Monday, May 22, 2006

சிகரத்தை நோக்கி... II

கிரீவத்திலிருந்துப் பார்க்க, சிவகங்கைக் குளமும், மேற்கிலிருந்த அழகிய நந்தவனமும், சரபோஜி அரண்மனையும், பல ஆண்டுகளாய் நிற்கும் மணிக்கூண்டும், எறும்புகள் போலத் தெரிந்த மனிதர்களும், அட்டையில் செய்த கட்டிடங்கள் போலக் காட்சியளித்த கோபுரங்களும், திருச்சுற்று மாளிகையும் கண்ட போது பாபநாசம் சிவனின் காம்போதி ராக பாடலான 'காணக் கண் கோடி வேண்டும்' என்ற பாடலைத் தானாகவே வாய் முணுமுணுத்தது.

தஞ்சைக் கோயிலின் விமானத்தின் நிழல் தரையைத் தொடும் என்று நான் முன்னரே அறிந்திருந்த போதும், கிரீவத்திலிருந்தபடி தரையில் வீழ்ந்திருக்கும் பிரம்மாண்ட நிழலைக் கண்ட போது உள்ளக்குள் இனம் புரியா நிறைவு ஏற்பட்டது. நிழல் விழுமென்ற செய்தியை பலர் முன்பே கூறியிருப்பினும், அன்று தென்பட்ட பிரம்மாண்ட நிழலை புகைப்படமாய் கைது செய்து, உலகெங்கும் இணைய உலா வர வைக்கலாம் என்ற எண்ணமே அந்நிறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.

கிரீவத்தலிருந்து பிரிய மனமே வராத போதிலும், சிகரம் எங்களை அழைத்ததால், அரை மனதுடன் சிகரத்தை அடைந்தோம். அங்கு ஏற்கெனவே காத்திருந்த கிருபாசங்கருடன் சேர்ந்து பல படங்கள் கிளிக்கியபின், பிரம்மாண்ட கலசத்திலடியில் அனைவரும் அமர்ந்தோம். குழைவுக் குரலோன் கோகுல் இல்லாத சமயங்களில், இதைப் போன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடப்பின் நான் பாடுவது வழக்கம். அன்றோ, சாரீரம் முழுவதையும் சளி அமுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. முனைவர் கலைக்கோவன் "பாடுங்க தம்பீ! இங்க பாடலைன்னா வேற எங்க பாடறது?" என்ற போதும் நா எழவில்லை. அந்த சமயத்தில் பத்மநாபனின் அற்புதக் குரல் ஆபேரி ராகத்தில் 'காதலாகி கழிந்துருகி கண்ணீர் மல்கி' என்று உருகி அனைவரையும் உருக்கியது. அப்பாடலின் முதல் வரியை அவர் பாடியதும், ஜனவரி 2005-இல் வெளியிட்ட இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழுக்காக முனைவர் கலைக்கோவனின் கட்டுரையே நினைவில் நிறைந்தது. அவரின் பல கட்டுரைகளை மிகவும் இரசித்துப் படித்திருக்கிறேன் எனினும், என்னை அக்கட்டுரை உணர்ச்சிவசப்பட வைத்தது போல வேறு கட்டுரைகள் வைத்ததில்லை என்றே கூற வேண்டும். பதநாபன் பாடிய பின் நானும் 'குனித்த புருவமும்' என்ற தேவாரப் பாடலை என் மனம் போன மெட்டில் பாடினேன். அதன் பின் இலாவண்யா காம்போதியில் 'தயாபரா மகேஸ்வரா' பாடினார். சூரியனின் மாலைக் கிரணங்கள் மங்கத் தொடங்குவதற்கு முன் தொல்லியில் அளவீட்டுத் துறையைச் சேர்ந்த திரு.மோகனின் உதவியுடன் 'குழுப் படங்கள்' எடுத்துக் கொண்டோம்.

பின்பு அவரின் உதவியுடனே கிரீவப் பகுதியிலிருந்த பூத கணத்தையும் தரிசித்தேன். சிகரத்தில் கொடியை நாட்டினால் அது அப்பூதத்தின் தலையில் இருந்த ஓட்டையில் அழகாய் உட்கார்ந்து கொள்ளுமாறு அமைக்கப் பெற்றிருக்கிறதாம். சிகரத்தின் மேல் இருந்த பேறு பாதி நேரம் என் சிந்தை என்னிடம் இல்லாததால், முக்கியமாய் புகைப்படத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்த சில விஷயங்களை பதிவு செய்யாமலே விட்டுவிட்டேன். அவற்றுள் ஒன்றுதான், விமானத்தின் சிகரம் பல கற்களால் ஆனது என்ற உண்மையை உணர்த்தும் படம்.

பார்ப்போம். பிழைத்துக் கிடந்தால், அடுத்த வாய்ப்பு என்று ஒன்று வாய்க்குமெனின், விட்டவைகளுள் பல நூற்றில் சிலவற்றையாவது மனதிலும் படத்திலும் பதித்து பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். அவன் சித்தம் எப்படியோ? யாரறிவார்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சிகரத்தை நோக்கி... I

தமிழர் கட்டிடக் கலையின் சிகரமாய் அமைந்திருக்கும் தஞ்சை இராஜராஜீஸ்வரத்தின் ஸ்ரீவிமானத்தைக் கண்ட பொழுதெல்லாம் உள்ளம் துள்ளும். என் பாட்டனின் சாதனை என்று நெஞ்சம் இறுமாப்பு கொள்ளும். கைலாயத்தை பூமியில் கொணரும் முயற்சியே அவ்விமானம் என்ற கூற்றினைக் கேட்கும் பொழுதெல்லாம், கைலாயம் இத்தனை அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்க முடியுமா என்ற ஐயம் தோன்றும். தளத்துக்குக் தளம் மாறும் ஆர அமைப்பில் சாலைகள், கர்ணகூடுகள், பஞ்சரங்கள், கர்ணசாலைகள் இன்னும் பல சிறிய, பெரிய உறுப்புகளின் இணைப்பினை மனதில் பதித்துக் கொள்ள எத்தனை முறை முயன்றாலும், இறுதியில் உள்ளம் தோல்வியையே தழுவும். அந்த தோல்வியிலும் ஒரு சுகம் பிறக்கும்.

பள்ளி இறுதித் தேர்வு எழுதி முடிவுக்குக் காத்திருந்த வேளையில் பொழுது போக்க வேண்டி 'பழைய புத்தகக் கடையை' மேய்ந்த பொழுது கிடைத்த 'பொன்னியின் செல்வன்' நாவலின் பிரதி என் வாழ்வின் திருப்புமுனையாக அமையும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? வந்தியத் தேவனும், அருள்மொழிவர்மரும், ஆழ்வார்கடியானும் மனதிற்குள் ஒரு கற்பனை உலகை உருவாக்க, அவ்வுலகம் தஞ்சை ஜில்லாவில் இருப்பதாய் நினைத்து, கல்லூரியை தஞ்சையில் தேர்வு செய்யும் அளவிற்கு 'பொன்னியன் செல்வன்' என்னை பாதித்திருந்தது. தஞ்சைத் தரணியில் காலடி வைத்ததும், குந்தவை பிராட்டியார், சேந்தன் அமுதன், மாட மாளிகைகள் என்று என் கற்பனை உலகத்திற்கும் நிதர்சனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதது கண்டு உள்ளுக்குள் இழைகள் அறுந்து விழுந்தாலும், ஊரின் நடுவே கம்பீரமாய் வீற்றிருக்கும் இராஜராஜீஸ்வரமுடையார் கோயிலைக் கண்ட பொழுதிலேயே என் கற்பனை உலகிற்கு மீண்டுவிட முடிந்தது. கேரளாந்தகன் திருவாயிலையோ, இராஜராஜன் திருவாயிலையோ, விமானத்தின் அமைப்பினையோ, கல்வெட்டுச் செய்திகளையோ, சிற்பங்களின் சிறப்புக்களையோ அறியாத பொழுதும் உள்ளுக்குள் எழுந்த உவகைக்கு என்றும் குறைவும் இருந்ததில்லை. விமானத்தின் தெற்கிலும், வடக்கிலும் அமைந்திருக்கும் புல் வெளிகளில் அமர்ந்தபடி சிகரத்தை அண்ணாந்து நோக்கி மெய் மறந்த கணங்கள்தான் எத்தனை!

இராஜராஜீஸ்வரமுடையார் கோயிலை ஒட்டி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியான சீனிவாசபுரத்தில் இருந்த ஒற்றை அறை மாளிகையின் மொட்டை மாடியில் அமர்ந்தபடி ஸ்ரீ விமானத்தின் சிகரத்தையும், இரவு வேளையில் ஸ்தூபியின் மேலிருக்கும் விளக்கின் ஒளியால் மிளிரும் விமானத்தின் அழகையும் பார்த்தபடி கழித்த கணங்கள்தான் எத்தனை!

கல்லூரிப் படிப்பில் ஆண்டுகள் கரைய, ஆங்காங்கே கேட்ட/படித்த தகவல்களின் மூலம் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றி நிறைய அறிய முடிந்தது. அப்படி அறிந்த செய்திகளுள் 99 விழுக்காடு செய்திகள் இன்னும் சில ஆண்டுகளில் பொய்த்துப் போகும் என்று கணப் பொழுதும் நினைத்ததில்லை. அப்படி அறிந்த செய்திகளுள் ஒரு சரியான செய்திதான் தஞ்சை ஓவியங்களைப் பற்றியது. எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு கட்டுரையில், "தஞ்சை விமானத்தில் வரையப்பட்டிருக்கும் சோழர் கால ஓவியங்களை ஒவ்வொருவரும் சாவதற்குள் ஒருமுறையேனும் கண்டு விட வேண்டும்", என்று எழுதியிருந்தது என்னுள் ஆழமாய்ப் பதிந்தது. அன்று தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் கோயில் சிவாச்சாரியார்கள், ஊர் பிரமுகர்கள், தொல்லியல் அளவீட்டுத் துறையினராய் எனக்குத் தோன்றியவர்கள் என்று காண்போரையெல்லாம் நச்சரித்து, எப்படியாவது ஒருமுறை அவ்வோவியங்களைக் கண்டுவிட மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள்தான் எத்தனை! ஒரு முறை எப்படியோ அச்சாந்தார நாழிகளுள் நுழைய முடிந்துவிட்டாலும், இரண்டாவது தளத்தில் செதுக்கப்பட்டிருக்கும் பரத நாட்டியக் கரணங்களைக் காணக் கொடுத்துவைத்திருந்த கண்களுக்கு, முதல் தளத்திலிருந்த ஓவியங்களைக் காண முடியவில்லை. அழைத்துச் சென்றவர், "மூச்சுக் காத்து பட்டால் ஓவியங்கள் பாழாகிவிடும். மிக மிக முக்கியமான பிரமுகராய் இருந்தாலன்றி ஓவியங்களைக் காண முடியாது. நீங்கள் பிரதமராகவோ, அமைச்சராகவோ குறைந்த பட்சம் கலெக்டராகவோ வாருங்கள். ஓவியங்களைப் பார்க்கலாம்", என்றார். அந்நிகழ்வுடன் ஓவியங்களைக் காணும் முயற்சியைக் கிடப்பில் போட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். முயற்சி கிடப்பில் கிடந்தாலும் ஏக்கம் என்றும் பசுமையாய்த்தான் இருந்தது.

படிக்கும் நேரத்தில் படிப்பதைத் தவிர அனைத்தையும் செய்தபடி, நாளுக்கு பத்து மணி நேரத்துக்கு மேல் இணையத்தில் மேய்ந்தபடி மடலாடற் குழுக்களில் அரட்டை அடித்துக் களித்திருந்த போதுதான், 'பொன்னியின் செல்வனைப் பற்றி அரட்டை அடிக்கவும் ஒரு குழு தொடங்கினால் என்ன?', என்று தோன்றியது. அப்படித் தொடங்கப்பட்ட குழுவின் பரிணாம வளர்ச்சியை முன்னமே இத்தளத்தில் அளித்திருக்கிறோம். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பலரை இணைக்கும் பாலமாக அமைந்த குழுவின் பாக்கியம்தான் எங்களை இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்திற்கு அறிமுகம் செய்தது.

பின்னாளில் வரலாறு.காம்-இன் ஆசிரியர் குழுவாக உருவான குழுவின் முதல் பயணத்தின் போதுதான் முனைவர் கலைக்கோவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் நார்த்தாமலையில் பார்த்ததைப் பற்றியும், எங்களுக்கு முன்னமே தெரிந்த அரைகுறை விஷயங்களில் இருந்த சந்தேகங்களைப் பற்றியும் நாங்கள் பல மணி நேரம் பேசியபடி நிகழ்ந்த அந்தச் சந்திப்பின் முடிவில், அடுத்த நாள் எங்கள் பயணத்திற்கு அவரும் உடன் வருவதாக ஒப்புக் கொண்டார். நான் பல நூறு முறை சென்றிருந்த இராஜராஜீஸ்வரத்திற்கு முனைவர் கலைக்கோவனுடன் செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த போதும், அப்பயணத்தின் போது என் பல நாள் ஏக்கம் தீரும் என்பதை அறிந்திருக்கவில்லை.

பல முறை கடந்து சென்ற இராஜராஜன் திருவாயிலின் உப பீட கண்ட பகுதியில் அமைந்திருந்த சிற்பங்களை முதல் முறையாய் உற்று நோக்க வைத்த பயணம் அது! 'நிழல் விழா விமானம்', 'ஒரு பிரம்மாண்டமான கல்லால் ஆன சிகரம் கொண்ட விமானம்' என்றெல்லாம் நான் கேள்வியுற்றிருந்த தகவல்களை எல்லாம் தகர்த்தபடி, அவ்விமானத்தின் அமைப்பை கட்டிடக்கலைச் சொற்களொன்றுமறியாத எங்களுக்கும் புரியும்படி விளக்கியபடி விமானத்தின் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார் முனைவர் கலைக்கோவன். தென்புறமிருந்த இரும்புப் படிகளில் ஏறி சாந்தாரச் சுற்றினை அடைந்ததும்தான் என் நெடு நாள் கனவு நான் பிரதமாரகவோ, மந்திரியாகவோ ஆகாமலேயே பலிக்கப் போவதை உணர்ந்தேன். சாந்தார நாழியில் நான் கண்ட ஓவியங்கள், நெஞ்சில் நீங்காக் காவியங்கள். நாயக்கர் சுதையிலிருந்து மீண்ட பொழுது அதிகம் பாழாகியிருந்த ஆலமர் அண்ணல் ஓவியத்தைக் கடந்து கயிலையை நோக்கி விரையும் அலங்காரமான ஐராவதமும், அதன் மேல் சுந்தரரும், அதன் வாலில் இருந்த வாணனும் என்னை மறக்கச் செய்தனர். அரசர்களும் அடியவர்களும் அமைத்துக் கொடுத்த இல்லங்களான கோயில்களில் வீற்றிருக்கும் சிவனைக் காட்டிலும் யதார்த்தமாய் தன் சொந்த வீடான கயிலாயத்தில் உமையுடன் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் அமர் நிலையும், அவர் கண்களும் இதழ்களும் சிந்தும் சிரிப்பும், கனிவும் என்னை சந்தோஷத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றன. அதன்பின் கேட்டவை பல கண்டவை பல, அவையெல்லாம் என் செவிகளின் வழி சிந்தையில் விழுந்தனவா என்று நானறியேன். கோகுலும் மற்றவர்களும் கூறித்தான் 'சிதம்பர வழிபாடு' மற்றும் 'திருபுராந்தகர்' ஓவியங்களும் அங்கிருந்ததைத் தெரிந்து கொண்டேன். கயிலையம்பதியில் வீற்றிருந்த பெருமானைக் கண்ட மனது மீண்டு உலகிலிறங்கி வர ஒரு வார காலம் பிடித்தது.

அதன்பின் சென்ற பயணங்கள்தான் எத்தனை? கோயில்களின் மேல் வளர்ந்த காதலும், குழு நண்பர்களிடம் மலர்ந்த நட்பும், முனைவர் கலைக்கோவனும், முனைவர் நளினியும் காட்டிய அன்பும் பரிவும், என் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தன. எங்கள் அனுபவங்களையும், நாங்கள் பெற்ற படிப்பினைகளையும் அவ்வப்பொழுது கட்டுரைகளாக்கி முனைவர் கலைக்கோவனுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அக்கட்டுரைகளில் எங்கள் உணர்வின் படப்பிடிப்பு இருந்த அளவிற்கு வரலாற்றுத் தகவல்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் முனைவர் கலைக்கோவனின் ஆய்வுகளை இணையத்தில் பதிவு செய்வதைப் பற்றியும், அவர் எங்களுக்குச் சொல்வதை முறையாகப் பகிர்ந்து கொள்வதைப் பற்றியும் பலமுறை பேசினோம். ஆகஸ்டு (அல்லது ஜூலையின் பின் பகுதியாக இருக்கலாம்) 2004-இல் திருத்தவத்துறைக்குச் சென்ற போதும் இதைப் பற்றிய பேச்சு (கிருபாவின் தயவால்) எழுந்தது. இவர்களை விட்டால் திட்டமிட்டபடியே இன்னும் பல ஆண்டுகள் கடத்திவிடுவார்கள் என்று நினைத்ததாலோ என்னமோ, "இதைப் பற்றி பலமுறை பேசியாகிவிட்டது. விரைவில் ஏதாவது செய்யுங்கள். ஆகஸ்டு 15-ஐ கால எல்லையாகக் கொண்டு, வரலாற்றுக்காக ஒரு மாத மின்னிதழைத் தொடங்குங்கள்", என்று சற்று வேகமாகவே கூறினார் கலைக்கோவன்.

ஒரே சமயத்தின் பல வேலைகளில் மூக்கை நுழைத்து ஒரு வேலையையும் நிறைவாகச் செய்ய முடியாமல் திணருவது என் சுபாவம். வரலாறு.காமின் வரவுக்குப் பின், பெரிய அளவில் இல்லையெனினும், மாதம் ஒருமுறை எழுத வேண்டுமென்பதற்காகவாவது, வரலாற்றுத் துறையில் நான் பெற்ற படிப்பினைகளை பதிவு செய்வதில் கொஞ்சம் ஒழுங்கு பிறந்தது. வரலாறு.காமின் இதழுக்காக வேண்டி பலமுறை சென்ற இடம் இராஜராஜீஸ்வரம். ஜனவரி 2005-இல் இராஜராஜர் அமைத்த அப்பெருந்தளியினுக்காய் ஒரு சிறப்பிதழைக் கொண்டு வர விழைந்து மேற்கொண்ட பயணங்கள் அவை. கட்டிடக் கலையை கமலக்கண்ணன் அலச, இலாவண்யாவோ தெற்குதிசை முக மண்டபக் கல்வெட்டில் ஐக்கியமானார். வழக்கம் போல் நான் எல்லாவற்றிலும் கலந்து என் கருத்துக்களை (பெரும்பாலும் வீம்புக்காகவாவது மாற்றுக் கருத்துக்களை கூறுவதே என் வாடிக்கை) கூறியபடி அப்பயணங்களைக் கழித்தாலும், அப்பிரம்மாண்ட விமானத்தைக் கண்ட மாத்திரத்தில் பிரமிப்பு மட்டுமே எஞ்சியது. எதைப் பற்றி எழுதலாம் என்று யோசிக்கக் கூட முடியாத அளவு அந்த பிரமிப்பு என்னை மிரளச் செய்தது. கடைசியில், இந்த விமானத்தைப் பற்றி எழுத வேண்டுமெனில் சிறப்பதிழை எத்தனை ஆண்டுகள் கழித்து வெளியிட நேருமோ என்ற அச்சம் வர, ஸ்ரீ விமானத்தை விட்டுவிட்டு சண்டேசுவரர் திருமுன் கைப்பிடிச் சுவர் சிற்பங்களைப் பற்றி எழுத முடிவெடுத்தேன். ஸ்ரீவிமானத்தைக் கண்டு மிரண்டாலும், என்றேனும் ஒரு நாள், இவ்விமானத்தின் ஒரு சிறிய பகுதியைப் பற்றியாவது தரமான ஆய்வொன்றைச் செய்ய வேண்டும் என்ற பேராசை மட்டும் முளைத்து, நாளுக்கு நாள் வளர்ந்தபடியேயிருந்தது.

அதன்பின் நிகழ்ந்த வலஞ்சுழிப் பயணங்களில் கற்றவைகள் பல. கற்றவைகளைவிட, கற்க வேண்டியவைப் பற்றிய தெளிவு ஓரளவு கிடைத்ததென்றுதான் கூற வேண்டும். சிறந்ததொரு வரலாற்றாய்வு முறையை நேரில் காணக் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். முதல் சந்திப்பிலிருந்து எங்கள் உற்சாகத்தின் ஊற்றாக விளங்கி வரும் முனைவர் கலைக்கோவனுடன், நாளடைவில் சற்றே உரிமை எடுத்துக் கொண்டு, அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் உடன் செல்ல முடிந்தது. கணக்கிலடங்கா கேள்விக் கணைகளை அவர் மேல் வீச முடிந்தது. அவ்வாறு சென்ற பயணங்களுள் பலமுறை சென்றது வலஞ்சுழியும், தஞ்சையுமாகத்தான் இருக்கும். சுந்தரரின் வாழ்வைச் சித்தரிக்கும் ஓவியத்தை பல ஆண்டுகளாக ஆய்வு செய்த குறிப்புகளை எல்லாம் கொண்டு அவ்வோவியத்தை மட்டும் ஒரு நாள் முழுதும் கண்ட நாள் நெஞ்சில் நீங்காத நாளாகும்.

இப்படி பல பயணங்களை எண்ணிப் பார்க்கையில், இதை விட இன்பம் தரக் கூடிய பயணமொன்று இருக்கவே முடியாது என்று நான் நினைத்த பயணங்கள் எத்தனையோ. அத்தனைக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைந்த பயணம் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று அமைந்தது. தஞ்சை பெருவுடையார் கோயில் விமானத்தை சீர் படுத்த சாரம் கட்டியிருப்பதாக 'தி ஹிந்து' தெரிவித்த செய்தியைக் கண்டவுடனேயே விமானத்தில் மனம் ஏற ஆரம்பித்துவிட்டது. உடனே முனைவர் கலைக்கோவனை தொடர்பு கொண்டு 'விமானத்தின் சிகரத்தைத் தொட முடியுமா?' என்று வினவிய பொழுது, 'முயற்சி செய்யலாம்', என்றார். குறைந்த பட்சம் 5-6 வாரங்களுக்காவது சாரம் இருக்கும் என்ற நிலையில், நான் கேட்ட சில நாட்களுக்குள்ளாகவே எங்களது 'சிகரத்தை நோக்கிய' பயணம் நடை பெறாது, மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் உடையாளூர் கள ஆய்வையொட்டிதான் இப்பயணம் நடைபெறும் என்று யூகித்த நான், மார்ச்சு-30-ஆம் தேதியை ஒட்டிய வார இறுதியை சென்னையில் கழிக்கலாம் என்று இருந்தேன். அந்த வார வியாழக் கிழமை காலையில் இலாவண்யா தொலைபேசி "ஏப்ரல் இரண்டாம் தேதி தஞ்சை விமானத்தின் மேல ஏற அனுமதி வாங்கியாச்சாம்!" என்றார் குதூகலமுடன். வியாழக் கிழமை இரவு பேருந்தில் சென்னை சென்று, அடுத்த நாளே கிளம்பி தஞ்சையை அடைந்து, அடுத்த நாள் இரவு பெங்களூர் திரும்பும்படியான சூழ்நிலை. எனக்கோ, வியாழக் கிழமை காலையிலேயே நல்ல ஜலதோஷமும் தலைவலியும். இந்த அலைச்சலை உடல் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வியெழுந்தது. "இப்பயணத்துக்குப் பின் இரண்டு வாரம் படுக்கையில் விழ நேர்ந்தாலும் பரவாயில்லை" என்றது மனம். எத்தனை நாட்கள் என்னுள் இன்ப ஊற்றைக் கிளப்பிய விமானமது! அந்த விமானத்தின் சிகரத்தையடைந்து கலசத்தைத் தொடும் வாய்ப்பு பின்பொருமுறை கிடைக்குமா? இம்முறை கிடைத்ததே கனவா நனவா, என்று நம்ப முடியாத நிலை.

ஆனது ஆகட்டும் என்று சென்னை சென்றடைந்த புனித வெள்ளியில் என் உடல் நிலை இன்னும் மோசமான நிலையை அடைந்தது. வீட்டில் சொன்னால் தஞ்சை பயணத்திற்குத் தடை சொல்லிவிடுவார்களோ என்று வாய் மூடி மௌனியாய் பகல் பொழுதைக் கழித்தேன். வாய் வேண்டுமானால் இருமலுக்கும் தும்மலுக்குமிடையில் பேச முடியாமல் தவித்திருக்கலாம். மனதிற்குள் என்னமோ ஓராயிரம் சம்பாஷணைகள், அத்தனையும் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ? ஒரு வழியாய் புனித வெள்ளியை ஓட்டி, சனிக்கிழமை கண் விழித்த பொழுது தலையெல்லாம் பாரம், நடையில் கூட சற்றே தள்ளாட்டம் தெரிந்தது. ஆனது ஆகட்டும் என்று கிளம்பி சனிக்கிழமை இரவு திருச்சியை அடைந்து, எங்கள் ஆஸ்தான உறைவிடமான விஜய் லாட்ஜில் இரவினைக் கழித்தோம்.

வழக்கமாக குறித்த நேரத்திற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரம் கழித்துச் சென்றே பழக்கப் பட்ட நாங்கள், இப்பயணத்தின் பொழுது இரவில் சரியாக தூங்கக் கூட முடியாமல், மணி எப்போதடா 5.30 அடிக்கும் என்று காத்திருந்து, குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே முனைவர் கலைக்கோவனின் மருத்துவமனையை அடைந்தோம். மனம் எங்கும் இராஜராஜீஸ்வரம் நிறைந்திருப்பினும், முதலில் நாங்கள் சென்றது தமிழ் பல்கலைக்கழகத்திற்குத்தான். தமிழகத்தில் முதல் முறையாக பிராமி கல்வெட்டுடன் கூடிய நடு கற்களைக் காணச் சென்றோம். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் பொழுதே முனைவர் கலைக்கோவன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார். கற்களைக் கண்டு, கல்வெட்டுகளில் 'ஆகொள்' என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டதை அறிந்தவுடன், அவர் உவகைக் கடலில் ஆழ்வதை உணர முடிந்தது. 'நடுகற்கள் எழுத்துடன் இருந்திருக்கும்', சங்கப் பாடல்களில் நடு கற்களில் வரும் 'எழுதிய' என்ற பதம் எழுத்தைக் குறிக்குமே அன்றி ஓவியத்தைக் குறிக்காது என்ற அவரது கூற்றிற்குச் சான்றாய் கிடைத்த கற்களைக் கண்டதும் அவர் உணர்ச்சவசப்படுதல் நியாயம்தானே? தமிழகத்தின் தொன்மையான எழுத்துக்களைக் கண்டதுடன், ஓர் அரிய மனிதரையும் காணக் கிடைத்தது. தமிழ் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசரியர் இராஜன்தான் அம்மனிதர். தமிழையும் வரலாற்றையும் பின்னுக்குத் தள்ளி தன் புகழை எப்பாடுபட்டாவது முன்னுக்குக் கொண்ட வர நினைக்கும் பலருக்கு இடையில், உலகையே ஒரு கணம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கற்களை கண்டுபிடித்த போதும், அக் கற்களைப் பற்றிய உண்மைகள் தெளிவாகாது செய்தி வெளியிடக் கூடாது என்பதற்காக வேண்டி தமிழ்நாட்டின் அனைத்து அறிஞர்களுக்கும் தகவல், அழைப்பு, புகைப்படங்கள் அனுப்பி, தனது கருத்தை தயங்காமல் கூறி, மாற்றுக் கருத்து கூறின் தயங்காமல் பரிசீலிக்கும் ஓர் உண்மை விளம்பியைக் கண்டது நாங்கள் செய்த பாக்கியம். எதிர்பாரா சந்திப்பெனினும், தஞ்சை விமானத்தில் ஏறிய பொழுது அடைந்த அதே அளவு மகிழ்ச்சியை நடு கற்களைக் கண்ட பொழுதும், பேராசிரியர் இராஜனைச் சந்தித்த போதும் அடைய முடிந்தது.

இக் கற்கள் கிடைத்த கதை மிகவும் சுவாரசியமானது. ஒரு பள்ளிச் சிறுவன் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை அணுகி, 'எங்கள் ஊரில் எழுத்துடன் கற்கள்' இருக்கின்றன என்று கூறியதை தொடக்கமாகக் கொண்டு, அம் மாணவர்களின் தேடலாலும், பேராசிரியர் இராஜனின் கைக் காட்டலாலும், சங்க கால நடு கற்கள் முதன் முறையாக தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. வரலாற்றுத்துறையில் ஈடுபாடு கொண்ட பலருக்கே பிராமி கல்வெட்டுக்கும், கற்களில் இருக்கும் கீறல்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் என்ற பொழுது, இந்தத் துறையில் சற்றும் பரிச்சயம் இல்லாத சிறுவனால், அக் கற்களில் இருப்பவை எழுத்துக்கள் என்று எவ்வாறு உணர முடிந்தது என்பதுதான் ஆச்சரியம். உண்மையான அறிஞர்களும், ஆய்வாளர்களும் இருக்கும் வரையில், அவர்கள் தேடிச் செல்லாத போதும், தக்க தரவுகள் அவர்கள் கதவைத் தாமே தட்டும் என்பதை நிரூபிக்கும் இன்னமொரு நிகழ்வாகவே எனக்குத் தோன்றுகிறது.

முனைவர் நளினி அளித்த அறுசுவை காலை உணவை கபளீகரம் செய்தபின், மனமும் வயிறும் நிறைந்தபடி இராஜராஜீஸ்வரத்தையடைந்தோம். வெய்யிலின் உக்கிரம் முழு வீச்சில் அடிக்காத போதும், தரையில் கால் வைக்கவே சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில் வெற்றுக் கால்களுடன் சாரத்தின் மேல் ஏறுவதென்பது முடியாத காரியம் என்பதால், எங்கள் சாரம் ஏறும் படலத்தை மாலைக்கு ஒத்திப் போட்டு, சாந்தாரநாழியுள் நுழைந்து, சுந்தரருடன் ஐக்கியமானோம். பல வருடங்களாய் இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் ஆய்வு செய்யும் ஓவியத்தை, அவர்கள் செய்யும் கள ஆய்வின் போது அருகில் இருந்து நோக்கும் அரிய வாய்ப்பு எனக்கு இருமுறை கிட்டியிருக்கிறது. அந்த இரு தரமும் பல புதியச் செய்திகள் அறிஞர்களின் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது. இத்தனை வருடம் நுணுக்கமாக கவனித்த பின்னும், அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் சென்ற முறைகளில் தவறவிட்ட தகவல்கள் கிடைத்த வண்ணம் இருப்பதைப் பார்த்தாலே அவ்வோவியத்தின் தரத்தை உணர்ந்திடலாம்.மதிய உணவை இசையாசிரியை இரா. இலலிதாம்பாள் அவர்களின் வீட்டில் கழித்துவிட்டு மீண்டுமொருமுறை சாந்தார நாழியில் தஞ்சம் புகுந்ததுதான் தெரியும். மாலை நாலரை மணி அளவில் முனைவர் கலைக்கோவன் நினைவுபடுத்தியிருக்காவிட்டால், அந்தப் பயணம் சிகரத்தைத் தொடுவதற்காக வந்த பயணம் என்பதை சுத்தமாக மறந்திருப்போம். பொல்லாத ஓவியங்கள் எங்களை இன்னும் பல மணி நேரம் சிறைபடுத்தியிருக்கும். நான்காம் தளம் வரையில் படிகளில் ஏறி அதன்பின் மரத்தாலும், இரும்புக் குழாய்களாலும் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கும் சாரத்தில் ஏறியும் சிகரத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். ஏற்கெனெவே உடல்நிலை சரியில்லாத எனக்கு, அதிகம் காற்றுப் புழக்கம் இல்லா சாந்தார நாழியில் நிற்கும் போதெல்லாம், அவ்வப்பொழுது தள்ளாட்டமும், சோர்வும் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. விமானத்திலிருந்து இறங்கி அருந்திய தேநீர் செய்த மாயமா அல்லது இராஜராஜீஸ்வர விமானத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் சாரங்களின் மேல் என் கால் பட்டதும் நிகழந்த அதியசயத்தின் பலனா, நான்றியேன்! என் உடலெங்கும் புதிய தெம்பும், உற்சாகமும் எங்கிருந்தோ வந்து சூழந்து கொண்டன. பாதி சாரம் ஏறியவுடன், "எனக்கு உயரம் என்றால் பயம்" என்று தயங்கித் தயங்கிச் சொன்ன பத்மநாபனை கிண்டல் செய்தபடி ஏறியதில் கிரீவத்தை அடைந்ததே தெரியவில்லை. ஆங்காங்கே தென்பட்ட சிற்பங்கள் அனைத்திலும் பலத்த சுதைப்பூச்சைச் சபித்தவாறும் அவ்வப்போது கேள்விக் கணைகளை கலைக்கோவனிடன் வீசியபடியும் எங்கள் பயணம் நகர்ந்தது.ஒரு கட்டத்தில், ஆர உறுப்புக்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக நான் கேள்விகளை வீச ஆரம்பித்ததும், 'இவனைவிட்டால் இன்னும் பல நாட்களுக்கு இடத்தைவிட்டு நகராமல் கேள்விகள் கேட்டபடியே இருந்துவிடுவான்', என்று உணர்ந்ததாலோ என்னமோ, 'இந்த விமானத்தின் ஆர அமைப்பைப் புரிந்து கொள்வது என்பது மகத்தான, பல பயணங்கள் நிறைந்த ஆய்வாகும்.', என்று ஒரு வரி பதிலைக் கூறினார். அதனால்தான் சூரியன் அஸ்தமிக்கும் முன் நாங்கள் உச்சியையடைய முடிந்தது.கிரீவத்தை நாங்கள் அடைந்த பொழுது எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இது நாள் வரை நான் பலர் கூறி கேட்ட கூற்று யாதெனில், தரையில் இருந்து பார்க்க சிறியதாய்த் தெரியும் கிரீவப் பகுதி நந்திகள், திருச் சுற்று மாளிகையில் தென் பகுதியில் வைக்கப் பட்டிருக்கும் சோழர்கால நந்தியின் அளவை ஒத்து இருக்கும் என்பதாகும். நாங்கள் கண்ட நந்திகளோ திருச்சுற்று நந்தியைவிட உயரத்தில் குறைந்த பட்சம் இரண்டடி குறைவாகவும், பருமனிலும் மிகவும் குறைந்த அளவிலும் காணப்பட்டது. அது நாள் வரை நாங்கள் நம்பிக் கொண்டு வந்த இன்னொரு தகவல் தவிடு பொடியானது
(தொடரும்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.