Saturday, December 24, 2005

செம்மங்குடி வழியில்....

18-ஆம் தேதி காலை வானம், சில சமயம் பளீர் வெளிச்சம் கக்கும் வெய்யிலுடனும், அடுத்த கணத்திலேயே அடை மழையை பொழிந்தபடியும், சென்னை கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. நான் ம்யூசிக் அகாடமிக்கு கிளம்பிய வேளையில் மழை இல்லையெனினும், ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் 'கல்பத்ருமா' அருகில் ஆரம்பித்த அடை மழை, ம்யூசிக் அகாடமியை அடைவதற்குள் பேயாட்டம் ஆடி "உனக்கும் பெப்பே உன் ரெயின் கோட்டுக்கும் பெப்பே", என்றது. மழையைப் பொருட்படுத்தாமல் நேரத்துக்கு போய்ச் சேர்ந்த பொழுது 12.45 கச்சேரிக்கும், ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னமோ, ஓரளவு கூட்டம் இருந்தது. (சஞ்சய் சுப்ரமணியம், அருண் பிரகாஷ், வரதராஜன் போன்ற முன்னணி வித்வான்கள் சிலர் கச்சேரி முழுவதும் அமர்ந்து இருந்தது, வளரும் கலைஞருக்கு நல்ல உற்சாகத்தை அளித்திருக்கும்).

ஒரு கச்சேரியை பல விதமாக தொடங்கலாம். இதில் tried and tested methods எனப்படுவது யாதெனில் வர்ணத்தில் தொடங்குவது அல்லது விநாயகர் மேல் அமைந்த மத்யம கால கிருதியில் தொடங்குவது. அப்படி இல்லாமலும் சிலர் கச்சேரியைத் தொடங்கி அதை களை கட்டவைப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர். ரக்தி ராகமான சஹானாவில் "ஈ வசுதா நீவண்டி' என்ற கோவூர் சுந்தரேசர் மேல் தியாகராஜர் இயற்றிய கிருதியில், எனக்கு தெரிந்தவரை, ஜி.என்.பி கச்சேரிகளைத் தொடங்கியிருக்கிறார். அதே கிருதியைத்தான் சேலம் ஸ்ர்ராமும் கச்சேரியைத் தொடங்க தேர்வு செய்திருந்தார். பாவமும், விறுவிறுப்பும் கலந்து மத்யம காலப்ரமாணத்தில் கீர்த்தனையைப் பாடி, கல்ப்னை ஸ்வரங்கள் பாடிய பொழுது கச்சேரி களைகட்டிவிட்டது.

ஒன்றரை மணி நேரக் கச்சேரியில் இரண்டாவது உருப்படியையே சப்-மெய்னாகக் கொண்டால்தானே நிறைவான கச்சேரியை அளிக்க முடியும். வராளியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தார் ஸ்ர்ராம். ஆலாபனையில் அழகிய கார்வைகள், சில ஸ்வரங்களை மையமாக நிறுத்தி அதனைச் சுற்றி நாதஸ்வர பாணியில் பாடுதல், ஜீவ ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ராகத்துக்குரிய கமகங்களை தெளிவாக வெளிப்படுத்துதல் (உதாரணமாக வராளியின் காந்தாரம்) போன்ற வி்ஷயங்கள் பெரிதும் ரசிக்கும்படி இருந்தது. ஆலாபனையில் அகாரங்களில் பாடிய அளவு இகாரமும் ஒலித்தது. இவரின் இகாரம் சமயத்தில் 'ஹிகாரமாக' மாறி செம்மங்குடியை நினைவுறுத்தினாலும், நறுக்குத் தெரித்தாற் போல் விழும் பிருகாக்கள் அகாரத்தில் இருக்கலாமே என்றுதான் தோன்றியது. செம்மங்குடியின் இசையின் தனிச் சிறப்பு அவரது ஆலாபனையில் பொதிந்து இருந்து விவகாரங்களின் இருக்கின்றதே தவிர அவர் உபயோகித்த இகாரங்களில் அல்ல. செம்மங்குடி, தனது குரலைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சி உலகறிந்ததே. சாரீர சம்பத்து நிறைவாக இல்லாத நிலையில், செம்மங்குடி தன் உழைப்பாலும் கற்பனையாலும் விளைந்த அழகிய கோவைகளை வெளிப்படுத்த தனக்கேவுரிய முறையைக் கையாண்டார். அவர் செய்த கோவைகளை inspiration-ஆக கொள்வதில் நன்மை விளையும் என்பதில் ஐயமில்லை எனினும், அதை வெளிப்படுத்திய முறையை imitate செய்வதை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரியின் "மாமவ மீனாக்்ஷி" என்ற கனமான கிருதி விஸ்தாரமான ஆலாபனையைத் தொடர நல்ல தேர்வு. வராளி ஆலாபனை, நிரவல், ஸ்வரங்கள் அனைத்திலும் பக்க வாத்தியங்கள் 'பக்கா வாத்தியங்களாய்' விளங்கின. நிரவல், ஸ்வரம் மற்றும் தானம் பாடிய பெழுது, அந்தந்த வி்ஷயங்களின் உச்சகட்டமாய் பாடப்பட்ட இடங்களுக்குப் பின் வயலினுக்கு வாய்ப்பளிக்காமல் தவிர்த்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது. பல வருடங்கள் சீனியராக இருந்த போதும் அரியக்குடி போன்ற ஜாம்பவான்கள் லால்குடி போன்றவர்களுக்கு சம வாய்ப்பு அளித்ததை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

வராளியில் செம்மங்குடியை நினைவு படுத்திய ஸ்ர்ராம், 'மாருபல்க'-வைத் தொடங்கியதும் அரங்கெங்கும் அவர் நினைவு பெருகுவதை அங்கு கிளம்பிய 'ஆஹாகாரங்களிலிருந்தும்', 'சிரக்கம்பங்களிலிருந்தும்' உணர முடிந்தது. அரபிய குதிரையில் சவாரி செய்வதற்கு ஒத்த "patended semmangudi" சங்கதிகளைத் தொடர்ந்து, அவர் நிரவலுக்குத் தேர்ந்துடுக்கும் 'தாரி நெரிகி'-யில் நிரவல் செய்தார். கல்பனை ஸ்வரங்களை சாஹித்யத்தில் முடிக்கும் விதம்கூட சங்கீத பிதாமகரை நினைவுபடுத்தும் வகையிலேயே இருந்தது. எடுத்தால் கீழே வைக்க முடியாத நாவல் போல கீர்த்தனையை (infact the entire concert) நடத்திச் சென்ற விதம் பாராட்டுக்குரியது. அம்மன்குடி ராமநாரயணனின் மிருதங்க வாசிப்புக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு. இவர் சங்கதிகளை anticipate செய்த விதம் அற்புதமாய் இருந்தது.

மாருபல்க முடிந்த போது கச்சேரியை முடிக்க 50 நிமிடமே இருந்த நிலையில் முதல் இழையிலேயே சங்கராபணத்தைக் காட்டி, அதையே பிரதான ராகமாக ஆலாபனை செய்தார். ஆலாபனை செய்வதில் பல முறைகள் உண்டு. ராகத்தின் எல்லா ஸ்வரங்களை கோடி காட்டிவிட்டு பின்பு ஒவ்வொரு இடமாய் அலசி ஆராய்வது ஒரு வகையெனில், கீழ் ஸ்தாயியில் தொடங்கி, படிப் படியாய் ராகத்தை விரியச் செய்து, ராகம் விரிய விரிய ஸ்தாயியை மேல் நோக்கிச் செலுத்துவது என்பது வேறு வகை. ஸ்ர்ராம் இரண்டாவது வகையைக் கையாண்டார். விறுவிறுப்பான பிடிகளும், கமகத்தை வெளிப்படுத்தும் அழகான கோவைகளும் கலந்து அளித்த போது அரங்கம் அதிர்ந்தது. அழகிய ராகப் பிரவாகமான சங்கராபரணத்தை எங்கு தொடங்கி எங்கு வளர்ப்பது என்று சற்று தடுமாறியது போல இருந்தது வயலின் வித்வான் விஜயின் தொடக்கம். Initial hiccups தாண்டியதும் அவரும் இழைத்து இழைத்து சங்கரபரணத்தின் சௌந்தரியத்தை அரங்கிற்குக் காட்டினார். விஸ்தாரமான ஆலாபனையைத் தொடர்ந்து திருவனந்தபுரம் பாணியில், மிருதங்கத்துடன் தானம் பாடியது, கீர்த்தனையை எதிர்ப்பார்த்திருந்த என்னை ஆச்சரியப்படுத்தியது. விறுவிறுப்பான மத்யம கால தானத்துக்குப் பின் ரூபக தாளத்தில் அமைந்த எளிமையான "மஹிம தெலிய தரமா" பல்லவியைப் பாடினார். அவர் செய்த விரிவான ஆலாபனைக்கு "எந்துகு பெத்தல", 'சரோஜ தள நேத்ரி' போன்ற கீர்த்தனைகள் எடுப்பான தொடர்ச்சியாய் இருந்திருக்கும். அக்கீர்த்தனைகளுக்கு முழு justice செய்ய நேரம் பற்றாமல் இருந்திருக்கும் எனினும், ஐந்து நிமிடம் பாடிய தானத்தை தவிர்த்த்¢ருந்தால் நேரம் இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஒரு களை பல்லவிகள், பிரதான ராகம் பாடிய பின் பாடப் படும் பொழுது short and sweet-ஆக இருக்கும். பிரதான ராகமாக பாடும் பொழுது இரண்டு களை சவுக்கம் would be a better choice. பல்லவியில் நிரவல் செய்து ஸ்வரப்ரஸ்தாரம் செய்தபின் தனி ஆவர்த்தனம் ஆரம்பமானது. ஐந்து நிமிடத்துக்குள் காம்பேக்டாக ரூபக தாளத்தில் கொஞ்சம் திஸ்ர கதி கலந்து ராமநாரயணன் வாசித்த தனி கச்சிதமாய் இருந்தது.

post main pieces-ஆக அன்றைய தினத்துக்குரிய திருப்பாவையும், பூர்ணசந்த்ரிகா தில்லானாவும், காபி ராகத்தில் ஸ்லோகமும் துரிதமாக பாடி முடிக்கவும் மணி 2.15 ஆகவும் சரியாக இருந்தது. திருப்பாவையில் 'சாற்றி', 'பசுக்கள்' போன்ற வார்த்தைகளை "்ஷாற்றி", "ப்ஷுக்கள்" என்றும் எல்லோரும் பாடுவது போலவே பாடினார்.

மொத்ததில் கச்சேரி மிக விறுவிறுப்பாக மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இப்படிப்பட்ட கச்சேரியைப் பற்றி எழுதும் பொழுது, எனக்கு ரசிக்கும்படி இருந்த வி்ஷயங்களை குறிக்கும் தொடர்களைவிட எனக்கு குறையாகப் பட்ட வி்ஷயங்களே கட்டுரையில் மலிந்து கிடக்கும் காரணத்தை கொஞ்சம் யோசித்துப் பார்த்த போது தோன்றியது:

ஒரு இனிப்பு பிடிக்கவில்லை என்றால் 'சர்க்கரை அதிகம். திகட்டுகிறது.', 'பாகு கொஞ்சம் அதிகமாகி கெட்டியாகிவிட்டது', 'அரை நொடி முன்னால் எடுத்து இருந்தால் குலாப் ஜாமூன் இன்னும் மிருதுவா இருந்திருக்கும்' என்று ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். நன்றாக இருந்தால், பல சமயம் ஏன் நன்றாக இருக்கிறது என்று நமக்கு விளங்குவதேயில்லை. 'இத்தனை சிட்டிகை சர்க்கரை போட்டு, இத்தனை நேரம் அடுப்பில் வைத்து, இன்ன இன்ன மாதிரி செய்ததால் ஸ்வீட் நன்றாக இருந்தது', என்று ஸ்வீட்டை சாப்பிட்ட யாரும் கூறுவது கடினம். ஸ்வீட் கடைக்காரரைப் போலத்தான் பாடகர்களும், ஏதாவது குறைந்தால் கேட்பவருக்கு விளக்க வருமே தவிர, நன்றாக இருப்பின் "இதனால்தான் நன்றாக இருந்தது" என்று கூறுவது பல சமயங்களில் கடினமான காரியம். அதனால், எனக்கு நினைவில் நின்றவரை 'இன்ன இன்ன செய்தார்' என்பதை கூற முயல்கிறேன். பல சமயம் அம்முயற்சி தோல்வியிலேயே முடிகிறது:-).....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 8:50 PM, Blogger Nadopasana said...

Thanks Ram.

 
At 3:00 AM, Blogger லலிதாராம் said...

Jsri, Nadaposana

Thanks for the comments. The 'cha', 'sha' mispronounciation has become a part of the culture, thogh a few like OST and TNS still sing it properly. "kadumaiyaana aatchEbam" has been rised year after year. Once my advisor pulled his colleague's leg this way. "Russ works on MEMS, which has been a technology for the future and would reamin to be so even after 20 years". The 'cha', sha' issue would remain that way I guess.

 

Post a Comment

<< Home