Tuesday, December 12, 2006

எம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு

எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவு நாளையொட்டி வரலாறு.காமில் வெளியான எனது அஞ்சலியை இங்கு வெளீயிடுகிறேன்.

டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வந்த செய்தித்தாள்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் பற்றிய செய்தியைத் தாங்கி வராமல், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை படைத்த 34-ஆவது சதத்தை வெளியிடாமல், 88 வருடங்கள் வாழ்ந்து வரலாறு படைத்த எம்.எஸ்-இன் மறைவைத் தெரிவித்தன. அன்றிலிருந்து, தூர்தர்ஷனிலும், பல தனியார் தொலைக்காட்சிகளிலும் எம்.எஸ்-இன் வாழ்வைப் பற்றிய நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் எம்.எஸ்-இன் வாழ்வை மூன்று புத்தகங்கள் பதிவு செய்ய முயன்றன. அக்டோபர் 1986-ஆம் ஆண்டு, 'ஸ்ருதி' பத்திரிகை, எம்.எஸ்-இன் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பல கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. இன்னும் எத்தனையோ பத்திரிகைகளில், நாளிதழ்களில், புத்தகங்களில் எல்லாம் பதிப்பித்தும் முழுமையடையாத சகாப்தமாக எம்.எஸ்-இன் வாழ்க்கை விளங்குகிறது.

அவரவர் விருப்பம் போல எம்.எஸ்-இன் வாழ்வை பதிவு செய்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில், எம்.எஸ்-இன் வாழ்வு எதைப் பதிவு செய்தது என்பதைப் பார்ப்போம். எம்.எஸ்-இன் கச்சேரி அணுகுமுறை, அவரது ஆலாபனை, அவரது ஸ்வரப்ரஸ்தாரம், அவரது லய விந்யாசம், பக்திப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் பேசுபவர்களைக் காண முடியும். ஆனால், அவரது குரல்வளத்தை, கீர்த்தனைகள் பாடிய விதத்தை, பாடல்களில் இருக்கும் விஸ்ராந்தியைப் பற்றி ஒரு கருத்துதான் இருக்க முடியும்.

மேல்கூறிய மூன்றில், குரல் வளத்தைப் பற்றி சொல்வது ஒரு பெரிய நதியில் கால் டம்ப்ளர் தண்ணீர் ஊற்றுவது போன்றதாகும்.

விஸ்ராந்தி என்பது ஒரு அனுபவம், அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆகையால், எம்.எஸ் பாடிய கீர்த்தனைகளைப் பற்றி ஆராய்வோம்.

கீர்த்தனை என்பது ராகம் என்னும் அரசன் தடங்கலின்றி உல்லாசமாய் பவனி வரத் தோதான ராஜபாட்டை. கீர்த்தனைகள் பாடும் பொழுது, ஒரே வரியை பல முறை வேறு வேறு விதமாகப் பாடுவார்கள். இதற்குச் சங்கதிகள் என்று பெயர். இந்த சங்கதிகளை ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, ஒரு திறமையான பேட்ஸ்மேன் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சந்திக்கிறார். முதல் பந்து 'குட்-லெங்ந்தில்' விழுகிறது, நமது பேட்ஸ்மெனின் கால்கள் பந்தை நோக்கி துரிதமாகச் சென்று மிட்-ஆனுக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்கின்றன. விளைவு - 4 ரன்கள். அடுத்த பந்தும் அதே இடத்த்ல் விழுகிறது, ஆனால் இம்முறை லாங்-ஆனில் ஒருவர் இருக்கிறார். நமது ஆட்டக்காரர் சற்று நகர்ர்ந்து காலியாக இருக்கும் 'பாயிண்ட்' திசையில் 'கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள். இம்முறை டீப்-பாயிண்ட் இருக்கிறது, பந்து அதே இடத்தில் விழுந்து வருகிறது, பேட்ஸ்மேன் பந்து தன்னை கடக்கும் வரைக் காத்திருந்து, விக்கட்-கீப்பரின் கையுரையில் செல்லும் முன் செல்லமாக தடவிக் கொடுப்பது போல பந்தை லேட்-கட் செய்கிறார். விளைவு - 4 ரன்கள்.

எப்படி ஒரே பந்தை வெவ்வேறு விதமாக பவுண்டரிக்கு அனுப்பி, தன் திறமையின் பரிமாணங்களை பேட்ஸ்மேன் வெளிப்படுத்தினாரோ, அதே போல, ஒரு ராகத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்வதே சங்கதிகளின் வேலை. காம்போஜி ராகக் கிருதியான 'ஓ ரங்க சாயி' என்ற பாடலின் பல்லவியை எம்.எஸ் பாடும் விதத்தைக் கேட்டால், நான் கூறிய 'cricket analogy' புரியும். 'ஓ ரங்கசாயி' என்ற வரியில் 'ஓ' என்ற சொல் (எழுத்து) மட்டும் இரண்டு களை ஆதி தாளத்தின் 3 இடங்களுக்கு வரும். அந்த ஒரு எழுத்தை முதலில் காம்போஜியின் சில ஸ்வரங்களில் மட்டும் பாவவிட்டுப் பாடுவார். அடுத்த சங்கதியில் முன்னல் பாடிய ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அன்புடன் அணைத்துக் கொள்ளும். அடுத்த சங்கதியில் வேறு சில ஸ்வரங்கள் சேர்ந்து கொள்ளும். அடுத்த சங்கதியில் காம்போஜியின் மொத்த உருவம் லேசாக பவனி வர ஆரம்பிக்கும், இப்படி படிப்படியாய் வளர்ந்து வளர்ந்து, 'ஓ ரங்க சாயி' என்ற வரி சில மின்னல் வேக ப்ருகாக்களுடன் காம்போஜி ராகத்தை ரோலர் கோஸ்டரில் இட்டுச் செல்லும். பேட்ஸ்மெனின் ஒவ்வொரு அடியும் எப்படி பவுண்டரியில் முடிந்ததோ அதே போல எம்.எஸ்-இன் சங்கதிகள் எத்தனை எத்தனை இருப்பினும் அவற்றின் விளைவு, கேட்பவர் மனத்தில் மகிழ்ச்சிதான்.

டெஸ்ட் மேட்ச் போன்ற 'ஓ ரங்க சாயிக்கும்', ஒரு நாள் போட்டி போன்ற, ஒரு களையில் அமைந்த 'திருவடி சரணத்திற்கும்' இடையில் எம்.எஸ் காட்டும் difference in approach-ஐ அவரது கச்சேரிகளில் தெளிவாகக் காணலாம். கீர்த்தனைகளில் உச்சரிப்பு, பாவம், சாஹித்ய சுத்தம் என்ற அனைத்து இலட்சணங்களையும் எம்.எஸ்-இன் கச்சேரிகளில் பார்க்க முடியும். சௌந்தர்ய லஹிரியில் ஒரு ஸ்லோகத்தைப் பாடிவிட்டு, எம்.எஸ் பாடும் 'ஹிரண்மயீம் லக்ஷ்மீம்' என்ற லலிதா ராகப் பாடல் கல்லையும் உருக்கிவிடும். இன்னும் 'சரோஜ தள நேத்ரி', 'யாரோ இவர் யாரோ', 'தேவி ப்ரோவ', 'குறையொன்றுமில்லை' என்று பல கீர்த்தனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றைய நிலையில், எம்.எஸ்-இன் சுப்ரபாதம் போன்ற ஒலிநாடாக்களும், கல்கியின் பாடல்கள் கொண்ட ஒரு துக்கடா collection-உம், மீரா பஜன், சூர்தாஸ் பஜன் போன்ற ஒலிநாடாக்களும்தான் அதிகம் கிடைக்கின்றன. எம்.எஸ்-ஐப் பற்றி அடுத்த தலைமுறைக்கு இவை தவறான ஒரு அபிப்ராயத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது. வெறும் பஜன்களாலும், துக்கடாக்களாலும்தான் எம்.எஸ் உலகப் புகழ் பெற்றார் என்ற எண்ணம் பரவினால் கூட வியப்பதற்கில்லை. 'ராகம் தானம் பல்லவி' கொண்ட பல கச்சேரிகள், இன்றும் சில இசை ஆர்வலர்களிடம் கிடைக்கிறது.

மஹா வைத்தியநாத சிவன் என்ற சங்கீத சிம்மம் 72 மேள கர்த்தாவையும் கொண்டு, அந்த ராகங்களின் பெயர்கள் சாஹித்யத்தில் வருமாறும், ஆழ்ந்த அத்வைத கருத்துக்களுடனும், 72 இராகங்களிலும் சிட்டை ஸ்வரங்களுடனும் ஓர் அரிய கிருதியை உருவாக்கினார். வெறும் புத்தகத்தில் மாத்திரம் இருந்த கிருதியைப் பாடம் செய்து, உலகுக்கு பரப்பும் வண்ணம் ம்யூசிக் அகாதமியின் துணையுடன் ஒரு ஒலிநாடாவை எம்.எஸ் கொடுத்திருக்கிறார். இந்த ஒலிநாடா இன்று எந்த கடையிலும் கிடைப்பதாகத் தெரியவில்லை. வெறும் ஒலிநாடாவில் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்றெண்ணாமல், கம்பி மேல் நடப்பது போன்ற கடினமான அக்கிருதியை, தன் கச்சேரிகளில், 12 இராகங்கள் வீதம் பலமுறை பாடியிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.

மதுரை ஷண்முகவடிவிடம் தொடங்கி, அரியக்குடி, செம்மங்குடி, முசிறி, வீணை தனம்மாள், பேகம் அக்தர் போன்ற ஜாம்பவான்களிடம் பாடம் கேட்கும் பெரும் பேரை எம்.எஸ் அடைந்தார் என்று கூறலாம். இதனாலேயே, இவரது கச்சேரிகளைப் பாதுகாப்பதும் வெளிக் கொணர்வதும் அவசியமாகிறது. அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றிருந்த எம்.எஸ்-இன் படாந்தரத்துக்கு ஈடு இணையாக வேறொருவரைக் காண்பது துர்லபம். இன்றைய நிலையில் அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் போன்றோர்க்ளின் பல கீர்த்தனைகளை இழந்து நிற்கும் நமக்கு, எம்.எஸ்-இன் கச்சேரிகளின் திரட்டு ஒரு சிறந்த கருவூலத்தை உருவாக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய அனைத்து மொழிகளிலும் 70 வருடங்கள் பாடி எம்.எஸ் வைத்துச் சென்றிருக்கும் செல்வம், அவர் கச்சேரிகள் செய்து பணமாய் கொடுத்த தானங்களை எல்லாம் மிஞ்சு செல்வமாகும். அதைப் பாதுகாத்தல் நமது கடமை.

முதல் கட்டமாக, எம்.எஸ்-இன் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் கச்சேரிகளை வெளியிடலாம்.

மனம் இருந்தால் மார்க்கம் இல்லாமலா போய்விடும்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, November 23, 2006

வேண்டாத வதந்திகள்

தீபாவளி என்றதும் மனதில் தோன்றும் விஷயங்களுள் தீபாவளி மலரும் நிச்சயம் இருக்கும். தீபாவளி மலர்கள், வாரப் பத்திரிகைளைப் போன்றோ செய்தித் தாள்களைப் போன்றோ கருதப்படாமல், பல குடும்பங்களில் பரம்பரைச் சொத்தாகும் பேறினைப் பெற்றவை. இந்த வருட விகடன் தீபாவளி மலரில் சில்பியும், 'கொண்டையராஜு' சுப்பையாவும் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். வழவழ பேப்பரில் செம்பதிப்பாய்க் காட்சி தந்த 2006 விகடன் தீபாவளி மலரைக் கண்டதுமே முழுமையாகப் படித்துவிட வேண்டும் என்ற ஆவல் உண்டானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அப்படிப் படித்த போது, 'சுவடுகள் பகுதியில் 'புதைந்து கிடக்கும் வரலாறு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையைப் பார்க்க நேரிட்டது. கட்டுரையைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

பல லட்சம் வாசகர்களைக் கொண்ட விகடன் பிரசுரித்த கட்டுரையைப் படிப்பவர்களை நினைத்தும், அவர்கள் குடும்பத்துப் பரம்பரைச் சொத்தில் சேர்ந்துவிடப் போகும் தீபாவளி மலரைப் படிக்கப் போகும் நாளைய சந்ததியினரை நினைத்தும் கவலை கொள்ள நேரிட்டது. 'ஓட்டை தோப்பில்' பாதி புதைந்திருக்கும் சிவலிங்கத்தை மாமன்னன் இராஜராஜனின் பள்ளிப்படையாகக் கருதி, அக்கருத்துக்கு வலுச்சேர்க்க வேண்டிய கட்டாயத்தால், பல உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் தாங்கி நிற்கிறது கட்டுரை. கட்டுரை கூறும் களத்திற்குச் சென்று, அங்கு கிடைக்கும் தூண் கல்வெட்டுக்கும், மாமன்னன் இராஜராஜ சோழரின் பள்ளிப்படைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தவன் என்ற வகையில், கட்டுரையில் இருக்கும் தகவல் பிழைகளையும், அத்தகவல்களைத் தாங்குதளமாகக் கொண்டு எழுப்பப்படும் கருத்துகளில் உள்ள பிழைகளையும் எடுத்துச் சொல்வது கடைமையாகிறது.

மாமன்னன் இராஜராஜனின் கல்லறை இருக்கும் இடமாக உடையாளூரை அடையாளம் காட்ட, பால்குளத்தி அம்மன் கோயிலில் காணக் கிடைக்கும் உருளைத் தூண் கல்வெட்டையே ஆதாரமாகத் தருகிறார் ஓவியர் இராஜராஜன். அத் தூண்களைப் பற்றி எழுதும் போது, "1946களில் இந்த சமாதியை ஒட்டிக் கிடந்த இரண்டு உருளை கருங்கல் தூண்கள் உள்ளூர்வாசிகளால் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள உடையாளூர் பெருமாள் கோயிலில் எதற்கோ முட்டுக்கொடுக்கக் கொண்டு சென்று நிறுத்தப்பட்டு, இயலாமல் போனதில் வீதியில் கிடத்தப்பட்டது", என்கிறார் ஓவியர் ராஜராஜன். இக் கூற்றில் கொஞ்சம் கூட உண்மையில்லை. 1927-இல் இவர் கூறும் தூண் கல்வெட்டைப் படியெடுத்த தொல்லியில் அளவீட்டுத் துறை, தனது ஆண்டு அறிக்கையில், இத்தூண்கள் உடையாளூர் பெருமாள் கோயிலில் இருந்ததாகவே குறிக்கிறது. 1927-லேயே பெருமாள் கோயிலில் காணப்பட்ட கல்வெட்டை, 1946-இல் பெருமாள் கோயிலில் முட்டுக் கொடுக்க கொண்டு சென்றதாகக் கூறி, தன் கருத்துக்கு முட்டுக் கொடுக்கிறார் கட்டுரையாளர். இவர் கூறும் கல்வெட்டு இராஜராஜரின் பள்ளிப்படையை நமக்கு அடையாளம் காட்டுமெனில், இந்த ஆண்டு குழப்பங்களையெல்லாம் மன்னித்துவிடலாம்.

இக் கல்வெட்டு கூறும் செய்திதான் என்ன? கல்வெட்டுச் செய்தி இதுதான் என்று எழுதினால், அது கல்வெட்டைப் படித்து எனக்குத் தோன்றிய எண்ணங்களோ என்று தோன்றலாம். அதனால், கல்வெட்டு வரிகளையே அளிக்கிறேன். இக்கல்வெட்டுக்கும் இராஜராஜரின் பள்ளிப்படைக்கும் தொடர்பேதும் உண்டா என்று கல்வெட்டு வரிகளைப் படிப்பவர்கள் உணர்ந்துவிடுவர்.

1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு
2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து
4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ
5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
6 பெரிய திருமண்டப முன்(பி¦)லடுப்பு ஜீர்
7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா
9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா
12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்

மேற்குறிப்பிட்டுள்ள முதற் குலோத்துங்க சோழரின் 42-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வரலாற்றுத் துறையில் ஈடுபாடுள்ளோருக்குப் பரிச்சயமான ஒன்றுதான். பல வருடங்களுக்கு முன், இக் கல்வெட்டை ராஜராஜரின் பள்ளிப்படையோடு இணைத்து எழுந்த கருத்துகளைத் தவறென்று டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய ஆய்வர்கள் கூறியுள்ளனர். 2004-இல் இப்பள்ளிப்படைச் செய்தி தினமலர், தினதந்தி முதலிய நாளிதழ்களில் மீண்டும் தலைகாட்டியது. அதனால், எனது நண்பர் திரு.ச.கமலக்கண்ணனும் நானும் மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தைத் தொடர்பு கொண்டு, அம்மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.கலைக்கோவனுடனும், ஆய்வர்கள் முனைவர் நளினியுடனும், இரா.இலலிதாம்பாளுடனும் கள ஆய்விற்குச் சென்றோம். அக்கள ஆய்வில் கண்டு தெளிந்த உண்மைகளையே, சில மாதங்கள் கழித்து வரலாற்றுக்காக ஒரு மாத மின்னிதழ் (www.varalaaru.com) தொடங்கிய போது 'உடையாளூரில் பள்ளிப்படையா?', என்ற தலைப்பில் கட்டுரையாக்கினார் முனைவர் கலைக்கோவன்.

கல்வெட்டைப் படிப்பவர்கள், இராஜராஜரான சிவபாதசேகரரின் பெயரில் ஒரு மண்டபம் இருந்ததையும், அம்மண்டபத்தின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதடைந்ததால் (ஜீர்ந்நித்தமையில்) பிடவூர் வேளான் அரிகேசவனான கச்சிராஜன் திருப்பணி செய்து வைத்தார், என்ற செய்தியையும் உணர்ந்திடுவர். கல்வெட்டின் எந்த வரியிலும் பள்ளிப்படை என்ற சொல்லாட்சியோ, இராஜராஜரின் மரணத்தைப் பற்றிய குறிப்போ இல்லை. "1986-இல் குடந்தை சேதுராமன் அவர்களால் இக் கல்வெட்டு இனம் காணப்பட்டது", என்று கூறும் ஓவியர் ராஜராஜன், அதன் பின் அக் கல்வெட்டைப் பற்றி வந்த செய்திகளைப் படிக்கவில்லை போலும். பதினேழு வரி கல்வெட்டை "7 வரி கல்வெட்டு" என்று அவர் எழுதியிருப்பதை நோக்கினாலே, "இக்கல்வெட்டின் மூலமாகவே சோழ மாமன்னனின் பள்ளிப்படை வீடு குறித்த செய்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது", என்ற அவர் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்க முடியும் என்று உணரலாம்.

இல்லாத பள்ளிப்படையை அடையாளம் கண்டுவிட்ட கட்டுரையாளர், இன்று அப்பள்ளிப்படை இல்லாமல் போனதற்கும் சுவாரசியமான கதைகள் கூறுகிறார். பழையாறையின் இன்றைய அடையாளமாக 'இடிந்து சரிந்த பழைமை மாறாத கோயில்களைக்' கூறும் திரு.ராஜராஜன், மாமன்னன் இராஜராஜரின் பள்ளிப்படைக் கோயிலில் மட்டும் எந்த 'இடிந்து சரிந்த கட்டுமானத்தையும்' காணாதது விந்தை. அப்படி காணமுடியாமல் போனதற்கான பழியை, பாவம்! மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலையில் போட்டிருக்கிறார். (கொட்டை எழுத்தில், ரத்த நிறத்தில் "பாண்டியர்" என்று build-up வேறு கொடுத்திருப்பது பெரும் கொடுமை.) 'சோழ வம்சத்தின் வேதபுரி' என்று கட்டுரையாளர் வர்ணிக்கும் பழையாறையிலேயே, இன்றும் காணக் கூடிய வகையில் ஒரு பள்ளிப்படை கோயில் இருப்பதை அவர் அறிந்திலர் போலும். மாமன்னர் இராஜேந்திரரால் அவரது சிற்றன்னைக்காக எழுப்பப்பட்ட பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை பழையாறையில்தான் இருக்கிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியன், "பழையாறை நகரை இடித்துத் தரைமட்டமாக்கி எரித்து முடித்தான். இப்படையெடுப்பின் மூலம் பழையாறை நகரத்து எல்லையில் இருந்த முதலாம் இராசராசனின் பள்ளிப்படை கோயிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும்." என்று கட்டுரையாளர் சொல்வது உண்மையெனில், பழையாறையில் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையுட்பட, பல சோழர்காலக் கோயில்கள் இன்றும் நம்மிடையில் இருப்பது எங்கனம்? கங்கை கொண்ட சோழபுரம் வரை சென்று, சோழ தேசத்தை சூறையாடிய சுந்தர பாண்டியன், கோயில்களுக்கு எந்தச் சேதமும் விளைவிக்கவில்லை. கோயில்களைச் சிதைப்பது தமிழர் மரபன்று. தன் கருத்தை நிலை நாட்ட, பாண்டிய மன்னனை இவ்வளவு குறுகிய மனம் படைத்தவனாகச் கட்டுரையாளர் சித்தரித்திருக்க வேண்டாம்.

பள்ளிப்படை குளறுபடிகளைத் தவிர, இராஜராஜரைப் பற்றி கொடுத்திருக்கும் தகவல்களிலும், சோழர் வரலாற்றைக் குறிக்கும் தகவல்களிலும் பிழைகள் மலிந்திருக்கின்றன. "இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா" போன்றவற்றையெல்லாம் இராஜராஜன் பத்தாம் நூற்றாண்டில் ஒரே குடையின் கீழ் ஆண்டதாகக் கூறுயிருப்பது முற்றிலும் தவறு. இவை, இராஜேந்திரரின் காலத்தில் பதினொன்றாம் நூற்றாண்டிலேதான் சோழர் படையெடுப்புக்கு உட்பட்டன. "கி.பி 1004-ம் ஆண்டு தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் திருப்பணிகளை ராசராசன் மிகவும் திட்டமிட்டு ஆறே ஆண்டுகளில் கட்டுமான பணியை முடித்தான்", என்று கூறுபவரே அதற்கு முரணாக, "இன்றும் 21 நாட்டிய கரண சிற்பங்கள் பூர்த்தி ஆகாமல் உள்ளன", என்றும் கூறுகிறார். கட்டுரையாளர், தஞ்சை பெரிய கோயில் விமானத்தின் சாந்தார நாழியில் (இதை கோபுரத்தின் உட்பிரகாரம் என்கிறது கட்டுரை. கோபுரம் என்பது நுழை வாயில். 216 அடி உயரத்திற்கு ஓங்கி நிற்கும் கட்டிடம் விமானம்) அமைந்திருக்கும் நாட்டியக் கரணச் சிற்பங்களை ஆழ்ந்து நோக்கியிருப்பின், பூர்த்தியாகாதவை 27 சிற்பங்கள் என்று உணர்ந்திருப்பார். அத்துடன், இன்னும் பல இடங்களிலும் அக் கோயில் பூர்த்தியாகாததையும் உணர்ந்திருப்பார். "தஞ்சை பெரிய கோயில் திருப்பணிகள் நிறைவுறும் சமயம் ஏதோ காரணமாக ராசராசன் தஞ்சையை விட்டு வெளியேற முடிவெடுத்தான்", என்ற கருத்தை நிறுவ எந்த ஆதாரங்களையும் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.

திருவலஞ்சுழி, அப்பரும் சம்பந்தரும் மகிழ்ந்து பாடிய புண்ணிய பூமி. அங்கிருக்கும் சடைமுடிநாதர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அனைத்துக் கோயில்களையும், மா.இராசமாணிக்கனார் ஆய்வு மையம் முழுமையாக ஆய்வு செய்தபோது, பல கள ஆய்வுகளில் கலந்து கொள்ளும் பேறு எனக்குக் கிடைத்தது. அதனால், திருவலஞ்சுழியைப் பற்றி நன்றாக அறிவேன். "திருவலஞ்சுழியில் 6-1-1015-ல் தனது தந்தையாரின் முதல் திவசத்தை ராஜேந்திரசோழன் நடத்தினான்", என்று பக்கத்திலிருந்து பார்த்தது போல கட்டுரையாளர் எழுதியிருப்பது வருத்தத்துக்குரியது. இராஜேந்திரரின் மூன்றாவது ஆட்சியாண்டில் 'தில பர்வதம் புக்கருளின' என்ற சொல்லாட்சி வரும் கல்வெட்டின் அருகிலேயே இருக்கும் இன்னொரு க்ஷேத்திரபாலர் கோயில் கல்வெட்டு, அதே ஆண்டில் இராஜராஜரும் ஆட்சியில் இருந்ததை (29-ஆம் ஆட்சியாண்டு) தெரிவிக்கறது. இதனால் 'தில பர்வதம் புக்கருளின' என்பதற்கான பொருள் 'திவசம் ஆகாது என்பது உறுதியாகிறது. உயிரோடு இருந்தவரைப் பிணமாக்கிய புண்ணிய காரியத்தைச் செய்திருக்கும் கட்டுரையாளர், "எட்டு பூக்களிட்டு பிண்டமளித்து கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி வழிபட்டுள்ள செய்தி திருவலஞ்சுழி கல்வெட்டில் உள்ளது", என்று கூறியிருப்பது அப்பட்டம்மான பொய்.

பக்கிரிசாமி படையாச்சியாரின் நிலத்தில் இருக்கும் இலிங்கத்திற்கு அருகில் எந்தவித கோயில் கட்டுமானமும் கிடைக்காத நிலையில், "ராஜேந்திரசோழன் தனது தந்தையை உடையாளூர் அருகே நல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிறந்த பள்ளிப்படை கோயிலை உருவாக்கினான்", என்று எப்படிக் கூறுகிறார்? பால்குளத்தி அம்மன் கோயில் கல்வெட்டு சுட்டுவது முதலாம் இராஜராஜரின் பள்ளிப்படை எனக் கொள்ளின், பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் தன் சிற்றன்னைக்குப் பள்ளிப்படை கட்டிய இராஜேந்திரர், "இருந்த சுவடு தெரியாமல்" அழியும் வகையிலா தன் தந்தையாருக்கு பள்ளிப்படை அமைத்திருப்பார்?

வரலாற்றாய்வில் பல ஆண்டுகளாய் ஈடுபட்டு வரும் முனைவர் கலைக்கோவன், "பல ஊர்களில் பரவலாகக் கிடைக்கும் கைவிடப்பட்ட லிங்கத் திருமேனி போல்தான் பக்கிரிசாமி படையாச்சியாரின் நிலத்தில் இருக்கும் லிங்கமும் இருந்தது", என்கிறார். "ஜீவசமாதிக்கும், பள்ளிப்படை கோயிலுக்கும் சதுர பீடமே பயன்படுத்தப்படும்", என்பதெல்லாம் கட்டுக் கதையே அன்றி வேறொன்றுமில்லை. இன்று வழிபாட்டில் இருக்கும் பள்ளிப்படையல்லாத பல கோயில்களில் உள்ள லிங்கங்கள் சதுர பீடத்துடன் காணப்படுகின்றன. (உதாரணம் நாலூர் மாடக் கோயில்). பள்ளிப்படை கோயில்கள் என்று கல்வெட்டுகள் சுட்டும் கோயில்களை நோக்கின், அங்கிருக்கும் லிங்கங்கள் எல்லாமே சதுர பீடத்துடன் அமையாதிருப்பதை உணரலாம்.

இராஜராஜரின் பெருமையை எடுத்துக் காட்ட வேண்டுமெனில், 'இராஜராஜன் திருநாள்' என்று அவன் இருந்த காலத்திலேயே கொண்டாடப் பட்ட "ஆவணி சதயம்" நாளைப் பற்றி உலகுக்குச் சொல்லலாம். 'புதைந்து கிடக்கும் வரலாற்றினை' வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டுமெனில், உத்திரமேரூர் கைலாசநாதர் கோயில், ஆறை வடதளி போன்ற வரலாற்றுச் சின்னங்கள் இன்றிருக்கும் சூழலைப் பற்றி எழுதலாம். அதை விடுத்து, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறுவது, கல்வெட்டுகள் கூறுவது போல 'கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம்' போன்றது. அதிலும் லட்சக் கணக்கான வாசகர்களைக் கொண்ட விகடன் பிரசுர வெளியீடாய் இப்படிப்பட்ட வதந்திகள் பரவினால், இன்று எவ்வளவுதான் முயன்றாலும் "தஞ்சை பெரிய கோயில் விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது அல்ல" என்ற உண்மையை மக்கள் ஏற்க மறுப்பது போல, நாளை பல வதந்திகள் உண்மைகளாகிவிடும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, May 22, 2006

சிகரத்தை நோக்கி... II

கிரீவத்திலிருந்துப் பார்க்க, சிவகங்கைக் குளமும், மேற்கிலிருந்த அழகிய நந்தவனமும், சரபோஜி அரண்மனையும், பல ஆண்டுகளாய் நிற்கும் மணிக்கூண்டும், எறும்புகள் போலத் தெரிந்த மனிதர்களும், அட்டையில் செய்த கட்டிடங்கள் போலக் காட்சியளித்த கோபுரங்களும், திருச்சுற்று மாளிகையும் கண்ட போது பாபநாசம் சிவனின் காம்போதி ராக பாடலான 'காணக் கண் கோடி வேண்டும்' என்ற பாடலைத் தானாகவே வாய் முணுமுணுத்தது.

தஞ்சைக் கோயிலின் விமானத்தின் நிழல் தரையைத் தொடும் என்று நான் முன்னரே அறிந்திருந்த போதும், கிரீவத்திலிருந்தபடி தரையில் வீழ்ந்திருக்கும் பிரம்மாண்ட நிழலைக் கண்ட போது உள்ளக்குள் இனம் புரியா நிறைவு ஏற்பட்டது. நிழல் விழுமென்ற செய்தியை பலர் முன்பே கூறியிருப்பினும், அன்று தென்பட்ட பிரம்மாண்ட நிழலை புகைப்படமாய் கைது செய்து, உலகெங்கும் இணைய உலா வர வைக்கலாம் என்ற எண்ணமே அந்நிறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.

கிரீவத்தலிருந்து பிரிய மனமே வராத போதிலும், சிகரம் எங்களை அழைத்ததால், அரை மனதுடன் சிகரத்தை அடைந்தோம். அங்கு ஏற்கெனவே காத்திருந்த கிருபாசங்கருடன் சேர்ந்து பல படங்கள் கிளிக்கியபின், பிரம்மாண்ட கலசத்திலடியில் அனைவரும் அமர்ந்தோம். குழைவுக் குரலோன் கோகுல் இல்லாத சமயங்களில், இதைப் போன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடப்பின் நான் பாடுவது வழக்கம். அன்றோ, சாரீரம் முழுவதையும் சளி அமுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. முனைவர் கலைக்கோவன் "பாடுங்க தம்பீ! இங்க பாடலைன்னா வேற எங்க பாடறது?" என்ற போதும் நா எழவில்லை. அந்த சமயத்தில் பத்மநாபனின் அற்புதக் குரல் ஆபேரி ராகத்தில் 'காதலாகி கழிந்துருகி கண்ணீர் மல்கி' என்று உருகி அனைவரையும் உருக்கியது. அப்பாடலின் முதல் வரியை அவர் பாடியதும், ஜனவரி 2005-இல் வெளியிட்ட இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழுக்காக முனைவர் கலைக்கோவனின் கட்டுரையே நினைவில் நிறைந்தது. அவரின் பல கட்டுரைகளை மிகவும் இரசித்துப் படித்திருக்கிறேன் எனினும், என்னை அக்கட்டுரை உணர்ச்சிவசப்பட வைத்தது போல வேறு கட்டுரைகள் வைத்ததில்லை என்றே கூற வேண்டும். பதநாபன் பாடிய பின் நானும் 'குனித்த புருவமும்' என்ற தேவாரப் பாடலை என் மனம் போன மெட்டில் பாடினேன். அதன் பின் இலாவண்யா காம்போதியில் 'தயாபரா மகேஸ்வரா' பாடினார். சூரியனின் மாலைக் கிரணங்கள் மங்கத் தொடங்குவதற்கு முன் தொல்லியில் அளவீட்டுத் துறையைச் சேர்ந்த திரு.மோகனின் உதவியுடன் 'குழுப் படங்கள்' எடுத்துக் கொண்டோம்.

பின்பு அவரின் உதவியுடனே கிரீவப் பகுதியிலிருந்த பூத கணத்தையும் தரிசித்தேன். சிகரத்தில் கொடியை நாட்டினால் அது அப்பூதத்தின் தலையில் இருந்த ஓட்டையில் அழகாய் உட்கார்ந்து கொள்ளுமாறு அமைக்கப் பெற்றிருக்கிறதாம். சிகரத்தின் மேல் இருந்த பேறு பாதி நேரம் என் சிந்தை என்னிடம் இல்லாததால், முக்கியமாய் புகைப்படத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்த சில விஷயங்களை பதிவு செய்யாமலே விட்டுவிட்டேன். அவற்றுள் ஒன்றுதான், விமானத்தின் சிகரம் பல கற்களால் ஆனது என்ற உண்மையை உணர்த்தும் படம்.

பார்ப்போம். பிழைத்துக் கிடந்தால், அடுத்த வாய்ப்பு என்று ஒன்று வாய்க்குமெனின், விட்டவைகளுள் பல நூற்றில் சிலவற்றையாவது மனதிலும் படத்திலும் பதித்து பகிர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். அவன் சித்தம் எப்படியோ? யாரறிவார்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சிகரத்தை நோக்கி... I

தமிழர் கட்டிடக் கலையின் சிகரமாய் அமைந்திருக்கும் தஞ்சை இராஜராஜீஸ்வரத்தின் ஸ்ரீவிமானத்தைக் கண்ட பொழுதெல்லாம் உள்ளம் துள்ளும். என் பாட்டனின் சாதனை என்று நெஞ்சம் இறுமாப்பு கொள்ளும். கைலாயத்தை பூமியில் கொணரும் முயற்சியே அவ்விமானம் என்ற கூற்றினைக் கேட்கும் பொழுதெல்லாம், கைலாயம் இத்தனை அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்க முடியுமா என்ற ஐயம் தோன்றும். தளத்துக்குக் தளம் மாறும் ஆர அமைப்பில் சாலைகள், கர்ணகூடுகள், பஞ்சரங்கள், கர்ணசாலைகள் இன்னும் பல சிறிய, பெரிய உறுப்புகளின் இணைப்பினை மனதில் பதித்துக் கொள்ள எத்தனை முறை முயன்றாலும், இறுதியில் உள்ளம் தோல்வியையே தழுவும். அந்த தோல்வியிலும் ஒரு சுகம் பிறக்கும்.

பள்ளி இறுதித் தேர்வு எழுதி முடிவுக்குக் காத்திருந்த வேளையில் பொழுது போக்க வேண்டி 'பழைய புத்தகக் கடையை' மேய்ந்த பொழுது கிடைத்த 'பொன்னியின் செல்வன்' நாவலின் பிரதி என் வாழ்வின் திருப்புமுனையாக அமையும் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? வந்தியத் தேவனும், அருள்மொழிவர்மரும், ஆழ்வார்கடியானும் மனதிற்குள் ஒரு கற்பனை உலகை உருவாக்க, அவ்வுலகம் தஞ்சை ஜில்லாவில் இருப்பதாய் நினைத்து, கல்லூரியை தஞ்சையில் தேர்வு செய்யும் அளவிற்கு 'பொன்னியன் செல்வன்' என்னை பாதித்திருந்தது. தஞ்சைத் தரணியில் காலடி வைத்ததும், குந்தவை பிராட்டியார், சேந்தன் அமுதன், மாட மாளிகைகள் என்று என் கற்பனை உலகத்திற்கும் நிதர்சனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதது கண்டு உள்ளுக்குள் இழைகள் அறுந்து விழுந்தாலும், ஊரின் நடுவே கம்பீரமாய் வீற்றிருக்கும் இராஜராஜீஸ்வரமுடையார் கோயிலைக் கண்ட பொழுதிலேயே என் கற்பனை உலகிற்கு மீண்டுவிட முடிந்தது. கேரளாந்தகன் திருவாயிலையோ, இராஜராஜன் திருவாயிலையோ, விமானத்தின் அமைப்பினையோ, கல்வெட்டுச் செய்திகளையோ, சிற்பங்களின் சிறப்புக்களையோ அறியாத பொழுதும் உள்ளுக்குள் எழுந்த உவகைக்கு என்றும் குறைவும் இருந்ததில்லை. விமானத்தின் தெற்கிலும், வடக்கிலும் அமைந்திருக்கும் புல் வெளிகளில் அமர்ந்தபடி சிகரத்தை அண்ணாந்து நோக்கி மெய் மறந்த கணங்கள்தான் எத்தனை!

இராஜராஜீஸ்வரமுடையார் கோயிலை ஒட்டி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியான சீனிவாசபுரத்தில் இருந்த ஒற்றை அறை மாளிகையின் மொட்டை மாடியில் அமர்ந்தபடி ஸ்ரீ விமானத்தின் சிகரத்தையும், இரவு வேளையில் ஸ்தூபியின் மேலிருக்கும் விளக்கின் ஒளியால் மிளிரும் விமானத்தின் அழகையும் பார்த்தபடி கழித்த கணங்கள்தான் எத்தனை!

கல்லூரிப் படிப்பில் ஆண்டுகள் கரைய, ஆங்காங்கே கேட்ட/படித்த தகவல்களின் மூலம் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றி நிறைய அறிய முடிந்தது. அப்படி அறிந்த செய்திகளுள் 99 விழுக்காடு செய்திகள் இன்னும் சில ஆண்டுகளில் பொய்த்துப் போகும் என்று கணப் பொழுதும் நினைத்ததில்லை. அப்படி அறிந்த செய்திகளுள் ஒரு சரியான செய்திதான் தஞ்சை ஓவியங்களைப் பற்றியது. எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு கட்டுரையில், "தஞ்சை விமானத்தில் வரையப்பட்டிருக்கும் சோழர் கால ஓவியங்களை ஒவ்வொருவரும் சாவதற்குள் ஒருமுறையேனும் கண்டு விட வேண்டும்", என்று எழுதியிருந்தது என்னுள் ஆழமாய்ப் பதிந்தது. அன்று தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் கோயில் சிவாச்சாரியார்கள், ஊர் பிரமுகர்கள், தொல்லியல் அளவீட்டுத் துறையினராய் எனக்குத் தோன்றியவர்கள் என்று காண்போரையெல்லாம் நச்சரித்து, எப்படியாவது ஒருமுறை அவ்வோவியங்களைக் கண்டுவிட மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள்தான் எத்தனை! ஒரு முறை எப்படியோ அச்சாந்தார நாழிகளுள் நுழைய முடிந்துவிட்டாலும், இரண்டாவது தளத்தில் செதுக்கப்பட்டிருக்கும் பரத நாட்டியக் கரணங்களைக் காணக் கொடுத்துவைத்திருந்த கண்களுக்கு, முதல் தளத்திலிருந்த ஓவியங்களைக் காண முடியவில்லை. அழைத்துச் சென்றவர், "மூச்சுக் காத்து பட்டால் ஓவியங்கள் பாழாகிவிடும். மிக மிக முக்கியமான பிரமுகராய் இருந்தாலன்றி ஓவியங்களைக் காண முடியாது. நீங்கள் பிரதமராகவோ, அமைச்சராகவோ குறைந்த பட்சம் கலெக்டராகவோ வாருங்கள். ஓவியங்களைப் பார்க்கலாம்", என்றார். அந்நிகழ்வுடன் ஓவியங்களைக் காணும் முயற்சியைக் கிடப்பில் போட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். முயற்சி கிடப்பில் கிடந்தாலும் ஏக்கம் என்றும் பசுமையாய்த்தான் இருந்தது.

படிக்கும் நேரத்தில் படிப்பதைத் தவிர அனைத்தையும் செய்தபடி, நாளுக்கு பத்து மணி நேரத்துக்கு மேல் இணையத்தில் மேய்ந்தபடி மடலாடற் குழுக்களில் அரட்டை அடித்துக் களித்திருந்த போதுதான், 'பொன்னியின் செல்வனைப் பற்றி அரட்டை அடிக்கவும் ஒரு குழு தொடங்கினால் என்ன?', என்று தோன்றியது. அப்படித் தொடங்கப்பட்ட குழுவின் பரிணாம வளர்ச்சியை முன்னமே இத்தளத்தில் அளித்திருக்கிறோம். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பலரை இணைக்கும் பாலமாக அமைந்த குழுவின் பாக்கியம்தான் எங்களை இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்திற்கு அறிமுகம் செய்தது.

பின்னாளில் வரலாறு.காம்-இன் ஆசிரியர் குழுவாக உருவான குழுவின் முதல் பயணத்தின் போதுதான் முனைவர் கலைக்கோவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் நார்த்தாமலையில் பார்த்ததைப் பற்றியும், எங்களுக்கு முன்னமே தெரிந்த அரைகுறை விஷயங்களில் இருந்த சந்தேகங்களைப் பற்றியும் நாங்கள் பல மணி நேரம் பேசியபடி நிகழ்ந்த அந்தச் சந்திப்பின் முடிவில், அடுத்த நாள் எங்கள் பயணத்திற்கு அவரும் உடன் வருவதாக ஒப்புக் கொண்டார். நான் பல நூறு முறை சென்றிருந்த இராஜராஜீஸ்வரத்திற்கு முனைவர் கலைக்கோவனுடன் செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த போதும், அப்பயணத்தின் போது என் பல நாள் ஏக்கம் தீரும் என்பதை அறிந்திருக்கவில்லை.

பல முறை கடந்து சென்ற இராஜராஜன் திருவாயிலின் உப பீட கண்ட பகுதியில் அமைந்திருந்த சிற்பங்களை முதல் முறையாய் உற்று நோக்க வைத்த பயணம் அது! 'நிழல் விழா விமானம்', 'ஒரு பிரம்மாண்டமான கல்லால் ஆன சிகரம் கொண்ட விமானம்' என்றெல்லாம் நான் கேள்வியுற்றிருந்த தகவல்களை எல்லாம் தகர்த்தபடி, அவ்விமானத்தின் அமைப்பை கட்டிடக்கலைச் சொற்களொன்றுமறியாத எங்களுக்கும் புரியும்படி விளக்கியபடி விமானத்தின் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார் முனைவர் கலைக்கோவன். தென்புறமிருந்த இரும்புப் படிகளில் ஏறி சாந்தாரச் சுற்றினை அடைந்ததும்தான் என் நெடு நாள் கனவு நான் பிரதமாரகவோ, மந்திரியாகவோ ஆகாமலேயே பலிக்கப் போவதை உணர்ந்தேன். சாந்தார நாழியில் நான் கண்ட ஓவியங்கள், நெஞ்சில் நீங்காக் காவியங்கள். நாயக்கர் சுதையிலிருந்து மீண்ட பொழுது அதிகம் பாழாகியிருந்த ஆலமர் அண்ணல் ஓவியத்தைக் கடந்து கயிலையை நோக்கி விரையும் அலங்காரமான ஐராவதமும், அதன் மேல் சுந்தரரும், அதன் வாலில் இருந்த வாணனும் என்னை மறக்கச் செய்தனர். அரசர்களும் அடியவர்களும் அமைத்துக் கொடுத்த இல்லங்களான கோயில்களில் வீற்றிருக்கும் சிவனைக் காட்டிலும் யதார்த்தமாய் தன் சொந்த வீடான கயிலாயத்தில் உமையுடன் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் அமர் நிலையும், அவர் கண்களும் இதழ்களும் சிந்தும் சிரிப்பும், கனிவும் என்னை சந்தோஷத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றன. அதன்பின் கேட்டவை பல கண்டவை பல, அவையெல்லாம் என் செவிகளின் வழி சிந்தையில் விழுந்தனவா என்று நானறியேன். கோகுலும் மற்றவர்களும் கூறித்தான் 'சிதம்பர வழிபாடு' மற்றும் 'திருபுராந்தகர்' ஓவியங்களும் அங்கிருந்ததைத் தெரிந்து கொண்டேன். கயிலையம்பதியில் வீற்றிருந்த பெருமானைக் கண்ட மனது மீண்டு உலகிலிறங்கி வர ஒரு வார காலம் பிடித்தது.

அதன்பின் சென்ற பயணங்கள்தான் எத்தனை? கோயில்களின் மேல் வளர்ந்த காதலும், குழு நண்பர்களிடம் மலர்ந்த நட்பும், முனைவர் கலைக்கோவனும், முனைவர் நளினியும் காட்டிய அன்பும் பரிவும், என் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தன. எங்கள் அனுபவங்களையும், நாங்கள் பெற்ற படிப்பினைகளையும் அவ்வப்பொழுது கட்டுரைகளாக்கி முனைவர் கலைக்கோவனுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. அக்கட்டுரைகளில் எங்கள் உணர்வின் படப்பிடிப்பு இருந்த அளவிற்கு வரலாற்றுத் தகவல்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் முனைவர் கலைக்கோவனின் ஆய்வுகளை இணையத்தில் பதிவு செய்வதைப் பற்றியும், அவர் எங்களுக்குச் சொல்வதை முறையாகப் பகிர்ந்து கொள்வதைப் பற்றியும் பலமுறை பேசினோம். ஆகஸ்டு (அல்லது ஜூலையின் பின் பகுதியாக இருக்கலாம்) 2004-இல் திருத்தவத்துறைக்குச் சென்ற போதும் இதைப் பற்றிய பேச்சு (கிருபாவின் தயவால்) எழுந்தது. இவர்களை விட்டால் திட்டமிட்டபடியே இன்னும் பல ஆண்டுகள் கடத்திவிடுவார்கள் என்று நினைத்ததாலோ என்னமோ, "இதைப் பற்றி பலமுறை பேசியாகிவிட்டது. விரைவில் ஏதாவது செய்யுங்கள். ஆகஸ்டு 15-ஐ கால எல்லையாகக் கொண்டு, வரலாற்றுக்காக ஒரு மாத மின்னிதழைத் தொடங்குங்கள்", என்று சற்று வேகமாகவே கூறினார் கலைக்கோவன்.

ஒரே சமயத்தின் பல வேலைகளில் மூக்கை நுழைத்து ஒரு வேலையையும் நிறைவாகச் செய்ய முடியாமல் திணருவது என் சுபாவம். வரலாறு.காமின் வரவுக்குப் பின், பெரிய அளவில் இல்லையெனினும், மாதம் ஒருமுறை எழுத வேண்டுமென்பதற்காகவாவது, வரலாற்றுத் துறையில் நான் பெற்ற படிப்பினைகளை பதிவு செய்வதில் கொஞ்சம் ஒழுங்கு பிறந்தது. வரலாறு.காமின் இதழுக்காக வேண்டி பலமுறை சென்ற இடம் இராஜராஜீஸ்வரம். ஜனவரி 2005-இல் இராஜராஜர் அமைத்த அப்பெருந்தளியினுக்காய் ஒரு சிறப்பிதழைக் கொண்டு வர விழைந்து மேற்கொண்ட பயணங்கள் அவை. கட்டிடக் கலையை கமலக்கண்ணன் அலச, இலாவண்யாவோ தெற்குதிசை முக மண்டபக் கல்வெட்டில் ஐக்கியமானார். வழக்கம் போல் நான் எல்லாவற்றிலும் கலந்து என் கருத்துக்களை (பெரும்பாலும் வீம்புக்காகவாவது மாற்றுக் கருத்துக்களை கூறுவதே என் வாடிக்கை) கூறியபடி அப்பயணங்களைக் கழித்தாலும், அப்பிரம்மாண்ட விமானத்தைக் கண்ட மாத்திரத்தில் பிரமிப்பு மட்டுமே எஞ்சியது. எதைப் பற்றி எழுதலாம் என்று யோசிக்கக் கூட முடியாத அளவு அந்த பிரமிப்பு என்னை மிரளச் செய்தது. கடைசியில், இந்த விமானத்தைப் பற்றி எழுத வேண்டுமெனில் சிறப்பதிழை எத்தனை ஆண்டுகள் கழித்து வெளியிட நேருமோ என்ற அச்சம் வர, ஸ்ரீ விமானத்தை விட்டுவிட்டு சண்டேசுவரர் திருமுன் கைப்பிடிச் சுவர் சிற்பங்களைப் பற்றி எழுத முடிவெடுத்தேன். ஸ்ரீவிமானத்தைக் கண்டு மிரண்டாலும், என்றேனும் ஒரு நாள், இவ்விமானத்தின் ஒரு சிறிய பகுதியைப் பற்றியாவது தரமான ஆய்வொன்றைச் செய்ய வேண்டும் என்ற பேராசை மட்டும் முளைத்து, நாளுக்கு நாள் வளர்ந்தபடியேயிருந்தது.

அதன்பின் நிகழ்ந்த வலஞ்சுழிப் பயணங்களில் கற்றவைகள் பல. கற்றவைகளைவிட, கற்க வேண்டியவைப் பற்றிய தெளிவு ஓரளவு கிடைத்ததென்றுதான் கூற வேண்டும். சிறந்ததொரு வரலாற்றாய்வு முறையை நேரில் காணக் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். முதல் சந்திப்பிலிருந்து எங்கள் உற்சாகத்தின் ஊற்றாக விளங்கி வரும் முனைவர் கலைக்கோவனுடன், நாளடைவில் சற்றே உரிமை எடுத்துக் கொண்டு, அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் உடன் செல்ல முடிந்தது. கணக்கிலடங்கா கேள்விக் கணைகளை அவர் மேல் வீச முடிந்தது. அவ்வாறு சென்ற பயணங்களுள் பலமுறை சென்றது வலஞ்சுழியும், தஞ்சையுமாகத்தான் இருக்கும். சுந்தரரின் வாழ்வைச் சித்தரிக்கும் ஓவியத்தை பல ஆண்டுகளாக ஆய்வு செய்த குறிப்புகளை எல்லாம் கொண்டு அவ்வோவியத்தை மட்டும் ஒரு நாள் முழுதும் கண்ட நாள் நெஞ்சில் நீங்காத நாளாகும்.

இப்படி பல பயணங்களை எண்ணிப் பார்க்கையில், இதை விட இன்பம் தரக் கூடிய பயணமொன்று இருக்கவே முடியாது என்று நான் நினைத்த பயணங்கள் எத்தனையோ. அத்தனைக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைந்த பயணம் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று அமைந்தது. தஞ்சை பெருவுடையார் கோயில் விமானத்தை சீர் படுத்த சாரம் கட்டியிருப்பதாக 'தி ஹிந்து' தெரிவித்த செய்தியைக் கண்டவுடனேயே விமானத்தில் மனம் ஏற ஆரம்பித்துவிட்டது. உடனே முனைவர் கலைக்கோவனை தொடர்பு கொண்டு 'விமானத்தின் சிகரத்தைத் தொட முடியுமா?' என்று வினவிய பொழுது, 'முயற்சி செய்யலாம்', என்றார். குறைந்த பட்சம் 5-6 வாரங்களுக்காவது சாரம் இருக்கும் என்ற நிலையில், நான் கேட்ட சில நாட்களுக்குள்ளாகவே எங்களது 'சிகரத்தை நோக்கிய' பயணம் நடை பெறாது, மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் உடையாளூர் கள ஆய்வையொட்டிதான் இப்பயணம் நடைபெறும் என்று யூகித்த நான், மார்ச்சு-30-ஆம் தேதியை ஒட்டிய வார இறுதியை சென்னையில் கழிக்கலாம் என்று இருந்தேன். அந்த வார வியாழக் கிழமை காலையில் இலாவண்யா தொலைபேசி "ஏப்ரல் இரண்டாம் தேதி தஞ்சை விமானத்தின் மேல ஏற அனுமதி வாங்கியாச்சாம்!" என்றார் குதூகலமுடன். வியாழக் கிழமை இரவு பேருந்தில் சென்னை சென்று, அடுத்த நாளே கிளம்பி தஞ்சையை அடைந்து, அடுத்த நாள் இரவு பெங்களூர் திரும்பும்படியான சூழ்நிலை. எனக்கோ, வியாழக் கிழமை காலையிலேயே நல்ல ஜலதோஷமும் தலைவலியும். இந்த அலைச்சலை உடல் தாக்குப் பிடிக்குமா என்ற கேள்வியெழுந்தது. "இப்பயணத்துக்குப் பின் இரண்டு வாரம் படுக்கையில் விழ நேர்ந்தாலும் பரவாயில்லை" என்றது மனம். எத்தனை நாட்கள் என்னுள் இன்ப ஊற்றைக் கிளப்பிய விமானமது! அந்த விமானத்தின் சிகரத்தையடைந்து கலசத்தைத் தொடும் வாய்ப்பு பின்பொருமுறை கிடைக்குமா? இம்முறை கிடைத்ததே கனவா நனவா, என்று நம்ப முடியாத நிலை.

ஆனது ஆகட்டும் என்று சென்னை சென்றடைந்த புனித வெள்ளியில் என் உடல் நிலை இன்னும் மோசமான நிலையை அடைந்தது. வீட்டில் சொன்னால் தஞ்சை பயணத்திற்குத் தடை சொல்லிவிடுவார்களோ என்று வாய் மூடி மௌனியாய் பகல் பொழுதைக் கழித்தேன். வாய் வேண்டுமானால் இருமலுக்கும் தும்மலுக்குமிடையில் பேச முடியாமல் தவித்திருக்கலாம். மனதிற்குள் என்னமோ ஓராயிரம் சம்பாஷணைகள், அத்தனையும் இராஜராஜீஸ்வரத்தைப் பற்றித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ? ஒரு வழியாய் புனித வெள்ளியை ஓட்டி, சனிக்கிழமை கண் விழித்த பொழுது தலையெல்லாம் பாரம், நடையில் கூட சற்றே தள்ளாட்டம் தெரிந்தது. ஆனது ஆகட்டும் என்று கிளம்பி சனிக்கிழமை இரவு திருச்சியை அடைந்து, எங்கள் ஆஸ்தான உறைவிடமான விஜய் லாட்ஜில் இரவினைக் கழித்தோம்.

வழக்கமாக குறித்த நேரத்திற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரம் கழித்துச் சென்றே பழக்கப் பட்ட நாங்கள், இப்பயணத்தின் பொழுது இரவில் சரியாக தூங்கக் கூட முடியாமல், மணி எப்போதடா 5.30 அடிக்கும் என்று காத்திருந்து, குறித்த நேரத்துக்குச் சற்று முன்பாகவே முனைவர் கலைக்கோவனின் மருத்துவமனையை அடைந்தோம். மனம் எங்கும் இராஜராஜீஸ்வரம் நிறைந்திருப்பினும், முதலில் நாங்கள் சென்றது தமிழ் பல்கலைக்கழகத்திற்குத்தான். தமிழகத்தில் முதல் முறையாக பிராமி கல்வெட்டுடன் கூடிய நடு கற்களைக் காணச் சென்றோம். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் பொழுதே முனைவர் கலைக்கோவன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார். கற்களைக் கண்டு, கல்வெட்டுகளில் 'ஆகொள்' என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டதை அறிந்தவுடன், அவர் உவகைக் கடலில் ஆழ்வதை உணர முடிந்தது. 'நடுகற்கள் எழுத்துடன் இருந்திருக்கும்', சங்கப் பாடல்களில் நடு கற்களில் வரும் 'எழுதிய' என்ற பதம் எழுத்தைக் குறிக்குமே அன்றி ஓவியத்தைக் குறிக்காது என்ற அவரது கூற்றிற்குச் சான்றாய் கிடைத்த கற்களைக் கண்டதும் அவர் உணர்ச்சவசப்படுதல் நியாயம்தானே? தமிழகத்தின் தொன்மையான எழுத்துக்களைக் கண்டதுடன், ஓர் அரிய மனிதரையும் காணக் கிடைத்தது. தமிழ் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசரியர் இராஜன்தான் அம்மனிதர். தமிழையும் வரலாற்றையும் பின்னுக்குத் தள்ளி தன் புகழை எப்பாடுபட்டாவது முன்னுக்குக் கொண்ட வர நினைக்கும் பலருக்கு இடையில், உலகையே ஒரு கணம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கற்களை கண்டுபிடித்த போதும், அக் கற்களைப் பற்றிய உண்மைகள் தெளிவாகாது செய்தி வெளியிடக் கூடாது என்பதற்காக வேண்டி தமிழ்நாட்டின் அனைத்து அறிஞர்களுக்கும் தகவல், அழைப்பு, புகைப்படங்கள் அனுப்பி, தனது கருத்தை தயங்காமல் கூறி, மாற்றுக் கருத்து கூறின் தயங்காமல் பரிசீலிக்கும் ஓர் உண்மை விளம்பியைக் கண்டது நாங்கள் செய்த பாக்கியம். எதிர்பாரா சந்திப்பெனினும், தஞ்சை விமானத்தில் ஏறிய பொழுது அடைந்த அதே அளவு மகிழ்ச்சியை நடு கற்களைக் கண்ட பொழுதும், பேராசிரியர் இராஜனைச் சந்தித்த போதும் அடைய முடிந்தது.

இக் கற்கள் கிடைத்த கதை மிகவும் சுவாரசியமானது. ஒரு பள்ளிச் சிறுவன் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை அணுகி, 'எங்கள் ஊரில் எழுத்துடன் கற்கள்' இருக்கின்றன என்று கூறியதை தொடக்கமாகக் கொண்டு, அம் மாணவர்களின் தேடலாலும், பேராசிரியர் இராஜனின் கைக் காட்டலாலும், சங்க கால நடு கற்கள் முதன் முறையாக தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. வரலாற்றுத்துறையில் ஈடுபாடு கொண்ட பலருக்கே பிராமி கல்வெட்டுக்கும், கற்களில் இருக்கும் கீறல்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் என்ற பொழுது, இந்தத் துறையில் சற்றும் பரிச்சயம் இல்லாத சிறுவனால், அக் கற்களில் இருப்பவை எழுத்துக்கள் என்று எவ்வாறு உணர முடிந்தது என்பதுதான் ஆச்சரியம். உண்மையான அறிஞர்களும், ஆய்வாளர்களும் இருக்கும் வரையில், அவர்கள் தேடிச் செல்லாத போதும், தக்க தரவுகள் அவர்கள் கதவைத் தாமே தட்டும் என்பதை நிரூபிக்கும் இன்னமொரு நிகழ்வாகவே எனக்குத் தோன்றுகிறது.

முனைவர் நளினி அளித்த அறுசுவை காலை உணவை கபளீகரம் செய்தபின், மனமும் வயிறும் நிறைந்தபடி இராஜராஜீஸ்வரத்தையடைந்தோம். வெய்யிலின் உக்கிரம் முழு வீச்சில் அடிக்காத போதும், தரையில் கால் வைக்கவே சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில் வெற்றுக் கால்களுடன் சாரத்தின் மேல் ஏறுவதென்பது முடியாத காரியம் என்பதால், எங்கள் சாரம் ஏறும் படலத்தை மாலைக்கு ஒத்திப் போட்டு, சாந்தாரநாழியுள் நுழைந்து, சுந்தரருடன் ஐக்கியமானோம். பல வருடங்களாய் இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் ஆய்வு செய்யும் ஓவியத்தை, அவர்கள் செய்யும் கள ஆய்வின் போது அருகில் இருந்து நோக்கும் அரிய வாய்ப்பு எனக்கு இருமுறை கிட்டியிருக்கிறது. அந்த இரு தரமும் பல புதியச் செய்திகள் அறிஞர்களின் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது. இத்தனை வருடம் நுணுக்கமாக கவனித்த பின்னும், அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் சென்ற முறைகளில் தவறவிட்ட தகவல்கள் கிடைத்த வண்ணம் இருப்பதைப் பார்த்தாலே அவ்வோவியத்தின் தரத்தை உணர்ந்திடலாம்.



மதிய உணவை இசையாசிரியை இரா. இலலிதாம்பாள் அவர்களின் வீட்டில் கழித்துவிட்டு மீண்டுமொருமுறை சாந்தார நாழியில் தஞ்சம் புகுந்ததுதான் தெரியும். மாலை நாலரை மணி அளவில் முனைவர் கலைக்கோவன் நினைவுபடுத்தியிருக்காவிட்டால், அந்தப் பயணம் சிகரத்தைத் தொடுவதற்காக வந்த பயணம் என்பதை சுத்தமாக மறந்திருப்போம். பொல்லாத ஓவியங்கள் எங்களை இன்னும் பல மணி நேரம் சிறைபடுத்தியிருக்கும். நான்காம் தளம் வரையில் படிகளில் ஏறி அதன்பின் மரத்தாலும், இரும்புக் குழாய்களாலும் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கும் சாரத்தில் ஏறியும் சிகரத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். ஏற்கெனெவே உடல்நிலை சரியில்லாத எனக்கு, அதிகம் காற்றுப் புழக்கம் இல்லா சாந்தார நாழியில் நிற்கும் போதெல்லாம், அவ்வப்பொழுது தள்ளாட்டமும், சோர்வும் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. விமானத்திலிருந்து இறங்கி அருந்திய தேநீர் செய்த மாயமா அல்லது இராஜராஜீஸ்வர விமானத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் சாரங்களின் மேல் என் கால் பட்டதும் நிகழந்த அதியசயத்தின் பலனா, நான்றியேன்! என் உடலெங்கும் புதிய தெம்பும், உற்சாகமும் எங்கிருந்தோ வந்து சூழந்து கொண்டன. பாதி சாரம் ஏறியவுடன், "எனக்கு உயரம் என்றால் பயம்" என்று தயங்கித் தயங்கிச் சொன்ன பத்மநாபனை கிண்டல் செய்தபடி ஏறியதில் கிரீவத்தை அடைந்ததே தெரியவில்லை. ஆங்காங்கே தென்பட்ட சிற்பங்கள் அனைத்திலும் பலத்த சுதைப்பூச்சைச் சபித்தவாறும் அவ்வப்போது கேள்விக் கணைகளை கலைக்கோவனிடன் வீசியபடியும் எங்கள் பயணம் நகர்ந்தது.



ஒரு கட்டத்தில், ஆர உறுப்புக்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக நான் கேள்விகளை வீச ஆரம்பித்ததும், 'இவனைவிட்டால் இன்னும் பல நாட்களுக்கு இடத்தைவிட்டு நகராமல் கேள்விகள் கேட்டபடியே இருந்துவிடுவான்', என்று உணர்ந்ததாலோ என்னமோ, 'இந்த விமானத்தின் ஆர அமைப்பைப் புரிந்து கொள்வது என்பது மகத்தான, பல பயணங்கள் நிறைந்த ஆய்வாகும்.', என்று ஒரு வரி பதிலைக் கூறினார். அதனால்தான் சூரியன் அஸ்தமிக்கும் முன் நாங்கள் உச்சியையடைய முடிந்தது.



கிரீவத்தை நாங்கள் அடைந்த பொழுது எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இது நாள் வரை நான் பலர் கூறி கேட்ட கூற்று யாதெனில், தரையில் இருந்து பார்க்க சிறியதாய்த் தெரியும் கிரீவப் பகுதி நந்திகள், திருச் சுற்று மாளிகையில் தென் பகுதியில் வைக்கப் பட்டிருக்கும் சோழர்கால நந்தியின் அளவை ஒத்து இருக்கும் என்பதாகும். நாங்கள் கண்ட நந்திகளோ திருச்சுற்று நந்தியைவிட உயரத்தில் குறைந்த பட்சம் இரண்டடி குறைவாகவும், பருமனிலும் மிகவும் குறைந்த அளவிலும் காணப்பட்டது. அது நாள் வரை நாங்கள் நம்பிக் கொண்டு வந்த இன்னொரு தகவல் தவிடு பொடியானது




(தொடரும்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 16, 2006

மா.இராசமாணிக்கனாரின் 'பல்லவர் வரலாறு' - ஒரு பார்வை

சென்ற தலைமுறையானது, வரலாற்றாய்வுத் துறையில் ஆழ்ந்து பல அரிய முத்துக்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கும் முனைவர் கலைக்கோவனை மா.இராசமாணிக்கனாரின் மகனாக அடையாளம் கண்டிருக்கும். மா.இராசமாணிக்கனாரே வரலாற்றில் கலந்து பல ஆண்டுகளான பின், அவர் பெயரால் ஒரு வரலாற்று ஆய்வு மையம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகளான பின், வரலாற்றாய்வின்பால் இழுக்கப்பட்ட தலைமுறையினனான எனக்கு மா.இராசமாணிக்கனார் என்ற அறிஞரை, முனைவர் கலைக்கோவனின் தந்தையாகத்தான் முதன் முதலில் அடையாளம் காண முடிந்தது. வரலாறு.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் கமலக்கண்ணனின் வாயிலாக, எங்கள் குழுவிற்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் கலைக்கோவனுக்கும் ஏற்பட்ட முதலாம் சந்திப்பைப் பற்றிப் பலமுறை கேள்வியுற்றிருக்கிறேன். (அச்சமயத்தில் நான் இந்தியத் துணைக்கண்டத்திற்குப் பல காத தூரம் தொலைவான இடத்தில் தீஸிஸ் எழுதுகிறேன் பேர்வழி என்று ஜல்லி அடித்துக்கொண்டிருந்ததால், அச்சந்திப்பைக் காதால் கேட்டு இன்புறும் பேறே கிட்டியது.) அச்சந்திப்பில், முனைவர் கலைக்கோவனை அறிமுகப்படுத்தியவர், அவரைப் "புலிக்குப் பிறந்த புலி" என்று விளித்ததாகக் கமலக்கண்ணன் கூறிய போதுதான் மா.இராசமாணிக்கனார் என்ற பெயரை முதன் முதலில் கேட்க நேர்ந்தது.

அதன் பின், முனைவர் கலைக்கோவனிடம் பழகக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், இராஜராஜனைப் பற்றியும், தஞ்சாவூரைப் பற்றியும், மகேந்திரனைப் பற்றியும், கைலாசநாதர் கோயிலைப் பற்றியும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பற்றியும், நெஞ்சைக் கனமாக்கும் செய்திகளைப் (கோயில்களின் நிலை, வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்வு, இத்துறையில் மலிந்து கிடக்கும் தவறான தகவல்கள் போன்றவற்றை இச்செய்திகளுள் அடக்கலாம்) பற்றியும், அவருக்கே உரிய நகைச்சுவையுணர்வுடன் அவர் விவரிப்பதைக் கேட்டபடி கழிந்தன.

முதலில் சற்றே தயங்கித் தயங்கி அவரைச் சந்திக்க நேரம் கேட்டுச் சந்தித்தும், தொலைபேசியில் பேசியும் அவரிடம் பழக நேர்ந்தாலும், விரைவிலேயே வாரத்துக்குப் பலமுறை தொலைபேசியும், மாதத்துக்கு இருமுறை சந்தித்தும் அவருடன் பழகக் கிடைத்த வாய்ப்புகள் எங்கள் குழுவிற்குக் கிடைத்த பெரும் பேறென்றே சொல்ல வேண்டும். கேள்விகளை வரவேற்பவர், அடுத்தவர் கருத்துக்களை முனைந்து கேட்பவர், வரலாற்றின்பால் எங்களுக்கிருந்த ஆர்வம் உபயோகமான வழியில் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்று எங்களுக்கு முனைவர் கலைக்கோவனின் மேல் எழுந்த எண்ணங்கள், எங்களை அவர்பால் இழுத்தன. பல சமயங்களில் அவரை ஆசனாகவே நோக்கி வரலாற்றைப் பற்றிக் கதைத்தாலும், நாளடைவில் அவரை ஒரு நண்பராகவும் காண முடிந்தது. எங்கள் உறவு வரலாற்றினால் பலப்பட்டாலும், சமயத்தில் வரலாறு சம்பந்தமாகச் சந்தேகம் இல்லாதபோதும் தொலைபேசி நலம் விசாரிக்கும் உரிமையையும், "திருச்சி வரோம் சார். கிளினிக்கில் வந்து சந்திக்கிறோம், ஊர்லதானே இருப்பீங்க?" என்று அவர் அனுமதி இன்றி நாங்களே முடிவெடுத்து, அவரின் வீட்டின் கதவையும் கிளினிக்கின் கதவையும் தட்டும் உரிமையையும் கொடுத்தது. அப்படி ஒருமுறை அவருடைய கிளினிக்கில் சந்தித்த பொழுது, "இப்பொழுது என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். வழக்கம் போல நான்கைந்து விஷயங்களைச் சொல்லி எங்களை மலைப்பில் ஆழ்த்தினார். மா.இராசமாணிக்கனாரைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதையும் அவ்வேலைகளுள் ஒன்றாகச் சொன்னார்.

மா.இராசமாணிக்கனார் என்ற பெயரைக் கேள்விப்பட்டுப் பல மாதங்களான பின், கமலக்கண்ணன் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற மா.இராசமாணிக்கனாரின் புத்தகத்தை ரொம்பவே மெனக்கெட்டுத் தருவித்ததைக் கண்டு பல மாதங்கள் ஆனபின், வரலாறு.காம்-இன் இரண்டாம் இதழில் "கோச்செங்கணான் காலம்" என்ற மா.இராசமாணிக்கனாரின் கட்டுரையைப் படித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆனபின், வரலாறு ஆய்விதழ் ஒன்றில் "பெருமைச் சுவடுகள்" என்ற பகுதியில் மா.இராசமாணிக்கனாரைப் பற்றிப் படித்துப் பல மாதங்களான பின், முதன் முதலாக அவ்வறிஞரின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. "பெரிய புராண ஆராய்ச்சி", "பத்துப்பாட்டு ஆராய்ச்சி", "பல்லவர் வரலாறு", "சைவ சமய வளர்ச்சி" போன்ற அவரின் பிரபலமான நூல்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்தேன். இப்புத்தகங்களில் கிடைத்ததை வாங்கவும், கிடைக்காததை நகல் எடுக்கவும் செய்தேன். அச்சமயத்தில், மகேந்திரனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான "சங்கீர்ண ஜாதி" என்னைப் பல நூல்களையும், கட்டுரைகளையும் தேட வைத்தது. இந்த விஷயத்தில் மா.இராசமாணிக்கனாரின் கருத்து என்ன என்பதைக் காண அவரது பல்லவர் வரலாறு என்ற புத்தகத்தைப் புரட்டினேன்.

சோழர்களினால் வரலாற்றின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், முனைவர் கலைக்கோவனுடனும், முனைவர் நளினியுடனும் காஞ்சியையும் மாமல்லபுரத்தையும் காணும் பேறு கிடைத்திருந்ததால், என் மேல் சோழர்கள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைப் போலவே பல்லவர்களும் ஏற்படுத்தியிருந்தனர். புத்தகத்தை எடுத்ததுதான் எடுத்தோம், ஒருமுறை ஆழ்ந்து படித்துவிடுவோம் என்று படிக்க ஆரம்பித்தேன். பல்லவர் வரலாற்றினைப் பற்றி முழுமையான ஒரு கண்ணோட்டத்தைக் கூறும் தமிழ் நூல்களுள் முதன்மை நூலாக இன்றளவும் விளங்கும் நூல் 'பல்லவர் வரலாறு'. இந்நூல் செய்யப்பட்டிருக்கும் விதத்தை ஊன்றி நோக்கும் பொழுது, இராசமாணிக்கனாரின் உழைப்பைப் பற்றியும், அவரின் ஆய்வு முறைகள், கருத்துகளை நிறுவும் வகைகள் போன்றவற்றைக் கட்டியம் கூறும் தரவுகளும் அந்நூலில் அடங்கியிருப்பதையும் உணர முடியும். இந்நூலினைப் படித்த பொழுது எனக்கெழுந்த கருத்துகள் பின் வருமாறு:

நூலின் முகவுரையில், "பல்லவரைப் பற்றிய ஆராய்சி நூல்கள் பலவும், ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் தமிழில் எழுதப்படவில்லை. காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வெளிப்படுத்தினார்கள். அவ்வரலாற்று நூற்குப் பின் வெளிப் போந்த ஆராய்ச்சி நூல்கள் பல; கிடைத்த கல்வெட்டு செய்திகள் பல. மேலும், அவ் வரலாற்று நூல் இன்று கிடைக்குமாறில்லை. வித்துவான் தேர்விற்கு அது பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நூலின்றி மாணவர் இடர்படுகின்றனர். இக்குறைகள் அனைத்தையும் உளங்கொண்டு இந்நூல் எழுதப் பெற்றதாகும்.", என்று நூலின் நோக்கை வெளிப்படுத்துகிறார். இவர் குறிப்பிடும் பேராசிரியர் "பி.டி.சீனிவாச ஐயங்காராக" இருக்கலாம். அவரது நூலில் "நூலாசிரியர் பலர்" என்ற தலைப்பில் கொடுத்திருக்கும் பட்டியலை நோக்கும் போது, இந்நூலுக்கு முன் பல்லவரைப் பற்றித் தமிழில் இருந்த ஒரே நூல் பி.டி.சீனிவாச ஐயங்காரின் பல்லவர் சரித்திரம்தான் என்பது தெளிவாகிறது. அந்நூலுக்குப் பின் கிடைத்த தரவுகளை மனதில் கொண்டு, வித்துவான் தேர்வெழுதுவோரையும் மனதில் கொண்டு, தெளிவாகவும் எளிமையாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. 1944-இல் தொடங்கி இன்றளவும், வரலாற்று மாணவர்கள் விரும்பிப் படிக்கும் நூலாக இந்நூல் விளங்குவதே இதன் பெருமையை விளக்குகிறது.

கி.பி. 250-இல் தொடங்கி கி.பி.900 வரை பரவியிருந்த பல்லவர் ஆட்சியே நூலின் முதன்மை நோக்கெனினும், படிப்பவரின் மனதில் அக்காலத் தமிழகத்தைப் பற்றிய முழுமையானதொரு பிம்பம் எழவேண்டி, அக்காலத்துக்கு முன் இருந்த தமிழகத்தைப் பற்றிய படப்பிடிப்பு 'சங்க காலம்' தொட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் இருந்த மூவேந்தரைப் பற்றியும், அக்கால வேந்தர்களுள் முதன்மையானவர்களைப் பற்றியும் சுருக்கமாக வரையப்பட்டிருப்பினும், அவற்றை எழுத எடுத்துக் கொண்டிருக்கும் முனைப்பைக் காண, செங்குட்டுவன் காலத்தை நிறுவ அவர் கொடுக்கும் தரவுகளும், சில பக்கங்களே பெறும் அப்பகுதிக்கு அடிக்குறிப்பாகக் கிட்டத்தட்ட 15 புத்தகங்களிலிருந்து இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குறிப்புக்களைக் கொடுத்திருப்பதையும் கண்டாலே போதுமானது. இப்பகுதியில் 'கோச்செங்கட்சோழன்' என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் விஷயங்கள், இராசமாணிக்கனார் என்ற மனிதரின் மனதைப் படம்பிடிக்கும் தரவாக அமைந்திருக்கிறது! கோச்செங்கட்சோழனை ஐந்தாம் நூற்றாண்டினனாக முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே என்பது அனைவரும் அறிந்ததே. கோச்செங்கணான் கால ஆராய்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 'பல்லவர் வரலாறு' நூலில் கோச்செங்கணானை 'கி.மு 60-ஆம் ஆண்டிற்கும் கி.பி 250-ஆம் ஆண்டிற்கும்' இடைப்பட்டவனாகக் கொள்கிறார். (கி.பி 2000-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்த புண்ணியவான்கள் கி.பி-ஐ கி.மு-வாக அச்சிட்டிருக்கிறார்கள்.). இன்று நாம் காணும் சக மனிதர்களிலும் சரி, அறிஞர் பெருமக்களிலும் சரி, தான் ஒரு காலத்தில் கூறிய கருத்து தவறென்று உணர நேர்ந்தாலும், முன் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே தன் பழைய கருத்துக்கு வலிந்து சென்று, இல்லாத சான்றுகளை உருவாக்கும் சூட்சுமம் கொண்டோர் பலரைத்தான் காண முடிகிறது. கோச்செங்கணானை முதலில் சங்க காலத்தவனாகக் கொண்டிருப்பினும், பிற்காலத்தில் அக்கருத்து மாறும் வகையில் சான்றுகள் கிடைத்த பொழுது தயங்காமல் தன் கருத்தை மாற்றிக் கொள்ளும் அப்பெருந்தகையின் திறந்த உள்ளம் தெளிவாகத் தெரிகிறது.

நூலின் அனைத்துப் பகுதிகளிலும் இராசமாணிக்கனாரின் ஆழ்ந்த இலக்கிய பின்புலம் தெளிவாகத் தெரிகிறது. பல குழப்பமான காலகட்டங்களை, ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான செய்திகளைக் கூறும் பட்டயங்களை ஒப்பு நோக்கி, அன்று அவருக்கு இருந்த சான்றுகளைக் கொண்டு தொகுத்திருக்கும் முடிவுகள், பல சமயங்களில் தெளிவாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, 'பல்லவர் யாவர்' என்ற தலைப்பில், பல்லவரின் பின்புலத்தைப் பற்றி இருந்த கருத்துக்களை எல்லாம் தொகுத்து, அவற்றுள் எவை சரியாக பொருந்துகிறதென்பதை அலசி, பல்லவர்கள் தமிழரசர் அல்லர், தொண்டை மண்டலத்திற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று நிறுவியிருக்கும் விதம் இரசிக்கத்தக்க வகையிலும், தெளிவுடனும் அமைந்துள்ளது. இன்றளவும் 'இருண்ட காலம்' என்று அழைக்கப்படும் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை இருந்த முற்கால மற்றும் இடைக்காலப் பல்லவர்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நூலின் ஐந்தாவது மற்றும் ஆறாவது தொகுதியில் குறிக்கிறார். நூலின் அனைத்துப் பகுதிகளிலும், அக்காலகட்டத்தில் அண்டை நாட்டிலிருந்த அரசர்களைப் பற்றியும், அவருள் நடந்த போர்களைப் பற்றியும் கூறியிருப்பதிலிருந்து பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களைப் பற்றி மட்டுமல்லாது, அக்கால தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த நிலையையும், குறைந்த பட்சம் பறவைப் பார்வையிலாவது காண வழி வகுக்கிறது.

'பல்லவர் யாவர்' என்ற பகுதியில் 'பல்லவர் பாரசீகத்தினின்று வந்தவர்' போன்ற கருத்துகளைக் கடுமையாக எதிர்த்து எழுதும் ஆசிரியர், அதன் பின் வரும் தொகுதிகள் பலவற்றின் தொடக்கத்தில், அத்தொகுதி தொடர்பான மற்றோரின் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து, பல சமயங்களில், தனது நிலைப்பாட்டிற்கு மாறான கருத்தை மறுக்காமலிருப்பதிலிருந்து, அச்சமயத்தில் கிடைத்த தரவுகளின் அளவும், அவற்றால் ஆணித் தரமான முடிவுகளுக்கு வர இயலாத நிலைமையும் தெளிவாகிறது. தனது முடிவுகளைத் தொகுத்து இறுதியில் கூறியிருந்த போதும், மாற்றுக் கருத்திலும் சில உண்மைகள் இருக்கக் கூடும் என்று கருதியதால், அதையும் தொகுதியின் முற்பகுதியில் அளித்திருக்கலாம். உதாரணமாக, சீயமங்கலம் குடைவரையைப் புத்தகத்தின் எட்டாவது தொகுதியில் 'சிம்ம விஷ்ணுவின் கலத்ததாக இருக்கலாம்' என்று Prof. Dubrell-இன் கருத்தைக் கூறி அடுத்த தொகுதியில் மகேந்திரன் காலத்தில் அமைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். 'லளிதாங்குரன் என்னும் காவலனால் குடையப்பட்டது' என்று கல்வெட்டு கூறுவதாக நமக்கு சீயமங்கலத்தை அறிமுகப்படுத்தி, அத் தொகுதியில் வேறொரு இடத்தில் மகேந்திரனின் பட்டப் பெயர்களுள் ஒன்றாக 'லளிதாங்குரனையும்' குறிப்பிட்டிருக்கும் ஆசிரியரின் நிலைப்பாடு நமக்கு விளங்கினும், Prof. Dubrell-இன் கருத்தை மறுக்க ஏனோ தயங்கியிருக்கிறார். குடைவரைகளையும், கட்டுமானக் கோயில்களையும், ஒற்றைக் கல் தளிகளையும் யார் அமைத்தவர் என்று அடையாளப்படுத்தும் இடங்கள் பலவற்றில் ஆசிரியரின் இத்தயக்கம் தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், சரியான செய்தி என்று இன்றளவில் ஏற்றுக் கொள்ளப்படும் செய்திகளைக் கூறும் இடங்களில் அடிக்குறிப்பு இல்லாதிருக்கின்றது. இத்தரவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது தவறான கருத்து எனத் தென்படும் விஷயங்களைக் குறிப்பிடும் பல இடங்களில் வேறொருவரின் புத்தகத்தையோ அல்லது கருத்தையோ குறிக்கும் அடிக்குறிப்பு தென்படுகிறது. தான் சுயமாக கூறிய கருத்துக்கள் பெரும்பாலும் சரியாக இருக்கும் நிலையில், மெனக்கெட்டு Longhurst, Heras, Durbruell போன்றோரின் கருத்துக்களைத் தொகுத்திருக்க வேண்டாமோ என்று கூடத் தோன்றுகிறது.

பல இடங்களில் தெளிவாக விளக்கமளிக்கும் ஆசிரியர், சில இடங்களில் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று முரணான செய்திகளைக் கூறுவதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக மகேந்திரனே 'தருமராச ரதத்தை' செய்வித்தான் என்று உறுதியாகக் கூறி, அடுத்த தொகுதியிலேயே மகேந்திரன் தொடங்கிய வேலையை நரசிம்மன் முடித்தாகக் கூறுகிறார், அதற்கடுத்த தொகுதியில் பரமேசுவரவர்மன் 'தர்மராச ரதத்தின் மூன்றாம் அடுக்கை முடித்தான்' என்றும் கூறுகிறார். அன்றைய நிலையில் வெறும் கல்வெட்டுத் தரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு 'இன்னார்தான் செய்தது' என்று கூற முடியாத குழப்பத்தை நாம் உணர முடிந்தாலும், மாணவர்கள் தொடர்ந்து படிக்கும் நூலாக விளங்குவதால், சரித்திரத் தேர்ச்சியில் முதல்நிலை மாணவர்களாக விளங்குபவருக்குக் குழப்பத்தை உண்டாக்குமே என்ற கவலையும் எழுகிறது. நூல் வந்த பின் அறுபத்திரண்டு ஆண்டுகள் ஓடிவிட்ட காலத்தில், எத்தனையோ சான்றுகள் பல அறிஞர்களால் வெளிக் கொணரப்பட்ட நிலையில் கூட, 'இது முற்றிலும் சரி', 'இது முற்றிலும் தவறு', என்று முழுமையாகக் கூற முடியாத நிலையில் இருக்கிறோம். முனைவர் கலைக்கோவனின் கருத்துப்படி, இராசமாணிக்கனாருக்குக் கடைசியாகக் கிடைத்த கல்வெட்டறிக்கை 1933 ஆண்டினுடையது. அச்சமயத்தில் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையைப் பற்றிய தெளிவான அறிவும் இருந்திருக்கவில்லை. குறுகிய சான்றுகளை வைத்து மட்டும் கருத்துக்களை கூறும் போது, பலவிதமான குழப்பங்கள் எழுவது நியாயமே. ஆசிரியரின் குழப்பத்திற்கான காரணத்தை உணர முடிந்தாலும், இன்று பல கருத்துகளைத் திண்ணமாக நிறுவும் நிலையில் நாம் இருக்கும்போதும், அக்கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் நம்மிடையில் இல்லாதது நினைத்து வருத்தமே எழுகிறது.

கட்டிடக் கலையைப் பொறுத்த மட்டில், புத்தகத்தில் விமானம் கும்பமெனக் குறிக்கப்பட்டு, விமானத்தின் உறுப்புகளை அடையாளம் காண்பதில் சற்றே குழப்பம் தெரிகிறது. அந்த காலகட்டத்தில், கட்டிடக் கலையைப் பற்றி அறிய ஐரோப்பியர்கள் எழுதிய புத்தகங்களே இருந்தன. அப்புத்தகங்களும் மிகக் குழப்பம் தரக் கூடியனவாக இருந்ததால், இராசமாணிக்கனாருக்கு இருந்த குழப்பத்தில் வியப்பொன்றுமில்லை. இருப்பினும் காஞ்சி கைலாசநாதர் கோயிலே பிற்காலத்தில் இராஜராஜீஸ்வரம் அமைய அடிப்படையாய் அமைந்தது என்னும் உண்மையை உணரும் அளவிற்கு அவரது கட்டிடக்கலையறிவு இருந்தது தெளிவாகிறது. பிற்காலப் பல்லவரை, மகேந்திரனில் தொடங்கி, நரசிம்மன், பரமேசுவரவர்மன், இராசசிம்மன், இரண்டாம் நந்திவர்மன், தந்திவர்மன் (பொருளடக்கத்தில் இவரை நந்திவர்மனாக்கியிருக்கிறார்கள்), மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கவர்மன் என்று ஒவ்வொருவராக நமக்கு அறிமுகப்படுத்தி, அவர் ஆட்சியில் நடந்த போர்கள், சமய நிலை, கலைகளின் நிலை ஆகியவற்றை சுருக்கமாகக் கூறியபின், பல்லவரின் ஆட்சி முறையையும், அக்கால சமய நிலையையும், இசை, ஓவியம், சிற்பம், நடனம் போன்ற நுண்கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் விரிவாக எழுதுகிறார்.

அக்கால நாட்டுப் பிரிவு, வரிகள், மரங்கள், மருந்துச் செடிகள், நீர்ப்பாசன வசதிகள், நீட்டல், முகத்தல் மற்றும் நிறுத்தல் அளவைகள், காசுகள், அக்காலத்தில் நிலவிய பஞ்சங்கள் முதலியன தெளிவாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ளன. பஞ்சத்தைப் பற்றி எழுதும் பொழுது, "சமயக் குரவர் திருவீழிமழலைப் பெருமானை வேண்டிக் காசு பெற்று அடியாரை உண்பித்தனர் என்ற பெரிய புராணச் செய்தியை, "கோயில் பண்டாரம் அடியார் உணவுக்காக பொற்காசுகள் நல்கியது", என்று விளக்குவதன் மூலம் அவருடைய pragmatic and realistic approach தெரிய வருகிறது.

அக்கால சமய நிலையை அழகாக இலக்கிய பின்புலத்தின் மூலம் படம் பிடித்து, திருமுறைகள், திவ்யபிரபந்தம், பெரிய புராண குறிப்புகளைக் கொண்டு, சமண சமய வீழ்ச்சியையும், சைவ சமயம் தழைத்ததையும் விளக்கியிருக்கும் பகுதி மிகவும் சுவையானது. ஊன்றிப் படிக்கப்பட வேண்டியது.

பல்லவர் கோநகரமாம் காஞ்சியைப் பற்றிய செய்திகளுடன் புத்தகம் நிறைவு பெறுகிறது. பல தரவுகளைத் தொகுத்தும், வகைப்படுத்தியும் எழுதப்பட்ட புத்தகமானது, பல புதிய செய்திகளையும், ஆய்வாளர் உழைக்க ஏதுவான பல தொடக்கங்களையும் (உதாரணமாக மூன்றாம் நந்திவர்மனைக் கழற்சிங்க நாயனாராகக் கொள்ளுதல், இராசசிம்மனின் கல்வெட்டையும் பூசலார் கதையில் பல்லவ மன்னன் வான் ஒலி கேட்ட கதையையும் இணைத்திருத்தல்) அளிக்கிறது.

1944-இல் வெளியான பதிப்பு செம்பதிப்பாக இருப்பதாக கூறுகிறார் முனைவர் கலைக்கோவன். சில ஆண்டுகள் முன் வெளி வந்திருக்கும் மறுபதிப்பில் எழுத்துப் பிழைகளும், தொடர் பிழைகளும் கணக்கிலடங்கா. தந்திவர்மரை நந்திவர்மராக அச்சிடுவதால் எத்தகைய குழப்பம் நேரிடும் என்பதைச் சொல்லி அறிய வேண்டியதில்லை. ஓரிடத்தில் நரசிம்மன் தேவர்களை அமைத்தான் என்று இருப்பது கண்டு குழம்பினாலும், தேர்களைத்தான் தேவர்களாக்கியிருக்கிறார்கள் என்று உணர்ந்த பொழுது சிரிப்புதான் வந்தது. புத்தகத்தின் மேற் பகுதியில், ஒரு பக்கம் 'பல்லவர் வரலாறு' என்ற நூற் பெயரும், அடுத்த பக்கத்தில், அப்பக்கத்திற்குத் தொடர்பான தலைப்பும் இருக்குமாறு அச்சிடப்பட்டுள்ளது. நூலின் பாதிக்கு மேல் (இராசசிம்மனைப் பற்றி எழுதியிருப்பதற்கு பிறகு) சமண சமயத்தைப் பற்றிய தலைப்புகள் இடம் பெற்றிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எழுத்துப் பிழைகள் கவனக் குறைவால் நிகழ்வன. வேறொரு புத்தகத்தின் தலைப்புகளை இப்புத்தகத்தில் நுழைக்குமளவிற்கா கவனக்குறைவு ஏற்படும்?

பல்லவரைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு, எளிய முறையில் எழுதப்பட்ட புத்தகமான 'பல்லவர் வரலாறு' மா.இராசமாணிக்கனாரின் உழைப்பின் தரத்தையும், அறிவின் திறத்தையும் உணர்த்த, 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்', என்பது போல அமைந்துள்ளது. ஆந்திரத்தில் பிறந்து, இளமையில் தெலுங்கு மொழியே கற்ற இராசமாணிக்கனாரைத் தமிழன்னை தன் பணிக்கு வேண்டி அழைத்துக் கொண்டதற்கு வேண்டி உளமாற என் நன்றிகளைத் தமிழன்னைக்குச் செலுத்துகிறேன். இந்நூல் இப்பொழுது பதிப்பாளரிடம் (திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) கிடைக்காத நிலையில் அடுத்த பதிப்பைப் பெறும் என்று நம்புகிறேன். அப்பதிப்பாவது பிழையின்றி இருத்தல் வேண்டி இறைவனைத் தொழுகிறேன். தந்தையார் விட்ட இடத்தில் தொடங்கி பல புதிய தகவல்களைக் தந்தும், பல தவறான கருத்துகளைத் திருத்தியும் 'சரித்திரம் படைக்கும்' முனைவர் கலைக்கோவன், இந்நூல் வெளியானதற்குப் பின் வந்த தரவுகளையெல்லாம் தொகுத்து, பழைய வரலாற்றைப் புதியதொரு பரிமாணத்தில், தமிழுலகின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், முழுமையாக எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை, அந்நூலால் பயன் பெறும் பல்லாயிரக்கணக்காண வரலாற்றுத்துறை மாணவர்களின் சார்பாக வைக்கிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, February 08, 2006

லேட்டாகவும் லேட்டஸ்டாக இல்லாமலும்....

மிகவும் காலம் தாழ்த்தி இதை எழுதுவதற்கு முதற்கண் என்னை மன்னிக்க கோருகிறேன். எழுதாமல் விட்டுவிடுவோம், நாதோபாசனா கூட கேட்டுக் கேட்டு அலுத்து, தண்ணி தெளித்துவிட்டிருப்பார் என்றுதான் பலமுறை தோன்றியது. இருப்பினும் அவ்வப்போது நினைத்துக் கொள்ளும் போது கூட மெய் சிலிர்க்க வைக்கும்படி அமைந்த கச்சேரியை இணைய நல்லுலகில் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவ்வப்போது ஓங்கும். இன்று அந்த எண்ணம் சற்று அதிகமாகவே ஓங்கியது உங்களது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா? நானறியேன். என் கடன் இங்கு கொட்டித் தீர்த்துவிடுவது. அதன் பின் யாராவது திட்டித் தீர்த்தாலும் என் மனம் நிறைவாகவே இருக்குமென்றுதான் நினைக்கிறேன். over to kalarasana.......

2004 டிசம்பர் 24-ஆம் தேதி கலாரசனாவில் சஞ்சய், திருச்சி சங்கரன், நாகை முரளிதரன் ஆகியோரில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. 6.15 மணிக் கச்சேரிக்கு 6.00 மணிக்கு எட்டு பேராக நாங்கள் சென்ற போது, ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கட்டுகள் அனைத்துமே காலியாகியிருந்தது. எட்டு பேருக்கு இரு நூறு ரூபாய் டிக்கட் வாங்க மனமில்லாமல் மாம்பலத்தில் நடந்த சேஷகோபாலனின் ஃப்ரீ கச்சேரிக்குச் சென்றோம். கர்நாடக இசைக் கச்சேரிகள் கூட ஹவுஸ் ஃபுல் ஆவதைக் கண்டு நான் மகிழ்ந்தாலும், சஞ்சயின் கச்சேரியைக் கேட்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தமே. இம்முறையும் அதே தேதி, அதே பக்கவாத்தியங்களுடன், அதே இடத்தில் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. வாய்ப்பை நழுவ விட விரும்பாமல், 3.30 மணிக்கு ஏற்பாடாக இருந்த எம்.எஸ்.ஷீலாவின் கச்சேரிக்கே ராணி சீதை ஹாலில் ஆஜராகி, 3.00 மணிக்கே சஞ்சயின் கச்சேரிக்கு டிக்கெட்டும் வாங்கிவிட்டோம். எம்.எஸ்.ஷீலா பாடிய மலஹரி ராகமும் ஸ்வரங்களும், அந்த ராகத்தில் இத்தனை பிரயோகங்கள் இருக்கிறதா என்று வியக்க வைத்தன. அன்றைய மெய்ன் ஐட்டமான தோடியும் பைரவியும் மிகச் சிறப்பாக, அளவாக அமைந்தன. பக்கவாத்தியம் வாசித்த அக்கரை சுப்புலட்சுமியின் வாசிப்பு அவரை நிழலெனத் தொடர்ந்து கச்சேரிக்கு அழகு சேர்த்தது. பேருக்கு வாசித்த தனி ஆவர்த்தனத்துடன் ஷீலாவின் கச்சேரி முடிய, அடக்க முடியா ஆவலுடன் சஞ்சயின் கச்சேரியை எதிர் நோக்கி அமர்ந்திருந்தோம்.

ஐந்தரை மணி வாக்கிலேயே வித்வான்களெல்லாம் ஆஜர் ஆகி, 6.14-க்கு ஆபோகி வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. வர்ணம் முடிவதற்குள் கலைஞர்கள் மற்றும் இரசிகர்களின் திருப்திக்கு அரங்கின் ஒலி அமைப்பு அமைந்தது அதிர்ஷ்டம்தான். மாயாமாளவ கௌளையின் சிறிய கீற்றுக்குப் பின் 'துளசி தள' பாடினார். 'ஸரஸீருக புன்னாக' என்ற இடத்தில் நிரவல் மற்றும் கல்பனை ஸ்வரங்கள் பாடினார், விறுவிறுப்பான சஞ்சயின் கற்பனைகளுக்கு முரளீதரனின் ஸ்வரக் கணைகள் தக்க வகையில் பதிலளித்தபடியிருந்தன. நிரவல் என்பது ஒரு வரியை எடுத்துக் கோண்டு ராகத்தின் பரிமாணத்தைக் காட்டும் சமாசாரம்தான். அங்கு ராக ஸ்வரூபத்துக்கே முதலிடம் என்பதில் ஐயமில்லை. அதற்காக என்ன பாடுகிறார் என்ற புரியாத வகையில் சில அழகிய இடங்களைப் பாடினால்தான் ராக ஸ்வரூபம் வெளிப்படுமா? அல்லது வார்த்தையும் புரிந்து அவ்விடங்களையும் பாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

மாயாமாளவகௌளையிலேயே சஞ்சயின் குரல் நல்ல நிலையில் இருப்பது தெரிந்தது. அன்றைய தினம் அவர் பாடிய பிருகாக்களெல்லாம் spot on. மாயாமாளவகௌளையை தொடர்ந்து ஆலாபனை செய்த ராகம் கொஞ்சம் சங்கராபரணம், கொஞ்சம் பூர்ணசந்திரிகா போலெல்லாம் எனக்கு பூச்சி காட்டிவிட்டி "நான்தான் ஜனரஞ்சனி, என்னைக் கண்டு பிடிக்க இவ்வளவு நேரமா?", என்றது. ஜனரஞ்சனியில் "நாடாடின மாட" பாடியபின், முதல் sub main-ஆக சாவேரியை எடுத்துக் கொண்டார். சாவேரி நல்ல பாவப்பூர்வமான ராகம். இந்த மாதிரியான ராகங்களில் இரண்டு மூன்று சஞ்சாரங்கள் அனைவர் மனதிலும் தோன்றும், பாடகரின் ஆலாபனையும் அதே சஞ்சாரங்களை ஒட்டி இருக்கும் போது ஆலாபனையே cliche-ஆகத் தோன்றும். அப்படியல்லாமல் பிரதானமான சஞ்சாரங்களினூடே பல கோவைகளை நுழைத்து ஆலாபனையில் ஒரிடத்தில் நின்றால் அடுத்து தாவும் இடம் மேல் நோக்கியா அல்லது கீழ் நோக்கியா என்று அனுமானிக்க முடியா வகையில் ஆலாபனையை எடுத்துச் சென்றதற்கு ஒரு SPECIAL சபாஷ். சஞ்சயின் ஆலாபனையில் சிறப்பு அம்சமே அவர் ராகத்தை அடுக்கடுகாய் வளர்க்கும் போது, ஒரு அடுக்குக்கும் அடுத்ததற்கும் கொடுக்கும் இடைவெளி, அந்த இடைவெளி அவர் பாடியதை மனதில் வாங்கிக் கொள்ள இரசிகர்களுக்கு உதவுகிறது. அந்த இடைவெளியில், எத்தனை அரிய, கடினமான இடமாகயிருந்தாலும் நாகை முரளீதரனின் வில் அதை அப்படியே கன கச்சிதமாய் ஃபாலோ செய்தது. கச்சேரிக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் போது, பாடகர் ஐந்து நிமிடம் ராகம் பாடினால், வயலினிஸ்ட் மூன்று நிமிடம் வாசிக்கலாம் என்பது, unwritten law. அந்த மூன்று நிமிடத்துக்கள் ஐந்து நிமிட ஆலாபனையை precise writing செய்து கேட்பவர்களுக்கு பாடகர் ஆலபனை அளித்த நிறைவையே அளிப்பதென்பது சிலரால் மட்டுமே முடிந்த கலை. அதில் இன்றைய தலை சிறந்த வித்வானாக விளங்குபவர் நாகை முரளீதரன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று அவர் வாசித்த சாவேரியே அதற்குச் சான்று. சாவேரியில் அமைந்த தமிழ்ப் பாடலான (தமிழ் மாதிரிதான் இருந்தது) "முருகா முழு மதி" என்ற பாடலைப் பாடிய பின், பிரதான ராகமாக சங்கராபரணத்தை இழை ஓடவிட்டார்.

steady-ஆன காந்தாரத்தைற்கும் ஊஞ்சலாடும் ரிஷபத்திற்கும் இடையில் அழகிய பாலமமைத்து, சில ஸ்வரங்கள் அந்தப் பக்கம், சில ஸ்வரங்கள் இந்தப் பக்கம் என்று தோரணம் கட்டி, மேலும் கீழுமாக பாலத்தில் சங்கராபரண ராகத்தை ஓடி விளையாடி வைத்தார் பாருங்கள்...த்சொ..த்சொ...வர்ணிக்க வார்த்தையில்லை. ஆங்காங்கே சில westernised பிரயோகங்களையும் புகுத்தி ஆலாபனையில் சுவாரஸ்யப் படுத்தினார். காந்தாரம், பஞ்சமம், தார ஸ்தாயி ஷட்ஜம் என்ற ஸ்வர ஸ்தானங்களில் எல்லாம் நின்றபடியும், அவற்றை சுற்றி சுற்றி தட்டாமலை சுற்றியபடியும் படிப்படியாய் வளர்ந்த ராகம், சங்கராபரணத்தின் முக்கிய இடமான தார ஸ்தாயி காந்தாரத்தை நோக்கி நகர்ந்தது. சஞ்சயின் குரலில் ஒரு குறை என்னவென்றால், மேல் ஸ்தாயிக்குச் செல்லச் செல்ல கம்மலாகிவிடுகிறது. அதனால், கணீரென்று கேட்க வேண்டிய காந்தாரம் சிறிய கீற்றாய் கேட்டது. அந்த குறையை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், அழகிய நிறைவான, விறுவிறுப்பான ஆலாபனையாகவே அமைந்தது. ஆலாபனையை முடிக்கும் தருவாயில் 'ஸ்வர ராக சுதா' என்ற கீர்த்தனைக்கேவுரிய சில சங்கதிகளை ஆலாபனையுள் கலந்தளித்த தான் பாடப்போகும் பாடலைக் குறிப்பால் உணர்த்தினார். காலம் காலமாக கையாளப்படும் ராகமான போதிலும் புதிய கலவைகளுக்கும், கோவைகளுக்கும் இன்னும் இடமுண்டு என்று முன் மொழிந்த சஞ்சயின் ஆலாபனையை ஆமோதிக்கும் வழிமொழியலாக நாகை முரளீதரனின் ரெஸ்பான்ஸ் அமைந்தது. அவர் நினைத்திருந்தால் தார ஸ்தாயியில் சஞ்சய் பாடாததையெல்லாம் வாசித்து பாடகருக்குய் எட்டாத இடத்தையெல்லாம் தொட்டு அப்ளாசை அள்ளியிருக்கலாம். அப்படிச் செய்யாதது, பாடகர் பாடிய அழகான இடங்களை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டு காட்டுவது போல வாசித்தது, அவரின் முதிர்ச்சியியைக் காட்டியது.

இரண்டு களையில் விளம்பமான காலப் பிரமாணத்தில், திருச்சி சங்கரனின் தனி ஆவர்த்தனத்துக்கு ஏற்ற தாளக் கட்டில் அமைந்திருந்த 'ஸ்வர ராக சுதா' பாடலை சற்று ஆச்சரியப்படும் வகையில் பாடினார். என்ன ஆச்சரியம் என்றுதானே கேட்கிறீர்கள்? வார்த்தைகள் ஓரளவு சற்றே புரிந்ததுதான் ஆச்சரியம். உண்மையில் சொல்லப் போனால், சஞ்சயின் கீர்த்தனை பாடும் முறை அடிப்படையில் அத்தனை மோசமாக இல்லை. பாடலில் சங்கதிகள் வளர வளர, அல்லது நிரவலில் ராக ஸ்வரூபம் பிரவாகமாக ஓடும்போது, அவரையும் அறியாமல் ராகத்தின் பால் ஈர்க்கப்பட்டு வார்த்தைகளுக்கு step motherly treatment கொடுத்துவிடுகிறார். இந்த நிலை மட்டும் சற்று மாறினால், சஞ்சயைப் போலப் பாட ஆளேயில்லை என்று கூட சொல்லக் கூடிய நிலை வரலாம். சங்கராபரண பாடலில் 'மூலாதார' என்ற சரணத்தை நிரவல் செய்யாமல் தாண்டியதும், கீர்த்தனையை நிறைவு செய்தவுடன் மீண்டும் வருவார் என்றுதான் நினைத்தேன். எதிர்பாராத வகையில் 'குறுதே மோக்ஷமுரா' என்ற இடத்தில் கற்பனை ஸ்வரங்கள் பாட ஆரம்பித்தும், அரங்கம் ஒருமுறை நிமிர்ந்த உட்கார்ந்தது. அந்த ஸ்வரங்களுக்கு முன் 'முத மகு மோக்ஷமுரா' என்ற இடத்தில் பாடிய சங்கதிகள் ஒவ்வொன்றும் அதி அற்புதமாக அமைந்தது. கல்பனை ஸ்வரங்களை முதல் காலத்திலும் பின்பு இரண்டாம் காலத்திலும் பாடியபின், திஸ்ரக் குறைப்பு செய்தார்.

திஸ்ரக் குறைப்பு என்றால் என்ன என்றுதானே கேட்கிறீர்கள். எனக்கு ஓரளவு இந்த லய விவகாரங்கள் புரிந்தாலும், சரியாகச் சொல்ல வருமா தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன். குறைப்பு என்பது, அந்த சொல் உணர்த்துவது போலவே எதன் அளவையோ குறைக்கிறது. எதன் அளவை? ஸ்வரம் பாடும் போது, அந்த பாடலில் தாளத்தின் அளவிற்கோ, அல்லது அத்தாளத்தின் அளவின் multiple-ஆகவோ பாடினால்தான், ஸ்வரத்திலிருந்து சாஹித்யத்துக்குச் செல்லும் transition smooth-ஆக இருக்கும். (சிந்து பைரவி படத்தில் மஹா கணபதிம் பாடலில் 'ச ரி க மஹாகணபதிம்', என்று ஆரம்பித்து பல ஸ்வரக் கோவைகள் பாடுவாரே யேசுதாஸ். நியாபகம் இருக்கா?) அப்படி ஸ்வரம் பாடும்போது, ஒரு க்ளைமாக்ஸ் அல்லது crescendo build செய்வதற்கான ஒரு வழிதான் குறைப்பு என்பது. ஸ்வரத்துக்குப் பின் சாஹித்யத்துக்குச் செல்லாமல், ஒரு ஸ்வரத்தையே resting point-ஆக வைத்துக் கொண்டு, முதலில் அந்த கீர்த்தனையின் தாளத்தின் அளவுக்குப் பல ஸ்வரக் கோவைகள் பாடி, அதன் பின் அந்த கால அளவை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து, பின்பு அதை இரண்டால் வகுத்து....இப்படி எத்தனை முறை வகுக்க முடியுமோ அத்தனை முறை வகுத்துக் கால அளவைக் குறைத்துக் கொண்டே செல்வதன் பெயர் குறைப்பு. தேர்ந்த வித்வான்கள் பாடும் போது குறைப்பில் பல complex calculations நிறைந்திருக்கும். சரி...அப்போ திஸ்ரக் குறைப்பு-னா? குறைப்பு, ஒவ்வொரு ரவுண்டின் முடிவினிலும் தாளத்தின் நடையை மாற்றும் போது, அந்த நடையைப் பொறுத்து குறைப்புக்கு முன் suffix முளைக்கிறது. நடை மிஸ்ரமாக மாறினால் மிஸ்ரக் குறைப்பு, திஸ்ரமாக மாறினால் திஸ்ர குறைப்பு. சரி..இப்போ நடைனா என்னனுதானே கேட்கிறீங்க? அது வேறொரு சமயத்தில் பார்ப்போம். அப்படி அடக்க முடியா ஆர்வத்தில் இருப்பவர்கள் தனி மடல் அனுப்பவும். இல்லையேல் இணையத்தில் basics of laya/taaLa என்று தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

எங்க வுட்டேன்?...ஆங்...திஸ்ரக் குறைப்பு செய்து கோர்வை வைத்து ஸ்வரத்தை முடித்து தனி ஆவர்த்தனத்துக்குவிட்டார். திருச்சி சங்கரனின் வாசிப்பைப் பற்றி ஏற்கெனவே நிறைய சொல்லியாகிவிட்டது. அன்று வாசித்த தனியில் முதல் காலத்துக்கும் இரண்டாம் காலத்துக்கும் மாறி மாறித் தாவியபடி வாசித்த லாவகமும், வழக்கமாய் வாசிக்கும் டேக்கா சொல்லும், மிஸ்ர நடையும், திஸ்ர நடையில் வைத்தக் கோர்வையும் கச்சேரியை மற்றுமொரு தளத்திற்கு ஏற்றிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த சீஸனில் சங்கரனின் நான்கு தனி ஆவர்த்தனங்கள் கேட்க முடிந்தது. நான்குமே ஆதி தாளம் இரண்டு களையில். ஒன்றின் சாயல் மற்றொன்றில் சற்றும் விழாமல் வாசித்தார் என்று கூறினாலே அவரின் வித்தை உங்களுக்குப் புரிந்துவிடும். ஜி.என்.பி, அரியக்குடி, ஆலத்தூர், மதுரை மணி, பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்புடு போன்ற ஜாம்பவான்கள் ஒருவரையும் நேரில் கேட்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று என் மனம் ஏங்காத நாளில்லை. இருப்பினும், சங்கரனின் கச்சேரிகளைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்பதை நினைத்து சந்தோஷப்படாத நாளுமில்லை என்றுதான் கூற வேண்டும். கர்நாடக இசையுலகில் அரங்கேறி பொன் விழா கண்டிருக்கும் அம்மேதை இன்னும் பல காலம் நீடூழி வாழ்ந்து அனைவரையும் மகிழ்விக்க மனமார பிரார்தித்துக் கொள்கிறேன். டி.என்.சேஷகோபலன் சொன்னதைப் போல, "தியாகராஜர் இவரின் வாசிப்பை திர்க்க தரிசனத்தின் உணர்ந்துதா "நாத தனுமநிசம் சங்கரம்" என்று பாடினாரோ" என்று கூடத் தோன்றுகிறது.

சங்கராபரணத்தைத் தொடர்ந்து கேட்பதற்கரிய ராகமான தானரூபியைக் சுருக்கமாக ஆலாபனை செய்து கோடீஸ்வர ஐயரின் தமிழ் கீர்த்தனையைப் பாடினார்.

அன்று பாடிய சங்கராபரணத்தையும் சாவேரியையும் தாண்டி என்ன அப்படிப் பாடவிட முடியும் என்று ஒரு கணம் நினைத்தேன். ஒரு கணம்தான் நினக்க நேரமிருந்தது. சஞ்சய் ஆபோகியைத் தொடங்கியதும் அந்த நினைப்பு அரவே நீங்கியது. வர்ணம் பாடிய ராகத்தில் ராகம் தானம் பல்லவி பாடுவது என்பது ஒரு சம்பிரதாயம். அன்று ஆபோகி வர்ணத்தில் கச்சேரி தொடங்கியதால், அபோகியின் ஒரு இழை வெளிப்பட்டதுமே 'ராகம் தானம் பல்லவி' பாடப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. ஆபோகியைப் போன்ற கம்பீரமும், ரக்தியும் நிறைந்த ராகத்தை யார் பாடினாலும் நன்றாக இருக்கும். கற்பனைக்கு குறைவில்லா சஞ்சயின் குரலும் நினைத்ததெல்லாம் பேசக் கூடிய நிலையில் அன்று அமைந்துவிட்ட போது கேட்கவா வேண்டும். முதலில் மழைத்துளியாய் விழுந்து பின்பு பிரவாகமாய் மாறி, அவர் தார ஸ்தாயி ஷட்ஜமத்தைத் தொட்டதும் மடை திறந்து அரங்கெங்கும் ஓடியது. ஷட்ஜமத்தில் நின்று கொடுத்த கார்வைகள் என் நினைவிலிருந்து என்றென்றும் அகலாது என்றுதான் நினைக்கிறேன். கச்சேரியின் மற்ற உருப்படிகளை எப்படியோ வர்ணித்துவிட்டேன். சத்தியமாகச் சொல்கிறேன்! அன்றுஇ சஞ்சய் பாடிய ஆபோகியின் அழகையும், ஆதிதாளம், முக்கால் இடம் offset-இல் அமைந்த 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்ற பல்லவி நிரவலையும், அதில் செய்த அனுலோம பிரதிலோம ஜால வித்தைகளையும், ராகமாலிகையும், வர்ணிக்க இன்னும் உவமைகள் உருவாக்கப்படவில்லை.

ராகம் தானம் பல்லவி முடிந்த போது அரங்கமே ஸ்தம்பித்துப் போன நிலையில் இருந்தது. பல்லவியைப் பாடி முடித்த போது ஆபோகியின் தாக்கம் ரசிகரை மட்டுமல்ல, பாடகரையும்தான் கட்டிப் போட்டுவிட்டது. அதனால் ஆபோகியை கைவிட முடியா கலைஞராய் "கிருபாநிதி" என்று அனுபல்லவியில் ஆரம்பித்து, கோபாலகிருஷ்ணபாரதியின் பிரபல பாடலை (சபாபதிக்கு) சஞ்சய் பாடிய போது அரங்கம் அதிர்ந்தது. கல்யாணி ராகம் எப்படி இரண்டு பிராதன ராகங்களுக்கு இடையில் ஒரு brisk filler-ஆகவும் பாடப்பட்டு, அதே சமயத்தில் பிரதானமாகவும் மிளிர்வதைப் பற்றி முன்பு கூறியிருந்தேன். துக்கடாவாகப் பாடுவதற்கும் ஏற்ற ராகம் கல்யாணி என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பாபனாசம் சிவனின் "தேரில் ஏறினான்" பாடலை சஞ்சய் பாடினார் போலும். பாடலின் சங்கதிகள் கண்ணனின் கம்பீர வீதி உலாவை அழகாகச் சித்தரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அதன் பின் பாடிய

2005 டிசம்பரில் கிட்டத்தட்ட 30 கச்சேரிகள் கேட்ட நிலையில், இந்தக் கச்சேரி என்னுள் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு இணையாக வேறெந்தக் கச்சேரியையும் சொல்லமுடியாது. விறுவிறுப்பு, அபூர்வ ராகங்கள், அபூர்வ பிரயோகங்கள், அழகு சொட்டும் கமகங்கள், நெருடலான கணக்குகள், அற்புதமான பக்கவாத்யங்கள் என்று ஒரே கச்சேரியில் எல்லாம் அமைவது அபூர்வம். அன்று அமைந்தது என் பாக்யம். அடுத்த வருடம் அதே இடத்தில், அதே நேரத்தில், அதே கலைஞர்களின் கச்சேரி நடை பெருமெனில், நிச்சயம் என்னை அங்கு காணலாம்.

மகேந்திரனின் பட்டப் பெயர்கள், போன மாத திருவையாறு யாத்திரை, இந்த மாத காஞ்சி பயணம் பற்றி எல்லாம் எழுதணும்....பார்ப்போம்.....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, January 18, 2006

மஹாவைத்தியநாத சிவன்

கர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று. சிவகங்கையைச் சேர்ந்த சின்ன வைத்தி, பெரிய வைத்தி, செம்பை வைத்தியநாத பாகவதர் முதல் குன்னக்குடி வைத்தியநாதன் வரை யாவரும் இதில் அடக்கம். இப்படிப்பட்ட வரிசையில், 'மஹா' வைத்தியநாதனாக விளங்குபவர் வையச்சேரி வைத்தியநாத ஐயர்.

தஞ்சாவூர் ஜில்லாவில், வையச்சேரி என்ற ஊரில், பஞ்சநாத ஐயருக்கும் அருந்ததி அம்மாளுக்கும் மூன்றாவது மகனாக, 1844-ஆம் ஆண்டு, மே மாதம், 26-ஆவது நாள் பிறந்தவர் மஹா வைத்தியநாத சிவன். இவரது தாயார், இரண்டாம் சரபோஜி மன்னரின் ஆதரவில் பல கீர்த்தனைகள் புனைந்த ஆனை-ஐயா சகோதரர்களின் பரம்பரையில் வந்தவர். இவரது தந்தை பஞ்சநாத ஐயரும், இசையில் ஆழ்ந்த அறிவும் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட தம்பதியினருக்குப் பிறந்த வைத்தியநாத ஐயர் இசையில் ஆர்வம் காட்டியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வையச்சேரி வைத்தியநாதன் மஹாவைத்தியநாதனாக வளர்ந்து பெரும் புகழ் அடைந்ததில் முக்கிய பங்கு அவரது தமையன் ராமாசாமி ஐயரைச் சேரும். இச்சகோதரர்களை, 'இரட்டையர்' என்றே அனைவரும் அழைத்தனர். சிறு வயது முதலே, இருவரும் ஆன்மீகத்திலும், சங்கீதத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு காட்டினர். இதனை உணர்ந்த பஞ்சநாத ஐயர், அப்பொழுது ஆட்சியில் இருந்த மராட்ட மன்னர் இரண்டாம் சிவாஜியின் சபைக்கு அடிக்கடி அழைத்துச் சென்றார். இதனால், பல அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, அச் சிறுவர்களுக்குக் கிட்டியது. இந்தப் பயணங்களின் போதெல்லாம், தஞ்சைக்கு அருகிலிருந்த 'மஹாநோம்புச் சாவடியில்' (இக்காலத்தில் மனம்புச் சாவடி) இருந்த வெங்கட சுப்பையரின் வீட்டில் தங்கி, தியாகையரின் சிஷ்யரான அவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பும் அச் சிறுவர்க்ளுக்குக் கிட்டியது. இதனால், அந்நாளில் அரிதாக விளங்கிய பல ராகங்களில் அமைந்த தியாகையர் கீர்த்தனங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் இவர்களுக்குக் கிட்டியது.

மஹாவைத்தியநாத ஐயருக்கு ஏழு வயதில் உபநயனம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சிவகங்கை சின்ன வைத்தி, பெரிய வைத்தி போன்ற பல சங்கீதச் சக்கரவர்த்திகள் முன்னிலையில், தந்தையாரின் கட்டளைக்கு இணங்க, ராமசாமி - வைத்தியநாதன் சகோதரர்கள் பாடினார்கள். அவர்களது இசை, அறிஞர்களையும் பிரமிப்படைய வைக்கும் வகையில் அமைந்திருந்தது. இது நிகழ்ந்த சில மாதங்களில் வாசுதேவ ஐயங்கார் என்ற செல்வந்தரின் கிரஹ பிரவேசம் நடந்தது. அதற்காக, ச்¢வகங்கை வைத்தி சகோதரர்களின் கச்சேரியை ஏற்பாடு செய்யச் சென்றிருந்த ஐயங்காரிடம் வையச்சேரி ராமசாமி-வைத்தியநாதன் சகோதரர்களின் இசை வன்மையைப் பற்றி, பெரிய வைத்தியநாத ஐயர் பிரஸ்தாபித்து, அவர்களுடைய கச்சேரியையும் ஏற்பாடு செய்தார். இதுவே மஹாவைத்தியநாத ஐயரின் முதல் கச்சேரி என்று கொள்ளலாம்.

முதல் கச்சேரிக்குப் பின் ராமசாமி-வைத்தியநாதன் சகோதர்களின் புகழ் தஞ்சை ஜில்லா முழுவதும் பரவியது. அதனால் தொடர்ந்து பல கச்சேரிகள் செய்ய அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. காலப்போக்கில் வைத்தியநாதன் பாடகராகவும், அவரது தமையன் ராமசாமி, தமிழ்ப் பண்டிதராகவும் சிறந்து விளங்கினார்கள். பத்துப் பிராயமே நிரம்பிய பாலகனான வைத்தியநாதனின் கச்சேரிகள், புதுக்கோட்டை, மதுரை, எட்டையபுரம், ராமநாதபுரம் போன்ற சமஸ்தானங்களில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருந்தது.

வைத்தியநாதனுக்கு 'மஹா வைத்தியநாதன்' என்ற பட்டம் கிடைத்ததைப் பற்றிய குறிப்புகளுள் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா-வின் குறிப்பின்படி, 1856-ஆம் ஆண்டு, தை மாதம், திருவாவடுதுறை மடத்தின், சின்னப் பட்டமாக விளங்கிய மேலகரம் சுப்ரமண்ய தேசிகரின் அழைப்பின் பெயரில் வைத்தியநாதனும், ராமசாமியும் கள்ளிடைக்குறிச்சிக்குச் சென்றிருந்தனர். அந்தச் சமயத்தில், நமசிவாய மூர்த்திகளின் ஜென்ம நட்சத்திரத்தையொட்டி நிகழ்ந்த விழாவில் பாடுவதற்காகச் சிவகங்கை வைத்திகள், வீணை சின்னைய பாகவதர், பிச்சுமணி பாகவதர் போன்ற சங்கீத ஜாம்பவான்கள் வந்திருந்தன்ர். அப்பொழுது, சிறுவனான வைத்தியநாதனை, 'சிவகங்கை வைத்திகளுக்குப் போட்டியாய்ப் பாடச் சென்னால் என்ன,' என்ற எண்ணம் சுப்ரமண்ய தேசிகருக்கு தோன்றியது. இரு தரப்பினரும் தயக்கமின்றி இசையவும், போட்டி ஆரம்பமாகியது. வீணை சின்னைய்ய பாகவதர் நடுவராகப் பொறுப்பு வகித்தார். சின்ன வைத்தியும், வைத்தியநாதனும் பல ராகங்களைச் சளைக்காமல் பாடினார்கள். நாட்டை ராகத்தைப் பாடும்பொழுது சின்ன வைத்தி அந்த ராகத்தில் பாடிய ஒரு ஸ்வரம் தவறென்று வைத்தியநாதன் கூறவும், அங்கே பெரிய சர்ச்சை மூண்டது. இறுதியில், வைத்தியநாதன் கூறியதே சரி என்று நடுவர் தீர்ப்பு கூற, சிவகங்கை வைத்திகள் தோல்வியடைந்தனர்.

போட்டியைத் தொடர்ந்து வைத்தியநாதன் தனியாகக் கச்சேரி செய்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். சில பாடல்களுக்குப் பின், சக்கரவாஹ ராகத்தில் ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். அக்காலத்தில், பல மேளகர்த்தா ராகங்கள் பிரபலமில்லாமல் இருந்ததால், சக்கரவாஹ ராகத்தைப் பல வித்வான்கள் கண்டுகொள்ள முடியாமல் போனதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பெரிய வைத்தி உட்பட எவருக்கும் அந்த ராகம் புரியாததால், வைத்தியநாதன் அந்த ராகத்தை விளக்கி, தியாக்கைய்யரின் 'சுகுணமுலே' பாடலைப் பாடினார். இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த கச்சேரியின் நிறைவில், சிவகங்கை வைத்திகள் வையச்சேரி வைத்தியநாதனுக்குப் பட்டம் சூட்டும்படி ஆதீனத்திடம் விண்ணப்பித்தனர். அதற்கிணங்க ஆதீனமும், 'மஹா' என்ற பட்டத்தை வைத்தியநாத ஐயருக்குச் சூட்டினார்.

உ வே சாமிநாதையர் இப்படிச் சொல்யிருக்கிறார் என்றாலும், சுப்பைய பாகவதரின் குறிப்பில் நாட்டை ராகச் சர்ச்சையப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. போட்டியில் இருவரும் சளைக்காமல் படினார்கள். சங்கராபரண ராகத்தில் பல்லவி பாடுகையில் மஹாவைத்தியநாத ஐயர் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தினார். இதனால் மகிழ்ந்த பெரிய வைத்தியநாத ஐயர் மனமுவந்து அளித்த படமே 'மஹா,' என்கிறது அக்குறிப்பு.

இதைப்போலவே, மஹா வைத்தியநாத ஐயருக்கும் திருவிதாங்கூர் சபையில் வித்வானாக விளங்கிய கோயம்புத்தூர் ராகவ ஐயருக்கும் நிகழ்ந்த போட்டியைப் பற்றியும், சென்னையில் வேணு கோபால்தாஸ் நாயுடுவுக்கு எதிராக மஹாவைத்தியநாத ஐயர் பாடிய நாராயணகௌளை பல்லவியைப் பற்றியும் குறிப்புகள் கிடைக்கின்றன.

அந்த சமயத்தில், கொடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்ற சன்யாசியிடம் ராமசாமியும், வைத்தியநாதனும் பஞ்சாக்ஷர ஜபத்தை உபதேசமாகப் பெற்றார்கள். இதனால், தங்கள் பெயர்களுக்குப் பின்னால் 'சிவன்' என்று சேர்த்துக் கொண்டு, ராமசாமி சிவன் என்றும் மஹாவைத்தியநாத சிவன் என்றும் விளங்கினர். சென்னையில் மஹாவைத்தியநாத சிவனின் முதல் கச்சேரி, அவரது 22-ஆவது வயதில் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து, பார்த்தசாரதி கோயில், மாதவப் பெருமாள் கோயில், கபாலீஸ்வரர் கோயில் போன்ற சென்னையின் பல முக்கிய இடங்களில் அவரது இசை ஒலித்த வண்ணம் இருந்த்து. புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த சிவன், வருடம் முழுவதும், தென்னாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று பாடியவாறு கழித்தார்.

சிவனின் வாழ்வைப் பற்றி கிடைக்கும் குறிப்புகளில் வேறுபாடுகள் இருப்பினும் அவரது வித்வத்தையும், குரல்வளத்தையும் பற்றி கூறும் எல்லாக் குறிப்புகளும் ஒருமித்த கருத்தையே தெரிவிக்கின்றன. மூன்று ஸ்தாயிகளிலும் சரளமாகப் பாடக்கூடிய குரலும், ஆறு கால ப்ரமாணங்களில் அனாயசமாகப் பாடக்கூடிய ஆற்றலும், மின்னல் வேக ப்ருகாக்களை உதிர்க்கும் திறனும், அதி துரிதமாய் பாடும்பொழுதும் கமகங்கள் குலையாமல் பாடும் திறமையும் கொண்டிருந்தார் சிவன் என்று அவரது பாட்டை நேரில் கேட்டவர் பலர் கூறியிருக்கிறார்கள். மஹா வைத்தியநாத ஐயர், கீர்த்தனங்களைத் தவிர பல அரிய தாளங்களில் பல்லவிகள் அமைத்துப் பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். கஜ ஜம்பை, விலோகிதம், லக்ஷ்மீசம், சமடமருகம், தத்தாத்ரேயம், சிம்ஹானந்தம் போன்ற அரிய தாளங்களில் பல்லவி பாடியதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.

இசைக் கச்சேரி செய்ததோடன்றி, பல கீர்த்தனங்கள் அமைத்து, சிறந்த வாகேயகாரராகவும் விளங்கினார். தமிழறிஞராக விளங்கிய ராமசாமி சிவன், பெரிய புராணம் முழுவதையும் பல கீர்த்தனைகளாக இயற்றினார். சகோதரர்கள் இருவரும் 'குஹதாச' என்ற முத்திரையை தனது கீர்த்தனங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மஹா வைத்தியநாத சிவன் தனது ஊரில் இருந்த நாளில் எல்லாம், தன் வீட்டு திண்ணையில் சிவ புராணக் காலக்ஷேபம் நடத்தினார். இந்த புராணங்களைக் கேட்கவும், அவற்றில் அவர் பாடிய கீர்த்தனங்களின் இனிமையில் திளைக்கவும், நிதமும் நிறைய கூட்டம் சேர்ந்தது. சிவ புராணங்கள் மற்றும் தேவாரப் பாடல்களை தினமும் அனைவரும் கேட்கும் வண்ணம் திண்ணையில் அமர்ந்து பாடினாலும், அவற்றை 'வயிற்றுப் பிழைப்புக்காக' பாடும் கச்சேரிகளில் பாடக்கூடாது என்று கருத்துடையவராக விளங்கினார்.

பாடகர், வாகேயகாரர், ஹரிகதை நிபுணர் என்று பல பரிமாணங்களில் சிறந்து விளங்கிப் பல சாதனைகள் புரிந்த மஹாவைத்தியநாத ஐயரின் வாழ்வில் ஒரே ஒரு சாதனையை மட்டும் குறிப்பிட வேண்டுமெனில், அவரது 72 மேள ராகமாலிகையைச் சொல்லலாம். இரண்டாம் சிவாஜியின் மருமகனான சகாராம் சாஹேப், மஹா வைத்தியநாதரின் இசையின் மேல் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருந்தார். அவரது சபையின் இருந்த 'லவனி வெங்கட ராவ்' என்ற அரசவைக் கவிஞர், 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர் வரும் வகையில், சகாராம் சாஹேபை புகழ்ந்து ஒரு பாடல் புனைந்தார். அப்பாடலுக்கு 72 மேளகர்த்தா ராகத்தில் இசையமைக்குமாறு மஹாவைத்தியநாதரை, சகாராம் வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, 72 மேளகர்த்தா ராகங்களில் அந்த பாடலை அமைத்து, நிறைய சன்மானமும் பெற்றார். சன்மானமும் புகழும் அடைந்த போதிலும், இப்படியொரு அபூர்வமான ராகமாலிகையை 'நர ஸ்துதிக்காக' அமைத்தது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. அந்த உணர்வே அவரை திருவையாற்றிலிருக்கும் 'ப்ரணதார்திஹரரின்' மேல் 72 ராக முத்திரை வருமாறு ஒரு பாடல் புனைய வைத்தது.

ராகங்கள் வெறும் ஸ்வரக் கோர்வையல்ல. ஒவ்வொரு ராகத்தின் சௌந்தர்யமும் அந்த ஸ்வரங்களுக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு ஸ்வரத்தையும் நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் ராகம் இருக்கிறதே தவிர, வெறும் ஸ்வரங்கள் ராகமாகா. உதாரணமாக, சங்கராபரணத்துக்கும் கல்யாணிக்கும், மத்யமத்தைப் பாடாமலே பல வித்தியாசங்களைக் காட்ட முடியும். ஸ்வரத்தால் ஒரு இம்மியளவே வித்தியாசமான அடுத்தடுத்த மேளகர்த்தா ராகங்களுக்கிடையிலான ராகபாவத்திலுள்ள வித்தியாசம் தெள்ளத்தெளிவாய் வெளிவரும் வகையில் மேளராகமாலிகை அமைக்கப் பட்டிருக்கிறது.

'ப்ரணதார்திஹர ப்ரபோ' என்று தொடங்கும் இப்பாடலின் பல்லவி ஸ்ர் ராகத்தில் அமைந்திருக்கிறது. பல்லவியைத் தொடர்ந்து தில்லானாவில் வருவது போலச் சொற்கட்டுகள் வருகின்றது. அதன் பின் வரும் சரணங்களில், 72 மேளகர்த்தா ராகங்கள் ஒவ்வொன்றாய் வருகிறது. ஒவ்வொரு ராகத்தில் அமைந்த சாஹித்யமும், ஆதி தாளத்தின் இரண்டு ஆவர்த்தனங்களுக்கு வருகிறது. சாஹித்யத்தைத் தொடர்ந்து அந்த ராகத்துக்கான சிட்டை ஸ்வரம் வருகிறது. சிட்டை ஸ்வரத்துக்குப் பின் மீண்டும் ஒரு முறை சாஹித்யத்தைப் பாடி, அதனைத் தொடர்ந்து வேறொரு சிட்டை ஸ்வரம் வருவது போல் பாடல் அமைக்கப் பட்டிருக்கிறது. இரண்டாவது சிட்டை ஸ்வரம் ஒரு ஆவர்த்தன அளவுக்கு வருகிறது. அந்த ஒரு ஆவர்த்தனத்தில், முதல் அரை ஆவர்த்தனம் அப்பொழுது பாடிக் கொண்டிருக்கும் மேள்கர்த்தா ராகத்திலும், அடுத்த அரை ஆவர்த்தனம் அதற்கு அடுத்து வரும் மேளகர்த்தா ராகத்திலும் அமைந்துள்லது. இந்த ஒரு ஆவர்த்தன சிட்டை ஸ்வரத்துக்குள், இரண்டு ராகத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தெளிவாக வெளிப்படும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்பான்மையான சிட்டை ஸ்வரங்களில், இரு ராகத்தை வேறுபடுத்தும் ஸ்வரம் இடம் பெறுகிறது. சில சிட்டை ஸ்வரங்களில் அந்த வேறுபடுத்தும் ஸ்வரம் வராமலும் இருக்கிறது. ஒரு சில மேளகர்த்தா ராகங்களே புழக்கத்திலிருந்த காலத்தில், 72 மேளகர்த்தா ராகங்களும் எழில் பொங்க ஒரே பாடலில் வலம் வருமாறு ஒரு பாடலை அமைத்திருப்பது என்பது ஒரு அமானுஷ்ய சாதனையாகும்.
வரகூர் குருமூர்த்தி சாஸ்திரிகள் தமிழில் இப்பாடலுக்கு உரை எழுதியுள்ளார். பாடலில், ஆழ்ந்த அத்வைத தத்வங்களைக் கூறியிருக்கிறார் மஹாவைத்தியநாத ஐயர். பாடலில் ராகங்களின் பெயர்கள் திணிக்கப்பட்டது போலல்லாமல் இயற்கையாக அமைந்துள்ளது. சில இடங்களில், பொருள் குலையாமல் இருக்க, ராகத்தின் பெயர் சற்றே மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏழாவது மேளகர்த்தாவான 'சேனாவதியின்' பெயர் 'சேனாபதி' (தேவ சேனாபதி) என்று வருகிறது. பாடலின் சரணம், இரண்டு சக்கரம் (12 ராகங்கள்) நிறைவானதும், 'ப்ரணதார்திஹர' என்ற பல்லவிக்குச் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சரணமும், தனித்தன்மையுடனும் முழுமையுடனும் இருப்பதால், கச்சேரிகளில் பாடும் பொழுது, ஏதேனும் இரண்டு சக்கரங்களை மட்டும் பாடும் வகையில் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலிலிருந்து, மஹாவைத்தியநாத ஐயரின் இசையறிவும், ஆன்மீக அறிவும், வடமொழிப் புலமையும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

சிறு வயது முதல் கச்சேரிகளுக்காக தென்னாடு முழுவதும் பயணம் செய்த சிவன், 1891-ஆம் வருடம், ஓய்வின்மையாலும், பயணங்களின் பொழுது சரியாக உணவு அருந்தாமல் வருத்திக் கொண்டதாலும் நோயுற்றார். நினைவிழந்த நிலையில் பலமாதங்கள் கழித்த மஹா வைத்தியநாத ஐயர், 1893-ஆம் வருடம், ஜனவரி 27-ஆம் நாள் இயற்கை எய்தினார்.

மஹாவைத்தியநாத ஐயரின் மறைவுக்குப் பின் ராமசாமி சிவன், ''மஹா வைத்தியநாத விஜய சங்க்ரஹம்' என்ற சங்க்ரஹத்தில் தனது சகோதரரின் சாதனைகளை பட்டியலிட்டு வெளியிட்டார். இதைப் பற்றி இன்று குறிப்புகள் கிடைக்கிறதே தவிர, சங்கிரஹம் கிடைக்கவில்லை. இச்சங்கிரஹத்தில் பல மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இருப்பதாகத் தெரிகிறது. மஹா வைத்தியநாத சிவனின் சாதனைகளுள், அவர் பல சமகால வித்வான்களை வெற்றி கொண்டதற்கானத் தகவல்கள் இதில் இருந்ததாகவும், இதை எதிர்த்து 'பட்டணம் சுப்ரமண்ய ஐயர்' கண்டனம் வெளியிட்டதாகவும் தெரிகிறது.

அரை நூற்றாண்டுக்குச் சற்றுக் குறைவாகவே வாழ்ந்த மஹா வைத்தியநாத ஐயரின் புகழ், பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


துணை நூல் பட்டியல்:

சங்கீத மும்மணிகள், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்
ஸ்ருதி மாத இதழ், ஆக்ஸ்டு 2003 வெளியீடு
'நா கண்ட கலாவிதரு', மைசூர் வாசுதேவாச்சாரியார் (ஆங்கில மொழிபெயர்ப்பு)
'மேள ராகமாலிகா', எஸ்.ஆர்.ஜானகிராமனின் சொற்பொழிவு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 30, 2005

To Hell With the Song List.

Dec 23 @ Music Academy, S.Sowmya, Pakkala Ramadas, Neyveli Narayanan, Madipakkam Murali

23-ஆம் தேதி ப்ரைம் ஸ்லாட் கச்சேரிகள் இரண்டுமே மியூசிக் அகாடமியில் தேறிவிட (எப்போவாவது ஒரு முறைதான் தேறும்) முதலில் மாண்டலின் கச்சேரியைக் கேட்டுவிட்டு, சௌம்யாவின் கச்சேரிக்கும் உட்கார்ந்துவிடுவது என்று முடிவெடுத்தேன். மாண்டலின் ஸ்ர்நிவாஸின் தீவிர ரசிகனான எனக்கு அவர் வாசித்தது மிகவும் பிடித்திருந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவர் கச்சேரிகளைப் பற்றி கடந்த இரண்ட வருடங்களிலும் எழுதியுள்ளதால் அந்த கச்சேரியைப் பற்றி நாலு வரி மட்டுமே....

ஸ்ர்நிவாஸின் கச்சேரிகளில் எஸ்.டி.ஸ்ர்தர் இல்லாத கச்சேரிகள் சீஸனுக்கு ஏதாவது ஓரிடத்திலாவது அமையும். தகரத்தை தரையில் தேய்ப்பது போல வில்லை போடும் ஸ்ர்தரின் வயலின் இல்லாத இடமாக நான் போவது வழக்கம். இந்த முறை எல்லா இடங்களிலுமே ஸ்ர்தரே வாசித்து என்னை சோதனைக்குள்ளாக்கிவிட்டார். இதற்கு விடிவே இல்லையா? யாராவது ஸ்ர்நிவாஸின் காதில் ஓதினால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இந்திய கிரிக்கெட் அணியிலாவது தமிழகத்தை சேர்ந்த ஸ்ர்ராமுக்கு இடம் கொடுக்கலாம். அவர் சம்பாதிக்கும் பல கோடி ரூபாய்கள் வீட்டில் இருக்கும் நிலையில் கச்சேரிக்கு வந்து நமது காதை பதம் பார்க்கும் பரோபகாரத்தை ஸ்ர்ராமின் தந்தை ஸ்ர்தர் செய்யாமல் இருப்பார் (என்று நம்பிக்கைதான்). முதல் இரண்டு பாடல்களுக்கு வேகம் வேகம் தொடர்ந்து வேகம் மட்டுமே பிரதானமாக்கி வாசித்த ஸ்ர்நிவாஸும் ராஜேஷும், பின்பு விவேகமாக வாசித்த கௌரிமனோஹரியும், கல்யாணியும் அற்புதமாக அமைந்தது. குறிப்பாக கல்யாணியில், நாதஸ்வர பாணிபிரயோகங்களை, ஒரு மீட்டு மீட்டிவிட்டு, அந்த மீட்டலின் அதிர்வு அடங்கும் முன் ராகத்தின் பல இடங்களுக்கு தொடர்ந்து சன்சரித்து, உச்சஸ்தாயியில் நிறுத்திய போது பிரம்மிப்பாக இருந்தது. அதி அற்புதமான pick up-உம் amplification-உம் இருந்தாலொழிய இவ்வாறு வாசிக்க இயலாது. பல்லவி ராகமாலிகையில் ராகவர்த்தினி ராகத்தை சரியாககண்டுபிடித்ததில் எனக்கு ஒப்பற்ற மகிழ்ச்சி. (நாலு வரிக்கு மேலேயே ஆயிடுச்சோ?)

ஸ்ர்நிவாஸ் கச்சேரியில் பக்கத்திலிருந்தவரிடம் மியூசிக் அகாடமியின் இந்த வருட சொவினியர் இருந்ததால், சௌம்யா என்ன பாட மாட்டார் என்பதை அந்த லிஸ்டிலிருந்த தெரிந்து கொண்டேன். நீங்கள் சௌம்யாவின் அகாடமி கச்சேரிகளுக்கு முன்னமே சென்றிருப்பின், முந்தைய வாக்கியம் உங்களை ஆச்சரியப்படுத்தாது. நான் சென்ற கச்சேரிகளில் எல்லாம் அந்த லிஸ்டில் இருக்கும் பிரதான ராகத்தை பாடியதில்லை. பிரதான ராகமாக சாவேரியும், தோடியில் ராகம் தான்ம் பல்லவியும் லிஸ்டில் இருந்ததால், காம்போதுயும் பைரவியும் பாடுவார் என்று நினைத்துக் கொண்டேன்.

அட தாளத்தின் யதுகுல காம்போதி வர்ணத்தில் கச்சேரி ஆரம்பமானது. சௌம்யாவின் கச்சேரிகளின் இன்னொரு விஷயம், சில நாட்கள் ஏதோ பாடி ஒப்பேத்தி விடுவார் (ஒன்றேகால் மணி நேரத்தின் முடித்த கச்சேரி ஒன்றிற்கு நான் சென்றிருக்கிறேன்), அலல்து குரல் சில நாட்களின் படுத்தும். அகாடமி கச்சேரிகளில் அப்படி அசிரத்தை யாரும் காட்டமாட்டார்கள் எனினும், அன்றைய தினம் குரலும் நல்ல நிலையில் அமைந்தது வர்ணத்திலேயே தெரிந்தது. சக்ரவாக ராகத்தை கோடி காட்டிவிட்டு 'சுகணுமுலே' பாடி, இரண்டாம் காலத்தில் விறுவிறுப்பாக கல்பனை ஸ்வரம் பாடினார். நான் அதுவரை பக்கல ராமதாஸின் வயலினைக் கேட்டதில்லை, நல்ல இனிமையான bowing, கையில் வேகமும் பேசுகிறது. சௌம்யாவின் ஸ்வரங்களுக்கு தக்க ரெஸ்பான்ஸ்களை அள்ளி வீசினார் ராமதாஸ். ஆனந்த பைரவியின் 'மரிவேரே' லிஸ்டில் இருந்ததால், அந்தப் பாடலை மட்டும்தான் பாடுவார் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், ஓரளவு விஸ்தாரமாகவே பாடி, cliche சஞ்சாரங்களைத் தவிர சில அரிய பிடிகள் மற்றும் சில folkish பிடிகளை எல்லாம் பாடினார். அந்த ஆலாபனைக்குப் பின் 'மரிவேரே' பாடினால், அப்புறம் ஒரு ராகம்தான் பாட நேரமிருக்கும் என்று நான் நினைத்திருக்கையில், 'ஹிமாசல தனய' என்ற ஷ்யாமா சாஸ்திரியின் மத்யம கால கிருதி ஆரம்பமானது.

ஆனந்த பைரவியைத் தொடர்ந்து கச்சேரியின் பிரதி மத்யம கோட்டாவை நிறைவு செய்யும் வகையில் சாரங்காவின் 'எந்த பாக்யமு' விறுவிறுப்பாக பாடி அதற்கு காண்ட்ராஸ்டாக தேவ காந்தாரியின் ஓர் அரிய கிருதி ("ஷீர சாகர", "சீதா வர", "துலசம்மா", "வினராதா" என்று நாம் கேட்கக் கிடைக்கும் எந்த பாட்லும் அல்லாத ஒரு பாடல், பல்லவி சரியாகப் புரியவில்லை, தியாகராஜர் கீர்த்தனையாக இல்லாமலும் இருக்கலாம்) பாடும் போதே அடுத்த ஐட்டம் மெய்ன் பீஸ்தான் என்று புரிந்தது. அதுவரை ஓரளவு லிஸ்டை ஃபாலோ செய்ததால் அடுத்த வரும் சாவேரியை எதிர் நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் வகையில் தோடி ஆரம்பமானது. தோடியில் சில ஸ்வரங்கள் எல்லாம் ரப்பருக்கு ஒப்பாகும், அதை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளுவு இழுத்து அடுத்த ஸ்வரத்துக்குச் செல்லும் போதுதான் ஆலாபனையில் அழுத்தம் ஏற்படும். இதை அழகாகக்ச் செய்து, ராகத்தின் பல சஞ்சாரங்களை அறிமுகப்படுத்தி விஸ்தாரமாகப் பாடி மற்றொரு அரிய கிருதியான "ஸ்ர் சுப்ரமண்யோ" பாடினார். (தியாகராஜரே 30-க்கும் மேலான கிருதிகளில் தோடியின் வெவ்வேறு ஸ்வரூபங்களைப் படப்பிடித்துக் காட்டிவிட்ட நிலையின் எப்போதோ ஒருமுறைதான் 'ஸ்ர் கிருஷ்ணம்', 'ராவே ஹிமகிரி', 'கார்த்திகேய காங்கேய', 'கலி தீர வந்தருள்வாய்' போன்ற பாடல்களைக் கேட்க முடிகிறது. 28-ஆம் தேதி ஒரு லெக்சரில் மாரிமுத்தாப் பிள்ளையின் "எந்நேரமும் காலைத் தூக்கி" என்ற தோடி ராகப் பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு களையில் நல்ல கம்பீரத்துடன் மிளிரும் இது போன்ற கீர்த்தனைகள் வெளியே வருதல் வேண்டும்.") கீர்த்தனையில் கல்ப்னை ஸ்வரங்களுக்குப் பின் தனி நாவர்த்தன்ம் ஆரம்பமானது.

அனுசரணையாக அடக்கி வாசித்த நெய்வேலி நாரயணன், அதிக கணக்கு வழக்கிலெல்லாம் ஈடுபடாமல், சதுஸ்ர நடையை நன்றாக அமைத்துக் கொண்டு மடிப்பாக்கம் முரளியுடன் சேர்ந்து குறைப்பு செய்து கோர்வை வைத்து முடித்த போதுஅரை மணிக்கு மேல் நேரம் இருந்தது. விவர்த்தினியில் கடகடவென 'வினவே ஓ மனசா' பாடி மாயாமாளவ கௌளையை ஆலாபனை செய்தார். ஐந்து நிமிட ஆலாபனையில் பாவமும், பிருகாக்களும் நிறைந்திருந்தன. அவரின் ஆலாபனைக்குச் சற்றும் குறையாமல் வயலிஸ்டிஞ் ரெஸ்பான்ஸும் இருந்தது கச்சேரியை மேலும் மெருகேற்றியது. ராகத்தில் விட்ட இடங்களை தானத்தில் தொட்டுவிட்டு "மாயா தீர்த்த ஸ்வரூபிணி நன்னு ப்ரோவம்மா" என்ற பல்லவியை கண்ட ஜாதி திரிபடை (இரண்டு களை) தாளத்தில் நிரடலான "ஒன்றேகால் இடம் offset" எடுப்பில் (ஒன்பது அக்ஷரம் தள்ளி) பாடி திரிகாலம் செய்தது லய வின்யாசங்களை ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். ராகமாலிகை ஸ்வரங்களில் சுநாத வினோதினி, ரேவதி மற்றும் சுருட்டியைப் பாடி பல்லவியை நிறைவு செய்தார்.

பல்லவியைத் தொடர்ந்து மதுவந்தியில் அஷ்டபதியும், கானடாவில் (ஜாவளியோ பதமோ) பாடி மங்களம் பாடும் போது பத்து மணிக்கு முடிக்க வேண்டிய கச்சேரி பத்து நிமிடம் நீண்டிருந்தது.

எனக்கு பிடித்த பெண் பாடகரின் கச்சேரி அன்றைய தினம் அற்புதமாக இருந்ததை எண்ணி மகிழ்ந்தபடி வீட்டை நோக்கி வண்டியைச் ச்லுத்தினேன். அடுத்த நாள் சஞ்சயின் கச்சேரி "My concert of the season"-ஆக அமையும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். அத்தோடு இந்த சீஸனுக்கு "பவமான" (மங்களம்) பாடி விடுவோம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.