புடை சூழ, மல்லாடி சகோதரர்கள் பாடிய கச்சேரி அற்புதமாக அமைந்தது. அதைப் பற்றி முடிந்தால் அடுத்த பதிவில்.

அதைவிட முக்கியம், இசை மழையில் நனைய வேண்டுமெனில் இந்த சீசனில் அடை மழையில் நனைந்துதான் ஆக வேண்டும் போலிருக்கிறது. சபா எல்லாம் டல்லடிக்கிறது. 17-ஆம் தேதி, 9.15-க்கு மழைக்கு ஒதுங்கிய நான், அவ்விடத்தைவிட்ட நகர 10.30 ஆகிவிட்டது (மழை அப்போதும் விடவில்லை). வருண பகவானின் கருணையை வரும் வருடங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வைத்துக் கொள்ள யாராவது சொன்னால் நன்றாயிருக்கும் (17-ஆம் தேதி கச்சேரியைப் பற்றி எழுதி முடிக்கவே 20-ஆம் தேதி ஆகிவிட்ட நிலையில், எல்லா கச்சேரிகளைப் பற்றியும் precise writing எழுதலாம் என்றால், அதற்கும் மனமில்லை...ஹும்....)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

44 Comments:

At 12:30 AM, Blogger Nadopasana said...

இன்னும் அரை மணி நேரம் இருக்கையில், காண்டீன் பக்கம் போய் ஃபில்டர் காபி சாப்பிடலாம் என்று பார்த்தால், 'காண்டீன்' என்று பலகை இருந்த புல் வெளி ஆவினங்களுக்குரிய காண்டீனாய் விளங்கியது. (மழை பேய்து கொண்டிருந்ததால் அரங்கின் பின்புறம் காண்டீன் மாற்றியிருக்கிறார்கள். ஜெயந்தி குமரேஷின் கச்சேரி முடிந்த பின் படையெடுத்த கூட்டத்தை பின் தொடர்ந்த போதுதான் எனக்கு விஷயம் விளங்கியது.)

Hi Hi Hi
Very nice.
Keep writing more.

 
At 1:12 PM, Blogger rv said...

இப்பதிவிற்கு மிக்க நன்றி லலிதா இராம்,

என்னைப் போன்றோர் கச்சேரிகளுக்கு செல்ல முடிவதில்லை. கிருஷ்ணா, விஜய், சஞ்சய் போன்றோரின் கச்சேரிகளுக்கு சென்றால் தங்களின் விமர்சனங்களை பதிக்குமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

 
At 10:10 PM, Anonymous Anonymous said...

T.N.Seshagopalan also said in an interview to a Bangalore daily that he wont do anything to please masses and get more crowds.He said he was not interested in getting more crowds but is only interested in maintaining tradition.If people are interested in coming and listening to his concerts, they have to try hard to understand carnatic music.Unnikrishnan's and priya sisters views also reflect the same attitude.I think they dont care even if they starve to death but will not do anything to please "pamaran".

This view was prevalent even among the trinity.Both thyagaraja and Dikshitar refused to sing about kings to earn favours but only sang about God.There is a song written by Dikshitar praising Goddess Lakshmi.It is supposed to have been composed after his wife begged him to praise some king to escape from poverty.Dikshitar refused and sang about Lakshmi.Seems Lakshmi appeared in his wife's dreams and told her the real wealth is not materialistic wealth.As long as this view is there, they wont change at all

 
At 12:15 AM, Anonymous Anonymous said...

எனக்கும் தோடி அரைமணிநேரம் பிடிப்பதுபோல்/புரிவதுபோல் எப்போது எளிமையாக எடுத்துவரப் போகிறீர்கள் என்ற கேள்விக்குத்தான் பதில் இல்லை.

JSri
For this, there is no option but learning the carnatic music.i dont know how else we can appreciate Thodi if we dont know anything in carnatic music.Nor do I know how they can "simplyfy" Thodi ragam.
The best they can do to reach pamaran is probably singing more songs in Tamil and say this is sung in Thodi ragam.But, if they indulge in alapanai etc, a pamaran like me does not even know why thodi has to be sung in that alapanai only(i know it is some manodharma on the arohana and avarohana specified for that ragam but this is theoretical knoweldge only.correct me here if i'm wrong).If i have to appreciate it, then i have to learn carnatic music.

I think classical musical forms all over the world need an effort from the audience too to appreciate it.Which is why all classical music all over the world play to shrinking audience numbers only.It is easy to enjoy music for which we need not make any effort.I'm trying to get some knowledge only by listening to it as i have no time(? excuse for lack of dedication,perhaps?) to learn it formally.

I think once PMK leader Dr.Ramdas said carnatic music basics must be taught in all TN schools.That would be good step forward for all pamarans like me to get an idea about carnatic music.

As you, i too have high regard for carnatic music artistes.Commercialisation and money came to it very recently.But they still learnt the art for art's sake even before this commercialisation.Before that, only singing in temples was present , and it was not really a great career option.Probably, devotion to God was key in making them learn the art with dedication.My salute to these artistes.

 
At 12:23 AM, Anonymous Anonymous said...

உன்னிக்கிருஷ்ணன் திரைஇசையில் பாடவில்லையா? 130 பாடல்களுடன் MP3 வைத்திருக்கிறேன். 10 பாடலுக்கு மேல் காதால் கேட்கத் தேறாதவை. எப்போது அந்தக் கேவலங்களைப் பாடினார் என்றே தெரியவில்லை.

I agree that most songs sung by Unni for Tamil film music sucks big time.He probably used this film industry oppurtunity to make more money for himself(reflects insecurity in carnatic music?).
He does not give same committment/effort for film music as carnatic music.Bombay Jayashree,Sudha ,Nithyashree are all singing film songs now.I think OS thygarajan recently left his 9-5 job.sanjay works as Charteed Acct too.They are really insecure about making money in carnatic music.but, they dont do anything to attract pamaran to carnatic msuic and make more money there!

Most of Unni's carnatic music concerts are well presented and enjoyable and top class.

PS:-
I too have high regards for carnatic music artistes for their sheer committment and dedication to it.

 
At 1:29 PM, Blogger rv said...

//trinity.Both thyagaraja and Dikshitar refused to sing about kings to earn favours but only sang about God.//
"நிதி சால சுகமா... மமத பந்தன நரஸ்துதி சுகமா"ன்னு பாடிருக்காரே த்யாகையர்!

 
At 9:49 AM, Blogger க்ருபா said...

Since Ram does not have internet access and also did not have internet access, and since I posted the entries and since actually Ram did not post the entries, and since he is still unable to view the comments...

ச்சே, இங்க்லீஷ்ல சொல்ல வரலை. தமிழ்லயே சொல்லிடறேன்.

உங்க எல்லோருடைய பின்னூட்டம் & கேள்விகள்/கருத்துக்களையும் செவி வழி மட்டுமே ராம் கேட்டு இருக்கான். எல்லாத்துக்கும் விரிவா பதில் சொல்லனும்ங்கறதால, இணைய இணைப்பு கெடச்சதும் (இரண்டொரு நாளில்) பின்னூட்டமிடறதா மட்டும் இப்போதிக்கு தெரிவிச்சான்.

மறுமொழி இடாமலே சரசரன்னு இத்தளத்தில் வந்த பதிவுகள் எல்லாம் ஃப்ளாஷ் ட்ரைவ் துணையுடன் என் வழியே வந்தவை.

க்ருபா

 
At 6:26 AM, Blogger Simulation said...

பாமரனுக்கும் இசை சேர வேண்டுமா?

புரிந்து கொள்வது என்பது வேறு. இரசிப்பது என்பது வேறு. புரிந்து கொண்டால் மேலும் இரசிக்க முடியும் என்பதும் உண்மை.

"கர்னாடக இசை எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. ஏன் பாமரனை அடையும் படியாக பாட யாரும் பாட முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்" என்று பலரும் அடிக்கடி கூறுகிறார்கள்.

எதற்காக இந்த உயர்ந்த கலை மட்டும் பாமரனைச் சென்றடைய வேண்டும், அந்தப் பாமரன் தனது அறிவையும், இரசனைத்தன்மையயும் உயர்த்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில்.

னேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; நேர் நிரை கூவிளம்; நிரை நி¨ரி கரு விளம் என்றெல்லாம் அலகிட்டு வாய்பாடு கூறி, குறட்பாக்களையும், வெண்பாக்களயும் இரசித்துக் கொண்டிருக்கும் புலவர்கள் கூட்டத்திலும், அவர்தம் பாக்களை இரசிக்கும் மக்களிடமும் சென்று, யாராவது, "தலிவா; "செல் அடிச்சா ரிங்கு; சிவாஜி அடிச்சா சங்கு'ன்னு புரியராமாறி சொல்லு; நேர் நேர் தேமா அப்படீ இப்படீன்ன்னு சொல்லிக் கிட்டேயிருந்தா, இந்த எலக்கியமெல்லம் அழிஞ்சிடும்" என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்.

மௌனியிடமோ, சு.ராவிடமோ, ஆதவனிடமோ சென்று, நீங்கள் எழுதுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாமரனைச் சென்று அடையுமாறு, ராஜேஷ் குமார் போலவோ, பட்டுக் கோட்டை பிரபாகர் (no offence meant; they are for a diffrent audience) போலவோ ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லக்கூடும்.

பரதத்திலும் கூடப் புதுமையாக என்று செய்தாலும், ஒரு சில கருத்துக்கள்தானே செய்ய முடியும். என்னுடையது மிகவும் புதுமையானது மற்றும் இளஞர்களுக்கானது என்று கூறி, ISO 9000, CMM LEVEL-5, BIO-DIESEL என்ற தலைப்புகளில் ஆட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

மாற்றங்கள் தேவைதான்; ஆனால் ஒரு எல்லைக் கோட்டுக்குள்ளேயே ஆட்டத்தை மாற்றி விளையாட முடியும். இவ்வாறும் புதுமைகள் செய்தவர்கள் பலர் உண்டு. உதாரணாம் வருமாறு:-

டி.வி.கோபாலகிருஷ்ணன அவர்கள் ஒரே கச்சேரியில் முதல் பாதியில் கர்னாடிக் கச்சேரியும், இடை வேளைக்குப் பிறகு ஹிந்துஸ்தானியும் செய்வார். இதில் இன்னுமோர் விஷெசமென்றால், முதல் பாதியில் சட்டை, வேஷ்டியுடன் வரும் அவர் அடுத்த பாதியில், பைஜாமா குர்தாவுடன் வருவார்.

சமீபத்தில் ஒரு வீணைக்கலஞர் சொன்னார். "புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்; புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்" என்று நச்செரிக்கிறார்கள். "வீணையைத் தலை கீழாக வேண்டுமென்றால் பிடித்துக் கொண்டு வாசிக்கலாமோ என்னவோ" என்றார். அவர் ஏற்கெனவே வீணையில் திரைப் பாடல்கள் வாசித்து வருபவர்தான். அதற்காக, கர்னாடக இசையில் அதை எதிர்பார்க்க முடியுமா? உன்னி, பாம்பே ஜெயஸ்ரீ, ஜேஸ¤தாஸ் போன்றோர் சினிமாவில் பாடுபவர்கள்தான். அதற்காக, கர்னாடக இசையில் சினிமாப் பாடலை எதிர்பார்க்க முடியுமா?

எனக்கு ஒரு கலை புரிவதில்லை என்று சொல்லுவது கலையின் குற்றமா? கலஞனின் குற்றமா? இரசிகனின் குற்றமா? "எனக்குப் புரியவில்லை; ஆகவே விடுகின்றேன் சாபம் ; உங்கள் கலை அழிந்து விடும்" என்பது னியாமா?

-சிமுலேஷன்

 
At 12:04 PM, Blogger க்ருபா said...

past years மட்டுமா? ;-)

இங்க்லீஷ்ன்னு புரிஞ்சுது, அது போதும். எப்படியோ எளுத்து கூட்டிப் படிச்சுட்டேன்.

கை துறுதுறுன்னுதான் இருந்துது சொந்தமா ஏதாவது தட்டறதுக்கு, சரி பொழச்சுப்போகட்டும்னு விட்டுட்டேன். அதனால என்ன இப்போ, இதோ சிமுலே்ஷன்கிட்ட பேசிட்டாப் போச்சு.

க்ருபா

 
At 1:11 PM, Blogger க்ருபா said...

புரிந்து கொண்டால் மேலும் ரசிக்க முடியும் என்பது உண்மை என்றால் முதலில் இருந்த ரசனையும் புரிதலுக்குப் பின்னால் வரும் ரசனையும் வேறுவேறு தானே?

புரியாமலே 'ரசிக்க' பாடலும் கேட்பவரும் மட்டும் போதும். புரிந்து கொள்ளுதலுக்குப் பின் 'மேலும் ரசிப்பது' அப்ரிசியேஷன், இல்லையா? எனவே அப்படிப்பட்ட ரசனை பாடல் மற்றும் பாடலைக் கேட்பவர் மட்டுமில்லாமல், பாடல் அமைப்பையும் பாடுபவரையும் சார்ந்தது.

ஒரு வேளை இந்த 'மேலும் ரசிக்கும்' தன்மை கிடைக்க இசை கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டுமா? ஹைப்பர்லிங்கை click பண்ணி இணையத்தில் உலாவ anchor tag பற்றி தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. திரை இசைப் பாடல்களை ரசிக்கவும் இசை பற்றி தெரிந்திருக்க அவசியம் இல்லை. எனில், கர்நாடக இசையை ரசிக்க என்ன தெரிந்திருக்க வேண்டும்?

புலவர்கள் கூட்டத்தில் புளிமா, உப்புமா என்றேல்லாம் ஆராய்ச்சி நடந்தால் யார் எதிர்க்கப்போகிறார்கள்? ஆனால் புலவர்கள் வாசகர்களுக்காக எழுதுவது புரியும்படி இருக்கவேண்டும் என்று கேட்டுப்பார்க்கலாம் இல்லையா? குறைந்தபட்சம் நேர்நேர் சிம்ரன், நிரைநேர் சரோஜா என்றாவது சொல்லித்தரச் சொல்லலாம் இல்லையா?

தமிழ், ஆங்கிலம், இசை எல்லாவற்றிலும் எனக்கு ஒரே அளவு அறிவுதான். ஆனால், கீழ்க்கண்ட வெண்பாவைப் படித்தவுடன் ரசிக்க எனக்கு எந்த அறிவுப் பற்றாக்குறையும் தடையாக இருக்கவில்லை:

மாசிலா மாணவன் மாணிக்க மொத்தோனை
ஏசி யிழித்த எருமையே - பேசியே
வென்றிட வெண்ணாதே உன்தலையில் பௌதிகம்
என்றென்றும் ஏறாது காண்.

ஃப்சிக்ஸ் மாணவன் ஒருவன் தன் சகமாணவியைக் களாய்க்க எழுதிய வெண்பா என்ற தகவல் ஒன்றே போதுமானதாக இருந்தது.

அந்த வெண்பாவைப் படித்தவுடன் வெண்பாவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல்(லாவது) ஏற்படுகிறதா இல்லையா?

'செல் அடிச்சா ரிங்கு' என்ற நிலைக்கு எல்லாம் இறங்கி வர வேண்டம்.

கைப்பேசி கத்தினால் கேட்டிடும் ரிங்டோன்
சிவாஜி அடித்தாலோ சங்கு

என்று சொன்னாலே போதும், 'பாமரன்' புரிந்துகொள்ள.

எனக்கு ஒரு கலை புரிவதில்லை என்று சொல்வது கலையின் குற்றமோ கலைஞனின் குற்றமோ இல்லை. இரசிகனின் குற்றம்தான். தன் சகமனிதனுக்கு தான் ரசித்ததை விளக்கிச் சொல்லாத ரசிகனின் குற்றம். :-)

க்ருபா

 
At 12:55 AM, Blogger லலிதாராம் said...

Thanks for all the comments. That is an interesting discussion. Will delay my alreasy delayed reply by another day.

 
At 11:56 PM, Blogger லலிதாராம் said...

ஜெயஸ்ரீ,

நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள் சுவாரசியமானவை. பலமுறை பிராகாஷ், கிருபா போன்ற நண்பர்களுடன் விவாதிக்கப்பட்டவை.

வர்ணத்தை மூன்றாவது வைத்ததுதான் கச்சேரிகளில் செய்யப்படும் மாறுதல்களா? வேறு விதமான innovation-கள் இல்லையா? என்று கேட்டால், நிச்சயம் உண்டு. ஒவ்வொருத்தரும் ஆலபனையிலேயோ, நிரவலிலேயோ, ஸ்வரம் பாடுவதிலேயோ பல புதுமைகளை நிகழ்த்திதான் வருகிறார்கள். 'மாமவ சதா', 'அலைபாயுதே' போன்ற பாடல்கள் கானடா ராகத்தை கீழ் ஸ்தாயியிலிருந்து தொடங்கி வளர்க்கும். இதனைக் கண்ட ஜி.என்.பி வித்தியாசமாய் மேல் ஸ்தாயியில் ஆரம்பித்து 'பராமுகமேல' பாடலை அமைத்தார். ஒரே பாடலை பல பாடகர்கள் பாடும் போது வெவ்வேறு விதமாக கையாண்டு அவர்களுகேவுரிய பாணியில் மெருகேற்றுகிறார்கள்.

பாடல்களைப் பாடும் போது சங்கதிகள் என்று ஒரு சமாசாரம் உண்டு. அவற்றைப் பற்றி முன்னே எழுதியிலிருந்து வெட்டி ஒட்டியவை பின் வருமாறு:

கீர்த்தனை என்பது ராகம் என்னும் அரசன் தடங்கின்றி உல்லாசமாய் பவனி வரத் தோதான ராஜபாட்டை. கீர்த்தனைகள் பாடும் பொழுது, ஒரே வரியை பல முறை வேறு வேறு விதமாகப் பாடுவார்கள். இதற்குச் சங்கதிகள் என்று பெயர். இந்த சங்கதிகளை ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, ஒரு திறமையான பேட்ஸ்மேல் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சந்திக்கிறார். முதல் பந்து 'குட்-லெந்தில்' விழுகிறது, நமது பேட்ஸ்மெனின் கால்கள் பந்தை நோக்கி துரிதமாகச் சென்று மிட்-ஆனுக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்கின்றன. விளைவு - 4 ரன்கள். அடுத்த பந்தும் அதே இடத்த்ல் விழுகிறது, ஆனால் இம்முறை லாங்-ஆனில் ஒருவர் இருக்கிறார். நமது ஆட்டக்காரர் சற்று நகர்ர்ந்து காலியாக இருக்கும் 'பாயிண்ட்' திசையில் 'கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள். இம்முறை டீப்-பாயிண்ட் இருக்கிறது, பந்து அதே இடத்தில் விழுந்து வருகிறது, பேட்ஸ்மேன் பந்து தன்னை கடக்கும் வரைக் காத்திருந்து, விக்கட்-கீப்பரின் கையுரையில் செல்லும் முன் செல்லமாக தடவிக் கொடுப்பது போல பந்தை லேட்-கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள். எப்படி ஒரே பந்தை வெவ்வேறு விதமாக பவுண்டரிக்கு அனுப்பி, தன் திறமையின் பரிமாணங்களை பேட்ஸ்மேன் வெளிப்படுத்தினாரோ, அதே போல, ஒரு ராகத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்வதே சங்கதிகளின் வேலை.

காம்போஜி ராகக் கிருதியான 'ஓ ரங்க சாயி' என்ற பாடலின் பல்லவியை எம்.எஸ் பாடும் விதத்தைக் கேட்டால், நான் கூறிய 'cricket analogy' புரியும். 'ஓ ரங்கசாயி' என்ற வரியில் 'ஓ' என்ற சொல் (எழுத்து) மட்டும் இரண்டு களை ஆதி தாளத்தின் 3 இடங்களுக்கு வரும் (ஆதி தாளம் என்ற தாளத்தின் அளவு. அந்த எட்டில், ஒரு beat-க்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும் போது precision-க்காக 8-ஐ 16-ஆக போடுவதுண்டு. இதனால் இதை இரண்டு களை என்கிறோம். எட்டு beat என்று கூறியதை எட்டு இடங்கள் என்றும் கூறலாம். 3 இடங்கள் என்றால் 3/8th of the entire beat cycle) அந்த ஒரு எழுத்தை முதலில் காம்போஜியின் சில ஸ்வரங்களில் மட்டும் பாவவிட்டுப் பாடுவார். அடுத்த சங்கதியில் முன்னால் பாடிய ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அன்புடன் அணைத்துக் கொள்ளும். அடுத்த சங்கதியில் வேறு சில ஸ்வரங்கள் சேர்ந்து கொள்ளும். அடுத்த சங்கதியில் காம்போஜியின் மொத்த உருவம் லேசாக பவனி வர ஆரம்பிக்கும், இப்படி படிப்படியாய் வளர்ந்து வளர்ந்து, 'ஓ ரங்க சாயி' என்ற வரி சில மின்னல் வேக ப்ருகாக்களுடன் காம்போஜி ராகத்தை ரோலர் கோஸ்டரில் இட்டுச் செல்லும். பேட்ஸ்மெனின் ஒவ்வொரு அடியும் எப்படி பவுண்டரியில் முடிந்ததோ அதே போல சங்கதிகள் எத்தனை எத்தனை இருப்பினும் அவற்றின் விளைவு, கேட்பவர் மனத்தில் மகிழ்ச்சிதான்.

இந்த சங்கதிகளை பாடகரின் அன்றைய குரல்வளம், கற்பனை வளத்திற்கேற்ப மாறு படும். முசிறி 'நகுமோமு' பாடலில் சேர்த்த சங்கதிகள் உலகறிந்ததே. கரஹரப்ரியாவின் சில பிரயோகங்களைக் கொண்டு வந்ததே கோனேரிராஜபுரம் வைத்தியநாதந்தான் என்று ஒரு லெக்சரில் எஸ்.இராமநாதன் கூறுகிறார்.

இப்படிப்பட்ட புதுமைகளைக் கூறாமல் வர்ணத்தைக் கூறக் காரணம் என்ன என்று நீங்கள் கேட்கலாம்? இப்படிப்பட்ட innovation-களைச் செய்வதும் tradition-இல் அடக்கம். கல்பித சங்கீதம் என்று அழைக்கப்படும் "கற்றுக் கொடுக்கப்பட்ட சங்கீதமும்", கல்பனை சங்கீதம் அல்லது மனோதர்மம் என்று அழைக்கப்படும் "பாடகரின் கற்பனையைச் சார்ந்த சங்கீதமும்" கலந்ததே நமது இசை. இதில் ராகம், பாடல், நிரவல். ஸ்வரம் செய்வதில் செய்யும் புதுமையெல்லாம் taken for granted. மாறுதலும் ஆரம்பரியத்தின் அங்கமாய் வைப்பதால் இதை non-tradition என்று வகைப்படுத்த முடியாது. ஆனால், கச்சேரி பத்ததியில் இன்னென்ன உருப்படிகளை இந்த இந்த நேரத்தில் பாட வேண்டும் என்று இருக்கும் போது அதை மீறினால் அது tradition-ஐ உடைத்ததாகும். உதாரணமாக கச்சேரிகள் பெரும்பாலும் வர்ணத்தில் தொடங்கும். அதை மாற்றும் போது நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் பாரம்பரியம் உடை படுகிறது. இதில் தவறு ஒன்றுமில்லை. இன்று tradition-ஆக இருக்கும் முறை நூறு ஆண்டுகளுக்கு முன் புதுமையாக இருந்த ஒன்றுதான்.

உங்கள் இரண்டாவது கேள்வி சற்றே ஆழமானது. கர்நாடக இசையை ரசிக்க மனமிருந்தால் போதும் அதனைப் பற்றிய ஆழ்ந்த அறிவு தேவையில்லை என்றே நான் பலரிடம் கூறி பல விவாதங்களில் திருச் சாத்து வாங்கியிருக்கிறேன். உங்களைப் பொறுத்த மட்டில் அந்த வேலை மிச்சம். ஏனெனில், உங்களுக்கு தோடிக்கும் பைரவிக்கும் வித்தியாசம் தெரியாத போதும் கச்சேரிகளை விடாமல் கேடிறீர்கள். அதில் சில கச்சேரிகள் உங்களுக்குப் பிடித்தும் [இடிக்காமலும் இருக்கிறது. சங்கீத ரசனை உங்களுக்கு விஷயம் புரிந்தால் மென்மேலும் அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லைதான். ஆனால் அந்த விஷய ஞானம் வருவதற்கு தனியாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. இப்பொழுது செய்வது போலவே தொடர்ந்து கேட்டாலே போதுமானதாக இருக்கும். கேட்பதோடு நிற்காமல் என்ன கேட்கிறோம் என்றும் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். Also you have to realize that this is a gradual process.

தெரிந்து கேட்பதென்றால் என்ன? நீங்கள் ஆடியோ காஸெட்டிலோ சி.டி-யிலோ கேட்கும் போது அந்த பாடல் என்ன ராகத்தில் அமைந்திருக்கிறது என்றும் போட்டிருப்பார்கள். முதல் கட்டமாக இன்ன பாடல் இன்ன ராகம் என்று மனதில் நிறுத்திக் கொள்ளலாம். முதல் கட்டமாக ஆலபனைகள் போர் அடித்தாலும், ஸ்வரம் பாடுவார்களே (அப்படினா என்ன என்று நீங்கள் கேட்டால், 'சிந்து பைரவி' பட்ம பார்த்திருக்கிறீர்கள்தானே. அதில் 'மஹா கணபதிம்' பாடல் முடிந்ததும் 'ச ரி க மஹா கணபதிம்' என்று ஆரம்பித்து அந்த ராகத்துக்குரிய ஸ்வரங்களில் கோவைகள் செய்து மீண்டும் மீண்டும் மஹாகணபதிம் என்ற வார்த்தையில் யேசுதாஸ் முடிப்பாரே (வயலினும் இவர் பாடியதை வாசிப்பார்) அந்த 'சவா - ஜவாப்' சமாசாரம்தான் ஸ்வரம் பாடறது). உங்களுக்கு கணக்கில் ஈடுபாடு இருப்பின், ஒரு தாளத்தின் அளவிலோ அந்த அளவின் multiple-இன் அளவிலோ எத்தனை விதமான permutation-கள் செய்கிறார் என்பது சுவாரசியமாக இருக்கும். 'பாரதியார் பாடல்கள்', 'தில்லானாக்கள்', semi-classical வெளியீடுகளில் இம்முயற்சியைத் தொடங்கலாம். நீங்கள் கேட்கும் ராகத்தில் அமைந்த சினிமா பாடல்களின் பட்டியல் இணையத்திலேயே கிடைக்கும். இவைகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே நிச்சயம் காலப் போக்கில் ராகங்கள் புரிபடும். கொஞ்சம் ஆழ்ந்த சமாசாரங்களான அரை மணி நேர தோடி ஆலாபனைகள் bore அடிக்காமல் இருக்கும்.

மாற்றம் என்பது பாடகர் பாடுவதில் வர வேண்டும் என்பதைவிட கர்நாடக இசை என்றால் ஏதோ ஜகஜாலதில்லாலங்கடித்தனம் என்னும் mind-set உடைதலே முக்கியம். அதை உடைக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். நான் பள்ளியில் படித்த நாட்களில் Youth Association for Carnatic Music என்னும் அமைப்பு (நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உன்னிகிருஷ்ணன் அதனது founder member) அல பள்ளிகளுக்குச் சென்று கர்நாடக இசை கணக்குப் பாடத்தைவிட சுலபமானது என்று கூறி நிகழ்ச்சிகள் நடத்தி, அடிப்ப்டைகளை மாணவர்களுக்குக் கூறி வந்தனர். "carnatic music appreciation" என்ற தலைப்பில் ஒலிநாடாக்கள் கூட வெளியிட்டதாக நினைவு. நிக்ழச்சிகள் நடத்தப்படலாம், அதை பல ஆர்வலர்கள் கேட்கலாம். ஆனால், உண்மையில் ரசிப்புத்தன்மை வளர தளராமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் அவசியம். கச்சேரிகளுக்குப் பலர் செல்லாமல் இருப்பதற்குக் காரணம் தங்களால் ரசிக்க முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருப்பதால்தால். 2004-இல் பிரகாஷையும், 2005-இல் கிருபாவையும் என்னுடன் கச்சேரிக்கு அழைத்துச் சென்றிருக்கிரேன். அவர்கள் என்னிடம் உண்மையைச் சொல்லியிருக்கும் பட்சத்தில், அந்த கச்சேரிகள் அவர்கள் ரசிக்கும்படியே அமைந்தது. ஸ்வரப் ப்ரஸ்தாரங்களின் போது பிரகாஷ் தன்னை மறந்து கரகோஷம் எழுப்பியதை கண்கூடாகக் காண முடிந்தது. இவர்கள் தொடர்ந்து கேட்பார்களாயின் நிச்சயம் ராகங்கள் புரிபடும். ராகங்கள் புரிபடுவது வேறு இசையை ரசிப்பது வேறு என்பதே என் எண்ணம். "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே" பாடலை அது அபோகி ராகத்திலமைந்தது என்று தெரிந்தவரும் ரசிக்க முடியும், தெரியாதவரும் ரசிக்க முடியும் என்றால், மற்ற பாடல்களுக்கும் அது பொருந்தும்தானே?

தொடர்ந்து கேட்டால் புரிய என்ன கேரண்டி என்று கேட்கலாம்? நீங்கள் நம்புவீர்களா தெரியவில்லை...இருப்பினும், எனது முதல் 18 வருட வாழ்க்கையில் ஒரு கர்நாடக இசைக் கச்சேரிக்குக் கூட சென்ற நினைவில்லை. காலேஜ் செல்லும்வரை ஒரு ராகம் கூட கண்டுபிடிக்க முடியாது. பாரதியார் பாடல்கள் மற்றும் ஸ்வரப் ப்ரஸ்தாரங்கள், தனி ஆவ்ர்த்னத்தில் பொதிந்து இருக்கும் கணக்குகள், மாண்டலினில் ஸ்ரீநிவாஸ் வாசிக்கும் வேகம் இவற்றால் கவரப்பட்டு தொடர்ந்து 3-4 வருடங்கள் கேட்டபின் கிட்டத்தட்ட 100 ராகங்களை இனம் பிரித்துக் காணக்கூடிய நிலை. அதன் பின் கிடைத்த சங்கீத பயிற்சி பெற்ற நண்பர்கள் மற்றும் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் அரியக்குடி, ஜி.என்.பி, செம்மங்குடி, மதுரை மணி, ஆலத்தூர் சகோதரர்கள் போன்றோரின் இசையைக் கேட்கக் கூடிய வாய்ப்பு அமைந்ததால் இன்னும் பல ராகங்களும், ஏற்கெனவே தெரிந்த ராகங்களில் உள்ள நுணுக்கங்களில் சிலவும் புரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு இசை விழாவிலும் 30-க்குக் குறையாமல் கேட்கும் கச்சேரி அனுபவங்களும் என் ரசிப்புத்தன்மையை வளர்க்கின்றன. இந்த வளர்ச்சிக்கு இன்னும் அளவே இல்லைதான். எங்கள் வீட்டில் எவருக்கும் பரிச்சயமில்லாத இசை, எனக்கும் முதல் 18 வருடங்களுக்குக் பரிச்சயமில்லாத இசை 7-8 வருட "கேட்கும் அனுபவத்தால்" மட்டுமே ஓரளவு வந்திருக்கும்போது, மற்றவர்களுக்கும் வருவதற்கு தடை ஒன்றுமில்லை என்பதே என் எண்ணம்.

sorry about the long reply.
Thanks again for all the comments.

 
At 3:01 AM, Blogger Jayaprakash Sampath said...

ராம் சொல்வது முழுக்க உண்மை. கர்நாடக இசையை ரசிக்க அடிப்படை அறிவு அவசியமில்லை. அந்த அறிவு, சுப்புடுகளுக்கும் தும்புருகளுக்கும், வியெஸ்வீக்களுக்கும், கௌரிராம்நாராயண்களுக்கு இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால், நாளாவட்டத்தில், இசையை கேட்டு கேட்டு, விவர ஞானம் பெறுவது, ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் பொறுத்தது. சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாட்டோ, மலர்களில் ஆடும் இளமையோ பாட்டோ, அந்தப்புரத்தில் ஒரு மகராணி பாட்டோ, கேட்டு மயங்கிய அந்த வயதிலே, கர்நாடகசங்கீதம் என்கிற ஒரு வஸ்து இருக்கிறது என்பதே என் சிற்றறிவுக்குத் தெரியாது..ஆனால், ரசிக்க முடிந்தது. கர்நாடக சங்கீத பின்புலம் இல்லாததால், அனுபவக்குறைச்சல் ஒன்றும் ஏற்படவில்லை. ஒருக்கால், இருந்திருந்தால், அதன் மூலம் கிடைக்கும் pleasure வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஒன்றை ஒன்று குறுக்கிடாது..அது, மூன்று விரலையும், அரசூர் வம்சத்தையும் படிப்பதற்கு இடையிலான வித்தியாத்தைப் போன்றது

 
At 12:06 AM, Blogger Ram said...

I am pasting my Blog which i created a week back.

பாமர ஸங்கீதம் !!

தற்போது ஒரு பெரும் அலை அடித்துக்கொண்டிருக்கிறது. அது ஸங்கீதமாகட்டும், ஸம்ஸ்க்ருதம் ஆகட்டும், பாமரனுக்கு கட்டாயம் புரிந்தே ஆகவேண்டும். பாமரனுக்கு புரியவில்லை என்றால் அது மிக தரக்குறைவானது என்கின்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. எந்த ஒரு கலையாகட்டும், அது பாமரனை சென்றடைந்தால் தான் வெற்றி பெற்றதாகும் என்ற நிலைப்பாடு கையாளப்படுகிறது. என்னை பொறுத்தவரையில் இது ஒரு அபத்தமானதோடு ஆபத்தான சிந்தனையும் கூட என்று சொல்வேன்.

எந்த ஒரு விஷயமும் பாமரனை சென்று அடைந்தே தீரவேண்டும் என்ற கொள்கை மிகச்சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. திரைப்படங்கள், எழுத்துக்கள் வாயிலாக இதற்கு பெருமளவில் ஆதரவு பெற முயற்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இது ஓரளவு சாத்தியம் ஆகியுள்ளது என்பதும் உண்மையே. இதற்கான காரணங்களை அலசிப்பார்க்கவே இந்த முயற்சி.

உண்மையில் பாமரன் என்பவன் யார் என்பதே நாம் தொடங்குவதற்கான சரியான புள்ளி. பாமரன் என்பதற்கு நாம் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே நமது நிலைப்பாடு அமையும். பாமரன் என்பது,ஸம்ஸ்க்ருதத்தில் மூடன் என்பதற்கு சமமானது. ஆங்கிலத்தில் ignorant, stupid person,vile என்று சொல்வார்கள். இந்நிலையில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியது ஒரு கடினமான உண்மை. பாமரன் என்று குறிப்பிடப்படுபவனால் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக புரிந்துகொள்ள இயலாது, சிந்தனையும் கிடையாது என்பது தான். பாமரன் என்பது பொதுஜனத்தைக் குறிக்கும்போதும் ஸங்கீதத்தில் சற்றும் ஞானமில்லாதவர்களையோ, மிகக்குறைந்த அளவில் பரிச்சயம் உள்ளவர்களையொதான் குறிக்கும்.

அத்தகைய நிலையில் ஸங்கீதம் ஒரு பாமரனுக்கு புரிய வேண்டிய கட்டாயம் என்ன என்பது தான் இங்கு விவாதத்திற்குறியது. ஸங்கீதம் என்பது ஒரு விஞ்ஞானம். அது கணக்கும், இயற்பியலும் சேர்ந்த ஒரு கலவை. அதற்கென்று சில விதிமுறைகளும், பின்பற்றவேண்டிய தொன்றுதொட்டு வழங்கிவரும் மரபுசார்ந்த பழக்கவழக்கங்களும் உண்டு. ஆங்கிலத்தில் சொல்வதானால் Discipline & Tradition என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஸங்கீதம் ஒரு அறிவு சார்ந்த சிந்தனைக்கு ஆட்படுத்திக்கொள்ளமுடியாத ஒருவனுக்கு சென்று சேர்ந்தாகவேண்டிய கட்டாயம் இருக்கவேண்டியது தேவையில்லாதது. ஆனால், அதை அடைவதற்கு அவனுக்கு தடையாக இருப்பது அவனும் அவனது சிந்தனையுமே தவிர ஸங்கீதத்தின் குறை அன்று.

நம் அனைவராலும் இன்று அனைத்து விஞ்ஞான விவரங்களையும் கிரகிக்க முடியவில்லை என்பது உறுதி. சில விஞ்ஞானங்களை அது என்ன என்பதன் முழு விவரங்களையும் அறியாமலே நாம் நமது கேளிக்கைககுக்கும், ஆத்மத்ருப்திக்கும் பயன்படுத்துகிறோம். இசையும் கவிதை புனைதலும் அத்தகைய ஒரு விஞ்ஞானம்தான். Mobile Phone என்பதை இப்போது அனைவரும் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு. ஆனால் அதை உபயோகிக்க கற்றுக்கொண்டு தான் நாம் பயன்படுத்துகின்றோம்.அது போலே ஸங்கீதமும், கற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு ரஸிக்க முற்பட்டாலே ஒழிய அதை அறிவது கடினம்.

இப்போது பாமரன் என்பதற்கு ஒரு புதிய விளக்கமாக, குலத்தால், ஜாதியால் தாழ்ந்தவன் என்ற ஒரு பொருளை அனைவரும் ஏற்றிப்பிடிக்கின்றனர். இது ஒரு கீழ்த்தரமான புத்தியும் ஸந்தர்பவாதமும் கலந்து யோசித்ததால் ஏற்பட்ட விளக்கம். இந்த சித்தாந்தத்தின் மூலமாக ஜாதியையும், வர்ணத்தையும் நிலைப்படுத்தி அதன்மூல சுயலாபம் தேடும் சிலரது அரசியல் முயற்சியெதவிரவேறில்லை. அதற்கு கொடிபிடிக்கும் வேலையில் பத்திரிக்கைகளும் திரைப்படங்களும் முழு மூச்சுடன் செயல்பட்டுவருகின்றன. இதன் மூலம், தங்களை, தங்களால் செய்ய இயலததை செய்பவர்களைவிட, உயர்ந்தவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். சிந்துபைரவி போன்ற திரைப்படங்கள், ஒரு துருபிடித்த, பெரும்பான்மை சிந்தனாவாதியின் குழப்பக்கூச்சல் என்றே சொல்லலாம். அதற்கு பாட்டெழுதியவர்களோ "சேரிக்கும் சேரவேணும் அதுக்கும் பாட்டு படி" என்று, ஒரு ஸங்கீத வித்வானிடம் கூறுவது நகைப்புக்குறியது. ஸங்கீத வித்வானின் வேலை அதுவல்ல. அவனுடைய தளமும் அதுவல்ல, அவன் சென்றடையும் மக்களும் அங்கல்ல. இது ஒரு ஸங்கீதத்தை ரஸிக்கத்தெரியாத ஒரு "பாமரனின்" அங்கலாய்ப்பு அல்லது பிதற்றல். திரைப்படங்கள் சங்கீதத்தை கேவலப்படுத்தியது போல எந்த ஒரு அமைப்பும் செய்யவில்லை எனலாம். ஒரு சமூகத்தில், மிகச்சிலரால் புழங்கப்பட்டுவரும் ஒரு கலையை, தனக்கு அது புரியவில்லை என்ற காரணத்திற்காக, அதை கீழ்த்தறம் என்று சொல்வதிலொ, குதறி கொன்றுவிட நினைப்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதை அவ்விதம் செய்யவும் இயலாது என்பதும் நினைவிருத்தத்தக்கது.

ஸங்கீதம் என்பது ஒரு நாகரிகப்படுத்தப்பட்ட பண்டைய இசை என்பதை மறுக்க இயலாது. ஸங்கீதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான இசையும் அல்ல. அது அனைவருக்கும் பொதுவானது.( உதாரணம்: யேசுதாஸ்,முத்தையாப்பிள்ளை, ஆப்ரஹாம் பண்டிதர், ஆத்மனாப தேவர், ராமானுஜ ஐயங்கார், ஸ்ரீனிவாஸ ஐயர், ஜான் ஹிக்கின்ஸ் மற்றும் பலர்). அதை அடையமுற்படுபவன் முயற்சித்து, உழைத்து, சிந்தித்து அறிய முற்பட்டால் எளிதில் அடைய தடையேதும் இல்லை. முயற்சிக்காமலே அதை தூற்றுவது, என்னால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை எனவே எனக்கு புரியும் ஒரு ஸங்கீதத்தை நீ பாட வேண்டும் என்பது, அல்லது ஸங்கீதத்தை முற்றிலும் தவறு என்று கூறுவதும், அவரது நாகரிகமற்ற நிலையையும், அறிவு சார்ந்த சிந்தனைக்கு ஆட்படுத்திக்கொள்ளமுடியாத நிலையையும் பறைசாற்றுவதாகவே இருக்க முடியும். அதுமட்டுமன்றி, இவர்களுக்கான ஸங்கீதத்தை தர பலர் இருக்கின்ற நிலையில், மற்றவர்களைக் கட்டயப்படுத்துவது, பசுவை புலால் உண்ன துன்புறுத்துவது போலாகும்.

எனவே, ஸங்கீதம் பாமரரை சென்றடையவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. ஸங்கீதத்தை அறிய முடிந்தவன் ஸங்கீதத்தை பொறுத்தவரை பாமரனும் இல்லை. வேண்டுவது எல்லாம், சிறிது முயற்சியும், சிறிது சிந்தனையும் மட்டுமே.

http://mpram.blogspot.com/

 
At 1:58 AM, Anonymous Anonymous said...

ராம், அழகான பதில். முன்பெல்லாம் குழந்தைத்தனமாக எல்லாவற்றிற்கும் வாதம் செய்துகொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம்

இணையத்தில் எது நடந்தாலும் எதுவுமே சொல்லாமல் இருக்கமுடிவதே 'ஆன்ம பலம்' என்ற பேருண்மை புரிந்துவிட்டது. :)

ஆனால் உங்களைப் போன்றவர்களிடமிருந்து இதுபோன்ற அழகான பதில்கள் வருமென்றால் நானும் கொஞ்சம் ஒளறி

மெனக்கெடலாம் என்றுதான் தோன்றுகிறது.
===

நானும் கச்சேரிகளில் புதுமை என்பதை பாடகர்கள் கற்பனா திறமைகளைப் பற்றிக் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. முக்கியமாக

உங்கள் பதிவில் சொல்ல விட்டுப்போனது, இந்த இழை இங்கே ஆரம்பித்தது இல்லை. தமிழிசை குறித்து இங்கே-

http://thoughtsintamil.blogspot.com/2005/12/blog-post_13.html ஆரம்பித்து உங்கள் பதிவில் பயணித்து இங்கே-

http://simulationpadaippugal.blogspot.com/2005/12/blog-post_113552063427215266.html நின்றுபோனது.

ஒருவேளை அந்தப் பதிவுகளும் படித்தால் நான் எதிர்பார்த்தது எதுவென்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.

///
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உன்னிகிருஷ்ணன் அதனது founder member பள்ளிகளுக்குச் சென்று கர்நாடக இசை கணக்குப்

பாடத்தைவிட சுலபமானது என்று கூறி நிகழ்ச்சிகள் நடத்தி..,
///

ஒத்துக்கொள்கிறேன். நானே பலசமயங்களில் ஏன் ம்யூசிக் எடுக்காமல் கணிதம் எடுத்துத் தொலைத்தோம் என்று

வருந்தியிருக்கிறேன். [உண்மையில் எங்கள் கல்லூரியில் ம்யூசிக் க்ரூப்பிற்கு இருந்த அடக்குமுறைதான் என்னை அலறியடித்து

ஓட வைத்தது. நாங்கள்- மற்ற எல்லாப் பிரிவில் படிக்கும் மாணவிகளும்- சுகமான கல்லூரி வாழ்க்கை

வாழ்ந்துகொண்டிருக்கும்போது இந்த ம்யூசிக் க்ரூப்பில் இருக்கும் பத்துபேர் மட்டும் எவரோடும் ஒட்டாமல் பெரிய யோகிகள்

மாதிரி அந்த வகுப்புக்குள்ளேயே ஒடுங்கிப் போயிருப்பார்கள். நானாக இருந்திருந்தால் 4 நாளில் மூச்சுத் திணறி செத்திருப்பேன்.

அந்தச் சூழ்நிலையில்கூட என் நாத்தனார் மொத்தமாக 5 வருடம் M.A Music வரை முடித்து கோல்டுமெடலோடு வெளியே

வந்தபோது, 'இனிமே எந்த மாதிரி மாமியார் வீடு வந்தாலும் நல்லபேர் வாங்கிடுவே' என்று சதாய்த்துக்கொண்டே இருப்பேன். :))

ஆனாலும் நானே விரும்பி இந்த மாணவிகளிடம் என் வீணை வாசிப்பை கொஞ்சம் பட்டைதீட்ட முயற்சிசெய்திருக்கிறேன்.

ஜெயந்தியின் வீணையில் சாஹித்யத்தைக் கேட்கமுடிந்தது என்று நீங்கள் எழுதியதைப் படித்தபோது அதுதான் நினைவுக்கு

வந்தது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எவ்வரி.. வர்ணத்தை (ஆபோகியில் க-வின் கமகத்தை ரி-யிலேயே அசைக்கவேண்டும்.

அடுத்த மீட்டை ஸ-வில்தான் போடமுடியும். எவ்வளவு கஷ்டப்பட்டு கைவலிக்க வாசித்தாலும் 'ம்ஹூம், எனக்கு சாஹித்யமெ

கேக்கலை' என்று உதட்டைப் பிதுக்கும் திருப்தியில்லாத கூட்டம். :) 'போங்கடீ, அதெல்லாம் பாட்டரி போட்ட வீணையில்தான்

வரும்' என்று அழுகுணி ஆட்டம் ஆடி, அப்புறம் வழிக்கு வந்திருக்கிறேன். ஆனால் உங்களைப்போல் நுணுக்கமாக ரசிக்கும்

ரசிகர்கள் இருந்தால் அதற்காகக் கலைஞர்கள் (நான் இல்லை.) எவ்வளவு வேண்டுமானாலும் சாதகம் செய்யலாம். உங்கள்

விமர்சனம் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.]

ஆனால் கணிதம் கடினம் என்பது பொய். எப்பொழுது கணிதம் வெறுப்படிக்கிறது. எதற்காகப் படிக்கிறோம், எங்கே

உபயோகப்படுத்தப் போகிறோம் என்ற, அர்த்தமும் காரணமும் புரியாதபோது. எதற்காக என்ன செய்கிறோம் என்று புரியாமல்

கணிதம் படிக்கும்போது, லாஜிக் கிடைக்காமல் மனப்பாடம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்போது, அதன் application

எங்கே எதற்கு என்று புரியாமலே படிக்கநேரும்போது... மதியம் தயிர்சாதமும் மாவடும் சாப்பிட்டுவிட்டு வந்து உட்கார்ந்ததும்,

Real Analysis என்ற பெயரிலே "Countable union of countable sets is countable.. We'll prove it now.." என்று

பெருசு ஆரம்பிக்கும்போது சுற்றி எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தால் மிஸ் நாற்காலிக்கு அடியில் வெடி கொளுத்திப்போடலாமா

என்று யோசித்திருக்கிறேன். காரணம், இதன் பொருளோ (இது எந்த எழவுக்கு வாழ்க்கையில் தேவை என்ற)பயனோ, ஏன்

எல்லாவற்றையும் assume செய்துகொள்ள வேண்டும் என்ற எரிச்சலோ அப்போது ஏற்படுவதுமட்டும்தான். நீங்கள் சி.டியில்

பாடல்களுக்கான ராகத்தை மனப்பாடம் செய்யுங்கள் என்று சொல்வதும் அப்படித்தான் இருக்கிறது. முதலில் நான் பாடலையே

வலிந்து எனக்கு மனப்பாடம் செய்யவேண்டியிருக்கிறதே ராம்.

**இசை கணிதம் இரண்டுமே ஒன்றுதான். ஆனால் எந்த இடத்தில் இசை கணிதத்திலிருந்து வேறுபடுகின்றது என்றால்

முன்னது சில கணக்குகளோடு மிக முக்கியமான 'உணர்வை'யும் தன்னகத்தே கொண்டது. இது கணக்குக்குக் கிடையாது.

5+3=8. அவ்வளவுதான். அதை அழுத்தந்திருத்தமாக உட்கார்ந்து செய்கிறேன். இசையில் அதோடு உணர்வு சேரும்போது

அல்லது இசைக் கணக்கையே பாடலின் உணர்வு மிஞ்சும்போது இன்னொரு உலகத்துக்குப் போகிறேன். ஆனால் அந்த உணர்வு

புரியாத மொழியில் இருக்கும்போது எப்படிப் பிடிபடும்? பாடகன் எடுத்துவைக்கும் 'பாவம்' எப்படிப் போய்ச்சேரும்? அது

கிடைக்காதபோது பாமரனுக்கு இசையும் வெறும் புரியாத கடினமான கணக்குமட்டும்தானே.**
========

At 12:06 AM, Indrajith said...

[இந்திரஜித் அவர்களின் கருத்துக்கு- முக்கியமாக பாமரன், வர்க்கப் பிரச்னைகளுக்கு பதில் சொல்வதைத் தவிர்க்கிறேன்.

ஆனால்,
///ஸங்கீதம் என்பது ஒரு விஞ்ஞானம். அது கணக்கும், இயற்பியலும் சேர்ந்த ஒரு கலவை...///
என்பதற்கு மட்டும்; அது விஞ்ஞானமும் கணிதமும் தாண்டியும் சில விஷயங்களை உள்ளடக்கியது. நான் மேலே

கூறியிருக்கும் பத்தியே அதற்கான பதில்.

///
நம் அனைவராலும் இன்று அனைத்து விஞ்ஞான விவரங்களையும் கிரகிக்க முடியவில்லை என்பது உறுதி. சில

விஞ்ஞானங்களை அது என்ன என்பதன் முழு விவரங்களையும் அறியாமலே நாம் நமது கேளிக்கைககுக்கும், ஆத்மத்ருப்திக்கும்

பயன்படுத்துகிறோம். இசையும் கவிதை புனைதலும் அத்தகைய ஒரு விஞ்ஞானம்தான். Mobile Phone என்பதை இப்போது

அனைவரும் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு. ஆனால் அதை உபயோகிக்க கற்றுக்கொண்டு

தான் நாம் பயன்படுத்துகின்றோம்.அது போலே ஸங்கீதமும், கற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு ரஸிக்க முற்பட்டாலே ஒழிய

அதை அறிவது கடினம்.
///

வாருங்கள் இந்திரஜித், இதையேதான் நானும் சொல்கிறேன். செல்ஃபோனின் தொழில்நுட்பம் புரிந்துவிட்டுப் போகிறது அல்லது

புரியாமலே இருந்துவிட்டுப்போகிறது. செல்ஃபோன் எப்படியோ போய்சேர்ந்துவிட்டதல்லவா எல்லார் கைக்கும். அதைத்தான் -

அந்த விஞ்ஞானத்தின் application வேலையைத்தான் ஆரம்பியுங்கள் என்று சொல்கிறேன். முதலில் செல்ஃபோன்

படைக்கப்பட்ட பயனை எல்லோரும் அடையட்டும். மேலே ஆர்வம் இருக்கிறவர்கள், திறந்துபார்த்து தொழில்நுட்பமும்

அறியட்டும். இன்னும் முயல்கிறவர்கள் அதற்கும் மேலேகூட கண்டுபிடிக்கட்டும். தவறா? :)
==============


ராம், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சிந்துபைரவி படத்திலிருந்தே நானும் சொல்கிறேன்-- "ஏரிக்கரையின் மேலே போறவளே.. இது

ஆரபி; சின்னஞ்சிறுக் கிளியே பாட்டுக்கு 'மணமகள்' படத்துல C.R.சுப்புராமன் போட்ட ராகம் காபி; ஒரிஜினலா பாரதியார்

போட்டது பைரவி.."

இதுபோன்ற வசனங்களும் நினைவிருக்கிறதா? டிரைவர் ஆரபியைப் பாடிக்காட்டும்போதே பாமரன்கூட சொல்லிவிடுவான், அது

ஏரிகரையின் மேலே பாடலின் சாயல் என்று. (லேசாக தேவகாந்தாரிக்குப் போகிறவர்களை இப்போதைக்கு விட்டுவிடலாம்.)

இப்படி முதலில் எனக்கு ரீச்சாகும் பாடல்களைப் பாடுங்கள் என்றுதான் சொல்கிறேன். (ஏரிக்கரையின் மேலே பாடலை

கச்சேரியில் பாடவேண்டுமா என்ற கேள்வியை நீங்களும் கேட்டுவிடாதீர்கள். நான் குறிப்பிட்டது அறிந்தமொழி என்பதைத்தான்.)

முதலில் தோடிக்குச் சாத்தியமான தமிழ்ப் பாடல்களை அறிமுகப்படுத்துங்கள். ராகம் பற்றி பாமரனுக்குக் கவலை இல்லை.

பாடல்களும் அதன் இசையும் ரீச்சாகிவிட்டால் பிறகு தோடியை அரை மணி இல்லை, ஒரு மணிநேரம் பாடினாலும் ஆலாபனை

இழுத்த இழுப்புக்குப் பின்னால் போகமாட்டானா? ராக லய சமாசாரங்கள் தேவை இல்லை என்று நினைப்பவர்கள் கூட

பாடலையும் அதன் உணர்வையும் அனுபவிக்கவாவது கச்சேரிக்கு வர மாட்டார்களா? திரைப்பாடல்கள் மட்டும் அதிக அளவில்

பரவுவதும், அதில்வரும் கர்நாடக இசைப்பாடல்களுக்கான ரீச் மட்டும் அதிகமிருப்பதன் காரணமும் அதுதானே? அப்படி

இல்லாமல் எங்கிருந்தோ புரியாத மொழிப் பாடல்களிலிருந்துதான் ராகங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற

கணிதத்திலிருக்கும் அதே 'மனப்பாட சிலபஸ்' ஓட்டையை இசைக் கலைக்கும் ஏற்றுவதுதான் பாமரனை விலக்கிவைக்கிறது.

இந்த அழகில் 'இசை பாமரனைச் சேருமா?' என்ற கேள்வியும் அதற்கான பீடப் பதில்களும்...

அருணா சாய்ராமைக் கேட்டுவிட்டு ஒரு நண்பருக்கு எழுதியதை இங்கே தருகிறேன்: "மாலைதான் காது குளிரக் குளிர அருணா

சாய்ராமைக் கேட்டுவிட்ட நிறைவோடு இந்தக் கடிதத்தைத் தட்டுகிறேன். தமிழில் அவர் பாடியதில் சபாபதியும் முருகனும்

இறங்கிவந்துவிடுவார்களோ என்ற உணர்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டுபோய் நிறுத்திவிட்டு இறங்கிவந்தார். முடிந்தவிநாடி

டின்னர் தயாரிக்க வேண்டுமே என்று உலகமே வெறுப்பாக இருந்தது...."

ராம், சஞ்சயைக் கேட்டுவிட்டு சும்மா கிறுக்குப் பிடித்தாற்போல் இருந்தேன். உலகம் இல்லை, உட்கார்ந்திருந்த நாற்காலிகூட

நழுவிவிட்ட மாதிரி அந்தரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தேன். ஆனால் அருமையாகப் பதுமைபோல் உட்கார்ந்து இனிமையாக

நாதோபாசனை என்ற theme-ல் சௌமியா பாடியபோதும் கூட என்னால் வெளியிலிருந்துதான் ரசிக்கமுடிந்தது. No doubt,

her program was highly informative. அவரைக் குறை சொல்லவும் முடியாது; எடுத்துக்கொண்ட theme-ஐ

தியாகப்பிரும்மத்தின் வழியாகச் சொல்வதே தனக்கு வசதி என்பதையும் அவரே மிக அழகாகச் சொல்லிவிட்டார். அதனால்

நிகழ்ச்சியில் குறை இல்லை. ஆனால் என் லயிப்பில் மற்றவற்றோடு ஒப்பிடும்போது நிச்சயம் குறை இருந்தது. காரணம்?


///ராகங்கள் புரிபடுவது வேறு இசையை ரசிப்பது வேறு என்பதே என் எண்ணம். "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே" பாடலை

அது ஆபோகி ராகத்திலமைந்தது என்று தெரிந்தவரும் ரசிக்க முடியும், தெரியாதவரும் ரசிக்க முடியும் என்றால், மற்ற

பாடல்களுக்கும் அது பொருந்தும்தானே?///

ஆனால் இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே... பாடல் ஆபோகி என்று தெரியாவிட்டாலும் ரசித்தது அது கர்நாடக இசையில்

இருந்தது என்பதோடு தெரிந்தமொழியிலும் இருந்ததால்தான் என்பதை ஏன் எல்லாரும் வசதியாக மறந்துவிடுகிறார்கள்?

இன்றைக்கு ஏனிந்த.. பாட்டை வீணையில் வாசித்தால் ஏதோ மேஜிக் பார்ப்பதுபோலாவது பார்க்கும் என் நண்பர்கள், நான்

எவ்வரி வர்ணத்தை இழைத்து இழைத்து வாசித்தாலும் இப்போதைக்கு, "எடுத்துவைத்துவிட்டு வா; கேவலமாக இருந்தாலும்

விஜய்காந்த் படமே பார்க்கலாம்" என்றுதான் என்னை இழுத்துக்கொண்டு போவார்கள்.


///சின�

 
At 3:09 AM, Blogger க்ருபா said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:30 PM, Blogger லலிதாராம் said...

ஜெயஸ்ரீ,

முதலில் உங்கள் கேள்வியைத் தப்பாகப் புரிந்து கொண்டு, அதற்கு மாங்கு மாங்கு என்று சங்கதி என்றால் என்ன, ஸ்வரப்ரஸ்தாரம் என்றால் என்ன என்றெல்லாம் விளக்கவுரை எழுதியதற்கு மன்னிக்கவும். நீங்கள் கேட்டதற்கும் நான் கூறியதற்கும் சம்பந்தமேயில்லை என்பது எனது பதிலுக்கு வந்த பதிலில் இருந்து தெளிவாகப் புரிகிறது.

"வர்ணத்தை மூன்றாவது ஐட்டமாக வைப்பதுதான் அதிகபட்ச புதுமையா?" என்று நீங்கள் கேட்ட ஞாபகம். அதனால்தான் பாடகரின் கற்பனைகளில் விளையும் புதுமைகளைப் பற்றி எழுதியிருந்தேன். அதையும் மீறிய புதுமைகள் என்றால் இந்த சீஸனில் கணேஷ்-குமரேஷ் வயலின் ஜோடி a pure instrumental composition என்று தர்மவதி ராகத்தில் ஒரு பீஸ் வாசித்தார்கள். வழக்கமான கீர்த்தனைகள் போல் அல்லாது, தர்மவதி ராகத்தின் பல இடங்களுக்கு இட்டுச் செல்லும் piece-ஆக அந்த உருப்படி இருந்தது. கீர்த்தனைகளில் இரண்டு வயலின்களும் ஒரே ஸ்வரங்களை ஒரே ஸ்தாயியிலோ அல்லது வெவ்வேறு ஸ்தாயியிலோ வாசிப்பது போலல்லாமல், மேற்கத்திய இசைகளில் வரும் harmony, counter point போன்ற சமாசாரங்களைப் புகுத்தி வாசித்தார்கள். மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் tempo இருப்பினும், நமது இசையில் இருப்பது போல ஆதி,மிஸ்ர சாபு போன்ற beat cycle-க்கு உட்படாது என்றே நினைக்கிறேன். இவர்களது composition கண்ட சாபு தாளத்தில் அமைந்திருந்தது. சரி சரி, வார்த்தைகளே இல்லாத instrumental piece-ஐப் பற்றி ஏன் நீட்டி முழக்க வேண்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

"கணிதம் கடினம் என்பது பொய்", என்பது உங்கள் வாக்கு. நான் எனது முந்தைய பதிலில் கணிதம் கடினம் என்றா கூறினேன்? கணிதத்தைவிட கர்நாடக இசை சுலபம் என்றுதான் கூறினேன். கணிதம் சுலபமாகும் பட்சத்தில் கர்நாடக இசை அதை விட சுலபம். அஷ்டே!! ராகத்தை மனப்பாடம் செய்யுங்கள் என்று நான் சொன்னது பன்னிரண்டாங் கிளாசில் இண்டெக்ரல் கால்குலஸ் புரியாமல் கணக்கை மனப்பாடம் செய்து பரிட்சையில் வாந்தி எடுக்கும் மாணவனை மனதில் கொண்டுச் சொல்லவில்லை. எல்.கே.ஜி அட்மிஷனுக்கு முன்னால் குழந்தையிடம் மேலிருந்து கீழாக ஒரு கோடு போட்டால் அது ஒன்று என்ற இலக்கத்தைக் குறிக்கிறது என்று கூறுகிறோமே அதை மனதில் கொண்டு சொன்னேன். "நான் தேடும் செவ்வந்திப் பூவிது" பாடலுக்கு ராகம் தெரிய வேண்டுமானால் பெஞ்சு மார்க்காக வேறு அதே ராகத்தில் அமைந்த பாடலை மனத்கில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு ஹிந்தோள ராகப் பாடல் மனதில் இருக்கும் virtual database-இல் இருப்பின் இந்த பாடலைக் கேட்கும் போது, அதற்கும் இதற்கும் ஒரு ஒற்றுமை புலப்பட்டு மனதில் பளீர் என்று ஒரு பல்பு எரியும். இது என் சொந்த அனுபவம். செல்·போன் எப்படி வேலை செய்கிறது என்ற தெரியாத போதும் செல்போனை உபயோகிக்க ஆரம்பித்து படிப்படியாய் செல்போனை புரிந்த கொள்வதைப் போல முதலில் நமக்கு தெரிந்த, நாம் விரும்பிக் கேட்கக் கூடிய பாடல்கள் இன்னென்ன ராகத்தில் அமைந்தது என்று தெரிந்து கொண்டால், அந்தப் பாடலின் சாயல் இன்னொரு பாடலில் தெரியும் போது pattern matching செய்ய முடியும். செல்போனை முதலில் உபயோகிக்கும் முதல் முயற்சியே மனதில் virtual database-ஐ உருவாக்கிக் கொள்வது, என்பது என் அனுபவம். எனக்கு work out ஆனதை sharing the best practise-ஆகச் சொன்னேன். அது உங்களுக்கு work out ஆனால் மிக்க மகிழ்ச்சி, ஒவ்வாத போது என்ன செய்ய? நான் இப்படி செய்தேன் என்று அதனால் ராகம் புரிபட்டது என்று கூறி அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். "நீங்கள் இப்படிச் செய்யுங்கள். அப்படிச் செய்யுங்கள், செய்தால் பலன் உண்டா என்று கேட்டால், living example-ஆக நானே இருக்கிறேன்", என்று எனது பதிலுக்கு ஒரு கிளைமாக்ஸ் build-up செய்ய நினைத்ததில்தான் தவறு நிகழ்ந்துவிட்டது. பாருங்கள் மறுபடியும் digression....

"புரியாத மொழியில் இருக்கும் போது எப்படிப் பிடிபடும்? பாடகன் எடுத்து வைக்கும் 'பாவம்' எப்படிப் போய்ச் சேரும்? அது கிடைக்காத போது இசையும் வெறும் புரியாத கடினமான கணக்குமட்டும்தானே"

இதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கிறது. மேலிருக்கும் உங்களுடைய வரி கேள்வியாக முடிந்தாலும், அதை உங்கள் கருத்தாகவே நான் காண்கிறேன். அவ்வரியைக் கொஞ்சம் அலசுவோம்.

முதல் கேள்வி... "இசைக்கு மொழி அவசியமா?". இதற்கு என் உண்மையான பதில், "முதலில் எனக்கு நிச்சயம் தேவைப்பட்டது". இப்போது தேவைப்படவில்லையா? என்றால், "வார்த்தைகள் புரிந்தால். வார்த்தைகளில் வரும் பாவம் பாடகரின் பாடலிலும் வழிந்தால் additional bonus, மற்றபடி ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம், ராக சௌந்தரியம்..இதில் மட்டுமே கூட என்னால் திளைக்க முடிகிறது.".

"அப்படித்தான் எல்லோரும் ரசிக்க வேண்டுமா?", என்றால், "நிச்சயம் இல்லை". முன்பே நான் கூறியதைப் போல, என்னை முதன் முதலில் சங்கீதத்தின் பால் இழுத்தது பாரதியார் பாடல்கள்தான். பித்துக்குளி முருகதாஸ் "விட்டு விடுதலையாகி நிற்பாய்" என்று பாடியது பிலஹரி ராகத்தில் என்று விளங்காத போதும், சிட்டுக்குருவி வெட்ட வெளியில் சுதந்திரமாய் பறக்கும் உணர்வை என்னாலும் உணர முடிந்தது. அதையடுத்து பாரதியார் பாடல்கள் ஒலிநாடாக்களாக வாங்க ஆரம்பித்த போது, சௌம்யாவின் பாடல்கள் பிடித்த போதும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாரதியார் collection அலுப்பையே தந்தது. என்னுடைய first brush with music was through தமிழ் என்ற போதும் எல்லோருடைய பாடல்களும் குரல்களும் என்னை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கவில்லை. அப்படி கேட்க வைத்த சிலரில் ஒருவரான யேசுதாஸின் பாடல்களைத் தேடிச் சென்ற போது அவருடைய ஒலிநாடாக்களை வாங்க ஆரம்பித்தேன். அவற்றுள் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாகத்தான் தமிழ் பாடல்கள் இருந்தன. அப்படியிருந்த போதும் அவர் பாடிய விறுவிறுப்பான விதம் அவர் "ஏதாவுனரா" என்று தெலுங்கில் பாடிய போதும், அதில் எனக்கு ஒரு அக்ஷரம் கூடப் புரியாத போதும், 2005-இல் கிருபாவுக்கு பந்துவராளியில் யேசுதாஸ் ஸ்வரம் பாடியது (தெலுங்கு பாடலில்) பிடித்தது போல எனக்கும் பிடித்துதான் இருந்தது.

மேலிருக்கும் உளரலிலிருந்து நான் கூற வருவது இதைத்தான். தமிழ் பாடல்களை நல்ல இசை வடிவில் கேட்கும் பொழுது என்னால் பாடலின் உணர்வையும் இசையின் மயக்கத்தையும் ஒன்று சேர அனுபவிக்க முடிந்தது. தெலிங்கு பாடல்களை முதன் முதலில் கேட்ட போது ஒன்று புரியாத போதும், அதில் பொதிந்திருந்த இசையின் காரணமாக நான் ரசிக்கும் படியாகத்தான் இருந்தது. இந்த ரசனை முந்தைய ரசனையைவிட ஒரு மாற்று குறைவுதான். என்றாலும், 'உங்களுக்குத் தோன்றுவது போல கடினமான கணக்காக' எனக்குத் தோன்றவில்லை.

"என்னையா ரெண்டு பக்கமும் பேசற?", என்று நீங்கள் கேட்கலாம். எனக்குமே அப்படித்தான் தோன்றுகிறது, ஆனால், அதுதான் உண்மை. இல்லையேல் என்னை ஸ்ரீநிவாசின் மாண்டலின் எப்படி பைத்தியம் பிடிக்க வைத்திருக்கும். பிரகாஷ், "அந்தப்புறத்தில் ஒரு மகராணி" பாடலைக் குறிப்பிட்டார். அவருடன் அந்தப் பாடலை பலமுறை பல மணி நேரம் பேசி இருக்கிறேன் என்ற உரிமையில் கூறுகிறேன், அந்தப் பாடலில் எங்களைச் சொக்க வைத்தது பாடல் வரிகளைவிட அதில் வரும் interlude இசைதான். எங்கள் வாயையே கீபோர்டாகவும், கிடாராகவும், கோரஸாகவும் மாற்றி நாங்கள் பரிமாறிக் கொண்ட prelude-களும் interlude-களும் background score-களும் ஏராளம். இவ்வளவு ஏன்? மலையாளப் படமான 'குரு'-வை ரசிக்காத இளையராஜா ரசிகரைக் காண முடியுமா? ஏ.ஆர்.ரஹ்மானின் ஏர்டெல் விளம்பரத்துக்கான ட்யூந்தான் most downloaded ringtone-ஆம். "தும் பின் ஜாவூன் கஹான் கே துனியா மேன் ஆகே" என்ற ர·பி பாடலை ஆசாத் போன்றவர்கள் வார்த்தைகளுடன் புரிந்து அனுபவித்து இருக்கலாம். 'கேந்த்', 'பல்லேபாஸி', 'திஷா', 'சார் ரன்', 'சக்கா' போன்ற வார்த்தைகளைத் தவிர ஹிந்தியின் ஒன்றுமே புரியாத வயதிலும் அந்த பாடல் என்னை சொக்க வைத்தது. அவ்வளவு ஏன்? ஒரு வருடம் முன்பு ராயர் காப்பி கிளப்பில், சலங்கை ஒலி படத்தில் "ஏலா நீ தய ராது" பாடல் வருமே, அதைப் பற்றி எழுதச் சொல்லி எத்தனை குரல்கள் என்னை நோக்கி வந்தன? அந்த பாடல் தமிழ் பாடல் இல்லையே? சந்திரமுகியில் வரும் 'ரா ரா' பாடல் கூட ஹிட்தானே? இதையெல்லாம் ரசித்தவர்கள் மைனாரிட்டி என்று ஒதிக்கிவிட முடியாது. அவர்கள் கணிசமானவர்கள்.

அப்படியானால் வார்த்தைகள் தேவையில்லையா? எவன் சொன்னது தேவையில்லையென்று? வார்த்தைகள் அவசியம் தேவை. அந்த வார்த்தைகள் புரிந்தும்விட்டால் அது அதி அற்புதமான அனுபவம்தான். சென்ற வருடம் இசை விழாவில் விஜய் சிவா பிரதோஷ வேளையில் "தூக்கிய திருவடி" என்ற பாடலைப் பாடிய போது நிச்சயம் நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது. பைரவியில் "யாரோ இவர் யாரோ" என்ற ஒருபாடல் போதாதா. (இந்தப் பாடலை பல நாட்களுக்கு இராமனைக் கண்டு சீதை பாடுவது என்றே நினைத்திருந்தேன். சில நாட்கள் முன்பு அருணாசல கவியின் புத்தகத்தை தூசி தட்டிய போதுதான் அது சீதையைக் கண்டு ராமன் பாடுவது என்பது தெரிந்தது. இந்த குழப்பத்துக்குக் காரணம் முதல் இரண்டு சரணத்தை விட்டுவிடு மூன்றாவது சரணாமான "சந்திர பிம்ப முக மலராலே" என்பதைப் பாடுவதனால்தான். இவர்கள் பாடும் இடத்தில் எல்லாம் "இவர்", "பார்க்கிறார்" என்றே வருவதால் by default அம்மையார்தான் அய்யாவை மருவாதையா விளிக்கறாங்கனு நினைச்சுகிடறோம்...சரி சரி no more digression). "காலினில் சிலம்பு கொஞ்ச" என்ற இடத்தில் மதுரை மணியின் நிரவல் கண் முன் கண்ணனின் களி ஆட்டத்தை கொண்டு வந்திருக்கிறது (தோடிக்கு சாத்தியமான தமிழ்ப் பாடல்களை அறிமுகப்படுத்துங்கள் என்றுதானே சொன்னீர்கள். எத்தனையோ இருக்கிறதே! "காலினில் சிலம்பு" வரும் "தாயே யசோதா", "கார்த்திகேய காங்கேய", "கலி தீர வந்தருள்வாய் சுகுமாரா", "தாமதமேன் ஸ்வாமி", "தணிகை வளர் சரவணபவா" எல்லாம் தோடிதானே. இதையெல்லாம் யாரும் பாடவில்லையெனில் நான் கேட்டிருப்பது எங்கணம். ஒப்புக்கு துக்கடாவாகப் பாடாமல், பிரதானமாகப் பாடப்பட்ட தோடிகள்தான் இவை. யாரோ தேங்காய் மூடி பாகவதர் பாடிய பாடல்கள் அல்ல இவை, கும்பல் கும்பலாய் மக்கள் சென்று கேட்ட/கேட்கும் அரியக்குடி, ஜி.என்.பி, எம்.எஸ், சஞ்சய் சுப்ரமணியம், டி.என்.சேஷகோபாலன் பாடிய பாடல்கள்தான் இவை. இவையெல்லாம் கேட்பது என்பது அத்தனை அரிய காரியமல்ல. அப்படியிருக்கையில், உண்மையில் தோடியை ஒரு மணி நேரம் ரசிக்க விழைபவர் சற்று முனைந்தால் இந்த பாடல்களைக் கேட்கலாமே. தோடியை ரசிக்க வேண்டுமென்ற உந்துதல் இருப்பின் இந்த கீர்த்தனைகளை ம்யூசிக் வோர்ல்டிலோ சங்கரா ஹாலிலோ பிடித்துவிடலாமே. அதன் பின் நீங்கள் சொன்னது போல தோடியின் இழுத்த இழுப்புக்கெல்லாம் பின்னால் செல்லும் ரசிகனாகவது ஒன்றும் பிரம்ம பிரயத்தனம் அல்லவே. முயற்சி இரு சாரரரிடமிருந்தும் இருக்க வேண்டுமல்லவா? சேஷகோபாலம் கிருஷ்ண கான சபையில் 'கன்னு கொண்டினி' என்று கன்னுக்குட்டியைப் பாடுகிறாரா, ராமபிரானைப் பாடுகிறாரா என்று புரியாமலும் இசையை ரசிக்கும் அதே கூட்டமே பார்த்தசாரதி சபாவில் திவ்ய பிரபந்தகளை மட்டும் கொண்டு அவர் கொடுத்த கச்சேரிகளுக்கு வருவது ஏண்? நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் இரண்டாவது கச்சேரிக்கு கூட்டம் அலை மோதியிருக்க வேண்டும்தானே? 80-களிலும் 90-களிலும் எத்தனை கம்ப இராமாயணக் கச்சேரிகளை அவர் கொடுத்து இருக்கிறார். கம்ப ராமாயணத்தில் "இரணிய வதம்" பற்றி வரும் இடத்தில் கர்ண ரஞ்சனி ராகத்தில் "நாராயணா" என்று ஒரு பாடல் மெட்டமைத்துப் பாடியிருக்கிறார் பாருங்கள்...த்சொ த்சொ...கல்லையும் கரைத்துவிடும். அந்த ஒலிநாடா இன்று நினைத்தாலும் வாங்க முடியாது. commercial hit ஆனால் மறுமுறை வெளியிட்டு இருப்பார்கள்தானே? அரிய ஊத்துக்காடு கீர்த்தனைகளை வெளிக் கொணர்வதில் ரவி கிரண் முனைந்து ஈடுப்பட்டுதான் இருக்கிறார். அந்தப் பக்கத்திலிருந்து முயற்சிகள் பூஜ்யம் என்று நிச்சயம் சொல்வதற்கில்லை. அப்படிப்பட்ட முயற்சிகளை ஊக்குவிக்க நாம் என்ன செய்தோம்?)

அடுத்த கேள்வி. தமிழ் பாடல்கள் இருக்க தெலுங்குக்குச் செல்ல வேண்டியதன் அவசியம் என்ன? அப்படியானால் பாலமுரளிகிருஷ்ணாவின் தில்லானாவை அஜய் சக்ரபர்த்தி பாட வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு பாடலை ரசிப்பதை வார்த்தைகள் மேம்படுத்துமே தவிர, வார்த்தைகள் மட்டுமே அந்த ரசிகானுபவத்தைத் தர இயலாது. "லாலாக்கு டோல்டப்பி" பாட்டும் "முக்காலா முக்காபுலா" பாட்டும் "மாத்தி யோசி that's what we say" பாடலும் ஹிட் ஆனது வார்த்தைகளை மிஞ்சிய ஏதோ ஒன்றினால். "அத்தான், என்னத்தான்" பாடலில் அத்தானுக்கும் என்னத்தானுக்கும் இடையில் உள்ள கமாவை ஒரு 'pause' மூலம் எம்.எஸ்.வி வெளிப்படுத்தியிருக்காவிட்டால் நமது ரசிக அனுபவம் இப்போது இருப்பது போல இருக்காது. தமிழில் இருந்தால் ஒழிய கேட்க மாட்டேன் என்று கூறும் இனமல்ல நமது இனம். நல்ல இசை எங்கு இருப்பினும் அதற்கு நமது ஊரில் வரவேற்பு உண்டு. அதற்கு அம்ஜத் அலி கான் இசைக்குஙிந்த வருடம் கூடிய கூட்டமும், வார்த்தைகளே இல்லாத "how to name it" இன்னும் விற்பனையில் சக்கை போடு போடுவதுமே சாட்சி. இளையராஜாவின் வெளிவராத சிம்பொனிக்குக் காத்துக் கிடக்கிறவர்கள் ஏராளம். நாகஸ்வர மேதை டி.என்.இராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பில் தமிழகமே சொக்கிக் கிடந்ததே. அவர் கோயில் உற்சவங்களில் இரவு முழுவதும் ராகம்தான் ஊதுவாராம். அதையெல்லாம் ஏற்றுக் கொண்டவர்கள்/ஏற்றுக் கொள்பவர்கள் நமது சுற்றத்தைச் சார்ந்தவர்கள்தான். நல்ல இசை எங்கிருந்து போதும் ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் தெலுங்கிலிருந்தும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இசை, மொழி என்ற இரு சமாசாரங்களைப் பார்க்கும் போது, சங்கீத கச்சேரிகளில் இசைக்கு சற்று அதிக உரிமை உண்டுதானே? அப்படி வெறும் இசையின் அடிப்படையில் பார்த்தால், தியாகராஜர் எண்ணற்ற ராகங்களின் நூற்றுக் கணக்கான கீர்த்தனைகள் செய்திருக்கிறார். அது மட்டும் அவர் படல் அதிகம் ஒலிக்கக் காரணமல்ல. சீர்காழி மூவரும் கூட அத்தனை கீர்த்தனைகள் செய்திருக்கலாம். தியாகராஜரின் கீர்த்தனைகள், அவர் எப்படிச் செய்தாரோ அதே நிலையில் நொடேஷனுடன், சங்கதிகளுடன் கிடைக்கிறது. தியாகராஜருக்கு இருந்த எண்ணற்ற சிஷ்யர்கள் அவர் கீர்த்தனைகளைக் காத்து அடுத்த தலைமுறைக்கு கொடுத்ததும், அவருக்கு அடுத்த தலைமுறைக்குள்ளேயே the transition from composers to performers, அதாவது சமஸ்தானங்களில் வித்தையைக் காட்டும் வகையில் இருந்த இசை, மக்கள் மத்தியில் பாடப் பெற்ற, மக்களின் முக்கியமான பொழுது போக்காக மாற ஆரம்பித்த காலம், trinity என்றழைக்கப் படும் தியாகராஜர், தீகஷதர், ஷ்யாமா சாஸ்திரி, வாழ்ந்த காலமாகும். ஆனால், நமது துரதிர்ஷ்டம் 'ராம நாடக கீர்த்தனை' பாடல்களின் பதிப்பு கிடைக்கிறதே தவிர, அவர் எப்படி மெட்டமைத்திருந்தார் என்று தெரியவில்லை. அதனால், "யாரோ இவர் யாரோ" பாடலை ரசிக்க முடிந்தாலும், ஜடாயூ ராவணனிடம் சண்டையிடும் காட்சியைக் காட்டும் "விட்டுவிடடா சீதையை" பாடலை கேதாரகௌளையில் பாடும் போது, ஜடாயூ இராவணன் முன் மண்டியிட்டு கெஞ்சிய உணர்வே வருகிறது. முத்துத் தாண்டவரின் வாழ்க்கை வரலாறு கிடைத்தாலும் அவரின் சொற்பமான கிருதிகளே நமக்குக் கிடைக்கின்றன. மாரிமுத்தாப் பிள்ளை "நிந்தா ஸ்துதி" என்னும் வகைப் பாடல்களைப் புனைந்தவர் என்று தெரிந்தாலும் அவரின் 25 பாடல்களுக்குத்தான் சாஹித்யம் கிடைக்கிறது. கீர்த்தனைகளின் வடிவமும் சங்கதிகளும் எத்தனைப் பாடல்களுக்குக் கிடைக்கின்றன என்று யாமறியோம். கோபால கிருஷ்ண பாரதியின் பாடல்களின் நிலையும் இதேதான். அவரின் பிரபலமான பாடல்கள் மாத்திரம் மீண்டும் மீண்டும் பாடப்படுகின்றன. ஆபோகி ராகத்தில் அதிகமாகப் பாடப்படும் பாடல் "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" என்பதாகத்தான் இருக்கும். தமிழில் கணிசமான அளவு பாடல்கள் கிடைக்கிறது என்றால் அது பாபநாசம் சிவனின் பாடல்கள்தான். மற்ற எந்த வாகேயக்காரருக்கும் கிடைக்காத பேறு அவருக்குத்தான் கிடைத்தது எனலாம். அவர் இருக்கும் போதே அவரின் பல பாடல்கள் பிரபலாகின. "காண கண் கோடி", "கபாலி", "உன்னையல்லால்" என்று சொல்லிக் கொண்டே போகலாம். கிட்டத்தட்ட நூறு பாடல்கள் இன்று புழக்கத்தில் இருப்பினும், அவரின் சுற்றத்தாரின் முயற்சியால் அவரது கீர்த்தனைகள் இசைவடிவுடன் பதிக்கப் பெற்று, யாரேனும் கற்க விரும்பினால் அவரின் மகளோ, பேரனோ கற்றுக் கொடுக்கக் கூடிய நிலையும் இன்று இருப்பதால், அவரின் பாடல்கள் புழக்கத்துக்கு வரும் எண்ணிக்கை வருடா வருடம் உயரத்தான் செய்யும். Trinity என்று அழைக்கப்படும் மூவரின் பாடல்களே, அக்காலத்தில் இசையே major source of entertaintment-ஆக இருந்த போதிலும் அவர்கள் மறைந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின்தான் வெளிச்சத்துக்கு வந்ததென்பதை மனதில் கொள்ள வேண்டும். தோடியில் பிரபலமான தமிழ் பாடல்களை மேலே பட்டியலிட்டிருந்தேன். ஆனால் தியாகராஜரின் தோடிகள் மட்டும் முப்பதிற்கு மேல் கிடைக்கிறது. அக்கீர்த்தனைகள் சாஹித்யத்துடன் கூட தன் அசல் இசை வடிவமும் இழக்காமல் தொடர்ந்து வருவதுடன் தலைமுறை தலைமுறையாய் மெருகேற்றப் படுவதால், சங்கீதத்தை தொழிலாய் செய்யும் பாடகர்களுக்கு (கலைச் சேவை, கலை நூடில்ஸ் எல்லாம் பேச நன்றாக இருக்கும். "நிதி சால சுகமா" பாடினால் "payment cash-ஆ, cheque-ஆ?, என்று கேட்பவர்களிடையில்தான் நான் வாழ்கிறோம். நமது ப்ரொ·பெஷனைப் போல சங்கீதமும் ஒரு ப்ரொ·பெஷன். அவ்வளவுதான். அங்கே டிமாண்ட் மற்றும் availability-ஐப் பொறுத்துதான் supply இருக்கும். அரியக்குடியின் chettinad patrons-இன் demand-ஆக தமிழ் பாடல்களும் இருந்ததால்தான் இன்று திருப்பாவை மெட்டமைக்கப்பட்டிருக்கிறது. என்னதான் மெட்டமைக்கபட்டாலும் எம்.எல்.வி பாடி பரவலாய் நாம் கேட்கக் கூடும் திருப்பாவையில் நிறைவிருக்கிறதா கூறுங்கள்? வீர ரசத்தைக் குறிக்கும் நாட்டையில் திருப்பாவையை ஆரம்பிக்கும் போது, கோதை எழுப்பவதைப் போல எனக்குத் தோன்றவில்லை. ஆகாத மாமியார் மருமகளை எழுப்பவதைப் போலத்தான் தோன்றுகிறது. "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்" என்ற வரியை "வங்கக் கடும் நிறைகள் வண்ணப் பெரும் பஷ¤க்கள்" என்று ஒரு பிரபல முன்னணிப் பின்னணிப் பாடகி பாடிய போது, தமிழில் இவர்கள் பாடாதிருப்பதே உத்தமம் என்றே தோன்றியது. "கோல வெளக்கே கொடிய விதானமே" என்று கேட்கும் போதெல்லாம் இவர்கள் 'சீதம்ம' பாடலில் பராசரரையே சித்ரவதை செய்யலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. "இன்னிசை பாடும் எழில் வசந்தப் புறா" என்றெல்லாம் கூட பாடல் இருக்கிறது. எந்த எழில் புறா இன்னிசை பாடி அன்னார் கேட்டாரோ நான்றியேன். இதில் கொடுமையென்னவென்றால் அதை அடிக்கடி பாடவும் செய்கிறார்கள். "கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனைக் கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" என்ற வரியைப் படித்தாலே அது ட்யூனுக்கு இட்டுக் கட்டி வார்த்தைகள் தூவப்பட்ட பாடல் என்று. இந்த சீஸனில் கூட "எப்ப வருவாரோ" பாடலில் "வாரோ"-வை மட்டும் தனியாகக் பிரித்து சங்கதிகளை அடுக்கிய போது, "இந்த ஆளு கலி தீர எதுக்கு war வரணும்-னு கூவறான்" என்றும் "அறுந்து போன செருப்பு வாரை வாங்கப் போன பயனைக் காணாமல் தவிக்கும் தந்தையின் சோகம் போலவும்தான்" பாடகரின் பாடல் என் காதில் ஒலித்தது....அய்யயோ! மறுபடியும் ரூட் மாறிப் போச்சே...)

எங்க வுட்டேன்?....ஆங்....பாட்டைத் தொழிலாய் செய்யும் பாடகர்களுக்கு ரெடிமேட் சொக்காய் ஷோக்காய் கிடைக்கும் போது எத்தனை பேர் மெனக்கெட்டு நூல் நூத்து, துணி நெய்து, சட்டைத் தெய்த்துப் போட்டுக் கொள்வார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்? அப்படிச் செய்ய வேண்டுமென்பது உங்கள் ஆசை மாத்திரம் அல்ல. என் ஆசையும்தான். உங்களுக்கு எத்தகைய அனுபவத்தை தமிழ் பாடல்கள் தருகிறதோ, அதே அனுபவத்தை என்னாலும் உணர முடிகிறது. தமிழிலும் இருந்து இசையும் உயர்வாயிருப்பின் "அடிச்சுது லக்கி ப்ரைஸ்". இரண்டில் ஒன்றை விட வேண்டும் "நல்ல பாடலை மோசமான இசை வடிவில் கேட்பதைவிட, புரியாத பாடலை நல்ல இசை வடிவில் கேட்பதையே" நான் விரும்புவேன். தமிழில் அதிகம் பாடவில்லை என்ற ஆதங்கம் எனக்கு புரிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் முடிந்தாலும், தமிழில் பாடினால்தான் கேட்க முடிகிறது, "எவ்வரி போத" வர்ணத்தைவிட விஜய்காந்த் படம் பார்ப்பதே பரம சுகம் என்பதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீணையின் நாதத்துக்கு தமிழும் தெலுங்கும் தெரியுமா என்ன? கேட்பவரால் "இன்றைக்கு ஏனிந்த" பாடலுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. நீங்கள் "ரூப் தேரா மஸ்தானா" வாசித்தாலும் அவர் மாஜிக் ஷோ போலத்தான் உங்களைப் பார்ப்பார். பி.யூ.சின்னப்பாவின் "காதல் கனி ரசமே" பாடலை வாசித்தால் அதே போல ரசிப்பாரா என்பது சந்தேகமே.

"தமிழில் பாடல்கள் இல்லை. நல்ல பாடல்கள் தமிழில் செய்ய முடியாது.", என்று பிதற்றும் கும்பலைச் சேர்ந்தவன் இல்லை நான். அதே சமயத்தில் "மோகத்தைக் கொன்றுவிடு" பாடலை பாகேஸ்வரி ராகத்தில் விரக தாபத்தோடு பாடினாலும் ரசிக்க வேண்டும் என்றால்தான் என்னால் முடியவில்லை. (இதை மிகைப்படுத்தல் அல்ல, இப்படிப் பாடி ஒலிநாடாக்கள் கிடைக்கின்றன). ஆந்திராவில் பிறந்து தமிழகத்தில் குடியேறிய பாலமுரளிகிருஷ்ணா அற்புதமாய் ஆனந்த பைரவியில் தமிழ் கீர்த்தனை புனைந்துள்ளார். "அசையாதனவிலும் இன்னிசை உண்டு", என்ற வரிக்கு அசைவில்லா ஸ்வரங்களான "ஷட்ஜம்" மற்றும் "பஞ்சமத்தை" உபயோகித்தும். "அசைவு" என்ற சொல் வரும் வரியில் ஆனந்த பைரவியின் கமகங்களை அசைவுகளாக மிளிரவிட்டிருக்கும் வகையில் அதிபுத்திசாலித்தனமான கீர்த்தனைகள் தமிழில் இருக்கின்றன. இப்படிப் பட்ட பாடல்களைத்தான் சீர்காழி மூவர் போன்றோர் புனைந்திருக்க வேண்டும். அவர்கள் கீர்த்தனைகளை தொலைத்த துரதிருஷ்டவாதிகளான நாம், இப்போது இருக்கும் தமிழ் கீர்த்தனைகளுள் மாணிக்கங்கள் மேடையேற அவசியம் குரலெழுப்பத்தான் வேண்டும். அதே சமயத்தில் பொறுமையும் காக்க வேண்டும்.

இசைக்கு சாஹித்யத்தின் தேவை சொல்லி மாளாது, இருப்பினும், சாஹித்யத்தை பாடுபவன் உணர்ந்து பாடினால் அது எந்த பாஷையாக இருந்தாலும் அது பாஷை தெரியாத ரசிகனின் இதயத்தையும் சென்று அடையும் என்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். "தமிழ் பாடல் பாட மாட்டேன்" என்று சொல்வது எப்படி வரட்டுப் பிடிவாதமாக உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்படித்தான், "பாட்டு தமிழில் இருந்தால்தான் ரசிக்க முடிகிறது" என்று நீங்கள் கூறுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. மந்தாரி ராகத்தில் என்ன தமிழ் கீர்த்தனை இருக்கிறது என்று தெரியாத நிலையில் அந்த ராகத்தையே பாடகர் பாடக் கூடாது என்று கூறிவிட முடியுமா? தமிழில் பல பாடல்களைக் தேடி எடுப்போம். ஏதேதோ நூலகக்ங்களில்/வீட்டுப் பரண்களில் புதைந்து கிடக்கும் மாணிக்கங்களை வெளிக் கொணருவோம். வரலாறு.காம்-இல்லு.வே.சா எழுதிய கோபாலகிருஷ்ணபாரதியின் சரிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் முதல் இரண்டு கட்டுரைகளில் பல வாகேயக்காரர்களின் பெயர்கள் நமக்குத் தெரிய வருகிறது. அவர்களது சாஹித்யங்கள் கிடைக்க வழி இருக்கிறதா என்று பார்ப்போம். சாஹித்யம் கிடைத்தாலும் பாடல் வடிவு கிடைக்க வாய்ப்புண்டா என்பது அடுத்த தேடல். இந்த தேடல்களை, நான் தமிழ் பால் கொண்ட காதலினாலும், தமிழ் பாடல்கள் என் நெஞ்சில் ஏற்படுத்தும் நெகிழ்ச்சியினாலும், நிச்சயம் நடத்துவேன் என்பதில் ஐயமில்லை. அதே சமயத்தில், என்னுடைய தமிழ்க் காதல் என்னை மற்ற மொழிப் பாடல்களைக் கேட்க விடாமல் செய்துவிடாது. ஆந்திராவிலும் மைசூரிலும் இருந்த துவாரம் வெங்கட சாமி நாயுடுவின் புகழ் உலகுக்கு தெரிய வர காரணமாயிருந்த தமிழ்நாட்டில், அவரை எப்படியாவது 'இசையின் தலைநகரான' சென்னைக்கு கொண்டு வரவேண்டி, ரசிகர்கள் தங்கள் செலவில் 'துவாரம் இல்லம்' திருவல்லிக்கேணியில் அமைத்து அவரை இங்கு இட்டு வந்த தமிழ்நாட்டில். உன்னத வயலின் கலைஞர் சௌடையா "என்னை வாழ வைத்தது தமிழ்நாடு", என்று சொல்ல வைத்த தமிழ்நாட்டில், கலை கொண்டு வந்தோரையெல்லாம் வாழ வைத்த தமிழ்நாட்டில் பிறந்ததைத்தான் பெருமையாக நினைக்கிறேன். "Fanatic Identity Holder" என்று மற்ற மாநிலத்து narrow minded நண்பர்கள் கூறும் போது கொதித்து எழுகிறேன். தமிழில் பாடல்கள் மென்மேலும் வர வேண்டி நம்மால் இயன்றதைச் செய்யும் வேளையில், தமிழ் என்ற விருட்சத்தின் வேர்களுக்கு எழுத்தால் சற்று சேர்த்த மகாகவி பாரதி "தியாகராஜரை ஏன் 'ரசக் கடல்' என்கிறான். அவரது பாடல்களை ஏன் சிலாகித்து தனது 'சங்கீத விஷயம்' கட்டுரையில் எழுதுகிறான்", என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று கணிசமான அளவு தமிழ்ப் பாடல்கள் பாடப்படுகின்றன. இந்நிலை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கெனவே பலமுறை கூறிவிட்ட போதும் இன்னொரு முறை கூறி இந்த மடலை முடித்துக் கொள்கிறேன். "தமிழ் பாடல்களின் எண்ணிக்கை வளரட்டும். அதற்காக தெலுங்கு பாடல்களை ஒதுக்கத் தேவையில்லை. நல்ல தரமான பாடலாக இருப்பின் அது நிச்சயம் காலத்தைத் தாண்டி நிற்கும் தியாகராஜரின் பாடல்களையும், பாபநாசம் சிவனின் பாடல்களையும் போல!"

என்னுடைய முந்தைய பதிவுகளைவிட இது அளவில் மிகப் பெரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் மனதில் தோன்றியதை அப்படியே கொட்டிவிட்டேன். மறுமுறை படித்து edit செய்யக் கூட தோன்றவுமில்லை நேரமுமில்லை. இதில், உங்கள் மனம் நோக ஏதாவது சொல்லியிருப்பின் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களைப் போலவே எனக்கும் என் கருத்துக்கள்தான் சரியானவையா என்று தெரியவில்லை. ஆனால், அதுவும் ஒரு மூலையில் கிடந்துவிட்டுப் போகட்டுமே! என்ன பாழாய் போகிறது.....

அன்புடன்,
ராம்.

 
At 11:03 PM, Blogger Jayaprakash Sampath said...

ராம், ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை வாசித்தேன். அட்டகாசம்...

அடிக்கடி இப்படி எளுதுய்யா..

 
At 1:32 AM, Blogger ramachandranusha(உஷா) said...

ஆனாலும் கருத்து வாங்கும் சாக்கில் உங்களிடமிருந்து அருமையான சங்கீதத் தகவல்களுடன் இன்னும் இரண்டு கடிதங்கள் வாங்கமுடிந்ததே இதன் வெற்றி. :) //
adu :-)

 
At 2:41 AM, Anonymous Anonymous said...

Dear Ram
I agree with your points.
My first introduction to carnatic music was when a 10 year old family member started learning it and started getting prizes in school.
I started trying to listen to the songs she sung once I got access to the internet.The first song I went in search was "shobillu sapthaswara" because that kid impressed me with it.Though I did not know the meaning of it , i somehow liked it a lot and then I started to listen to new songs and then find out their meaning.As you mentioned, if i like a song in a particular raga,i'll try to listen to other songs in the same raga.Similar to you, i liked only a few songs and same song sung by different artists did not impress me at all.

For me,lack of knowledge of Telugu,Sanskrit,Malayalam, Kannada was not a hurdle at all.I'll attempt to learn meaning of a song only after I like it.Some sungs fill my heart with joy irrespective of whether i understand meaning or not.Not sure why.I totally forget myself and listen to the same song continuosuly for days.

I was a pamaran with 0 knowledge an year back but now I have improved to having .001% knowledge and i can identify ragas for songs.I will keep trying to improve on this.Whether the artistes sing in Tamil or not,i'll force my way out of my current pamaran stage and get more knowledgeable on this divine art.

 
At 3:11 AM, Anonymous Anonymous said...

The current top artists were definitely not born with sangeetham knolwedge embedded in them.They were all pamarans who forced their way to top rungs by hard work , committment to art and passion for music.
We should all learn from them and fight our way to become knowledgeable too.

 
At 3:51 AM, Blogger Jayaprakash Sampath said...

//ஆனாலும் கருத்து வாங்கும் சாக்கில் உங்களிடமிருந்து அருமையான சங்கீதத் தகவல்களுடன் இன்னும் இரண்டு கடிதங்கள் வாங்கமுடிந்ததே இதன் வெற்றி//

adhEythAn..:-)

 
At 5:12 AM, Blogger Nadopasana said...

Please write about the concert of the season which you promised us.

 
At 5:19 AM, Blogger லலிதாராம் said...

நாதோபாசனா,

எழுத ஆரம்பித்தேன். அதற்குள் அபீஸில் மாட்டிக் கொண்டேன்...பின்னூட்டங்கள் வேறு...சரி என்னத்தை புதுசா எழுதிடப் போறோம்-னு ஒரு அலுப்பு வேறு....

சரி..சரி...எந்த சாக்கும் திருப்திகரமா சொல்ல வரமாட்டேங்குது...பாதியில் நிற்கும் மீதியை எழுதி சீக்கிரம் போடறேன்....எத்தனையோ வாக்கு மீறியாச்சு...இதாவது காப்பாத்த முடியுமா பார்ப்போம்.

அன்புடன்,
ராம்.

 
At 12:44 AM, Blogger Ram said...

மேற்கண்ட விவாதத்தில் எனது கருத்துக்கள் சிலவற்றை சுருக்கமாக கூற விரும்புகிறேன். தமிழ், என்னைப்பொருத்தவரையில் கர்னாடக இசைக்கு அதிகம் ஒத்துவராத ஒரு மொழி(அடித்துவிடாதீர்கள்). தமிழ் மொழி விருத்தங்களாக பாடப்படுவதற்கு மிகவும் ஏற்ற மொழி. தமிழில் நல்ல சில பாடல்களும் உண்டு. அருணகிரியும், கம்பனும், திருவள்ளுவனும், ஆழ்வார்களும் அவர்தம் பாடல்களை கர்னாடக இசையாக அமைக்கவில்லை என்பது உறுதி. எனவே தான் அவை கர்னாடக இசைக்கு பல சமயம் பொருந்தாமல் போகிறது. அதற்கான இடம் கச்சேரியின் முடிவில் துக்கடாவாக தான் அமைகிறது.

கர்னாடக இசைக்கு, ஏன், பேசுவதற்கு கூட மிக பொருத்தமான மொழியாக தெலுகு இருக்கிறது என்பது எனது கருத்து. ( நான் தெலுங்கனா என்று யோசிப்பவர்களுக்காக சொல்கிறேன், ஆமாம், அது சரிதான்). 2 மொழிகளையும் நான் மிகவும் நேசிக்கிறேன், ஆனால் உண்மை என்னவென்றால், கர்னாடக இசையை பாடுவதற்கு தமிழை விட சுலபமான மொழி நிச்சயம் தெலுகு தான். பல சாகித்ய கர்த்தாக்கள் தமிழ் தெரிந்தும் கூட தெலுகில் பாடல் புணைந்திருக்கின்றார்களே? ஏன்? மொழி வெறியா? இல்லை. தெலுகு பாடுவதற்கு சுலபமானது. காரணம், தெலுகின் மொழி அமைப்பு அத்தகையது. It is a very evolved language. ஒரு விளக்கம் சொல்கிறேன், ஒரு த்யாகராஜரின் கீர்தனையை எடுத்துக்கொள்வோம்,

1)துளசி தள முலசே ஸந்தொஷமுகா பூஜிந்து
2)பக்கல நிலபடி கொலிசே முச்சட
3)எந்நடு ஜூதுநோ இநகுல திலகா
4)மநஸா எடுலோர்த்துநே
5)ஸ்ரீ கணபதினி சேவிஞ்ச ராரே ( சம்ஸ்க்ருதம்)

மேற்கண்ட பாடல்களை கூர்ந்து நோக்கினால் ஒரு விஷயம் புலப்படும். ஒவ்வொரு வார்த்தையும் உயிரெழுத்து ஒலியில் ( Vowels) முடிகின்றன. அங்கே தான் இருக்கிறது சூக்ஷமம். வார்த்தைகளை உயிரெழுத்தில் முடிக்கும் போது நமது மூச்சு சுலபமாக வெளியேற்றமுடியும். அதனால் தான் கிராமத்து மக்கள் முதலில் ஆங்கிலம் பேசும் போது "கம்" என்பதை "கம்மு" , "டாக்" என்பதை "டாக்கு" என்றும் முடிவில் ஒரு வவல் ஒலியை சேர்த்து முடிக்கின்றனர்.

தெலுகில் 99.99 % வார்த்தைகள் உயிரெழுத்து ஒலியில் முடிகின்றன. எனவே பேசுவதும் பாடுவதும் மிகச்சுலபமானது. தமிழின் மொழி அமைப்பு அத்தகையது அல்ல.எனவே அதில் பாடுவதும் அத்தனை சுலபம் அல்ல.எனவே நான் முன்பு சொன்ன தமிழ், என்னைப்பொறுத்தவரையில் கர்னாடக இசைக்கு அதிகம் ஒத்துவராத ஒரு மொழி என்பது இதன் அடிப்படையிலானதே.ஸம்ஸ்க்ருத்திலும், கன்னடத்திலும் ப்ரபலமான பாடல்களின் சொற்கள் பெரும்பாலும் vowel sound ல் முடிபவையே. தமிழின் மொழி அமைப்பே கர்னாடக சங்கீதத்தில் அதற்கான இடத்தை பெற்றுத்தரவில்லை. இந்த விஷயத்தில் வேறு எந்த ப்ரச்சனையும் இல்லை.

மாற்றுக்கருத்துக்களுக்கும், விமரிசனங்களையும் வரவேற்கிறேன். ( நல்லா தெரியுது அடிவாங்காம போகப்போறதில்லேன்னு.. !! பாப்போம்)

 
At 1:18 AM, Blogger Ram said...

தமிழிலும் இருக்கும் சில பிரபலமான பாடல்களின் சொற்கள் ( குறைந்தது பல்லவி மட்டுமாவது) உயிரெழுத்து ஒலியில் முடிபவையே. உதாரணமாக

யாரோ இவர்யாரோ என்ன பேரோ அறியேனே

 
At 2:45 AM, Blogger லலிதாராம் said...

This comment has been removed by a blog administrator.

 
At 3:03 AM, Blogger லலிதாராம் said...

வாங்க இந்திரஜித்,

தடாலடியா, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீங்கள் எழுதினாலும்.,நீங்க சொல்றா மாதிரி உங்களுக்கு அடிக்க யாரும் வர போறதில்லை. ங்க பின்னூட்டத்தைக் கொஞ்சம் objective-ஆக analyse செய்வோம். நீங்க சொல்கிறார் போல முன்னொரு காலத்தில் இருந்த பெரியவர் ஒருவரும் தமிழில் 'ச்', 'ட்', 'த்' எல்லாம் வரதால தமிழ் பாட தோதான மொழி இல்லைனு சொல்லி நல்லா வாங்கிக் கட்டிகிட்டாரு.

சங்கராபரணத்தில் 'சரோஜ தள நேத்ரி' அற்புதமான பாடல் என்று ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். அதில் முதல் சரணம் "கோரி வச்சின வாரி கெல்லனு கோர்க லொசகே பிருதுகதா" (இணையத்தில் ஒரு தளத்தைப் பார்த்து வரிகளை எழுதுகிறேன். முழுக்க முழுக்க சரியா இல்லாத போதும் கிட்டத்தட்ட பாட்டு இப்படிதான் இருக்கும். நான் அரவாடுதானே, தப்பை மழலைனு நினைச்சு மன்னிச்சு வுட்ருங்க.) என்று வரும். அந்த வரியைப் படிக்கும் போதே பல்லில செங்கல்லைப் போட்டுப் கடிக்கறா மாதிரி ஒரு உணர்வு வருதே? ஆனா அதே மெட்டுல வரும் "சாம கான விநோதினி குணதாம ஷ்யாமகிருஷ்ணனுதே" என்ற வரி படிக்கும் போது smooth-ஆக போகும். அதனாலேயே அந்த வரியில் இல்லாமல் இந்த வரியில் நிரவல் செய்கிறார்கள். நீங்க சொல்லும் ,"உயிரழுத்து என்று நாங்கள் கூறும்", vowel சமாசாரம் முதல் வரியிலும்தான் இருக்கு இரண்டாம் வரியிலும்தான் இருக்கு. ஆனா இரண்டாம் வரி ஏன் கேட்க நல்லா இருக்கு?

மெய்யெழுத்தில் முடிவதால் மட்டும் ஒரு வரி பாட அல்லது சங்கதிகள் போட தோதானதாக இல்லாமல் போய்விடாது. உதாரணம் "மால் மருக ஷண்முக முருக குகா" என்ற வரியில் மால் என்ற வார்த்தைதான் மெய்யெழுத்தில் முடிகிறது மற்ற வரிகள் மெய்யெழுத்தில் முடியவில்லை. இருப்பினும், மா என்ற நெடிலில் போடப்படும் சங்கதிகளே அதிகம். "க்ஷ£ரசாகர" பாடலில் போடக்கூடிய சங்கதிகள் எல்லாம் "எந்நேரமும்" பாடலிலும் சாத்தியம்தானே?

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'துளசி தள' பாடலில் கூட 'மூஊஊஊலசே சந்தோஷமூகா பூஜிந்து' என்றுதானே இரண்டாவது மூன்றாவது சங்கதிகள் பாடிகிறார்கள். "அதெல்லாம் தெலுகுவை தெலுங்கு என்று அழைக்கும் 'அரவாடுகள்' பாடும் விதம்" என்று நீங்கள் கூறலாம். ஆனால் ஆந்திரத்தில் வளர்ந்தவர்கள் கூட "எந்துகு பெத்தலவலே" என்ற சொற்றொடரை "எந்துகு பெத்தல" என்று நிறுத்து "வல புத்தி" என்று பாடினால்தானே தாளக் கட்டினுள் அடக்கி சங்கதி போட முடிகிறது? அது மொழியில் குற்றமா? கீர்த்தனை அமைப்பின் குற்றமா? பாடுபவரின் குற்றமா?

"அடுத்து வந்த என்னை தள்ளலாகாது - ஹரஹரா என்று சொன்னாலும் போதாதோ" என்ற வரியில் நிரவல் கேட்டிருக்கிறீர்கள்தானே?
"எத்தனையோ பிறவி எடுத்தெடுத்தே இளைத்தேன்" என்ற வரியில் 'எத்தனையோ' என்ற வார்த்தையில் மாத்திரம் எத்தனையோ ஸ்வரப் பின்னல்கள் நிச்சயம் கேட்டு இருப்பீர்கள்.
"என்றைக்கு சிவ கிருபை வருமோ" முசிறி பாடி கேட்டதுண்டா தோழரே?
மாஞ்சியில் 'ப்ரோவம்மா" என்ற பாடலுக்கு நிகராக "வருகலாமோ" பாடலை ஏன் சொல்லக் கூடாது என்று தக்க விளக்கம் கொடுங்கள் பார்ப்போம். வார்த்தைகள் மெய்யெழுத்தில் முடிந்தாலும் போதிய நெடில்கள் பாடல்களில் இருப்பின் ரப்பர் போல இழுத்து சங்கதிகளைப் போட முடியும் என்பதை அப்பாடல் உணர்த்தவில்லையா?.
"கண்ணாரக் கண்டேன் இரு கண்ணாறு பெருகவே" என்ற வரியில் கண்ணாறு என்ற வார்த்தையில் 'ஆறு' என்பதை தம் கட்டி முடிகிற வரை இழுக்கும் போதே அடுத்த வார்த்தையில் பெருகவே என்ற வார்த்தையைச் சொல்லாமலே கூட ஆறு பெருகுவதை குறிப்பால் உணர்த்த முடியும் நண்பரே.
"பார்வதி நேயா பக்த சகாயா, பந்தம் அராதா வந்தருள் தா தா" என்ற வரியைப் பார்த்தால் 'பக்கல நிலபடி' கூட கொஞ்சம் தடங்கல் உள்ள சமாசாரம் மாதிரி கேட்குதே;-)
'கிருபாநிதி இவரைப் போலே கிடைக்குமோ' என்ற வரியை இழுக்கும் அளவிற்கு 'மனசு நில்ப சக்தி லேக போதே' பாடலை இழுக்க முடியுமா? 'நெக்குருகி உன்னை பணியா கல்நெஞ்சனெனக்கு அருள்வாய்', என்ற வரி நீங்கள் சொன்ன இலக்கணப்படி வந்தாலும் கொஞ்சம் அங்கே இங்கே இடிக்குது பாருங்க.

நீங்க சொல்கிறார் போல அல்காரிதம் எழுதி வார்த்தையை ·பில் அப் பண்ணினா பாட்டு நல்லா வந்துடும் என்று கியாரண்டி இல்லை. நீங்கள் சொல்கிற விஷயத்தில் ஓரளவு உண்மை இருப்பினும், அது மொழியில் குற்றமில்லை. எழுதுபவரின் குற்றம். தியாகராஜர் தன் கீர்த்தனைகளுக்கு தக்க வார்த்தைகளை பொறுக்கி பொறுக்கிதான் எழுதியிருப்பார். அத்தனை முனைப்பு தமிழில் பாடல் எழுதுவோருக்கும் இருந்தால் தமிழிலும் எழுத முடியும்.
"தாண்டவம் ஆடும் குஞ்சித சரண மலரை ஏற்றிப் போற்றி" என்று சண்முகப்ரியா பாடலில் (ஆண்டவனே உனை நம்பினேன்)நிரவல் கேடதுண்டா? எனக்குத் தெரிந்து பாலமுரளிகிருஷ்ணாவின் "சதா தவ பாத" பாடல்தான் இப்பாடலைவிட ஷண்முகப்ரியாவில் மிக அழகான பாடல். அற்புத ஸ்வராக்ஷரங்கள் கொண்ட அந்த பாடலை நீக்கிவிட்டால் "மரிவேரே திக்கெவரைய ராமா" எல்லாம் run in the mill வகைதான். 'சித்தி விநாயகம்' உட்பட;-)

நல்ல கவிஞரான வைரமுத்து 'நீ தயராதா' பாடலை close-ஆக தமிழ் படுத்திய போதும் பாடல் ஒரிஜினலைப் போல வரவில்லையே. ஏனென்று பார்த்தால், 'நீ தயராதா' பாடலைல் 'நீ' என்ற வார்த்தையில் பல சங்கதிகள், அதை 'உன்' என்று தமிழ்ப் படுத்தினால் இடிக்குது. கவிதையாய் படிக்கும் போது 'நீ தயராதா'-வும் 'உன் தயவில்லையா'-வும் close-ஆகத் தோன்றினாலும், பாடலாய்ப் பாடும் போது இதற்கும் அதற்கும் ஒரு காத தூரம். அதி மேட்டரு. அங்கதான் கவிஞனுக்கும் வாகேயக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் தென்படுகிறது. நல்ல கவிஞனும், நல்ல இசையமைப்பாளனும் நல்ல வாகேயக்காரனாகிவிட முடியாது. நல்ல வாகேயக்காரனாக இருப்பின், அவன் எந்த மொழியிலும் அற்புதக் கிருதிகள் செய்வான்.

நீங்க சொல்லும் விஷயத்தின் உண்மை இருப்பினும். அதனாலேயே தமிழ் பாட்டிற்கு ஏற்ற மொழியாகாது என்று சொல்வதற்கில்லை. தமிழில் இருக்கும் எண்ணற்ற சொற்களை கையாளத் திறமை இருப்பின் அழகிய கீர்த்தனைகளை, "கொலுவ மரகத" பாடலுக்கு இணையாக அமைக்க முட்யும் என்றே நான் கருதுகிறேன்:-)

அன்புடன்,
ராம்.

 
At 4:35 AM, Blogger Ram said...

நமஸ்தே ராம்,

சில விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

1) தெலுகில் பாடல் புணைவது தமிழில் புணைவதை விட சுலபமானது.
2) சாதாரணமான தெலுகு பாடல் சாதாரணமான தமிழ் பாடலை விட சுலபமாக எழுதவும் பாடவும் முடியும்.
3) வவலில் முடிவது பாடுவது சுலபம். நெடில், சங்கதிகள் போட மிகவும் உதவும். ( நீங்கள் சொன்னதுதான்)
4) தமிழ் மொழியை கையாளத்தெரிந்த ஆற்றலில் 1/4 பங்கு இருந்தால் தெலுகில் நல்ல பாடல்கள் எழுதிவிட முடியும்.

நான் சொல்லவந்தது, தமிழின் இந்த கடின அமைப்பே அதற்கான இடத்தை பெற்றுத்தறவில்லை என்பதே. ஒப்பீடு என்று வந்ததால் சொல்கிறேன், 'சரோஜ தள நேத்ரி' பாடலை நீங்கள் சொன்னது போல தாளக்கட்டிற்காக யார் பாடினாலும் தவறுதான். தாய்மொழி தெலுகு என்பதால் அவர் பாடுவது சரி என்று யார் சொன்னது. அவர்கள் தப்பகத்தான் பாடுகிறார்கள்.

"வருகலாமோ" நல்ல பாடல் அல்ல என்பதல்ல என் வாதம். நான் சொன்னது "வருகலாமோ" போன்ற பாடல்கள் தமிழில் எழுதப்படுவது கடினம், அபூர்வம். நிரவல்களைப்பொறுத்தவரையில், அதற்கு மொழியே தேவை இல்லை என்பதுதான் என் நிலைப்படு. ஒரெ வரியை மீண்டும்,மீண்டும் வேறு வேறு ஸ்தானங்களில் பாட ( சிதைக்க) மொழி தேவை இல்லை. ( நான் நிரவல்களை வெறுக்கிறேன்). இங்கேதான் நீங்கள் ஒலிகளை விட்டு மொழி/பொருள் க்குள் நுழைகிறீர்கள். நான் அதற்குள் புக விரும்பவில்லை.

நெடிலில் முடியும்/நெடில் நிறைந்த/வவலில் முடியும் வார்த்தைகளை பாடுவது எவ்வளவு சுலபமோ அதேபோல மெய்யெழுத்துக்கள் நிறைந்த ஒரு வரியை நன்றாக பாட இயலாமல் போவது உண்மை. "'கிருபாநிதி இவரை(ப்) போலே கிடைக்குமோ","சாம கான விநோதினி குணதாம ஷ்யாமகிருஷ்ணனுதே"
என்பதில் வரும் குறைவான மெய்யெழுத்துக்கள் தான் அதை சிறப்பாக்குகின்றது அதுபோல "நெக்குருகி உன்னை பணியா கல்நெஞ்சனெனக்கு அருள்வாய்" வில் வரும் மிகுதியான மெய்யெழுத்துக்கள் தான் அதை கடினமாக்குகின்றன. "மனசு நில்ப சக்தி லேக போதே" , "கோரி வச்சின வாரி கெல்லனு கோர்க லொசகே பிருதுகதா" வும் அதே இனம் தான். "சதா தவ பாத" வில் கவனிக்கவும் மெய்யெழுத்தே இல்லை.

தமிழ் மொழியில் மிகச்சில பாடல்களே, மேடைகளுக்கு தகுதிஉடையன என்ற கருத்தை நீங்களும் ஏற்பீற்கள். தெலுகில் அப்படிப்பட்ட பாடல்கள் மிகுதியாக கிடைப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஏனெனில் அதில் எழுதுவது சுலபம். தமிழ் மொழியின் அமைப்பு அவ்வளவு சுலபமாக பாடல் இயற்ற இடம் கொடுக்காது என்பதும் உண்மை. "தமிழில் இருக்கும் எண்ணற்ற சொற்களை கையாளத் திறமை இருப்பின்" என்ற வரியில் நீங்களே அதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.(பாபனாசம் சிவன் எழுதியது எல்லாமே தமிழ் இல்லை. மணிப்ரவாளம்தான்.)

அதைத்தான் சொல்கிறேன், தமிழில் அதிஅற்புதமான பாடல்கள் வராமல் தடுப்பது மொழியின் அமைப்பும், கடினமும் தான். இல்லையெனில் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் இந்நேரம் வந்திருக்கவேண்டுமே. ஒரு சில நல்ல பாடல்களே வந்துள்ளனவே? அவ்வளவு கடினமான மொழியா தமிழ் என்றால், ஒரு பெரிய ஆமாமைப்போட்டு விடு ஜூட்.

 
At 5:22 AM, Blogger லலிதாராம் said...

இந்திரஜித்,

உங்களைப் போல் எனக்கு, தமிழ் தெலுகு, இரண்டு மொழிகளிலுமே பரிச்சயமாவது இருந்தால். நீங்கள் கொடுக்கும் comparison-ஐப் பற்றி கருத்து தெரிவிக்க முடியும். எனக்குத் தெரிந்த தமிழே சில சமயங்களில் ததிங்கிணத்தோம் போடுகிற நிலை.

நீங்கள் சொல்வது போல தமிழில் பாடல் புனைவது கடினமாக இருந்தால் கூட (கடினம் என்று நான் சொல்லவில்லை), அப்படி முனைந்து பாடல்கள் புனைவது ஒன்றும் தவறில்லையே! ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் தமிழகம்தான் கர்நாடக சங்கீதத்தின் மெக்கா என்று ஆகிவிட்ட போது (டிசெம்பர் சீஸனுக்கு ஒப்பாக வேறு எந்த மாநிலத்திலும் நடப்பதில்லை. அப்படி நடக்குமாயின் பாலமுரளிகிருஷ்ணாவும், யேசுதாசும் சென்னையை இருப்பிடமாகக் கொள்ளத் தேவை நேர்ந்திருக்காது.) தமிழில் கணிசமான பாடல்கள் பாட வேண்டி இன்னும் 75% முயற்சி போடட்டுமே! ஏன் எல்லோரும் நோகாமல் நுங்கு எடுக்க வேண்டும் என்றே நினைக்கிறீர்கள்?

இன்னொரு விஷயம். அப்படி தெலுகுதான் பாடலுக்கு ஏற்ற மொழியென்றால் தியாகராஜர், ஷ்யாமா சாஸ்த்ரியைத் தவிரவும் பலர் தெலுகில் அதே வீச்சுடன் எழுதியிருக்க வேண்டும்தானே? ஏன் பட்டணம் சுப்பரமணிய ஐயரின் பாடல்களும், மைசூர் வாசுதேவாசாரியார் (இவர்கள் பாடல்களுள் ஒன்றிரண்டு மாணிக்கங்களாக இருக்கலாம்.) பாடல்கள் falls flat before Thyagaraja's or Shayama Sasthri's composition.

தெலுகு மொழியில் வீச்சு இருப்பவர்கள் அல்லது சாதாரணர்கள் எல்லாம் தியாகராஜர் போல் கீர்த்தனை எழுத முடியுமென்றால் இந்த சீஸனில் "ராம கதா சுதா" பாடல் மாத்திரம் என்னை ஐந்து இடங்களுக்கு துரத்தியிருக்காது அன்பரே. 'ராமப்ரியா' ராகத்தில் 'கோரின வரமு' பாடலைத் தாண்டியும் பல பாடல்கள் உருவாகியிருக்கும். தமிழில், நம்மிடையில் வாழ்ந்த பாபநாசம் சிவன் பாடல்கள் பலவற்றை முன்னரே கூறினேன். அவர் பாடல்கள் மணிபிரவாளமாகயிருப்பது அவரது மொழியின் வீச்சே தவிர தமிழின் குறையாகாது. தியாகராஜரின் பாடல் கூட சுத்தமான தெலுகு அல்ல. "what will four people talk" போன்ற தமிழ் மொழி பெயர்ப்புகள் இருப்பதாக பாலமுரளிகிருஷ்ணா ஒரு தீசிஸ் எழுதியது நினைவில்லையா? அதனால் தியாகராஜரின் பாட்ல்கள் குறைந்துவிடுமா? அல்லது அவர் அப்படி எழுதியது தெலுகு மொழியின் குறையாகுமா? எந்த மொழியும் பல சொற்களை வேறு மொழிகளுக்கு வழங்கும்/வாங்கிக் கொள்ளும். அப்படி வாங்காத மொழி வழக்கொழிந்துதான் போகும். அது ஒரு கலாச்சார மாறுதல். அதனால் அந்த மொழிக்கு ஒன்றும் இழுக்கு விளைந்துவிடாது. In anycase that is out of this discussion.


உயிரெழுத்தில் முடிய வேண்டும், நெடில் நிறைந்து இருக்க வேண்டும் என்ற விதிகளையெல்லாம் விட மிக மிக complicated-ஆன இலக்கணங்கள் பொதிந்து இருக்கும் மரபுக் கவிதைகள் லட்சக் கணக்கில் குவிந்து கிடக்கின்றனவே?

"அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" என்ற வரி இலக்கண சுத்தமாய் விருத்தத்திலும் அமைகிறது. நீங்கள் சொல்கிறபடி மெய் எழுத்து மிகாமலும் இருக்கிறது. இந்த விருத்தத்தின் ·பார்முலா படி எழுதுவது சுலபம் என்றால் உங்கள் அல்காரிதம் படி பாடல் புனைவதும் சுலபம்தான்.

இன்றும் தளை சற்றும் தட்டாமல் வெண்பாவும், விருத்தங்களும், அகவல் பாக்களையும் எழுதும் எத்தனை பேரை உங்களுக்குக் காட்ட வேண்டும்? மனம் இருந்தால் மார்க்கமுண்டு நண்பரே. செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல இன்று 75% அதிகம் முயல் வேண்டி இருக்கும் கீர்த்தனைகள் கூட காலப் போக்கில் சுலபமாகிக் கொண்டே வந்துவிடும். கீர்த்தனைகள் நன்றாக இருக்க முதலில் இசையறிவு பின்பு அதிகப் புலமை இருக்காவிடினும் ராகம் பாடும் போது 'வல்லினம் மெல்லினம்' உணர்ந்து பாடுவது போல இந்த வார்த்தையின் ஒலி சரி வரும் இந்த வார்த்தையின் ஒலி சரி வராது என்கிற sense of sound, சவுண்டாக இருந்தால் போதும். நல்ல பாடல்கள் புனையலாம். இதையெல்லாம் பற்றி ஹரிகிருஷ்ணன் என்னும் மஹானுபாவரிடம் பல மணி நேரம் பேசி இருக்கிறேன். அவரும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். எங்கே தொலைந்தார் அவர்?

அன்புடன்,
ராம்

 
At 5:29 AM, Blogger லலிதாராம் said...

Jsri,

I perfectly agree with you. I only quoted the mismatch. Did not blame the poet, music director or the director. That was the best they could within the constraint. If you have read my post completely, only when putting constraints you are forced to dish out mediocre sahithyams. If no constraints are applied one can as well compose good kirtanas in tamil.

Amaam unga maru peyar enna devil's advocate-aa?;-)

 
At 6:00 AM, Blogger லலிதாராம் said...

ஜெயஸ்ரீ,

நீங்கள் சொன்னதை ஒரு கோணத்திலிருந்து ஒப்புக் கொண்டாலும். On second thoughts, 'நீ தயராதா' பாடலை மட்டும்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்று constraint விதித்தது யார்? "கிருஷ்ணா நீ பேகனே பாரோ" பாடலும் "கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்" பாடலும் அச்சடித்தாற் போல மொழி மாற்றம் செய்ய முடிகிறதே? அதே போல தேடினால் வேறு தியாகராஜர் கிருதி கிடைக்காமலா இருந்திருக்கும். சில வருடங்கள் முன்பு வானொலியில் (தூர்தர்ஷனில் நல்ல நிகழ்ச்சிகள் வருவது போள சென்னை வானொலியிலும் நல்ல நிகழ்ச்சிகள் வரும். ரேடியோ மிர்ச்சியை மட்டுமே கேட்க வேண்டும் என்று பூண்டிருக்கும் கங்கணங்கள் என்று அவிறுமோ, தேவனுக்கே தெலுசு.) பாலமுரளிகிருஷ்ணா (மீண்டும் அவர் பெயரையே எடுக்க வேண்டியிருக்கிறது பாருங்கள்...ஹ்ம்ம்ம்...) ஒரு மணி நேரத்துக்கு தியாகராஜரின் பாடல்களை தனது தமிழில் பாடினார். ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும் 'நீ', 'உன்' mismatch இருக்கவில்லை

தானே constraints-ஐ மாட்டிக் கொண்டு, விலங்கு மாட்டிக் கொண்டு இவ்வளவுதான் ஓட முடியும் என்றால் என்ன செய்ய? விலங்கை கழட்டி எறிய வேண்டியதுதானே?

அன்புடன்,
ராம்.

 
At 6:07 AM, Blogger Nadopasana said...

Dear Indrajith
I'm surprised by your assertion saying only Telugu language suits carnatic music well.
Muthuswamy dikshitar composed in sanskrit only and not in Telugu.
Also, Tamil saints like Gnanasampandhar sang every padhigam with a ragam.Some ragas like Yazhmuri ragam was supposed to be unmatched by the yazh instrument.Even Lord Shiva has been melted by such songs and you are making a comment that they are not good for carnatic music!

Hence, Songs can be composed beautifully in Tamil too.Some songs of papanasam sivan,periyaswamy thuran,ambujam krishna are very pleasing to the ears.As Ram said, we do not have the notations for most classical works in Tamil.That's all.

By the way, you must know that apart from Chennai being mecca of carnatic music,most of carnatic greats are Tamilians .:-) So, please do not make statements which invoke chauvinistic feelings.Wont be good for either telugu or carnatic music as a whole.Thanks

 
At 9:17 AM, Blogger Simulation said...

"இசை (music) என்பது ஒர் கலை (art);
கர்னாடக இசை மேடைக் கச்சேரி (concert) என்பது ஒர் நுண்கலை (fine-art).

முதலாவதை எல்லோராலும் இரசிக்க முடியும். இரண்டாவதனை ஒரளவு விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இரசிக்க முடியும். இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமல், 'என்னால் இந்தப் பாட்டை இரசிக்க முடிந்தது. எனவே, எனக்குப் புரிவது போலவே கச்சேரியிலும் பாட வேண்டும்' என்று எதிர்பார்ப்பது சரியன்று. இசைக் கச்சேரிகளில் ஆலாபனை, ஸ்வரப்ரயோகங்கள், நிரவல் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் இரசிக்க வேண்டுமென்றால், இரசிகர்கள் முதலில் தங்களது கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையார்வமுள்ள எவருக்கும் இது முடியும். ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும் போதும், அன்னியப்பட்டுப் போகாமல் புதியதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும்."

"தமிழிசை" என்ற தலைப்பிலே இணையப் பத்திரிகை ஒன்றினுக்கு நான் எழுதிய கட்டுரையிலிருந்து....இன்னமும் அந்தப் புத்தாண்டு இதழ் வரவில்லை. சரி. இதற்கு மேலே எழுதினால். அந்த இதழ் ஆசிரியர் கோபித்துக் கொள்ளப் போகிறார்.

வந்தது வந்தேன். ஒரு புதிர் போட்டுவிட்டுப் போகிறேன். ஏற்கெனெவெ மரத்தடியில் கேட்கப்பட்டதுதான்.

ஸத்குரு த்யாகராஜர் தனது கீர்த்தனைகளில் இரண்டு ஆங்கில வார்த்தைகளை உபயோகித்துள்ளார். அவை என்னென்ன?

- சிமுலேஷன்

 
At 8:51 PM, Blogger லலிதாராம் said...

ஜெயஸ்ரீ,

சின்ன வயசுலதான் ஞாபகி சக்தி நல்லா இருக்குமாம். அது எவ்வளோ உண்மை-னு எனக்குத் தெரியாது. எனக்கு ஞாபகத்துல இருக்கிறது இதுதான்....

அந்தக் காட்சியின் தொடக்கத்துல, பாலகணபதி என்னும் தென்னாட்டு பாரம்பரிய இசை வித்வான் தமிழிலும் பாடலாம், தவறில்லை. அப்படித் தமிழில் பாடும் போது இன்னும் பலரை அடைய முடியும் என்பதை உணர்கிறான். அப்பொழுது தெலுகு கீர்த்தனங்களைத் தமிழ் படுத்துவது பற்றி பாலகணபதிக்கும் சிந்துவுக்கும் இடையில் சம்பாஷணை எழுகிறது. அப்பொழுது தனது முயற்சியாகவே சிந்து "உன் தயவில்லையா" பாடலைப் பாடுகிறாள். பாடலைப் பாடிய பின் வசந்த பைரவி ராகத்தை மெல்ல மெல்ல விரிய விடுகிறாள். அவள் உச்சஸ்தாயியைத் தொடும்போது தன்னை மறந்த நிலையில் அவள் கரத்தைப் பிடிக்கிறான் ஜெ.கே.பி.

கதைப்படி ஜே.கே.பி-தான் "மோஹனம் பாடும் வேளையிலும் சிந்துவின் ராகம்" பாடியவன். அவனுடைய தொலைபேசி அத்துமீறல் அவர்களை சில நாட்கள் பிரித்து வைக்கிறது. அந்த பிரிவே சிந்துவிற்கு ஜே.கே.பி மேல் இருந்த காதலை உணர்த்துகிறது. இந்நிலையில் தியாகராஜர் வேறொரு நிலையில் இராமனை நினைத்து வருந்தி எழுதியிருந்ததை, தனது எண்ணத்தை குறிப்பால் உணர்த்த சிந்து பயன்படுத்தியிருக்கிறார் என்பது கொஞ்சம் அதிக பட்ச கற்பனையாகவே எனக்குத் தோன்றுகிறது.

காட்சியின் தொடக்கதிலேயே மொழிமாற்றத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள் என்று தெளிவாகக் கட்டியம் கூறியிருக்கிறார்களே! அவர்களுடைய intent மொழிமாற்றம் எனில் இன்னும் கச்சிதமாக, 'நீ', 'உன்' conflict இல்லாத வகையில் இந்தப் பாடலிலேயே அல்லது இதே அர்த்தம் தொனிக்கும் வேறொரு பாடலிலேயோ உணர்த்தியிருக்கலாம். Intent அது இல்லாத பட்சத்தில் (In case the scene was scripted as you have percieved) 'கலைவாணியே' போன்ற அழகான பாடலைக் கொடுத்த கூட்டணி மொழிமாற்றம் என்னும் விஷயத்துக்குள் நுழையாமலேயோ காட்சியை அமைத்திருக்கலாம்.

Iraq and Alqueda have a 'Q' in common and hence they are related என்னும் ரீதியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதியைக் கேட்ட போது, கமல் ஒரு படத்தில் "காத்தாடிக்கும்தான் வாலு கீது, அதுக்காக கொரங்கு பறக்குமா?" கேட்பாரே, அது ஞாபகம் வந்தது? ஆமாம், அது ஏன் இப்போ ஞாபகத்துக்கு வருது?

அன்புடன்,
ராம்.

பி.கு: நானும் திங்கள் கிழமை காலங்கார்த்தால தலைல அடிச்சுக்கிற ஐகானைப் போட வேண்டாம்-னுதான் விட்டுட்டேனாக்கும்;-)

 
At 10:01 PM, Blogger Nadopasana said...

In V.Sriram's "carnatic summer" book, I thought he mentioned 3 English words used by Thyagaraja.
I have not read the book but read the blurb alone.

 
At 1:19 AM, Blogger Nadopasana said...

Ram
where is your concert of the season post? I'm waiting for it a long time.:-)

 
At 1:27 AM, Blogger லலிதாராம் said...

நாதோபாசனா,

உங்களுக்கு ஞாபக சக்திஅநியாயத்துக்கு அதிகமா இருக்குங்க . (அதுல இடி விழ....:p)

போஸ்ட் வரும் வரும்...(எப்போ வரும் எங்க வரும்-னுதான் சொல்ல முடியாது;-))

-- ராம்.

 
At 3:45 AM, Blogger Ram said...

/* I'm surprised by your assertion saying only Telugu language suits carnatic music well */

I never told that Telugu only suits for that. I told that telugu is the most easy, more suitable lanugage. I dont disagree that MMDixitar wrote only in sanskrit, I still uphold what I said, telugu is the most easily suitable lanugage for this genre. Look, Syama wrote in telugu only but still made it look difficult. I dont deny that. :)

 
At 3:48 AM, Blogger Ram said...

டை"மண்டு" கவிஞரைப்பற்றி சொல்ல எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவர் கவிஞரே இல்லை. ஒரு மிகச்சாதாரண திரைப்பட இசைப்பாடலாசிரியர் மட்டுமே.

 
At 8:37 AM, Blogger Ram said...

மீண்டும் மீண்டும் இந்த பதில்களை படித்தபோது ஒன்று புரிகிறது, people are waiting to bash me out once for all by asking me to go ahead.:)
ஒரு விஷயம் எனக்கு புரியவே இல்லை. நான் ஏதொ தெலுகு பாடல்களுக்கு கொடி பிடிப்பது போல புரிந்து கொள்கிறார்கள். I am not Biased. Okey?. இப்போது தமிழில் கர்நாடக சங்கீத மேடையில் பாடக்கூடிய பாடல்கள் மிக குறைவுதான். கேட்டால் Yazhmuri ragam அது இது என்று என்னை குழப்புகிறார்கள். சம்பந்தர் ஆகட்டும், கம்பர் ஆகட்டும், கர்நாடக சங்கீத மேடையில் பாடக்கூடிய பாடல்களை இயற்றவில்லை. கர்நாடக சங்கீதம் மிக குறுகிய காலத்தில் வந்த ஒரு கான்சப்ட். கடந்த ஒரு 200 வருட சரித்திரமே உள்ள ஒரு எண்ணத்திற்கு பழமையானவற்றை "பிட்" செய்கிறேன் என்று கிளம்புகிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் ப்ரபலமான பாடல்கள் எல்லாமே கடந்த 200 வருடத்திற்குள்ளாகவே இயற்றப்பட்டுள்ளன. அதே காலத்தில் "தமிழில்" பெரிய அளவில் சங்கீதப்பாடல்கள் இயற்றும் முயற்சி மேற்க்கொள்ளப்படவில்லை. இந்த திராவிடர் கழகங்கள் வந்து தொலைந்ததால், கடவுளே இல்லை என்று சொல்ல, கொஞ்சம் நஞ்சம் இருந்த முயற்சியும் நின்றுவிட்டது. (கடவுளைப்பற்றி பாடாமல் கருணாநிதியைப்பற்றியா பாடமுடியும்)

தமிழில் 200 வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது தமிழறிவு நிச்சயம் குறைவுதான். அப்படி அறிவு வாய்ந்தவர்களுக்கு நிச்சயம் சங்கீத ஞானம் குறைவு. அப்படியே சங்கீத ஞானம் இருந்தாலும் அவர்கள் நாத்திக வாதம் பேசுபவராக இருப்பர். நமது வாழ்கைமுறையையும், தமிழறிவையும், ஸங்கீத ஞானத்தையும், கடவுள் பற்றிய நமது அபிப்ராயங்களையும் வைத்துப்பார்த்தால், சத்தியமாக சொல்கிறேன், இன்னொரு த்யாகராஜரோ, தீக்ஷிதரோ, சாஸ்திரியோ, தமிழ் மூவரோ , ஏன் சிவனோ, ஊத்துக்காடோ கூட பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. பின், எங்கிருந்து நல்ல பாடல்கள் வந்து, மற்ற மொழிப்பாடல்களை ஓரம்கட்டுவது. பாப்போம், ஒரு வேளை "கவிச்சக்கரவர்த்தி" வைரமுத்து எழுதுவாரோ என்னவோ.
மெட்டுக்கும் , மீட்டருக்கும் பாட்டு எழுதுபவரெல்லாம் சங்கீதம் எழுதினால் தமிழ்நாட்டில் பல கோடிபேர் எழுதலாம்.

Going ahead, what's that all
"Chennai is Mecca of carnatic Music", SO WHAT? . "All carnatic greats are only Tamils?? Huh!! This is going towards regionalism. :))

தன்னுடையதில்லாத/தன் இயல்பை/ மொழியை உள்ளடக்காத/பணிந்தேற்காத ஒரு விஷயத்தை தூக்கிப்பிடிப்பதில் பெருமைகொள்பவன் எந்த விதத்தில் உயர்ந்தவன் என்று எனக்கு புரியவில்லை. According to me it is just business. Not an art.

 
At 10:48 PM, Blogger Alex Pandian said...

Few Upcoming events at Bangalore (if interested)
http://www.kutcheribuzz.com/news/20060106/btm.asp

http://www.kutcheribuzz.com/news/20060106/symposium.asp

Others in Feb2006 (at Gayana Samaja)
9/2 - Sudha Raghunathan
10/2 - Ravikiran N
11/2 S.Shankar
12/2 - Abishek Raguram
14/2 - Priya sisters
15/2 - Ranjani Gayatri
Admission free :-) with a request explicitly mentioned in pamphlet that "...everyone stay till thaniavarthanam and mangalam are completed by artists"

 
At 11:34 PM, Blogger லலிதாராம் said...

Alex,

Thanks for the info. Interestingly the crowd-pullers like Sudha and Ravikiran are performing on weekdays while Abhisek and Priya sisters are performing on weekends. Do you know who S.Shankar is?

I'll be travelling this weekend and on the next one too. That means, I can't attend the BTM fest even if I wanted too. Attendees, pss. post details.

anbudan,
Ram

 
At 11:30 PM, Blogger Alex Pandian said...

ராம்,

ஷங்கர் யார் என்பது எனக்குத் தெரியாது :-(

கச்சேரிகள் பற்றிய மேலதிக விபரங்கள் இங்கு: http://www.srlkmandir.com/
click on Sankranti/ Spring music programs link


- அ.பா

 

Post a Comment

<< Home