மா.இராசமாணிக்கனாரின் 'பல்லவர் வரலாறு' - ஒரு பார்வை
சென்ற தலைமுறையானது, வரலாற்றாய்வுத் துறையில் ஆழ்ந்து பல அரிய முத்துக்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கும் முனைவர் கலைக்கோவனை மா.இராசமாணிக்கனாரின் மகனாக அடையாளம் கண்டிருக்கும். மா.இராசமாணிக்கனாரே வரலாற்றில் கலந்து பல ஆண்டுகளான பின், அவர் பெயரால் ஒரு வரலாற்று ஆய்வு மையம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகளான பின், வரலாற்றாய்வின்பால் இழுக்கப்பட்ட தலைமுறையினனான எனக்கு மா.இராசமாணிக்கனார் என்ற அறிஞரை, முனைவர் கலைக்கோவனின் தந்தையாகத்தான் முதன் முதலில் அடையாளம் காண முடிந்தது. வரலாறு.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் கமலக்கண்ணனின் வாயிலாக, எங்கள் குழுவிற்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் கலைக்கோவனுக்கும் ஏற்பட்ட முதலாம் சந்திப்பைப் பற்றிப் பலமுறை கேள்வியுற்றிருக்கிறேன். (அச்சமயத்தில் நான் இந்தியத் துணைக்கண்டத்திற்குப் பல காத தூரம் தொலைவான இடத்தில் தீஸிஸ் எழுதுகிறேன் பேர்வழி என்று ஜல்லி அடித்துக்கொண்டிருந்ததால், அச்சந்திப்பைக் காதால் கேட்டு இன்புறும் பேறே கிட்டியது.) அச்சந்திப்பில், முனைவர் கலைக்கோவனை அறிமுகப்படுத்தியவர், அவரைப் "புலிக்குப் பிறந்த புலி" என்று விளித்ததாகக் கமலக்கண்ணன் கூறிய போதுதான் மா.இராசமாணிக்கனார் என்ற பெயரை முதன் முதலில் கேட்க நேர்ந்தது.
அதன் பின், முனைவர் கலைக்கோவனிடம் பழகக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், இராஜராஜனைப் பற்றியும், தஞ்சாவூரைப் பற்றியும், மகேந்திரனைப் பற்றியும், கைலாசநாதர் கோயிலைப் பற்றியும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளைப் பற்றியும், நெஞ்சைக் கனமாக்கும் செய்திகளைப் (கோயில்களின் நிலை, வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்வு, இத்துறையில் மலிந்து கிடக்கும் தவறான தகவல்கள் போன்றவற்றை இச்செய்திகளுள் அடக்கலாம்) பற்றியும், அவருக்கே உரிய நகைச்சுவையுணர்வுடன் அவர் விவரிப்பதைக் கேட்டபடி கழிந்தன.
முதலில் சற்றே தயங்கித் தயங்கி அவரைச் சந்திக்க நேரம் கேட்டுச் சந்தித்தும், தொலைபேசியில் பேசியும் அவரிடம் பழக நேர்ந்தாலும், விரைவிலேயே வாரத்துக்குப் பலமுறை தொலைபேசியும், மாதத்துக்கு இருமுறை சந்தித்தும் அவருடன் பழகக் கிடைத்த வாய்ப்புகள் எங்கள் குழுவிற்குக் கிடைத்த பெரும் பேறென்றே சொல்ல வேண்டும். கேள்விகளை வரவேற்பவர், அடுத்தவர் கருத்துக்களை முனைந்து கேட்பவர், வரலாற்றின்பால் எங்களுக்கிருந்த ஆர்வம் உபயோகமான வழியில் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்று எங்களுக்கு முனைவர் கலைக்கோவனின் மேல் எழுந்த எண்ணங்கள், எங்களை அவர்பால் இழுத்தன. பல சமயங்களில் அவரை ஆசனாகவே நோக்கி வரலாற்றைப் பற்றிக் கதைத்தாலும், நாளடைவில் அவரை ஒரு நண்பராகவும் காண முடிந்தது. எங்கள் உறவு வரலாற்றினால் பலப்பட்டாலும், சமயத்தில் வரலாறு சம்பந்தமாகச் சந்தேகம் இல்லாதபோதும் தொலைபேசி நலம் விசாரிக்கும் உரிமையையும், "திருச்சி வரோம் சார். கிளினிக்கில் வந்து சந்திக்கிறோம், ஊர்லதானே இருப்பீங்க?" என்று அவர் அனுமதி இன்றி நாங்களே முடிவெடுத்து, அவரின் வீட்டின் கதவையும் கிளினிக்கின் கதவையும் தட்டும் உரிமையையும் கொடுத்தது. அப்படி ஒருமுறை அவருடைய கிளினிக்கில் சந்தித்த பொழுது, "இப்பொழுது என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். வழக்கம் போல நான்கைந்து விஷயங்களைச் சொல்லி எங்களை மலைப்பில் ஆழ்த்தினார். மா.இராசமாணிக்கனாரைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதையும் அவ்வேலைகளுள் ஒன்றாகச் சொன்னார்.
மா.இராசமாணிக்கனார் என்ற பெயரைக் கேள்விப்பட்டுப் பல மாதங்களான பின், கமலக்கண்ணன் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற மா.இராசமாணிக்கனாரின் புத்தகத்தை ரொம்பவே மெனக்கெட்டுத் தருவித்ததைக் கண்டு பல மாதங்கள் ஆனபின், வரலாறு.காம்-இன் இரண்டாம் இதழில் "கோச்செங்கணான் காலம்" என்ற மா.இராசமாணிக்கனாரின் கட்டுரையைப் படித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆனபின், வரலாறு ஆய்விதழ் ஒன்றில் "பெருமைச் சுவடுகள்" என்ற பகுதியில் மா.இராசமாணிக்கனாரைப் பற்றிப் படித்துப் பல மாதங்களான பின், முதன் முதலாக அவ்வறிஞரின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. "பெரிய புராண ஆராய்ச்சி", "பத்துப்பாட்டு ஆராய்ச்சி", "பல்லவர் வரலாறு", "சைவ சமய வளர்ச்சி" போன்ற அவரின் பிரபலமான நூல்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்தேன். இப்புத்தகங்களில் கிடைத்ததை வாங்கவும், கிடைக்காததை நகல் எடுக்கவும் செய்தேன். அச்சமயத்தில், மகேந்திரனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான "சங்கீர்ண ஜாதி" என்னைப் பல நூல்களையும், கட்டுரைகளையும் தேட வைத்தது. இந்த விஷயத்தில் மா.இராசமாணிக்கனாரின் கருத்து என்ன என்பதைக் காண அவரது பல்லவர் வரலாறு என்ற புத்தகத்தைப் புரட்டினேன்.
சோழர்களினால் வரலாற்றின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், முனைவர் கலைக்கோவனுடனும், முனைவர் நளினியுடனும் காஞ்சியையும் மாமல்லபுரத்தையும் காணும் பேறு கிடைத்திருந்ததால், என் மேல் சோழர்கள் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைப் போலவே பல்லவர்களும் ஏற்படுத்தியிருந்தனர். புத்தகத்தை எடுத்ததுதான் எடுத்தோம், ஒருமுறை ஆழ்ந்து படித்துவிடுவோம் என்று படிக்க ஆரம்பித்தேன். பல்லவர் வரலாற்றினைப் பற்றி முழுமையான ஒரு கண்ணோட்டத்தைக் கூறும் தமிழ் நூல்களுள் முதன்மை நூலாக இன்றளவும் விளங்கும் நூல் 'பல்லவர் வரலாறு'. இந்நூல் செய்யப்பட்டிருக்கும் விதத்தை ஊன்றி நோக்கும் பொழுது, இராசமாணிக்கனாரின் உழைப்பைப் பற்றியும், அவரின் ஆய்வு முறைகள், கருத்துகளை நிறுவும் வகைகள் போன்றவற்றைக் கட்டியம் கூறும் தரவுகளும் அந்நூலில் அடங்கியிருப்பதையும் உணர முடியும். இந்நூலினைப் படித்த பொழுது எனக்கெழுந்த கருத்துகள் பின் வருமாறு:
நூலின் முகவுரையில், "பல்லவரைப் பற்றிய ஆராய்சி நூல்கள் பலவும், ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் தமிழில் எழுதப்படவில்லை. காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வெளிப்படுத்தினார்கள். அவ்வரலாற்று நூற்குப் பின் வெளிப் போந்த ஆராய்ச்சி நூல்கள் பல; கிடைத்த கல்வெட்டு செய்திகள் பல. மேலும், அவ் வரலாற்று நூல் இன்று கிடைக்குமாறில்லை. வித்துவான் தேர்விற்கு அது பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நூலின்றி மாணவர் இடர்படுகின்றனர். இக்குறைகள் அனைத்தையும் உளங்கொண்டு இந்நூல் எழுதப் பெற்றதாகும்.", என்று நூலின் நோக்கை வெளிப்படுத்துகிறார். இவர் குறிப்பிடும் பேராசிரியர் "பி.டி.சீனிவாச ஐயங்காராக" இருக்கலாம். அவரது நூலில் "நூலாசிரியர் பலர்" என்ற தலைப்பில் கொடுத்திருக்கும் பட்டியலை நோக்கும் போது, இந்நூலுக்கு முன் பல்லவரைப் பற்றித் தமிழில் இருந்த ஒரே நூல் பி.டி.சீனிவாச ஐயங்காரின் பல்லவர் சரித்திரம்தான் என்பது தெளிவாகிறது. அந்நூலுக்குப் பின் கிடைத்த தரவுகளை மனதில் கொண்டு, வித்துவான் தேர்வெழுதுவோரையும் மனதில் கொண்டு, தெளிவாகவும் எளிமையாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. 1944-இல் தொடங்கி இன்றளவும், வரலாற்று மாணவர்கள் விரும்பிப் படிக்கும் நூலாக இந்நூல் விளங்குவதே இதன் பெருமையை விளக்குகிறது.
கி.பி. 250-இல் தொடங்கி கி.பி.900 வரை பரவியிருந்த பல்லவர் ஆட்சியே நூலின் முதன்மை நோக்கெனினும், படிப்பவரின் மனதில் அக்காலத் தமிழகத்தைப் பற்றிய முழுமையானதொரு பிம்பம் எழவேண்டி, அக்காலத்துக்கு முன் இருந்த தமிழகத்தைப் பற்றிய படப்பிடிப்பு 'சங்க காலம்' தொட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் இருந்த மூவேந்தரைப் பற்றியும், அக்கால வேந்தர்களுள் முதன்மையானவர்களைப் பற்றியும் சுருக்கமாக வரையப்பட்டிருப்பினும், அவற்றை எழுத எடுத்துக் கொண்டிருக்கும் முனைப்பைக் காண, செங்குட்டுவன் காலத்தை நிறுவ அவர் கொடுக்கும் தரவுகளும், சில பக்கங்களே பெறும் அப்பகுதிக்கு அடிக்குறிப்பாகக் கிட்டத்தட்ட 15 புத்தகங்களிலிருந்து இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குறிப்புக்களைக் கொடுத்திருப்பதையும் கண்டாலே போதுமானது. இப்பகுதியில் 'கோச்செங்கட்சோழன்' என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் விஷயங்கள், இராசமாணிக்கனார் என்ற மனிதரின் மனதைப் படம்பிடிக்கும் தரவாக அமைந்திருக்கிறது! கோச்செங்கட்சோழனை ஐந்தாம் நூற்றாண்டினனாக முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே என்பது அனைவரும் அறிந்ததே. கோச்செங்கணான் கால ஆராய்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 'பல்லவர் வரலாறு' நூலில் கோச்செங்கணானை 'கி.மு 60-ஆம் ஆண்டிற்கும் கி.பி 250-ஆம் ஆண்டிற்கும்' இடைப்பட்டவனாகக் கொள்கிறார். (கி.பி 2000-ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்த புண்ணியவான்கள் கி.பி-ஐ கி.மு-வாக அச்சிட்டிருக்கிறார்கள்.). இன்று நாம் காணும் சக மனிதர்களிலும் சரி, அறிஞர் பெருமக்களிலும் சரி, தான் ஒரு காலத்தில் கூறிய கருத்து தவறென்று உணர நேர்ந்தாலும், முன் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே தன் பழைய கருத்துக்கு வலிந்து சென்று, இல்லாத சான்றுகளை உருவாக்கும் சூட்சுமம் கொண்டோர் பலரைத்தான் காண முடிகிறது. கோச்செங்கணானை முதலில் சங்க காலத்தவனாகக் கொண்டிருப்பினும், பிற்காலத்தில் அக்கருத்து மாறும் வகையில் சான்றுகள் கிடைத்த பொழுது தயங்காமல் தன் கருத்தை மாற்றிக் கொள்ளும் அப்பெருந்தகையின் திறந்த உள்ளம் தெளிவாகத் தெரிகிறது.
நூலின் அனைத்துப் பகுதிகளிலும் இராசமாணிக்கனாரின் ஆழ்ந்த இலக்கிய பின்புலம் தெளிவாகத் தெரிகிறது. பல குழப்பமான காலகட்டங்களை, ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான செய்திகளைக் கூறும் பட்டயங்களை ஒப்பு நோக்கி, அன்று அவருக்கு இருந்த சான்றுகளைக் கொண்டு தொகுத்திருக்கும் முடிவுகள், பல சமயங்களில் தெளிவாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, 'பல்லவர் யாவர்' என்ற தலைப்பில், பல்லவரின் பின்புலத்தைப் பற்றி இருந்த கருத்துக்களை எல்லாம் தொகுத்து, அவற்றுள் எவை சரியாக பொருந்துகிறதென்பதை அலசி, பல்லவர்கள் தமிழரசர் அல்லர், தொண்டை மண்டலத்திற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று நிறுவியிருக்கும் விதம் இரசிக்கத்தக்க வகையிலும், தெளிவுடனும் அமைந்துள்ளது. இன்றளவும் 'இருண்ட காலம்' என்று அழைக்கப்படும் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை இருந்த முற்கால மற்றும் இடைக்காலப் பல்லவர்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நூலின் ஐந்தாவது மற்றும் ஆறாவது தொகுதியில் குறிக்கிறார். நூலின் அனைத்துப் பகுதிகளிலும், அக்காலகட்டத்தில் அண்டை நாட்டிலிருந்த அரசர்களைப் பற்றியும், அவருள் நடந்த போர்களைப் பற்றியும் கூறியிருப்பதிலிருந்து பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களைப் பற்றி மட்டுமல்லாது, அக்கால தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த நிலையையும், குறைந்த பட்சம் பறவைப் பார்வையிலாவது காண வழி வகுக்கிறது.
'பல்லவர் யாவர்' என்ற பகுதியில் 'பல்லவர் பாரசீகத்தினின்று வந்தவர்' போன்ற கருத்துகளைக் கடுமையாக எதிர்த்து எழுதும் ஆசிரியர், அதன் பின் வரும் தொகுதிகள் பலவற்றின் தொடக்கத்தில், அத்தொகுதி தொடர்பான மற்றோரின் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து, பல சமயங்களில், தனது நிலைப்பாட்டிற்கு மாறான கருத்தை மறுக்காமலிருப்பதிலிருந்து, அச்சமயத்தில் கிடைத்த தரவுகளின் அளவும், அவற்றால் ஆணித் தரமான முடிவுகளுக்கு வர இயலாத நிலைமையும் தெளிவாகிறது. தனது முடிவுகளைத் தொகுத்து இறுதியில் கூறியிருந்த போதும், மாற்றுக் கருத்திலும் சில உண்மைகள் இருக்கக் கூடும் என்று கருதியதால், அதையும் தொகுதியின் முற்பகுதியில் அளித்திருக்கலாம். உதாரணமாக, சீயமங்கலம் குடைவரையைப் புத்தகத்தின் எட்டாவது தொகுதியில் 'சிம்ம விஷ்ணுவின் கலத்ததாக இருக்கலாம்' என்று Prof. Dubrell-இன் கருத்தைக் கூறி அடுத்த தொகுதியில் மகேந்திரன் காலத்தில் அமைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். 'லளிதாங்குரன் என்னும் காவலனால் குடையப்பட்டது' என்று கல்வெட்டு கூறுவதாக நமக்கு சீயமங்கலத்தை அறிமுகப்படுத்தி, அத் தொகுதியில் வேறொரு இடத்தில் மகேந்திரனின் பட்டப் பெயர்களுள் ஒன்றாக 'லளிதாங்குரனையும்' குறிப்பிட்டிருக்கும் ஆசிரியரின் நிலைப்பாடு நமக்கு விளங்கினும், Prof. Dubrell-இன் கருத்தை மறுக்க ஏனோ தயங்கியிருக்கிறார். குடைவரைகளையும், கட்டுமானக் கோயில்களையும், ஒற்றைக் கல் தளிகளையும் யார் அமைத்தவர் என்று அடையாளப்படுத்தும் இடங்கள் பலவற்றில் ஆசிரியரின் இத்தயக்கம் தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், சரியான செய்தி என்று இன்றளவில் ஏற்றுக் கொள்ளப்படும் செய்திகளைக் கூறும் இடங்களில் அடிக்குறிப்பு இல்லாதிருக்கின்றது. இத்தரவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது தவறான கருத்து எனத் தென்படும் விஷயங்களைக் குறிப்பிடும் பல இடங்களில் வேறொருவரின் புத்தகத்தையோ அல்லது கருத்தையோ குறிக்கும் அடிக்குறிப்பு தென்படுகிறது. தான் சுயமாக கூறிய கருத்துக்கள் பெரும்பாலும் சரியாக இருக்கும் நிலையில், மெனக்கெட்டு Longhurst, Heras, Durbruell போன்றோரின் கருத்துக்களைத் தொகுத்திருக்க வேண்டாமோ என்று கூடத் தோன்றுகிறது.
பல இடங்களில் தெளிவாக விளக்கமளிக்கும் ஆசிரியர், சில இடங்களில் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று முரணான செய்திகளைக் கூறுவதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக மகேந்திரனே 'தருமராச ரதத்தை' செய்வித்தான் என்று உறுதியாகக் கூறி, அடுத்த தொகுதியிலேயே மகேந்திரன் தொடங்கிய வேலையை நரசிம்மன் முடித்தாகக் கூறுகிறார், அதற்கடுத்த தொகுதியில் பரமேசுவரவர்மன் 'தர்மராச ரதத்தின் மூன்றாம் அடுக்கை முடித்தான்' என்றும் கூறுகிறார். அன்றைய நிலையில் வெறும் கல்வெட்டுத் தரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு 'இன்னார்தான் செய்தது' என்று கூற முடியாத குழப்பத்தை நாம் உணர முடிந்தாலும், மாணவர்கள் தொடர்ந்து படிக்கும் நூலாக விளங்குவதால், சரித்திரத் தேர்ச்சியில் முதல்நிலை மாணவர்களாக விளங்குபவருக்குக் குழப்பத்தை உண்டாக்குமே என்ற கவலையும் எழுகிறது. நூல் வந்த பின் அறுபத்திரண்டு ஆண்டுகள் ஓடிவிட்ட காலத்தில், எத்தனையோ சான்றுகள் பல அறிஞர்களால் வெளிக் கொணரப்பட்ட நிலையில் கூட, 'இது முற்றிலும் சரி', 'இது முற்றிலும் தவறு', என்று முழுமையாகக் கூற முடியாத நிலையில் இருக்கிறோம். முனைவர் கலைக்கோவனின் கருத்துப்படி, இராசமாணிக்கனாருக்குக் கடைசியாகக் கிடைத்த கல்வெட்டறிக்கை 1933 ஆண்டினுடையது. அச்சமயத்தில் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையைப் பற்றிய தெளிவான அறிவும் இருந்திருக்கவில்லை. குறுகிய சான்றுகளை வைத்து மட்டும் கருத்துக்களை கூறும் போது, பலவிதமான குழப்பங்கள் எழுவது நியாயமே. ஆசிரியரின் குழப்பத்திற்கான காரணத்தை உணர முடிந்தாலும், இன்று பல கருத்துகளைத் திண்ணமாக நிறுவும் நிலையில் நாம் இருக்கும்போதும், அக்கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் நம்மிடையில் இல்லாதது நினைத்து வருத்தமே எழுகிறது.
கட்டிடக் கலையைப் பொறுத்த மட்டில், புத்தகத்தில் விமானம் கும்பமெனக் குறிக்கப்பட்டு, விமானத்தின் உறுப்புகளை அடையாளம் காண்பதில் சற்றே குழப்பம் தெரிகிறது. அந்த காலகட்டத்தில், கட்டிடக் கலையைப் பற்றி அறிய ஐரோப்பியர்கள் எழுதிய புத்தகங்களே இருந்தன. அப்புத்தகங்களும் மிகக் குழப்பம் தரக் கூடியனவாக இருந்ததால், இராசமாணிக்கனாருக்கு இருந்த குழப்பத்தில் வியப்பொன்றுமில்லை. இருப்பினும் காஞ்சி கைலாசநாதர் கோயிலே பிற்காலத்தில் இராஜராஜீஸ்வரம் அமைய அடிப்படையாய் அமைந்தது என்னும் உண்மையை உணரும் அளவிற்கு அவரது கட்டிடக்கலையறிவு இருந்தது தெளிவாகிறது. பிற்காலப் பல்லவரை, மகேந்திரனில் தொடங்கி, நரசிம்மன், பரமேசுவரவர்மன், இராசசிம்மன், இரண்டாம் நந்திவர்மன், தந்திவர்மன் (பொருளடக்கத்தில் இவரை நந்திவர்மனாக்கியிருக்கிறார்கள்), மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கவர்மன் என்று ஒவ்வொருவராக நமக்கு அறிமுகப்படுத்தி, அவர் ஆட்சியில் நடந்த போர்கள், சமய நிலை, கலைகளின் நிலை ஆகியவற்றை சுருக்கமாகக் கூறியபின், பல்லவரின் ஆட்சி முறையையும், அக்கால சமய நிலையையும், இசை, ஓவியம், சிற்பம், நடனம் போன்ற நுண்கலைகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் விரிவாக எழுதுகிறார்.
அக்கால நாட்டுப் பிரிவு, வரிகள், மரங்கள், மருந்துச் செடிகள், நீர்ப்பாசன வசதிகள், நீட்டல், முகத்தல் மற்றும் நிறுத்தல் அளவைகள், காசுகள், அக்காலத்தில் நிலவிய பஞ்சங்கள் முதலியன தெளிவாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ளன. பஞ்சத்தைப் பற்றி எழுதும் பொழுது, "சமயக் குரவர் திருவீழிமழலைப் பெருமானை வேண்டிக் காசு பெற்று அடியாரை உண்பித்தனர் என்ற பெரிய புராணச் செய்தியை, "கோயில் பண்டாரம் அடியார் உணவுக்காக பொற்காசுகள் நல்கியது", என்று விளக்குவதன் மூலம் அவருடைய pragmatic and realistic approach தெரிய வருகிறது.
அக்கால சமய நிலையை அழகாக இலக்கிய பின்புலத்தின் மூலம் படம் பிடித்து, திருமுறைகள், திவ்யபிரபந்தம், பெரிய புராண குறிப்புகளைக் கொண்டு, சமண சமய வீழ்ச்சியையும், சைவ சமயம் தழைத்ததையும் விளக்கியிருக்கும் பகுதி மிகவும் சுவையானது. ஊன்றிப் படிக்கப்பட வேண்டியது.
பல்லவர் கோநகரமாம் காஞ்சியைப் பற்றிய செய்திகளுடன் புத்தகம் நிறைவு பெறுகிறது. பல தரவுகளைத் தொகுத்தும், வகைப்படுத்தியும் எழுதப்பட்ட புத்தகமானது, பல புதிய செய்திகளையும், ஆய்வாளர் உழைக்க ஏதுவான பல தொடக்கங்களையும் (உதாரணமாக மூன்றாம் நந்திவர்மனைக் கழற்சிங்க நாயனாராகக் கொள்ளுதல், இராசசிம்மனின் கல்வெட்டையும் பூசலார் கதையில் பல்லவ மன்னன் வான் ஒலி கேட்ட கதையையும் இணைத்திருத்தல்) அளிக்கிறது.
1944-இல் வெளியான பதிப்பு செம்பதிப்பாக இருப்பதாக கூறுகிறார் முனைவர் கலைக்கோவன். சில ஆண்டுகள் முன் வெளி வந்திருக்கும் மறுபதிப்பில் எழுத்துப் பிழைகளும், தொடர் பிழைகளும் கணக்கிலடங்கா. தந்திவர்மரை நந்திவர்மராக அச்சிடுவதால் எத்தகைய குழப்பம் நேரிடும் என்பதைச் சொல்லி அறிய வேண்டியதில்லை. ஓரிடத்தில் நரசிம்மன் தேவர்களை அமைத்தான் என்று இருப்பது கண்டு குழம்பினாலும், தேர்களைத்தான் தேவர்களாக்கியிருக்கிறார்கள் என்று உணர்ந்த பொழுது சிரிப்புதான் வந்தது. புத்தகத்தின் மேற் பகுதியில், ஒரு பக்கம் 'பல்லவர் வரலாறு' என்ற நூற் பெயரும், அடுத்த பக்கத்தில், அப்பக்கத்திற்குத் தொடர்பான தலைப்பும் இருக்குமாறு அச்சிடப்பட்டுள்ளது. நூலின் பாதிக்கு மேல் (இராசசிம்மனைப் பற்றி எழுதியிருப்பதற்கு பிறகு) சமண சமயத்தைப் பற்றிய தலைப்புகள் இடம் பெற்றிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எழுத்துப் பிழைகள் கவனக் குறைவால் நிகழ்வன. வேறொரு புத்தகத்தின் தலைப்புகளை இப்புத்தகத்தில் நுழைக்குமளவிற்கா கவனக்குறைவு ஏற்படும்?
பல்லவரைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு, எளிய முறையில் எழுதப்பட்ட புத்தகமான 'பல்லவர் வரலாறு' மா.இராசமாணிக்கனாரின் உழைப்பின் தரத்தையும், அறிவின் திறத்தையும் உணர்த்த, 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்', என்பது போல அமைந்துள்ளது. ஆந்திரத்தில் பிறந்து, இளமையில் தெலுங்கு மொழியே கற்ற இராசமாணிக்கனாரைத் தமிழன்னை தன் பணிக்கு வேண்டி அழைத்துக் கொண்டதற்கு வேண்டி உளமாற என் நன்றிகளைத் தமிழன்னைக்குச் செலுத்துகிறேன். இந்நூல் இப்பொழுது பதிப்பாளரிடம் (திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) கிடைக்காத நிலையில் அடுத்த பதிப்பைப் பெறும் என்று நம்புகிறேன். அப்பதிப்பாவது பிழையின்றி இருத்தல் வேண்டி இறைவனைத் தொழுகிறேன். தந்தையார் விட்ட இடத்தில் தொடங்கி பல புதிய தகவல்களைக் தந்தும், பல தவறான கருத்துகளைத் திருத்தியும் 'சரித்திரம் படைக்கும்' முனைவர் கலைக்கோவன், இந்நூல் வெளியானதற்குப் பின் வந்த தரவுகளையெல்லாம் தொகுத்து, பழைய வரலாற்றைப் புதியதொரு பரிமாணத்தில், தமிழுலகின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், முழுமையாக எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை, அந்நூலால் பயன் பெறும் பல்லாயிரக்கணக்காண வரலாற்றுத்துறை மாணவர்களின் சார்பாக வைக்கிறேன்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.