Friday, December 23, 2005

சில எண்ணங்கள்...

18-ஆம் தேதி அனுபவங்களுக்குச் செல்லும் முன்னால் சில வி்ஷயங்கள்:


சீசனின் போது தினமும் அனைத்து சபாக்களிலும் விநியோகம் ஆகும் katcheribuzz.com கொடுக்கும் இரண்டு பக்க (நான்கு பக்கங்களை ஏன் இரண்டாக்கிவிட்டார்கள்?) சங்கீதக் கலவைக்கு பயங்கர டிமாண்ட். பல சமயங்களில் கச்சேரி முடிந்து வெளியில் வந்து பார்த்தால் அனைத்தும் தீர்த்து விடுகிறது. அண்ணாசாலை போஸ்ட் ஆபீஸில் எம்.எஸ்-இன் நினைவாய் வெளியான அஞ்சல் தலை கிடைக்கும் என்ற செய்தியை போட்ட kutcheribuzz-க்கு நன்றி. ஒருநாள் சென்று வாங்க வேண்டும்.


சீசனுக்கு பலத்த கவரேஜ் கொடுக்கும் ஹிந்து பத்திரிகையிலும் மாற்றங்கள். வெள்ளிக்கிழமை சப்ளிமெண்ட் டிசம்பரின் மாத்திரம் பல பக்கங்களுக்கு நீளும். பல விமர்சகர்கள் நகரெங்கும் நடக்கும் சபாக்களில் நடக்கும் கச்சேரிகளைப் பற்றி எழுதுவார்கள். இந்த வருடம் வெள்ளிக்கிழமைக்காக காத்திராமல், இந்த வாரத்திலேயே இரண்டு சிறப்பு சப்ளிமெண்ட் அளித்திருக்கிறார்கள் (புதன்கிழமைக்குள்). வழக்கமாய் வரும் விமர்சனங்கள் தவிர சில சுவாரசியமான பகுதிகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவற்றில் ஒன்று இசைக் கலைஞரின் பார்வையில் இசை விழாவைப் பற்றி "My Festival" என்ற பகுதி. அதில் டி.எம்.கிருஷ்ணா கூறியிருக்கும் கருத்து முக்கியமானது. "உலகில் வேறு எங்குமே நடக்காத இசைத் திருவிழாவாக பல ஆண்டுகளாய் நடக்கும் டிசம்பர் இசை விழாவை நன்கு விளம்பரப் படுத்தி சென்னை நகரின் சார்பாக 'லான்ச்' செய்தல் அவசியம். அனைத்து சபாக்களும் சேர்ந்துகூட இதைச் செய்யலாம் என்கிறார். இப்படிப்பட்ட இசை உற்சவம் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருப்பதை இன்னும் நன்றாக உலகளவில் எட்டச் செய்யலாம். அவர் கூறியிருக்கும் இன்னொரு வி்ஷயம் அரங்குகளில் இருக்கும் ஆடியோ சிஸ்டத்தைப் பற்றியது. பல அரங்குகளில் ஒழுங்காக மைக் பேலன்ஸ் ஆவதற்குள் பாதி கச்சேரி முடிந்துவிடுகிறது. பரத் கலாசார் போன்ற ஓபன் ஏர் ஆடிடோரியங்கள் (இதை ஆடிடோரியம் என்றெல்லாம் சொல்லக் கூடாது. ஒரு மேடைக்கு முன்னால் ்ஷாமியானாவைப் போட்டு சேரை அடுக்கியிருக்கிறார்கள். ஆரம்பித்த புதிதில் வேண்டுமானால் அரங்கு கட்டுவது கடினமாக இருந்திருக்கலாம். ஆரம்பித்து பல வருடங்களாகி, பல நல்ல சபாக்களுக்கு சற்றும் குறையாமல் (சில சமயம் அதிகமாய்) பணம் வசூலிக்கும் பரத் கலாசார் ரசிகர்களையும் கொஞ்சம் மனதில் கொள்ளலாம். 18-ஆம் தேதி மாலை பெய்த மழையில் தண்ணீர் பல இடங்களில் ஒழுகியது.), வாகனச் சத்தம் அதிகம் கேட்கும் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற இடங்களில் ஆடியோ சிஸ்டம் மாறினால் பாடகர்களுக்கு பாடும் அனுபவமும், கேட்பவர்களுக்கு ரசிக்கும் அனுபவமும் இன்னும் உயர்வாய் அமையும்.


பரத் கலாசாரில் நடந்த மேற்கூறிய கச்சேரியில், ச்ஷாங்கைப் புகழ்ந்து பேசியவர் "வருடத்திற்கு வருடம் திருவிக்கிரம அவதாரம் போல ச்ஷாங்கின் ஆற்றல் வளர்ந்து கொண்டே வருகிறது...blablabla...", என்ற போது, அரியக்குடியைப் பற்றிய anec-dote-தான் நினைவிற்கு வந்தது. அரியக்குடியிடம் ஒரு ரசிகர்/போ்ஷகர் (patron) "போன வரு்ஷத்தைவிட இந்த வருடம் உங்க சங்கீதம் நல்ல விருத்தி அடைஞ்சிருக்கு" என்றாராம். அதற்கு அரியக்குடியின் பதில், "இவ்விடத்தில் வித்தை அப்படியேதான் இருக்கு அவ்விடத்தில்தான் கேட்கும் ஞானம் விருத்தி அகியிருக்கு", என்றாராம்.


Back on track to The Hindu Suppliment....


ஹிந்து (சில) விமர்சனங்கள் படிக்கும் போது எழும் சில கேள்விகள் (கௌரி ராம்நாரயண், சுலோசனா பட்டாபிராமன், லலிதா கிருஷ்ணன் போன்றோரின் விமர்சனங்கள் தெளிவான கருத்துக்களுடனேயே இருக்கின்றன. பின் வரும் என் கேள்விகள் மற்ற "எங்க ஆத்து விமர்சகரும் கச்சேரிக்கு போனார்" வகை விமர்சகர்களுக்கு)....


"Violin support was just adequate", "Radha Sundaresan on the violin provided satisfactory accompaniment", என்ற வரிகளில் adequate, satisfactory-க்கு எல்லாம் என்ன அளவுகோல்? "Kumbakonam Ramakrishnan and Rangachari rendered a brief thani", என்பதைத் தவிர அவர்கள் வாசிப்பில் சொல்ல ஏதும் வி்ஷயம் இல்லையா? "It contained all the good elements of the raga swaroopa along with good imagination", ராக ஸ்வரூபத்தை வெளிக் கொணர்வதும், பாடகரின் கற்பனை வளத்தைக் காட்டுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? "Her raga alapana and kalpanaswaras are worthy of mention" (அந்த கச்சேரியைப் பற்றிய விமர்சகரின் கருத்து என்பது அந்த வரிதான், சாஸ்திரத்துக்கு அக்கச்சேரியில் பாடிய பாடல்களுள் ஒன்று இரண்டை குணாவில் கமல் "மானே தேனே பொன்மானே" என்று தூவுவது போலத் தூவிவிட வேண்டியதுதான். தயாராகிவிட்டது ஓர் பதிப்பிற்குரிய விமர்சனம்!!!) என்று கூறும் அதே 10 வரி கட்டுரையில் இன்னொரு கச்சேரியை "sruthi and layam of US based xyz - disciple of abc - were not upto the mark" என்று கூறிவிட்டு அடுத்த கச்சேரியைப் பற்றி தனது அபிப்ராயத்தைக் (அபிப்ராயம் என்று நினைத்து இவர்கள் எழுதுவதில்லை. judgemental -ஆக, தக்க காரணம் ஏதும் கூறாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவதே இவர்கள் வழக்கமாய் இருக்கிறது.) கூறுகிறார். ஸ்ருதியும் லயமும் சரியில்லாத கச்சேரியை வேலை மெனக்கெட்டு விமர்சனம் செய்து, பாடியவரின் குருவையும் சடுதியில் இழுத்து....இது எல்லாம் தேவையா? இன்ன கச்சேரி இன்ன இன்ன காரணங்களால் "எனக்குப்" பிடித்தது அல்லது பிடிக்கவில்லை என்று கூறுவது விமர்சனத்திற்கு மிக்க அவசியம். முந்தைய வாக்கியத்தின் கீ-வோர்டு "எனக்கு". நன்றாக இருக்கிறது என்று விமர்சனம் செய்யும் கச்சேரியில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், அது கேட்பவரின் அனுபவம். நன்றாக இல்லை என்று கூறும் போதுதான் அதன் காரணங்களை பட்டியலிட வேண்டியது அவசியம் ஆகிறது. குறிப்பாக ஹிந்துவில் தொடர்ந்து விமர்சனம் செய்யும் எஸ்.வி.கெ, தன் தலையில் தானே அட்சதையைப் போட்டுக் கொண்டவர் என்று கூறுவார்களே, அந்த ரக விமர்சகர்களில் முதல் இடம் வகிப்பவர். விட்டால் விகடன் சினிமாவுக்கு மார்க் அளிப்பது போல் மார்க்கெல்லாம் போட்டு இவர் பாஸ் இவர் ஃபெயில் என்று கூறினாலும் கூறுவார். எப்படி ஐயா மார்க் போடுகிறீர்கள் என்று யார் அவரைக் கேட்பது? (நல்ல காலம் அவர் விமர்சனம் புதன்கிழமை சப்ளிமெண்டில் வரவில்லை)


சரி, நமக்கு ஏன் வீண் வம்பு. யாரோ எப்படியோ போகட்டும். என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே நேரம் (இதனால் சொல்லாமல் சொல்லிக் கொள்வது யாதெனில் இக்கட்டுரைகள் விமர்சனங்கள் அல்ல. என் எண்ணங்களே. என் எண்ணங்கள் ஏன் உதித்தன என்பதை யோசிக்கும் பொழுது தக்க பதில் உதித்தால் எழுதுகிறேன், இல்லையேல் அவ்வெண்ணத்தைச் சொல்லாமல் விட்டுவிடுவதே க்்ஷேமம் என்று விட்டுவிடுகிறேன்) பற்றாத இக்கணத்தில் விமர்சனங்களுக்கு விமர்சனம் எழுதுவது அவசியம் இல்லாததால் நாம் சேலத்தில் அவதரித்து இருக்கும் செம்மங்குடி வாரிசைப் பற்றி (அடுத்த பதிவில்) எழுதுகிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home