Monday, August 29, 2005

அரை நாள் பயணம்....அரை மனதுடன்....

வரலாறு.காம்-இன் சிங்கை கொண்ட ராஜகேசரி தனது தை மாத பாரத விஜயத்தின் பொழுது.....சரி சரி, வரலாறு.காம் அசிரியர் குழு உறுப்பினர் கோகுல் சென்னை வந்திருந்த பொழுது, மற்ற வரலாறு.காம் ஆசிரியர் குழு உறுப்பினர்களுடன் ஒரு நாள் முழுவதும் காஞ்சிபுரத்து இராஜசிம்மேஸ்வரத்தில் கழி(ளி)க்கக்கூடிய பேறு கிடைத்தது. அன்று கண்ட காட்சிகளில் பல கண்களின் வழியிறங்கி கருத்தில் கலந்திருப்பினும், காணாமல் விட்ட காட்சிகளும், கண்டும் அதன் தரம் உணராமல் விட்ட வரலாற்றுத் தரவுகளும் கணக்கிலடங்கா. இவ்வுண்மை, அப்பயணத்திற்குப் பின் முனைவர்.கலைக்கோவனுடனும் முனைவர்.நளினியுடனும் பேசிய பொழுது விளங்கியது. எங்கள் பயணத்தின் பொழுது இவ்வறிஞர் பெருமக்கள் மாத்திரம் கூட இருந்திருந்தால் இன்னும் எப்படியெல்லாம் இரசித்திருக்கலாம் என்று மனது ஏங்க ஆரம்பித்தது.

வரலாறு.காம்-இன் ஓராண்டு நிறைவையொட்டி என்ன செய்யலாம் என்ற கேள்வியெழுந்த பொழுது, எங்கேனும் இவ்வறிஞர் பெருமக்களுடன் பயணம் செல்ல வேண்டும் என்று மனதில் எண்ணமெழுந்தாலும், வலஞ்சுழிப் புதையல்களைத் தோண்டியெடுக்கும் வரலாற்றாய்வாளர்களின் பொன்னான நேரத்தை நமக்காக வீணடிப்பதா என்ற எண்ணமும் கூடவே எழுந்து முன் தோன்றிய எண்ணத்தை அழுத்திவிட்டது. கருத்தொருமித்ததால் இணைய வழி இணைந்த எனது நண்பரும், வரலாறு.காம்-இன் சக உறுப்பினருமான கமலக்கண்ணனுக்கும் எனக்கு தோன்றிய எண்ணமே தோன்றியதில் வியப்பொன்றுமில்லை. தன் ஆசையை, என்னைப்போல் மனதில் போட்டு அடைக்காமல், "காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்குப் போகலாமா?" என்று அவர் கேட்ட பொழுது, என் மனது துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. முனைவர். கலைக்கோவன் ஒப்புக்கொண்ட வேகத்தைப் பார்த்த பொழுது, 'இவர் நமக்காக மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. (அப்படியே, எங்களுக்காகத்தான் ஒப்புக் கொண்டிருப்பாரெனினும், நான் எதையாவது சொல்லி என் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டுமல்லவா?) இராஜசிம்மரின் பெரிய திருக்கற்றளியை பலமுறை இரசித்திருந்த அவரது கண்கள், மீண்டும் ஒருமுறை சுவைக்கத் தோன்றும் ஆவலை கமலக்கண்ணனின் கேள்வி கிளப்பிவிட்டது.' என்றெண்ணத் தோன்றியது.

சென்னைக் காஞ்சீபுரம் சாலையில் அந்த வெள்ளை நிற டெம்போ ட்ராவலர் பல்லவ உளிகள் செதுக்கிய பேரதிசயத்தை நோக்கி விரைந்தது. அறிஞர்களுடன் பார்க்கக்கூடும் அவ்வேளையில் கோகுல் இல்லாதது சற்றே நிரடலாய் இருந்த போதும், அதற்கு ஈடு செய்ய சீதாராமன், பத்மநாபன், விஜய் குமார், விஜய்குமாரின் உறவினர், சதீஷ் குமார் ஆகியோர் வந்து கலந்து கொண்டது நிறைவளித்தது.



கோயிலைச் சுற்று இந்தியத் தொல்லியல் துறை போட்டிருந்த கம்பிகளாலான வேலியைக் கடந்து நுழைந்ததும் எங்கள் கண்ணில் பட்டது பல சிறு தளிகள். பாத பந்தத் தாங்குதளம் கொண்ட அந்த இருதள விமானங்களின் கருவறைக்குள் வித விதமாய் சோமாஸ்கந்தரின் அற்புதப் படப்பிடிப்பு. சோமாஸ்கந்தர் என்பது அமர்ந்த நிலையில் சிவனும் உமையும் இருக்க, அவர்களுக்கிடையில் குழந்தை முருகன் கொலுவிருக்கும் காட்சி. அவசரத்தில் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அத்தனை சோமாஸ்கந்தர்களும் ஒரே மாதிரி தோன்றலாம். சற்றே நிதானமாய் பார்த்தால், எந்த இரு சோமாஸ்கந்தருக்கிடையேயும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களைக் கண்டு கொள்ள முடியும். சில கருவறைகளுக்கு மட்டும் இறைவனை சோமாஸ்கந்தர் வடிவில் குடும்பியாகவும், லிங்க வடிவினனாகவும் பெறும் இரட்டிப்பு பேறு கிடைத்திருக்கின்றன. சில கருவறைகளோ, மும்மூர்த்திகளான பரமன், திருமால், நான்முகன் மூவரையும் தாங்கும் பேறினை அடைந்திருகின்றன. இத்தனையும் கண்ட எங்களுக்கு கேள்வி எழாவிட்டால்தானே ஆச்சரியம்!



"எத்தனையோ வடிவங்கள் சிவனுக்கு இருக்க, சோமாஸ்கந்தருக்கு இத்தனை முக்கியத்துவம் எதனால்?", கேள்வி இதுதான். கேள்வி நினைவிலிருப்பினும் கேட்டவர் யாரென நினைவில்லில்லை.

" இராஜசிம்மனின் காலத்தில் சைவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, ஜைன காஞ்சி என்று மூன்றும் தழைத்திருந்தது. கைலாயத்தை கால் பெருவிரலால் அழுத்திய சிவபெருமானை தலையின் சூடிக்கொண்டவன் என்று 'சிவசூடாமணி' என்ற விருதுப் பெயரின் மூலம் உலகுக்குக் கூறும் இராஜசிம்மன் (இவ்விடத்தில் இராஜராஜ சோழரும், இராஜேந்திரரும் 'சிவபாத சேகரன், மற்றும் சிவ சரண சேகரன்' என்று தங்களை அழைத்துக் கொண்டதை நினைக்காமல் இருக்க முடியாது.), சைவ சமையத்தை ஓர் உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு 'சோமாஸ்கந்தர்' என்னும் குடும்பியை பெரிதும் வலியுறுத்துகிறான். மற்ற சமையங்கள் இல்லறத்தை எதிர்த்து முழக்கம் செய்ய, இறைவனே குடும்பியாகத்தான் இருக்கிறான் என்பதை வலியுறுத்தும் வண்ணம் சோமாஸ்கந்தரை நிலை நாட்டி சைவ சமையம் தழைக்க விரும்பிய இராஜசிம்மரின் பல கல்வெட்டுகள் 'பரமேஸ்வரனிடத்திலிருந்து குகன் பிறந்தார் போல உக்ரதண்டனிமிருந்து ஸ்ரீ அத்யந்தகாமன் பிறந்தார்' அவரைக் குறிப்பிடுவதில் ஆச்சரியமொன்றுமில்லை.



பரந்து கிடக்கும் சிறு தளிகளின் கோட்டங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் மிகப் பொல்லாதவை. கோயிலுக்கு வந்தோரை கோபுர வாயிற் பக்கமே செல்லவிடாமல் செய்துவிடக்கூடியவை. பிரமன் சாரதியாக, பரமன் வில்லேந்தி போருக்குச் செல்லும் திரிபுராந்தகர், தமிழ்நாட்டின் முதல் லிங்கோத்பவர்களுள் ஒருவர், ஒரு பக்கம் கருடனும், மறுபக்கம் நந்தியும் சூழ, நடுவில் கொலுவிருக்கும் ஹரிஹரர், கஜமுகாசுரனை வதம் செய்யும் ஆனை உரித்த தேவர் (இவரின் ஆக்ரோஷத்தைக் கண்டு பயந்து அலறும் பூத கணத்தின் முகத்தில் காட்டப்பட்டிருக்கும் உணர்ச்சி பெருக்கை வர்ணிக்க வார்த்தையில்லை), அக்கமாலையும் கமண்டலும் கொண்டு யோக நிலையில் அமர்ந்திருக்கும் சிவன், இறைவன் ஆடும் அற்புதக் கரணங்கள்....



கரணங்கள் என்றதும் முனைவர் கலைக்கோவன் கூறியது நினைவிற்கு வருகிறது....அப்பரும் சம்பந்தரும் சிவபெருமானை ஆடலரசனாக வர்ணித்தாலும், தேவார வாக்குக்குத் தகுந்தாற் போல் பல சிற்பங்கள் அமைத்து குஞ்சிதம், லலாடதிலகம், விருச்சிகம், ஊர்த்துவ தாண்டவம் போன்ற கரணங்களை மிகப் பெரிய அளவிலும் எண்ணிக்கையிலும் சித்தரித்த பெருமை இராஜசிம்மரையே சேரும். (அதிரண சண்டேசுவரத்தில் இருக்கும் இராஜசிம்மரின் கல்வெட்டு பரதரைக் குறிப்பிடுவது இங்கு நோக்கத் தக்கது).

நான் முன்பு சொன்னது போலவே ஆகிவிட்டது பாருங்கள். கோபுர வாயிலுக்கு முன்னிருக்கும் தளிகளில் இருக்கும் சிற்பங்களைக் கூறப் போய், வாயிலில் நுழையவே மறந்துவிட்டோம் பாருங்கள். இப்படித்தான் அன்றும் நிகழ்ந்தது. அப்பொழுது முனைவர். கலைக்கோவன்தான் சுய நினைவிற்கு வந்தவராய், "மணி பன்னிரண்டு ஆச்சு, வாங்க கோயிலுக்குள்ள போகலாம்.", என்றார். எல்லொரும் கோயிலுக்குள் நுழைய எத்தனிக்க அதுவரை பொறுத்திருந்த நான், "சார்!, ஒரு நிமிஷம். போன முறை வந்த போது மேற்குல ஒரு கணம் ஒரு இசைக் கருவியை வெச்சிருந்தது. அது யாழ்-னு நினைக்கிறேன். நீங்க கொஞ்சம் சரி பார்த்துச் சொல்லுங்க", என்றேன்.



எங்களின் எந்த ஒரு கோரிக்கைக்கும் மறுப்பு தெரிவிக்கா கலைக்கோவன், தெற்கு மதில் சுவரையொட்டி குதிரை மேல் அமர்ந்திருந்த வீரர்களின் முக எழிலை ரசித்தபடியும். கரண்ட மகுடம், கிரீட மகுடம் போன்ற மகுட வகைகளைப் பற்றி எங்களுக்கு பாடம் எடுத்தபடியும் மேற்கை நோக்கிச் சென்றார். பிற்காலத்தில் அடைக்கப்பட்ட மேற்கு வாயிலின் இருபுறமும் யானை மேல் அமர்ந்திருந்த இரு கணங்களில் தெற்குக் கணம் வீணையை மீட்ட, வடக்குக் கணம் யாழிசைத்தபடி எங்களைப் பார்த்துப் புன்னகைத்தது. அப்பூதத்தை ஏழு மாதம் கழித்து சந்தித்த மகிழ்ச்சியும், எனது அனுமானம் சரியென்று முனைவர் கலைக்கோவனின் தீர்ப்பளித்ததில் எழுந்த மகிழ்ச்சியும் சேர்ந்த்து என்னை அளவிடமுடியாக் களிப்பிலாழ்த்தின.



தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோபுரத்தைத் தாங்கும் பத்ம பந்தத் தாங்குதளத்தையும், அதன் உத்திரத்தைத் தாங்கும் பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகையையும் கண்டபடி கோயிலுக்குள் நுழைந்தோம். நாலாப்பக்கமும் எங்களது கண்கள் சுழன்று சிற்பக் கனிகளைச் சுவைத்தாலும், அனைவரின் பார்வையையும் ஒருமித்துக் கவர்ந்த பெருமை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கொற்றவைக்கே சேரும். ஒரு காலை சிம்மத்தின் மேலும், மறு காலை தரையிலும் ஊன்றி (சிம்மத்தின் மீது மடிந்திருக்கும் காலின் நேர்த்தியை எப்படிச் சொல்வது), தோளில் அம்புகள் தாங்கி, கைகளில் வில், வாள், கேடயம் முதலிய கருவிகளை ஏந்தி, ஒரு கையை இடையிலும், ஒரு கையை தொடையிலும் ஒயிலாகப் பொறுத்தி எழில் நகைப் பூக்கும் கொற்றவைக்கு முன்னால் வேறெந்த சிற்பமும் நிற்கமுடியாது என்பதுறுதி.



கொற்றவையின் எழிலில் நாங்கள் ஆழ்ந்திருந்த பொழுது, இலாவண்யாவின் குரல். தேனிருக்கும் மலரை நோக்கி வண்டு செல்வது இயற்கைதானே? இராஜசிம்மரின் விருதுப் பெயர்கள் சாதாரணமான கல்வெட்டுகளாய் இல்லாமல் மிகுந்த அழகுணர்ச்சியோடு செதுக்கப்பட்டிருப்பது, கல்வெட்டு காரிகையான இலாவண்யாவை ஈர்த்தது இயற்கைதானே? இதற்குள், கோயில் கருவறையை குருக்கள் அடைத்துவிடும் வேளை வந்துவிட, முக மண்டபத்தின் தென்வாயிலின் வழி சென்று கைலாசநாதரை தரிசித்தோம். மண்டபத்தின் கூறையில் பல கல்வெட்டுகள் எங்களை அண்ணாந்த வண்ணம் இருக்கச் செய்தன. அவற்றில் ஒன்று முதலாம் இராஜராஜ சோழருடையது. அவரது கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" என்றழைத்து மகிழ்ந்தது நாமறிந்ததே. நாங்கள் பார்த்த கல்வெட்டு "காஞ்சீபுரத்து பெரிய திருக்கற்றளி" என்று குறிப்பிட்டிருந்ததிலிருந்து, காஞ்சீபுரம் என்னும் பெயரும் பண்டைய காலத்தில் இருந்ததே வழங்கப் பெற்ற ஒன்று என்றுணர முடிந்தது.



தென்னகத்தின் முதல் சாந்தார விமானத்தின் சாந்தாரச் சுற்றை பார்த்துவிட்டு, வெளியில் வந்ததும் எங்கள் கண்ணில் பட்ட சிற்பம் சற்றே அரியது. இன்னும் சொல்லப் போனால் வேறெங்கும் காணக்கிடைக்காதது. வலமுன்கையில் மழுவை ஓங்கி, இட முன்கையால் எச்சரித்தபடி, கண்களில் கனல் கக்கிய சிவபெருமானை உற்று நோக்கிய பொழுது, நான்கு இடது கைகளுள் ஒன்று ஒரு தலையைக் கொய்தபடி நிற்க, அவர்முன் அமைதியே உருவாய், அக்கமாலையும் குண்டிகையும் ஏந்தி அமர்ந்திருக்கும் நான்முகன். பிரம்மனின் ஐந்தாவது தல்கையுடன் சேர்ந்து அவரது ஆணவமும் அழிந்ததால்தானே என்னமோ முகத்தில் எழில் நகைப் பூத்துக் குலுங்குகிறது. இவர்களுக்கு அருகில் கைகளைக் கட்டியபடி பவ்யமாய் ஒரு அடியவரும் காட்டப்பட்டுள்ளார். ஒரு தொகுதியில் காட்டப்பட்டிருக்கும் மூன்று முகங்களுக்குள் எத்தனை வேற்றுமை!

மான்கள் தாள் பணிய, சிம்மங்கள் மயங்கிக் கிடக்க, சனகாதி முனிவர்கள் உபதேசத்தில் மூழ்க, கின்னரங்கள் வீணை மீட்ட, "எவண்டா அவன் தூங்கற நேரத்துல, பகல் வேளையா பார்த்து எழுப்பறது?" என்று கூறுவது போல ஒரு ஆந்தை மரத்தினூடே எட்டிப் பார்க்க, இவற்றுக்கிடையில், கால்களை வீராசனத்தில் மடித்து, பின்கைகளில் அக்கமாலையும், தீப்பந்தமும் ஏந்தி முன் கைகளில் கடகத்தில் நிறுத்தி, சடைமகுடராய், முப்புரி நூலும், பனையோலைக் குண்டலங்களும், யோகப்பட்டமும் அணிந்து, ஆலமரத்தடியில் போதனை தரும் தென்முகக் கடவுளின் உருவம் எங்களை சிறிது நேரம் கட்டிப் போட்டது. அவரது புன் சிரிப்பை உற்று நோக்கிய பொழுது அவருக்குக் காட்டப்பட்டிருக்கும் கோரைப்பல்லும் கண்ணில் பட்டது.



தென்முகக்கடவுளுக்கருகில் இருக்கும் ஹரிஹரரும் தனித்தன்மையுடையவர். ஒரு பாதி சடை மகுடராய், மறுபாதி கிரீட மகுராய் காட்சி தரும் ஹரிஹரர், வலக்காலை மடித்தும், இடக்காலை ஒரு பீடத்தின் மீது வைத்தும் அமர்ந்து, வலப் பின்கையில் மழுவுடனும், இடப் பின்கையில் சங்குடனும் காட்சியளிக்கிறார். இவரது வல முன்கையோ போற்றுகிறது. இறைவனைப் போற்றுபவரைக் கண்டிருக்கிறோம். இதென்ன அதிசயம்? இறைவனே போற்றுகிறாரே? விஷயம் என்னவாயிருக்கும்?

ஹரிஹரரைச் சுற்றிச் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சி, அவரின் போற்றுதலுக்குரியவர்களை அடையாளம் காட்டுகிறது. அவரின் காலடியில் சிரட்டைக் கின்னரி வாசிக்கும் பூதமும், அதனருகில் கஞ்சக் கருவியான செண்டுதாளம் இசைக்கும் கணமும் இசையெழுப்ப, இறைவனின் கிழக்கிலும் மேற்கிலும் இரு கணங்கள் வீணையில் வித்தைக் காட்ட, அதன் கீழே இரு கணங்கள் செண்டு தாளமிசைத்து இசை பரப்புகின்றன. இக்கணங்கள் எழுப்பும் இனிய இசையில் மயங்கிய இறைவனின் கை போற்றுதல் குறியைக் காட்டுவது நியாயம்தானே? இந்தத் தொகுதியில் பறை, முழவு போன்ற தோலிசைக்கருவி ஏதும் இடம் பெறாதது ஆச்சரியதிற்குரியது.



ஹரிஹரருக்கே எதிரே கொலுவிருக்கும் முதல் பல்லவ எழுவர் அன்னையர்களின் (சப்த மாதர்) சித்தரிப்பையும், தாருகவன ரிஷிகளின் மனைவிகளை மயக்கிய கங்காளரையும் கண்டு, வடக்குச் சுவரின் மேற்கு மூலையில் இருக்கும் என் மனதிற்குகந்த யாழ் மீட்டும் கின்னரத்தைக் கண்டபடி மேற்குத் திசையை அடைந்தோம். திருமாலும், பிரமனும் போற்ற, அடிமுடித் தேவர், கையில் மழுவும் திரிசூலமும் அக்கமாலையும் குண்டிகையும் தாங்கி மேற்கில் கொலுவிருக்கிறார்.



வேறெங்கும் காணக்கிடைக்கா மற்றொரு காட்சி.... இறைவன் விருச்சிகக் கரணத்தை அபிநயிக்க உடன் நந்தியும் கணமும் ஆடி மகிழும் காட்சி. இவர்கள் ஆட்டத்திற்கு இசை சேர்க்கும் குழல், பறை மற்றும் தாள இசைக் கணங்களும் அழகுற காட்டப்பட்டிருக்கின்றன. இன்னொரு தொகுதியில் இரு குள்ளக் கணங்கள் குழலும் செண்டு தாளமும் இசைக்க, பெரியதொரு இருமுக முழவை இசைக்கும் கலைஞர் அழகுறக் காட்டப்பட்டுள்ளார்.



வடக்குச் சுவரில் காட்டப்பட்டிருக்கும் காலாரியின் சிற்பம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வலமுன்கை பாசம் ஏந்தி ஓங்கியிருக்க, இட முன்கையோ "தொலைச்சுபுட்டேன், படவா!" என்று சொல்லும் வகையில் எச்சரிக்க, இடப் பின்கை ஆச்சரியத்தில் விரிந்திருக்க, வலப் பின்கையில் சூலம். வலக்காலில் இயமனை மிதித்து, அடுத்த உதைக்குத் தயாராய் இடக்காலை தூக்கியிருக்கும் சிவபெருமானின் விரிந்த கண்களில் சினம் கொப்பளிக்கிறது. அவரின் காலின் கீழ் மிதிபட்டுக் கிடக்கும் இயமனின் முகமோ துன்பத்தின் உச்சத்தைக் கச்சிதமாய் பிரதிபலிக்கிறது.

காலாரி கோட்டதிற்கு அருகில் காட்டப்பட்டிருக்கும் இராவணனின் கர்வ பங்கக் காட்சியும், முருகன் - தெய்வானை திருமணக் காட்சியும், கோவண ஆடையணிந்து, தலையை சடாபாரமாய் வைத்து, ஒரு காலை தரையில் ஊன்றியும், ஒரு காலை சற்றே உயர்த்தியும், ஒரு கையில் குண்டிகையும் ஒரு கையில் அக்கமாலையும் ஏந்தி, யோகப்பட்டத்துடன் காட்சியளிக்கும் தவக்கோல சிவனும் காண்பதற்கரியன.



வடக்கில் காட்டப்பட்டிருக்கும் கங்காதரர் மிகவும் பொல்லாதவர். முதல் மனைவியான உமை அருகிலிருக்கும் பொழுதே, தன் சடைமுடியை விரித்து மற்றொரு மனைவியின் வருகைக்காக காத்திருப்பவரை வேறெப்படிச் சொல்வது? அருகில் இருக்கும் உமையவள் முகத்தை எப்பொழுதும் தவழும் புன்னகையைக் காணோம். அண்ணலின் முகத்திலே பெருமிதம் பொங்க, இடதுகை வேறு விஸ்மயத்தில்!



எந்த கோயிலுக்குச் சென்றாலும் முதலில் பூதவரியைத் தேடும் எங்களுக்கு, பல்லவர் கால பூதவரி வலபிப் பகுதியில் தென்படாதது வருத்தம்தானெனினும், எங்கும் இல்லாத வகையில், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஜகதிப் பகுதியில் பல பூத கணங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. சட்டி வயிறும், குள்ள உருவமுமாய் அமைந்த மனிதத் தலை பூதங்களினூடே, பிள்ளையாரும், யாளி முக, மகிஷ முக, பைசாசுவுரு பூதங்கள் பல காட்சி தருகின்றன. வடக்கில் ஒரு தொகுதியில் அவை நடத்தும் களி நடனம் கண்கொள்ளாக் காட்சியாய் மலர்ந்துள்ளது.

அரை நாளில் நாங்கள் பார்த்ததைவிட பார்க்காமல் விட்டதுதான் அதிகம். அப்படிக் கண்டதில், இங்கு சொல்லியதைவிட சொல்லாமல் விட்டுப் போனத் தகவல்கள்தான் அதிகம். என்றாலும், எங்களின் அரை நாள் பயணம் அரை மனதுடன் முடிந்தது போலவே இக்கட்டுரையையும் அரை மனதுடன் முடிக்க வேண்டியிருக்கிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.