Tuesday, September 20, 2005

ஒரு கடிதம்

அன்புள்ள ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு,

வரலாற்றாய்வு என்னும் கட்டிடத்தை ஒரு சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கும் எங்கள் குழுவிற்கு, உங்களின் சந்திப்பு மிகுந்த உற்சாகத்தையளித்தது. எமது மின்னிதழை இன்னும் சிறப்பாகக் கொண்டு வர என்னென்ன செய்யலாம் என்று தாங்கள் கூறிய யோசனைகளிலிருந்து, 'கத்துக் குட்டிகள்தானே!' என்று எங்களை ஒதுக்காது, இதழ்களை முழுமையாகப் படித்திருப்பதும், 'இவர்கள் நன்றாக வளர வேண்டும்' என்று எங்கள் மேல் தங்களுக்கு இருக்கும் உண்மையான அக்கரையும் தெளிவாகத் தெரிந்தது. அதுவே எங்களை நெகிழவும் வைத்தது.

கல்வெட்டாய்வு, தமிழிலக்கியம், சிந்து சமவெளி நாகரீகம், பிராமி எழுத்துக்கள், தினமணி தலையங்கங்கள், ஆதி சங்கரரின் காலம், காலத்தால் தொன்மையான கணேசர் சிற்பங்கள் என்று இருந்த சில மணி நேரத்திற்குள் பல விஷயங்களை எங்கள் காதுகளின் வழி மனதிற்குள் பதித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாலும், மனதின் மற்றொரு பகுதி வரலாற்றாய்வின் ஒரு ஜாம்பவானைச் சந்திக்கிறோம் என்ற பிரமிப்பிலிருந்து மீளமாட்டாமல் தவித்தபடியே இருந்தது.

வரலாறு.காம்-இன் புதிய பகுதியான விருந்தினர் பக்கத்திற்காக தங்களது கட்டுரை ஒன்றைத் தயங்கித் தயங்கி நாங்கள் கேட்க, எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாக ' Murugan in the Indus Script' என்ற ஆய்வுக் கட்டுரையை தந்தருளியது, அன்றைய மகிழ்ச்சிக்கெல்லாம் மகுடம் வைத்தது போல அமைந்தது. தங்களது கட்டுரையைப் படித்த பொழுது, ஒரு ஆய்வு செய்ய எத்தனை விஷயங்களை ஆராய வேண்டியிருக்கிறது என்னும் உண்மை புலப்பட்டது. சிந்து சம வெளி நாகரீகத்தைப் பற்றிய தெளிவான வரலாற்றறிவு, அக்காலத்தில் இருந்த எழுத்துக்கள் அல்லது படிமங்களைப் பற்றிய அறிவு, இவற்றால் தோன்றும் கருத்துக்களை வலுவாக்கத் தேவைப் படும் இலக்கியப் பின்புலம் மற்றும் சிற்பப் படிமங்கள் பற்றிய அறிவு, இவை அனைத்தும் இருந்தால் ஒழிய ஒரு புதிய கருத்தை நிறுவுவதென்பது சாத்தியமல்ல என்பதை அக்கட்டுரை உணர்த்தியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களது கட்டுரையின் கடைப் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் அடிக் குறிப்புகள் மற்றும் அவ்வாய்விற்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியல், ஆய்வின் நேர்மையையும், இவ்விஷயத்தைப் பற்றி மேலும் ஆழமாக அறிய விழைவோரின் மேல் தாங்களுக்கு இருக்கும் கரிசனத்தையும் தெள்ளென உணர்த்தியது.

கட்டுரையை ஆழ்ந்து படித்த பொழுது, மேற்கூறிய உணர்வுகளுடன் சில கேள்விகளும் எழுந்தன. அச்சந்தேகங்களை ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற தொல்லியல் கழகக் கருத்தரங்கத்தின் பொழுது தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். தங்களது உடல்நிலை காரணமாக கருத்தரங்கிற்கு நீங்கள் வர இயலாமல் போனதையறிந்ததும் கவலையும் வருத்தமும் எங்கள் மனதை அப்பிக் கொண்டன. இம்மடல் தங்கள் கைக்குக் கிடைக்கும் வேளையின் உங்களது உடல் நலம் நன்கு தேறி, எங்களைச் சந்தித்த பொழுது உங்கள் உள்ளதினின்று வெளிப்பட்ட உற்சாகம் தங்கள் உடலுக்கும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நேரில் கேட்கமுடியா சந்தேகங்களை இம்மடல் வழியே கேட்க விரும்பிகிறோம். எங்கள் கேள்விகளுக்கு விடையளித்து எங்கள் குழப்பங்களைப் போக்கினால் வரலாறு.காம் ஆசிரியர் குழுவும் வாசகர்களும் தன்யர்களாவோம்.

தங்களின் கட்டுரையின் முதல் பகுதியில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்த எழுத்துக்களைப் பற்றியும், உருவக் குறிப்பீடுகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறீர்கள். sign 48-இல் குறிக்கப்பட்டுள்ள உருவம் பல அகழ்வாய்வுகளில் கிடைத்திருப்பதை வைத்து, சிந்து சமவெளி நாகரீகத்தில் ஒரு பிரபலமான உருவம் ஒன்றையே இது உணர்த்துகிறது என்பதை தெளிவுபடுத்திருக்கிறீர்கள். இவ்வுருவை ஆராய்ந்து, எகிப்திய படிமங்களுடன் ஒப்பிட்டு, அவ்வுரு இறந்தவரையோ அல்லது இறந்தவரின் ஆவியையோ குறிக்கும் பேயுருவம் என்று நிறுவியிருக்கிறீர்கள். கட்டுரையின் அடுத்த பகுதியில், சிந்து சமவெளி நாகரீகத்தின் காலத்துக்குப் பின் வந்த புராணங்கள் மற்றும் பாரம்பரியங்களில் பேயுருவாய் அல்லது எலும்புகள் மூலம் சித்தரிக்கப் பட்டிருக்கும் ததீசி முனிவர், காரைக்கால் அம்மையார், புத்தர், பிருங்கி முனிவர் ஆகியோரின் படிமங்களை விளக்கியுள்ளீர்கள். இவை அனைத்தும் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தாலும், கட்டுரையின் கடைசி பகுதியில் ஹரப்பன் நாகரீகத்தில் காட்டப்பட்டிருக்கும் எலும்பு உரு எதை அல்லது யாரைக் குறிக்கிறது என்று தாங்கள் நிறுவியிருப்பதில் சில சந்தேகங்கள் எழுகிறது.

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப் பட்ட உருவம் தனது உடலைக் குறுக்கியும், கால்களை மடக்கியும் இருக்கிறது. திராவிட மொழிகள் சிலவற்றுள் சுருங்குதல், குறுகுதல், வளைத்தல் போன்றவற்றை 'முரடு', 'முருண்டு', 'முரடுக' போன்ற சொற்களால் குறிக்கின்றன. இவ்விரண்டு விஷயங்களையும் ஒப்பிட்டு, அவ்வுருவிற்கும் முருகனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற 'first cut hypothesis'-ஐ நிறுவினாலும், முருகு என்ற வேர் சொல்லிற்கு 'வலிமை வாய்ந்த', 'கொல்லக் கூடிய', 'பழமையான' என்ற அர்த்தங்களும் இருப்பதையும் கட்டுரையின் இப்பகுதி தெரிவிக்கிறது.

இவ்வேர்ச் சொல் ஆய்வின் நிறைவுப் பகுதியான '3.4'-இல் " In short, the deity was both 'a departed soul or demon' as indicated by his skeletal body and contracted posture, and also 'a fierce killer or hunter' as indicated by the Dr. etyma", என்று சொல்லியிருப்பினும், வாக்கியத்தின் முதலில் குறிப்பிட்டுள்ள 'பேய் உருவினனுக்கும்', இரண்டாவது பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'கடும் போராளிக்கும்' உள்ள தொடர்பு தெளிவாக விளங்கவில்லை. சங்க இலக்கியங்கள் முருகனை மாவீரனாகவும், கடுமையாக போர் புரிந்தவனாகவும், செற்றார் திரல் அழித்தவனாகவும் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பினும், அவனைப் பேய் உருவம் கொண்டவன், அல்லது உருவமே இல்லாதவன் என்று குறிப்பிருந்தாலன்றி, ஹரப்பன் நாகரீகத்தில் காட்டப்பட்டிருக்கும் பேயுருவம் முருகனாக ஏற்றுக் கொள்வது கடினம். இதே கருத்தை தங்கள் கட்டுரையின் '3.6' பகுதியில் கூறி, முருகன் உருவமற்றவன் என்றும் 'disembodied spirit' என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இருப்பதாகக் கூறி ஹரப்பன் நாகரீக உருவத்தையும் முருகனையும் தொடர்புபடுத்தியுள்ளீர்கள்.

கட்டுரையின் கடைப் பகுதியில் இருக்கும் சங்க இலக்கிய குறிப்புகளின் துணைக் கொண்டு அப்பாடல்களையும், அவ்விலக்கியங்களில் இருக்கும் முருகன் தொடர்பான வேறு சில பாடல்களை படித்த பொழுது, முருகன் உருவமற்றவன் அல்லது ஒரு பேய் என்னும் கருத்தில் குழப்பம் ஏற்பட்டது. குழப்பத்திற்கான காரணங்கள் பின் வருமாறு:

1. முருகன் என்பதும் மனதில் முதலில் தோன்றும் சங்க இலக்கியம் திருமுருகாற்றுப்படையே. இவ்விலக்கியத்தில் முருகனின் திருமுகங்கள் பற்றிய விரிவான வர்ணனைகள், முருகன் சிவந்த ஆடையை உடையவன் என்றும், சிவந்த மேனியைவுடையவன் என்றும், அவன் திருமேனியின் செம்மை சூரியனின் செம்மைக்கு ஒப்பாகும் என்றும் கூறுகிறது. இவை எல்லாவற்றிர்க்கும் மேல் முருகனை என்றும் இளையவன் மற்றும் அழகன் என்று "என்றும் இளையா யழகியா யேறூர்ந்தா னேறே" என்ற வரிகளின் (பத்துப்பாட்டு, உ.வே.சாமிநாதையர் பதிப்பு, பக்கம் எண் 80) மூலம் தெளிவாகிறது. இப்படிப்பட்டவன் எப்படி பேயாக இருக்க முடியும் என்றி எண்ணிப் பார்க்கையில், தங்களது கட்டுரையின் அடிக்குறிப்பு 35-இல் 'thirumurukaarruppadai and paripatal which are considered to be relatively later works." என்ற செய்தி, சங்க காலத்தின் தொடக்கத்தில் இருந்த கருத்து பிற்காலத்தில் மாறியிருக்குமோ என்று எண்ண வைத்தது. சங்க இலக்கியங்களுள் தொன்மையானதான நற்றிணை, குறுந்தொகை மற்றும் அகநானூறு ஆகியவற்றைப் படித்தால் இக்குழப்பம் தீரும் என்று அவற்றையும் பார்க்கலானேன்.

2. எட்டுத் தொகையைக் கூறும் பொழுது "நற்றிணை, நல்ல குறுந்தொகை" என்று தொடங்கும் வாக்கிற்கிணங்க நற்றிணையில் தொடங்கி முருகனைப் பற்றிய குறிப்புகளைத் தேட எண்ணினேன். 'பத்துப் பாட்டு' தவிர வேறு எந்த சங்க இலக்கியமும் கைவசம் இல்லாத நிலையில், குறுந்தொகையை வாங்குவது சுலபமாக இருந்ததால், அதிலே இருக்கும் முருகன் பற்றிய குறிப்புகளேயே முதலில் பார்க்க முடிந்தது.

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பகுதியே முருகனைப் போற்றும் வகையில் அமைந்திருக்கிறது. 'தாமரைப் புரையுங் காமர் சேவடி' என்று தொடங்கும் பாடலுக்கு, 'தாமரை மலரைப் போன்ற அழகிய செம்மையான திருவடியையும்', 'பவழத்தை ஒத்த சிவந்த நிறத்தையும்', 'விளங்கா நின்ற ஒளியையும்', 'குன்றி மணியை ஒக்கும் சிவந்த ஆடையையும்', உடையவனாக முருகனைப் பாடல் வர்ணிப்பதாக, உரையாசிரியர் மகாமகோபாத்தியாயர் உ.வே.சாமிநாதையர் கூறுகிறார்.

குறுந்தொகையின் முதல் பாடலில், "போர்க் களம் இரத்தத்தால் சிவக்கும்படி அவுணர்களைத் தேய்த்த முருகனைப் பற்றி கூறுகிறது. இப்பாடலில் முருகனின் அம்பைப் பற்றியும், யானையைப் பற்றியும், அவனுக்கு உரிய குன்றினைப் பற்றியும், அக்குன்றில் மலர்ந்து இருக்கும் சிவந்த காந்தள் மலர்களைப் பற்றியும் கூறுகிறது. குறுந்தொகையின் 214-ஆவது பாடலோ தோழியின் கூற்றாக அமைந்திருக்கும் அற்புதமான பாடல். இப்பாடலில், தலைவனைப் பிரிந்த தலைவியினிடத்தில் வேறுபாட்டைவுணர்ந்த அவளது தாய் முதலானோர், தலைவியின் மாற்றத்திற்கு எந்த தொடர்புமில்லாத முருகக் கடவுளுக்குக் கொன்றை அரலை மாலையைச் சூட்டி வெறியெடுப்பதைப் பார்த்து தோழி எள்ளி நகையாடுவது போல பாடல் அமைந்துள்ளது.

362-ஆவது பாடலும் இக்கருத்திலேயே, "தலைவியின் மாறுதல் முருகனால் வந்ததெனக் கருதி வெறியாட்டுவித்த வேலனை நோக்கித் தோழி, " தலைவியின் வருத்தம் போக்க எண்ணி நீ இடும் பலியை அவ்வருத்தத்திற்கு காரணமாகிய தலைவனது மார்பும் உண்ணுமோ?" என்று கேட்பது போல அமைந்துள்ளது.

3. குறுந்தொகையைத் தொடர்ந்து நற்றிணையிலும் இது தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன. நற்றிணை நானூறின் 47, 51, 173, 268, 273, 282, 288 மற்றும் 322-ஆவது பாடல்களில் முன்பு குறிப்பிட்ட குறுந்தொகைப் பாடல்களின் கருத்தையொத்த, 'தலைவியின் வேறுபாடும்', 'அவ்வேறுபாட்டைப் போக்க வேலன் ஆடும் வெறியாடலும்', 'வேலன் முருகனுக்கு பலியாக ஆட்டினைப் படைத்தலும்', 'வெறியாடும் களத்தின் தன்மைகளும்' தலைவியின் வாயிலாகவும், தோழியின் வாயிலாகவும் கூறப்பட்டுள்ளன.

தலைவியின் மாறுபாட்டினை உணர்ந்து முருகனுக்கு வெறியாடல் ஏற்பாடு செய்யும் தாயின் கனவில் தோன்றி, அந் நெடுவேள் உண்மையைக் கூறினால் ஏதேனும் அவனுக்குக் குற்றம் உண்டாகுமா?, என்று தலைவி கேட்கும் 173-ஆவது பாடலில், 'இந் நோய் என்னினும் வாராது' என்ற வரிக்கு உரை எழுதும் " இக்காம நோய் என்னாலும் வேறு பிற அணங்குகளாலும் எய்தியதொன்றன்று கண்டாய்" என்கிறார் அ.நாராயணசாமி ஐயர்.

268-ஆவது பாடலில், அன்னை அழைத்திருக்கும் வேலனிடம் சென்று "நாம் காதலன்பால் அளவு கடப்பக் காதல் உண்டாக்கியும், அவனால் விரும்பப் படாமேயிருப்பது எக்காரணத்தினாலென்று கேட்போமா?", என்று தலைவியிடம் தோழி கேட்பது போல அமைந்துள்ளது. 288-ஆவது பாடலில், பசலை நோயால் வாடும் தலைவியின் மாறுதலுக்கு " இந் நெடிய முருகவேள் இருக்குமிடத்து அருகு சென்றதால் ஏற்பட்ட வருத்தம்", என்று உண்மையறியா முது பெண்டிர்கள் குறி சொல்வதைக் குறிக்கிறது.

தலைவியின் மாறுதல் உணர்ந்து, அதனைப் போக்க வெறியாடல் ஏற்பாடு செய்தமைத் தவிர வேறு சில இடங்களிலும் முருகனைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. 225-ஆவது பாடலில் யானையின் சினம் முருகனின் வலிமைக்கு ஒப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

82-ஆவது பாடலின் துறை விளக்கம் பின் வருமாறு. "பாங்கியிற் கூட்டத்தின் கண்ணே குறியிடத்துத் தலைவியைக் கூடிய தலைவன் தன்னெஞ்சிற் கிடந்த கருத்தக் கூறத் தொடங்கிக், கொடிச்சி, முருகனோடு வள்ளி நாச்சியார் சென்றது போல நீ எஞ்சிறு குடிகண் வந்திருக்குமாறு என்னோடு வருகின்றனையோ எனப் பரிவுற்று மெலிந்து கூறா நிற்பது." இப்பாடலின்,

"என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி
முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போல"

என்னும் வரிகள் மூலம், தலைவனையும் தலைவியையும் முருகனுக்கும் வள்ளிக்கும் ஒப்பிட்டு இருப்பது தெளிவாகிறது.

4. எட்டுத்தொகையுள், அகத்திணையைச் சார்ந்த மூன்றாவது நூலான அகநானூறில், இவ்விஷயம் தொடர்பாக இருக்கும் குறிப்புகளுள் சில பின் வருமாறு.

22-ஆவது பாடல் மிகவும் அற்புதமான பாடல். தலைவனின் மணம் கமழ் மார்பைப் பிரிந்ததால் தோன்றிய வருத்தத்தை உணராது கலக்கமுற்ற தலைவியின் சுற்றம், நெடுவேளைப் போற்றின் இவள் துன்பம் தணியப் பெறுகுவள் என்று அறிவு வாய்த்தலை உடைய பெண்டிர் அதனை மெய்யாகக் கூற, வெறியாடும் களம் நன்கு அமைத்து, வேலிற்குக் கண்ணி சூட்டி, பலி கொடுத்து, செந்தினையைக் குருதியுடன் கலந்து தூவி, முருகனை வரவழைத்த அச்சம் பொருந்திய நடு இரவில், களிறாகிய இரையைத் தெரிதற் பொருட்டு ஒதுங்கிய பார்வையினை உடைய புலியினைப் போல, மனையின் கண்ணே காவலரும் அறியாத வண்ணம், தலைவி மெலிதற்கு ஏதுவாய இந் நோயைத் தணித்தற்குரிய தலைவன் வந்து, தலைவியின் உள்ளத்தின் விருப்பம் நிறைவேறும்படி, இனிய உயிர் குழையும்படி முயங்குதோறும், இதற்கு எந்த தொடர்புமில்லாத வேலனையும், அவனால் இவள் நோய் நீங்கியதென்றெண்ணுவோரையும் கண்டு தலைவி உடல் பூரித்துச் சிரிக்கிறாள். இப்பாடலில் வெறியாட்டைப் பற்றிய அழகான விளக்கம் "வெறிபாடிய காமக் கண்ணியார்" மூலம் நமக்குக் கிடைக்கிறது.

98-ஆவது பாடலோ, முன் குறிப்பிட்ட பல பாடல்களைப் போலவே தலைவியின் பிரிவுத் துயரையும், அதனைப் போக்க அவள் அன்னை வேலனை அழைத்து வெறியாட்டுவித்தலும் காட்சியாக்கப் பட்டிருக்கின்றன. அப்படி வெறியாடிய பின்னும் என் மேனி முன்பு போல சிறந்திடாதாயின், என் களவொழுக்கம் பலரும் தூற்றுமாறு வெளிப்படாமலிருப்பது அரிது. அஃதன்றி, மணம் கமழ் நெடுவேள் என் முன்னை அழகினைத் தந்தருள்வானெனில், காடு பொருந்திய நாட்டினையுடைய தலைவனுக்கு இச்செய்தி எட்டினால், நான் உயிர் வாழ்வது முற்கூறியதைக் காட்டினும் அரிது, என்று கூறும் இப்பாடலும் வெறிபாடிய காமக் கண்ணியாரின் பாடல்தான்.

138-ஆவது பாடலும் வெறியாட்டு தொடர்பாகவேயுள்ளது. இப்பாடலில், வெறியாட்டின் பொழுது, வாச்சியங்கள் ஒலிக்க, கரங்கள் குவித்து தொழுது, முருகனை மனையின் கண் வரவழைத்து, அவனது கடம்பினையும், யானையையும் பாடி, பனந்தோட்டினையும் கடப்ப மாலையையும் கயிற் கொண்டணிந்து, அசைந்தசைந்து, இரவெல்லாம் ஆடினர் என்னும் தகவல் எழூஉப்பன்றி நாகன் குமரனார் மூலம் கிடைக்கின்றது.

232-ஆவது பாடலும், தலைவியின் மாறுதல் முருகனால் ஏற்பட்டிருக்குமோ என்றெண்ணி, தலைவியின் தாய் வேலனை அழைத்ததைத் தெரியப் படுத்துகிறது. இப்பாடலில் குறிஞ்சி நிலத்தின் வர்ணனை மிகவும் அழகுறச் செய்யப்பட்டுள்ளது. நடு இரவில், இடியின் ஓசை கேட்டு, மூங்கிலைத் தின்னும் யானையானது, அவ்வொலியினைப் புலியின் ஒலி எனக் கருதி அஞ்சி, பெரிய மலை முழுதும் எதிரொலிக்கும்படி சிலம்பிப் பெயர்ந்தோடும் மலையின் கண்ணே இருக்கும் ஊராக தலைவனின் ஊர் குறிக்கப்படுகிறது.

59-ஆவது பாடல், சூரபன்மாவினையும் அவன் சுற்றத்தினையும் தொலைத்த ஒளி பொருந்திய இலைத் தொழிலையுடைய நெடிய வேலினையுடைய, சினம் மிக்க முருகனது இடம் என்று திருப்பரங்குன்றத்தைக் குறிக்கிறது.

கபிலரின் பாடலாக மலரும் 118-ஆவது பாடலிலோ "இயன் முருகொப்பினை" என்னும் தொடரில், தலைவனை இயங்கும் முருகனுக்கு ஒப்பிட்டிருப்பது தெரிகிறது.

நக்கீரர் எழுதிய 120-ஆவது பாடல் "நெடுவேள் மார்பின் ஆரம் போல" என்று தொடங்குகிறது. இப்பாடலின் முதல் சில வரிகளுக்கு, "முருகக் கடவுள் மார்பினடத்து முத்தாரம் போல, மீனை அருந்தும் பசிய காலையுடைய கொக்கினது இனம் வரிசையாகப் பறத்தல் உயர்ந்திட, பகற் பொழுதை மெல்ல மெல்லப் போக்கி, பல கதிர்களுடைய ஞாயிறு மேற்றிசையில் மறையும் மலையை அடைந்தது.", என்று உரை எழுதுகிறர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள்.

181-ஆவது பாடலோ ஆய் எயினான் என்னும் அரசனைப் பற்றியது. இப்பாடலில் அரசினின் வலி முருகனின் வலிமையையொத்ததாக இருந்ததாகப் பரணர் பாடுகிறார்.

மதுரை ஆறுவை வாணிகன் இளவேட்டனாரின் 272-ஆவது பாடல் மிகவும் சுவாரசியமான ஒன்று. முருகனுக்கு மிகவும் தொடர்புள்ளவொன்றும் கூட. இப்பாடலின் கருத்து பின் வருமாறு. "பெரிய புலியை வென்ற பெரிய கையினையுடைய யானையின், புலால் நாறும் புள்ளி பொருந்திய நெற்றியைக் கழுவ, அருவியைத் தந்த தெய்வித்தினையுடைய நெடிய மலையினது, அச்சம் தரும் பிளப்பாகிய குகைகளிலுள்ள, அரிய இருளைப் போக்கிய, மின் போல் விளங்கும் வேல், தான் செல்லும் நெறியினைக் காட்ட, நம் தலைவன் தமியனாய் வந்து பனி அலைத்தலை வேறானாகி, அருவி நீர் ஒழுகும் பக்கத்தினையுடைய அரிய இடத்தே நெருங்கிய காட்டு மல்லிகை மலருடன் கூதள மலரையும் சேரத் தொடுத்த கண்ணியின் விட்டு நீங்காத மணத்தினை அசையும் காற்று வெளிப்படுத்த, பொற்றைக் கல் பொருந்திய மிளகு கொடி படர்ந்து தோட்டத்தையுடைய குறிய இறப்பினையுடைய குடிசையாகிய நம் மனையிடத்தே, உடல் பூரிக்கும் மகிழ்ச்சியுடையானாய் புகும் நிலையைக் கண்டு நம் அன்னை, முருகனே என எண்ணி, புகழுரை கூறி, செந்தினையை நீரோடு தூவி, முருகக் கடவுளைப் பரவா நின்றாள். இதனால், பொன்னிறங் கொண்டு மலர்ந்த வேங்கையின் அசையும் கிளை பொலிவிற, நீலமணியை ஒத்த நிறத்தையுடைய மயில் ஆடும் அழகிய மலைநாட்டானுடைய தலைவனோடு பொருந்திய நட்பானது என்ன நிலையை அடையுமோ?"

மேற் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமுருகாற்றுப்படை, குறுந்தொகை, நற்றிணை மற்றும் அகநானூறுப் பாடல்களிலிருந்து, முருகக் கடவுள் மிகுந்த வலி பொருந்தியவரென்றும், அசுரர்களை அழித்தவர் என்றும் தெரிகிறது. தலைவி பசலையால் வாடுவதை, அவளது சுற்றத்தார் முருகக் கடவுளின் செயல் என்று தவறாகக் கொண்டு, வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துவதையும் இப்பாடல்கள் உணர்த்துகின்றன. முருகனின் செயலால், தலைவிக்கு வருத்தம் ஏற்பட்டிருக்குமோ என்று தலைவியின் சுற்றம் எண்ணியிருப்பினும், முருகன், இக்கால வழக்கில் கூறுவது போல "பேய் பிடித்தாற் போல", தலைவியைப் பிடித்திருக்கிறான் என்று தலைவியின் சுற்றத்தார் நினைத்திருப்பார்களா என்பது சந்தேகமாகவுள்ளது.

முருகன் பேயுருவானவன் எனக் கொள்ளின், குறுந்தொகை கூறுவது போல, அவனுடைய பாதம் தாமரையை ஒப்ப இருக்குமா?, அல்லது, அவனது உடல்தான் பவழத்தை ஒத்து இருக்குமா? என்ற கேள்விகளும் எழுகிறது. நற்றிணையின் 173-ஆவது பாடல் மற்றும் 288-ஆவது பாடல் மூலம், முருகனின் செயலால் இளம் பெண்களுக்கு வருத்தமுண்டாவதென்பது தெளிவாகினும், 82-ஆவது பாடலில் "முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல" என்று தலைவனையும் தலைவியையும் ஒப்பிட்டிருப்பதிலிருந்து, முருகன் பேய்தானா என்ற கேள்வி வலுப்படுகிறது. அகநானூறில், தலைவனையும், அரசனையும் முருகனுக்கு ஒப்பிட்டுருப்பதையும், முருகனின் மார்பில் இருந்த முத்துமாலையைப் பற்றிய குறிப்பையும் வைத்துப் பார்க்கும் பொழுது, பேயுருவானவனை தலைவனுக்கும், அரசனுக்கும் ஒப்பிட்டிருப்பார்களா?, மற்றும், பேயின் மார்பில்தான் முத்தாரம் மிளிருமா என்ற கேள்விகளும் எழுகின்றன. அக நானூறின் 272-ஆவது பாடல், வேலேந்தி வந்த தலைவனை முருகக் கடவுள் என்றெண்ணி தலைவியின் தாய் மயங்குவதைக் குறிப்பிடுவதிலிருந்தும், முருகனின் உருவம் பற்றிய சந்தேகம் வலுக்கிறது.

தங்கள் கட்டுரையைப் படித்த பொழுது, ஒரு ஆழ்ந்த ஆய்வைப் படித்த நிறைவும், அதன் தாக்கத்தால், பல நல்ல சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டதை எண்ணி மனம் நிறைவடைந்தாலும், கட்டுரையையும் இலக்கியங்களையும் ஒப்பு நோக்கும் பொழுது எழும் சந்தேகங்கள் நெருடலாகவே இருக்கிறது. இக்கடிதத்திற்கு பதலளித்து, என்னுடைய மற்றும் எங்கள் இணைய இதழின் வாசகர்களின் சந்தேகங்களைக் களையுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
லலிதா ராம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.