Sunday, December 25, 2005

கொத்துப் பரோட்டா

19th Dec 2005 @ IFAS, OST, Mysore Manjunath, Umayalpuram Sivaraman, E.M.Subramaniam, 5.00 P.M

19-ஆம் தேதி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் என்னுடைய ஃபேவரிட் பாடகர் ஓ.எஸ்.தியாகராஜனின் கச்சேரி. அவரின் கச்சேரளைப் பற்றி 2003 மற்றும் 2004-இல் ஏற்கெனவே எழுதிவிட்டதால் (2003-ஐ மரத்தடியிலும், 2004-ஐ இந்த வலைப்பூவிலும் படிக்கலாம்), சில முக்கியமான விஷயங்களை மட்டும் கூறிவிட்டு அடுத்த நாளுக்கு தாவி விடுகிறேன்.

19-ஆம் தேதி சென்னையை நனைத்த பலத்த மழைக்கு இடையிலும் கணிசமான ரசிகர்கள் அரங்கை நிறைத்திருந்தனர். கச்சேரியும் நேரத்துக்கு 'ஸ்ர் ரகுகுலவில்' தொடங்கியது. கச்சேரியில் வயலின் வாசிப்பதாக இருந்த டெல்லி சுந்தரராஜனுக்கு பதிலாக மைசூர் மஞ்சுநாத் அமர்ந்திருந்தார். (சுந்தரராஜன் அன்று ஏதோ விபத்தில் மாட்டிக் கொண்டாராம். அவர் விரைவில் தன் வில் வித்தையை காட்டும் வண்ணம் குணம் பெற பிரார்த்திப்போம்.) கச்சேரிக்கு முன் ஸ்ருதி கூட்டி உமையாள்புரம் சிவராமனின் மிருதங்கத்திலிருந்து இரண்டு 'சாப்பு' உதிர்ந்தவுடனேயே என்னை பொறுத்தவரையில், கச்சேரி களை கட்டிவிட்டது.

போன வருடம், அரங்கின் பின் வரிசையில் இருந்த தகர நாற்காலிகள் இழுபடும் ஓசை உண்டாக்கும் அவதியைக் கூறியிருந்தேன். அது அமைப்பாளர்கள் காதில் விழுந்தோ கண்ணின் பட்டதோ தெரியவில்லை. இம்முறை தகர நாற்காலிகளின் இடத்தில் அதிகம் அசைக்கமுடியாத, அதிகம் சத்தம் போடாத மர நாற்காலிகள் இடம் பெற்றிருந்தன. நம் குரல் காதில் விழும் என்னும் நம்பிக்கையில், அடுத்த வருடத்திற்கான கோரிக்கையாக, அரங்கின் தொலைபேசியை இடம் மாற்றக் கேட்டுக் கொள்வோம். அவ்வப் போது, அது அலறி, 30 ரூபாய் டிக்கெட் ஆசாமிகளின் கச்சேரி கேட்கும் சுகானுபத்தைக் கெடுத்த வண்ணமே இருக்கிறது. எந்த ஒரு call-ஐயும் 10 ' ட்ரிங்குக்கு' முன்னால் எடுக்கக்கூடாத என்ற விரதம் பூண்டிருக்கும் சபா செகரட்டரியின் (அவரது வேலை தொலைபேசுவதில்லாத போது, அப்பொறுப்பை வகிக்கும் நபர்) மனம் மாறவும் கோரிக்கை வைப்போம்.

முப்பது ரூபாய் டிக்கட் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது (I realise that my digressions are not only frequent but also seem get a higher share than the topic intended in the essay...well....). நான் டிசம்பர் சீஸன் கச்சேரிகளுக்கு போக ஆரம்பித்த நாட்களில் கையில் அத்தனை காசு புழங்காது. மாணவப் பருவத்தில் அவ்வப்போது கிடைக்கும் காசில்தான் கச்சேரிக்குச் செல்வது, காஸெட் வாங்குவது எல்லாம். அப்பொழுது எல்லாம் எனக்கு 'stage ticket' பெரிதும் உதவியது. மியூசிக் அகாடமியில் ஐந்து ரூபாய்க்கு 'stage ticket' வாங்கினால், ஒரு நாள் முழுக்க இசையில் முங்கலாம். காலை நேர ஃப்ரீ கச்சேரிகளுக்குப் பின் ஐந்து ரூபாய் டிக்கட்டில் இரண்டு ப்ரைம் டைம் கச்சேரிகளையும் கேட்கலாம். இப்பொழுது கிருஷ்ண கான சபா முதலான சபாக்களில் ஸ்டேஜ் டெக்கட்டே ஐம்பது ரூபாய். இப்பொழுது அதிர்ஷ்ட வசமாக, என் நிலை அவர்கள் 200 ரூபாய்க்கு ஸ்டேஜ் டிக்கெட் விற்றாலும், ஹால் டிக்கட் (பரிட்சை ஹால் டிக்கெட் இல்லை, இது ஹாலில் அமர்ந்து கேட்கக் கொடுக்கும் ஹால் டிக்கெட்;-) வாங்கக்கூடிய நிலையில் இருப்பதால் பிரச்சனையில்லை. உடைந்த மரநாற்காலிகளும், கீற்றுக் கொட்டகையுமாய் இருந்த கிருஷ்ண கான சபா, இன்று அற்புதமாய் மாறி, நல்ல acoustics-உடன் இருக்கும் போது விலை ஏற்றம் நியாயமானதே. நூறு ரூபாய் டிக்கெட்டை பொருட்படுத்தாமல் ஹால் டிக்கெட் வாங்க, IT industry இளைஞர்களும் அவர்கள் பெற்றோர்களும், என்.ஆர்.ஐ-க்களும் இருக்கிறார்கள். என்னுடைய கவலையெல்லாம், நான் மாணவனாக இருந்த போது கச்சேரி கேட்க தோதாய் இருந்த ஸ்டேஜ் டிக்கெட்டின் மேல்தான். இதனால் எத்தனை பேருக்கு நல்ல கச்சேரி கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போகுமோ தெரியவில்லை. ஆனால், இன்றைய மாணவர்களைப் பற்றியும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. கல்லூரி முடித்து ஐந்து வருடங்களுக்குள் எனக்கும், கல்லூரிக்குள் இப்பொழுது மாணவர்களுக்கும் இடையிலேயேகூட ஏதோ பெரிய ஜெனரேஷன் கேப் இருப்பதாகத் தோன்றுகிறது. சைக்களில் பல கிலோமீட்டர்களை அனாயாசமாக கடந்த நாட்களே என் பள்ளிப் பருவத்தையும் கல்லூரிப் பருவத்தையும் நிறைத்தன. இப்பொழுது அத்தனை மாணவரும் குறைந்த பட்சம் மொபெட், கையில் செல் ஃபோன் என்று இருக்கிறார்கள். இவர்களுக்கு ஐந்து ரூபாய் ஸ்டேஜ் டிக்கெட்டுக்கும் ஐம்பது ரூபாய் ஸ்டேஜ் டிக்கெட்டுக்கும் வித்தியாசம் தெரியுமோ தெரிய்வில்லை. அப்படி வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் சபாக்கள் ஸ்டூடண்ட் டிஸ்கௌண்ட் கொடுக்கலாம். (அமெரிக்க அருங்காட்சியகங்கள், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களில் எல்லாம் மாணவ அடையாள அட்டைக்கு கணிசமான டிஸ்கௌண்ட் கிடைக்கும். எது எதுக்கோ அமெரிக்காவை காப்பி அடிக்கும் நாம்,புபயோகமாய் இருக்குமெனில், இது போன்ற விஷயங்களில் காப்பி அடித்தால் தவிறில்லை)

ஜெயந்தி குமரேஷின் கச்சேரியில் தியாகராஜரின் கிருதி ஒன்று கூட இல்லாத போதும் நன்றாக இருந்தது என்று கூறியிருந்தேன். இக்கச்சேரியில் துக்கடாவுக்கு முன் பாடப் பெற்ற அனைத்து கிருதிகளுமே தியாகராஜரின் கீர்த்தனைகள்தான். ஜெயந்தி செய்தது போன்று சொற்பமான கச்சேரிகள்தான் செய்ய முடியும். ஓ.எஸ்.டி செய்ததைப் போல நூறு கச்சேரிகளாவது செய்யலாம். அதற்கான காரணம் (அடுத்த digression), தியாகராஜர் எண்ணற்ற ராகங்களின் நூற்றுக் கணக்கான கீர்த்தனைகள் செய்திருப்பது மட்டுமல்ல. சீர்காழி மூவரும் கூட அத்தனை கீர்த்தனைகள் செய்திருக்கலாம். தியாகராஜரின் கீர்த்தனைகள், அவர் எப்படிச் செய்தாரோ அதே நிலையில் நொடேஷனுடன், சங்கதிகளுடன் கிடைக்கிறது. தியாகராஜருக்கு இருந்த எண்ணற்ற சிஷ்யர்கள் அவர் கீர்த்தனைகளைக் காத்து அடுத்த தலைமுறைக்கு கொடுத்ததும், அவருக்கு அடுத்த தலைமுறைக்குள்ளேயே the transition from composers to performers, அதாவது சமஸ்தானங்களில் வித்தையைக் காட்டும் வகையில் இருந்த இசை, மக்கள் மத்தியில் பாடப் பெற்ற, மக்களின் முக்கியமான பொழுது போக்காக மாற ஆரம்பித்த காலம், trinity என்றழைக்கப் படும் தியாகராஜர், தீகஷதர், ஷ்யாமா சாஸ்திரி, வாழ்ந்த தலைமுறை வாழ்ந்த காலமாகும். (தமிழில் இசைப்பாட முடியாது. தமிழில் நல்ல பாட்டில்லை என்று கூறும் கோஷ்டி என்று மேல் தவறான முத்திரையை இவ்வரிகள் குத்திவிடாது என்று நம்புகிறேன்.) சரி மீண்டும் கச்சேரிக்கு...

'சேரராவ' ரீதிகௌளையில் மலர்ந்த அரிய கிருதியாகும். கல்யாணி ராகம் விரிவாகப் பாட ஏற்ற ராகமெனினும், இரண்டு பிரதான உருப்படிகளுக்கிடையில் விறிவிறுப்பான உருப்படி ஒன்றை பாட எற்ற ராகமாகவும் பலர் அதை உபயோகித்திருக்கின்றனர். உதாரணமாக, ஆலத்தூர் சகோதரர்கள் 'அம்ம ராவம்மா'-வையும், செம்மங்குடி 'பிரான வராலிச்சி'-யையும் பாடி கச்சேரியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஓ.எஸ்.டி கல்யாணியில் சில மின்னல் வெட்டுக்கள் வெட்டி ஆலாபனையை முடித்ததும் நான் எதிர்பார்த்தது, இவ்விரண்டு கீர்த்தனங்களில் ஒன்றைத்தான். அவர் தேர்ந்திடுத்ததோ, தியாகராஜரின் மற்றொரு கிருதியான 'ஈச பாஹிமாம்' என்பதை. இரண்டாம் கால கல்பனை ஸ்வரங்களில் சிவராமனின் anticipation-உம், ஸ்வரங்களை 'ஈஸ' மற்றும் 'ஜகதீஸ' என்ற இடங்களில் மாறி மாறி முடித்தும் பாடிய விதமும், சிவராமனின் பாராட்டை மீண்டும் மீண்டும் பெற்றபடி வாசித்த மஞ்சுநாதின் வாசிப்பும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

கல்யாணியைத் தொடர்ந்து, பிரதான ராகமாக மத்யமாவதியை ஆலாபனை செய்தார். 2003-இல் பனி பாடகர்களைப் படுத்திய பாட்டை இந்த வருடம் மழை செய்யுமோ என்று அச்சம் என்னுள் இருந்தது. மழை அத்தனை மோசம் செய்யவில்லை. பாடகர்களின் குரல்கள் நல்ல நிலையிலேயே இருக்கிறது. அதனால், ஸ்ருதியிலிருந்து இம்மி பிசகா வண்ணம் ஓ.எஸ்.டி கொடுத்த கார்வைகளும், பிருகாக்களும், ஆலாபனையில் செய்த ஸ்ருதி பேதமும் (the shift was to hindholam) மத்யமாவதியின் அழகை நிறைவாக வெளிப்படுத்தின. மத்யமாவதி main item என்றால் கீர்த்தனை 'பாலிந்த்ஸு காமாட்சி' அல்லது 'ராம கதா'-வாகத்தான் பெரும்பாலும் இருக்கும். தனி ஆவர்த்தனத்துக்கு ஏற்ற காலப் பிரமாணத்தில் அமைந்த கீர்த்தனைகளான இவற்றுள் இரண்டாவதை ஓ.எஸ்.டி தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அனுபல்லவியில் நிரவலும் , கல்பனை ஸ்வரங்களும் பாடிய பின் தனி ஆவர்த்தனம் ஆரம்பமானது.

இப்பொழுதும் தனி ஆவர்தனத்தில் அரங்கை விட்டு வெளியே செல்லும் கூட்டம் பல இடங்களில் தென்பட்டாலும், உமையாள்புரம், திருச்சி சங்கரன் போன்றோர் வாசிக்கும் இடங்களில் சொற்பமான மக்களே இந்த வெட்கத்துக்குரிய செயலைச் செய்கின்றனர் (அவர்கள் அமர்ந்திருப்பது ஆர்வத்திலா மரியாதையிலா என்று நாமறியோம்). கீர்த்தனைகளுக்கு வாசிக்காமல், உடன் பாடிய உமையாள்புரம் சிவராமனின் மிருதங்கம் சில ரவுண்டுகளுக்கு அதற்கே உரிய 'சாப்பு' மாத்திரம் 'தாம் தாம் தாம்' என்று வெளிப்படுத்தி 'தனியின்' தனித்தன்மையை கட்டியம் கூறியது. அதன்பின் சதுஸ்ர நடையில் வாசித்த விஷயங்களும், அவ்வப்பொழுது 'தொப்பி' பக்கத்தில் இதமாய் எழுப்பப்பட்ட இனிய ஒலிகளும், பின்பு நிக்ழ்ந்த கதி பேதமும், அதில் கண்ட நடையில் வாசித்த மான்குட்டி பாய்ச்சல்களும் வார்த்தைகளூக்கு அப்பாற்பட்டவை. ஈ.எம்.சுப்ரமணியம் (கடம்), சிவராமன் அமைத்துக் கொடுத்த பாதையை அழகாகத் தொடர்ந்து அழகுக்கு அழகு சேர்த்தார்.

தனியைத் தொடர்ந்த துக்கடாக்களில் கே.வி.என் பிரபலப்படுத்திய அற்புதமான பாகேஸ்ரி பாடலான 'சாகர சயன விபோ'-வுக்கு முதல் இடம் (இப்பாடல் பிரபல வித்வான், எம்.டி.ராமநாதனின் படைப்பாகும், பல நாட்களுக்கு, இப்பாடலின் வரும் 'பத்மநாப' முத்திரையால் ஸ்வாதிதிருநாள் சாஹித்யம் என்று நினைத்திருந்தேன்!!!) கொடுக்கலாம் என்றாலும், ஜி.என்.பி-யை நினைவுபடுத்திய, சுத்தாநந்த பாரதியின் 'காரணம் கேட்டு வாடி' மற்றும் 'சரவண பவ என்னும் திருமந்திரம்' பாடல்களும் not far behind. துக்கடா என்றாலே காபி, சிந்து பைரவி, ரேவதி, கமாஸ் என்று ஆகிவிட்ட நிலையில், ஓ.எஸ்.டி பூர்விகல்யாணி, ஷண்முகப்ரியா போன்ற பாகங்களைப் பாடியது was a welcome change.

சுருக்கமாய் எழுதுகிறேன் பேர்வழி என்று 'திண்ணை அரட்டை' போல வளவளத்துவிட்டேன்:-)...மற்றவை அடுத்த பதிவில்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home