Monday, May 22, 2006

சிகரத்தை நோக்கி... II

கிரீவத்திலிருந்துப் பார்க்க, சிவகங்கைக் குளமும், மேற்கிலிருந்த அழகிய நந்தவனமும், சரபோஜி அரண்மனையும், பல ஆண்டுகளாய் நிற்கும் மணிக்கூண்டும், எறும்புகள் போலத் தெரிந்த மனிதர்களும், அட்டையில் செய்த கட்டிடங்கள் போலக் காட்சியளித்த கோபுரங்களும், திருச்சுற்று மாளிகையும் கண்ட போது பாபநாசம் சிவனின் காம்போதி ராக பாடலான 'காணக் கண் கோடி வேண்டும்' என்ற பாடலைத் தானாகவே வாய் முணுமுணுத்தது.

தஞ்சைக் கோயிலின் விமானத்தின் நிழல் தரையைத் தொடும் என்று நான் முன்னரே அறிந்திருந்த போதும், கிரீவத்திலிருந்தபடி தரையில் வீழ்ந்திருக்கும் பிரம்மாண்ட நிழலைக் கண்ட போது உள்ளக்குள் இனம் புரியா நிறைவு ஏற்பட்டது. நிழல் விழுமென்ற செய்தியை பலர் முன்பே கூறியிருப்பினும், அன்று தென்பட்ட பிரம்மாண்ட நிழலை புகைப்படமாய் கைது செய்து, உலகெங்கும் இணைய உலா வர வைக்கலாம் என்ற எண்ணமே அந்நிறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.

கிரீவத்தலிருந்து பிரிய மனமே வராத போதிலும், சிகரம் எங்களை அழைத்ததால், அரை மனதுடன் சிகரத்தை அடைந்தோம். அங்கு ஏற்கெனவே காத்திருந்த கிருபாசங்கருடன் சேர்ந்து பல படங்கள் கிளிக்கியபின், பிரம்மாண்ட கலசத்திலடியில் அனைவரும் அமர்ந்தோம். குழைவுக் குரலோன் கோகுல் இல்லாத சமயங்களில், இதைப் போன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடப்பின் நான் பாடுவது வழக்கம். அன்றோ, சாரீரம் முழுவதையும் சளி அமுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. முனைவர் கலைக்கோவன் "பாடுங்க தம்பீ! இங்க பாடலைன்னா வேற எங்க பாடறது?" என்ற போதும் நா எழவில்லை. அந்த சமயத்தில் பத்மநாபனின் அற்புதக் குரல் ஆபேரி ராகத்தில் 'காதலாகி கழிந்துருகி கண்ணீர் மல்கி' என்று உருகி அனைவரையும் உருக்கியது. அப்பாடலின் முதல் வரியை அவர் பாடியதும், ஜனவரி 2005-இல் வெளியிட்ட இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழுக்காக முனைவர் கலைக்கோவனின் கட்டுரையே நினைவில் நிறைந்தது. அவரின் பல கட்டுரைகளை மிகவும் இரசித்துப் படித்திருக்கிறேன் எனினும், என்னை அக்கட்டுரை உணர்ச்சிவசப்பட வைத்தது போல வேறு கட்டுரைகள் வைத்ததில்லை என்றே கூற வேண்டும். பதநாபன் பாடிய பின் நானும் 'குனித்த புருவமும்' என்ற தேவாரப் பாடலை என் மனம் போன மெட்டில் பாடினேன். அதன் பின் இலாவண்யா காம்போதியில் 'தயாபரா மகேஸ்வரா' பாடினார். சூரியனின் மாலைக் கிரணங்கள் மங்கத் தொடங்குவதற்கு முன் தொல்லியில் அளவீட்டுத் துறையைச் சேர்ந்த திரு.மோகனின் உதவியுடன் 'குழுப் படங்கள்' எடுத்துக் கொண்டோம்.

பின்பு அவரின் உதவியுடனே கிரீவப் பகுதியிலிருந்த பூத கணத்தையும் தரிசித்தேன். சிகரத்தில் கொடியை நாட்டினால் அது அப்பூதத்தின் தலையில் இருந்த ஓட்டையில் அழகாய் உட்கார்ந்து கொள்ளுமாறு அமைக்கப் பெற்றிருக்கிறதாம். சிகரத்தின் மேல் இருந்த பேறு பாதி நேரம் என் சிந்தை என்னிடம் இல்லாததால், முக்கியமாய் புகைப்படத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்த சில விஷயங்களை பதிவு செய்யாமலே விட்டுவிட்டேன். அவற்றுள் ஒன்றுதான், விமானத்தின் சிகரம் பல கற்களால் ஆனது என்ற உண்மையை உணர்த்தும் படம்.

பார்ப்போம். பிழைத்துக் கிடந்தால், அடுத்த வாய்ப்பு என்று ஒன்று வாய்க்குமெனின், விட்டவைகளுள் பல நூற்றில் சிலவற்றையாவது மனதிலும் படத்திலும் பதித்து பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். அவன் சித்தம் எப்படியோ? யாரறிவார்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 12:09 AM, Blogger Sami said...

Great Work.

 
At 8:14 PM, Blogger ஓகை said...

சிகரம் தொட்டவரை அண்ணாந்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மிகச் சிறந்த பதிவு.

 

Post a Comment

<< Home