Thursday, November 23, 2006

வேண்டாத வதந்திகள்

தீபாவளி என்றதும் மனதில் தோன்றும் விஷயங்களுள் தீபாவளி மலரும் நிச்சயம் இருக்கும். தீபாவளி மலர்கள், வாரப் பத்திரிகைளைப் போன்றோ செய்தித் தாள்களைப் போன்றோ கருதப்படாமல், பல குடும்பங்களில் பரம்பரைச் சொத்தாகும் பேறினைப் பெற்றவை. இந்த வருட விகடன் தீபாவளி மலரில் சில்பியும், 'கொண்டையராஜு' சுப்பையாவும் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். வழவழ பேப்பரில் செம்பதிப்பாய்க் காட்சி தந்த 2006 விகடன் தீபாவளி மலரைக் கண்டதுமே முழுமையாகப் படித்துவிட வேண்டும் என்ற ஆவல் உண்டானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அப்படிப் படித்த போது, 'சுவடுகள் பகுதியில் 'புதைந்து கிடக்கும் வரலாறு' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையைப் பார்க்க நேரிட்டது. கட்டுரையைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

பல லட்சம் வாசகர்களைக் கொண்ட விகடன் பிரசுரித்த கட்டுரையைப் படிப்பவர்களை நினைத்தும், அவர்கள் குடும்பத்துப் பரம்பரைச் சொத்தில் சேர்ந்துவிடப் போகும் தீபாவளி மலரைப் படிக்கப் போகும் நாளைய சந்ததியினரை நினைத்தும் கவலை கொள்ள நேரிட்டது. 'ஓட்டை தோப்பில்' பாதி புதைந்திருக்கும் சிவலிங்கத்தை மாமன்னன் இராஜராஜனின் பள்ளிப்படையாகக் கருதி, அக்கருத்துக்கு வலுச்சேர்க்க வேண்டிய கட்டாயத்தால், பல உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் தாங்கி நிற்கிறது கட்டுரை. கட்டுரை கூறும் களத்திற்குச் சென்று, அங்கு கிடைக்கும் தூண் கல்வெட்டுக்கும், மாமன்னன் இராஜராஜ சோழரின் பள்ளிப்படைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தவன் என்ற வகையில், கட்டுரையில் இருக்கும் தகவல் பிழைகளையும், அத்தகவல்களைத் தாங்குதளமாகக் கொண்டு எழுப்பப்படும் கருத்துகளில் உள்ள பிழைகளையும் எடுத்துச் சொல்வது கடைமையாகிறது.

மாமன்னன் இராஜராஜனின் கல்லறை இருக்கும் இடமாக உடையாளூரை அடையாளம் காட்ட, பால்குளத்தி அம்மன் கோயிலில் காணக் கிடைக்கும் உருளைத் தூண் கல்வெட்டையே ஆதாரமாகத் தருகிறார் ஓவியர் இராஜராஜன். அத் தூண்களைப் பற்றி எழுதும் போது, "1946களில் இந்த சமாதியை ஒட்டிக் கிடந்த இரண்டு உருளை கருங்கல் தூண்கள் உள்ளூர்வாசிகளால் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள உடையாளூர் பெருமாள் கோயிலில் எதற்கோ முட்டுக்கொடுக்கக் கொண்டு சென்று நிறுத்தப்பட்டு, இயலாமல் போனதில் வீதியில் கிடத்தப்பட்டது", என்கிறார் ஓவியர் ராஜராஜன். இக் கூற்றில் கொஞ்சம் கூட உண்மையில்லை. 1927-இல் இவர் கூறும் தூண் கல்வெட்டைப் படியெடுத்த தொல்லியில் அளவீட்டுத் துறை, தனது ஆண்டு அறிக்கையில், இத்தூண்கள் உடையாளூர் பெருமாள் கோயிலில் இருந்ததாகவே குறிக்கிறது. 1927-லேயே பெருமாள் கோயிலில் காணப்பட்ட கல்வெட்டை, 1946-இல் பெருமாள் கோயிலில் முட்டுக் கொடுக்க கொண்டு சென்றதாகக் கூறி, தன் கருத்துக்கு முட்டுக் கொடுக்கிறார் கட்டுரையாளர். இவர் கூறும் கல்வெட்டு இராஜராஜரின் பள்ளிப்படையை நமக்கு அடையாளம் காட்டுமெனில், இந்த ஆண்டு குழப்பங்களையெல்லாம் மன்னித்துவிடலாம்.

இக் கல்வெட்டு கூறும் செய்திதான் என்ன? கல்வெட்டுச் செய்தி இதுதான் என்று எழுதினால், அது கல்வெட்டைப் படித்து எனக்குத் தோன்றிய எண்ணங்களோ என்று தோன்றலாம். அதனால், கல்வெட்டு வரிகளையே அளிக்கிறேன். இக்கல்வெட்டுக்கும் இராஜராஜரின் பள்ளிப்படைக்கும் தொடர்பேதும் உண்டா என்று கல்வெட்டு வரிகளைப் படிப்பவர்கள் உணர்ந்துவிடுவர்.

1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு
2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப
3 த்திரண்டாவது ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்து
4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ
5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
6 பெரிய திருமண்டப முன்(பி¦)லடுப்பு ஜீர்
7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா
9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா
11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா
12 த்தமங்கலத்து சாத்தமங்கலமுடை
13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ
14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ
15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு
16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ
17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்

மேற்குறிப்பிட்டுள்ள முதற் குலோத்துங்க சோழரின் 42-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வரலாற்றுத் துறையில் ஈடுபாடுள்ளோருக்குப் பரிச்சயமான ஒன்றுதான். பல வருடங்களுக்கு முன், இக் கல்வெட்டை ராஜராஜரின் பள்ளிப்படையோடு இணைத்து எழுந்த கருத்துகளைத் தவறென்று டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய ஆய்வர்கள் கூறியுள்ளனர். 2004-இல் இப்பள்ளிப்படைச் செய்தி தினமலர், தினதந்தி முதலிய நாளிதழ்களில் மீண்டும் தலைகாட்டியது. அதனால், எனது நண்பர் திரு.ச.கமலக்கண்ணனும் நானும் மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தைத் தொடர்பு கொண்டு, அம்மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.கலைக்கோவனுடனும், ஆய்வர்கள் முனைவர் நளினியுடனும், இரா.இலலிதாம்பாளுடனும் கள ஆய்விற்குச் சென்றோம். அக்கள ஆய்வில் கண்டு தெளிந்த உண்மைகளையே, சில மாதங்கள் கழித்து வரலாற்றுக்காக ஒரு மாத மின்னிதழ் (www.varalaaru.com) தொடங்கிய போது 'உடையாளூரில் பள்ளிப்படையா?', என்ற தலைப்பில் கட்டுரையாக்கினார் முனைவர் கலைக்கோவன்.

கல்வெட்டைப் படிப்பவர்கள், இராஜராஜரான சிவபாதசேகரரின் பெயரில் ஒரு மண்டபம் இருந்ததையும், அம்மண்டபத்தின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதடைந்ததால் (ஜீர்ந்நித்தமையில்) பிடவூர் வேளான் அரிகேசவனான கச்சிராஜன் திருப்பணி செய்து வைத்தார், என்ற செய்தியையும் உணர்ந்திடுவர். கல்வெட்டின் எந்த வரியிலும் பள்ளிப்படை என்ற சொல்லாட்சியோ, இராஜராஜரின் மரணத்தைப் பற்றிய குறிப்போ இல்லை. "1986-இல் குடந்தை சேதுராமன் அவர்களால் இக் கல்வெட்டு இனம் காணப்பட்டது", என்று கூறும் ஓவியர் ராஜராஜன், அதன் பின் அக் கல்வெட்டைப் பற்றி வந்த செய்திகளைப் படிக்கவில்லை போலும். பதினேழு வரி கல்வெட்டை "7 வரி கல்வெட்டு" என்று அவர் எழுதியிருப்பதை நோக்கினாலே, "இக்கல்வெட்டின் மூலமாகவே சோழ மாமன்னனின் பள்ளிப்படை வீடு குறித்த செய்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது", என்ற அவர் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்க முடியும் என்று உணரலாம்.

இல்லாத பள்ளிப்படையை அடையாளம் கண்டுவிட்ட கட்டுரையாளர், இன்று அப்பள்ளிப்படை இல்லாமல் போனதற்கும் சுவாரசியமான கதைகள் கூறுகிறார். பழையாறையின் இன்றைய அடையாளமாக 'இடிந்து சரிந்த பழைமை மாறாத கோயில்களைக்' கூறும் திரு.ராஜராஜன், மாமன்னன் இராஜராஜரின் பள்ளிப்படைக் கோயிலில் மட்டும் எந்த 'இடிந்து சரிந்த கட்டுமானத்தையும்' காணாதது விந்தை. அப்படி காணமுடியாமல் போனதற்கான பழியை, பாவம்! மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலையில் போட்டிருக்கிறார். (கொட்டை எழுத்தில், ரத்த நிறத்தில் "பாண்டியர்" என்று build-up வேறு கொடுத்திருப்பது பெரும் கொடுமை.) 'சோழ வம்சத்தின் வேதபுரி' என்று கட்டுரையாளர் வர்ணிக்கும் பழையாறையிலேயே, இன்றும் காணக் கூடிய வகையில் ஒரு பள்ளிப்படை கோயில் இருப்பதை அவர் அறிந்திலர் போலும். மாமன்னர் இராஜேந்திரரால் அவரது சிற்றன்னைக்காக எழுப்பப்பட்ட பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை பழையாறையில்தான் இருக்கிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியன், "பழையாறை நகரை இடித்துத் தரைமட்டமாக்கி எரித்து முடித்தான். இப்படையெடுப்பின் மூலம் பழையாறை நகரத்து எல்லையில் இருந்த முதலாம் இராசராசனின் பள்ளிப்படை கோயிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும்." என்று கட்டுரையாளர் சொல்வது உண்மையெனில், பழையாறையில் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையுட்பட, பல சோழர்காலக் கோயில்கள் இன்றும் நம்மிடையில் இருப்பது எங்கனம்? கங்கை கொண்ட சோழபுரம் வரை சென்று, சோழ தேசத்தை சூறையாடிய சுந்தர பாண்டியன், கோயில்களுக்கு எந்தச் சேதமும் விளைவிக்கவில்லை. கோயில்களைச் சிதைப்பது தமிழர் மரபன்று. தன் கருத்தை நிலை நாட்ட, பாண்டிய மன்னனை இவ்வளவு குறுகிய மனம் படைத்தவனாகச் கட்டுரையாளர் சித்தரித்திருக்க வேண்டாம்.

பள்ளிப்படை குளறுபடிகளைத் தவிர, இராஜராஜரைப் பற்றி கொடுத்திருக்கும் தகவல்களிலும், சோழர் வரலாற்றைக் குறிக்கும் தகவல்களிலும் பிழைகள் மலிந்திருக்கின்றன. "இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா" போன்றவற்றையெல்லாம் இராஜராஜன் பத்தாம் நூற்றாண்டில் ஒரே குடையின் கீழ் ஆண்டதாகக் கூறுயிருப்பது முற்றிலும் தவறு. இவை, இராஜேந்திரரின் காலத்தில் பதினொன்றாம் நூற்றாண்டிலேதான் சோழர் படையெடுப்புக்கு உட்பட்டன. "கி.பி 1004-ம் ஆண்டு தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் திருப்பணிகளை ராசராசன் மிகவும் திட்டமிட்டு ஆறே ஆண்டுகளில் கட்டுமான பணியை முடித்தான்", என்று கூறுபவரே அதற்கு முரணாக, "இன்றும் 21 நாட்டிய கரண சிற்பங்கள் பூர்த்தி ஆகாமல் உள்ளன", என்றும் கூறுகிறார். கட்டுரையாளர், தஞ்சை பெரிய கோயில் விமானத்தின் சாந்தார நாழியில் (இதை கோபுரத்தின் உட்பிரகாரம் என்கிறது கட்டுரை. கோபுரம் என்பது நுழை வாயில். 216 அடி உயரத்திற்கு ஓங்கி நிற்கும் கட்டிடம் விமானம்) அமைந்திருக்கும் நாட்டியக் கரணச் சிற்பங்களை ஆழ்ந்து நோக்கியிருப்பின், பூர்த்தியாகாதவை 27 சிற்பங்கள் என்று உணர்ந்திருப்பார். அத்துடன், இன்னும் பல இடங்களிலும் அக் கோயில் பூர்த்தியாகாததையும் உணர்ந்திருப்பார். "தஞ்சை பெரிய கோயில் திருப்பணிகள் நிறைவுறும் சமயம் ஏதோ காரணமாக ராசராசன் தஞ்சையை விட்டு வெளியேற முடிவெடுத்தான்", என்ற கருத்தை நிறுவ எந்த ஆதாரங்களையும் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.

திருவலஞ்சுழி, அப்பரும் சம்பந்தரும் மகிழ்ந்து பாடிய புண்ணிய பூமி. அங்கிருக்கும் சடைமுடிநாதர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அனைத்துக் கோயில்களையும், மா.இராசமாணிக்கனார் ஆய்வு மையம் முழுமையாக ஆய்வு செய்தபோது, பல கள ஆய்வுகளில் கலந்து கொள்ளும் பேறு எனக்குக் கிடைத்தது. அதனால், திருவலஞ்சுழியைப் பற்றி நன்றாக அறிவேன். "திருவலஞ்சுழியில் 6-1-1015-ல் தனது தந்தையாரின் முதல் திவசத்தை ராஜேந்திரசோழன் நடத்தினான்", என்று பக்கத்திலிருந்து பார்த்தது போல கட்டுரையாளர் எழுதியிருப்பது வருத்தத்துக்குரியது. இராஜேந்திரரின் மூன்றாவது ஆட்சியாண்டில் 'தில பர்வதம் புக்கருளின' என்ற சொல்லாட்சி வரும் கல்வெட்டின் அருகிலேயே இருக்கும் இன்னொரு க்ஷேத்திரபாலர் கோயில் கல்வெட்டு, அதே ஆண்டில் இராஜராஜரும் ஆட்சியில் இருந்ததை (29-ஆம் ஆட்சியாண்டு) தெரிவிக்கறது. இதனால் 'தில பர்வதம் புக்கருளின' என்பதற்கான பொருள் 'திவசம் ஆகாது என்பது உறுதியாகிறது. உயிரோடு இருந்தவரைப் பிணமாக்கிய புண்ணிய காரியத்தைச் செய்திருக்கும் கட்டுரையாளர், "எட்டு பூக்களிட்டு பிண்டமளித்து கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி வழிபட்டுள்ள செய்தி திருவலஞ்சுழி கல்வெட்டில் உள்ளது", என்று கூறியிருப்பது அப்பட்டம்மான பொய்.

பக்கிரிசாமி படையாச்சியாரின் நிலத்தில் இருக்கும் இலிங்கத்திற்கு அருகில் எந்தவித கோயில் கட்டுமானமும் கிடைக்காத நிலையில், "ராஜேந்திரசோழன் தனது தந்தையை உடையாளூர் அருகே நல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிறந்த பள்ளிப்படை கோயிலை உருவாக்கினான்", என்று எப்படிக் கூறுகிறார்? பால்குளத்தி அம்மன் கோயில் கல்வெட்டு சுட்டுவது முதலாம் இராஜராஜரின் பள்ளிப்படை எனக் கொள்ளின், பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் தன் சிற்றன்னைக்குப் பள்ளிப்படை கட்டிய இராஜேந்திரர், "இருந்த சுவடு தெரியாமல்" அழியும் வகையிலா தன் தந்தையாருக்கு பள்ளிப்படை அமைத்திருப்பார்?

வரலாற்றாய்வில் பல ஆண்டுகளாய் ஈடுபட்டு வரும் முனைவர் கலைக்கோவன், "பல ஊர்களில் பரவலாகக் கிடைக்கும் கைவிடப்பட்ட லிங்கத் திருமேனி போல்தான் பக்கிரிசாமி படையாச்சியாரின் நிலத்தில் இருக்கும் லிங்கமும் இருந்தது", என்கிறார். "ஜீவசமாதிக்கும், பள்ளிப்படை கோயிலுக்கும் சதுர பீடமே பயன்படுத்தப்படும்", என்பதெல்லாம் கட்டுக் கதையே அன்றி வேறொன்றுமில்லை. இன்று வழிபாட்டில் இருக்கும் பள்ளிப்படையல்லாத பல கோயில்களில் உள்ள லிங்கங்கள் சதுர பீடத்துடன் காணப்படுகின்றன. (உதாரணம் நாலூர் மாடக் கோயில்). பள்ளிப்படை கோயில்கள் என்று கல்வெட்டுகள் சுட்டும் கோயில்களை நோக்கின், அங்கிருக்கும் லிங்கங்கள் எல்லாமே சதுர பீடத்துடன் அமையாதிருப்பதை உணரலாம்.

இராஜராஜரின் பெருமையை எடுத்துக் காட்ட வேண்டுமெனில், 'இராஜராஜன் திருநாள்' என்று அவன் இருந்த காலத்திலேயே கொண்டாடப் பட்ட "ஆவணி சதயம்" நாளைப் பற்றி உலகுக்குச் சொல்லலாம். 'புதைந்து கிடக்கும் வரலாற்றினை' வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டுமெனில், உத்திரமேரூர் கைலாசநாதர் கோயில், ஆறை வடதளி போன்ற வரலாற்றுச் சின்னங்கள் இன்றிருக்கும் சூழலைப் பற்றி எழுதலாம். அதை விடுத்து, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறுவது, கல்வெட்டுகள் கூறுவது போல 'கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம்' போன்றது. அதிலும் லட்சக் கணக்கான வாசகர்களைக் கொண்ட விகடன் பிரசுர வெளியீடாய் இப்படிப்பட்ட வதந்திகள் பரவினால், இன்று எவ்வளவுதான் முயன்றாலும் "தஞ்சை பெரிய கோயில் விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது அல்ல" என்ற உண்மையை மக்கள் ஏற்க மறுப்பது போல, நாளை பல வதந்திகள் உண்மைகளாகிவிடும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.