பேய்த்தொழிலாட்டி
முனைவர் கலைக்கோவனின் 'பேய்த்தொழிலாட்டி' கட்டுரை 'Ripley's believe it nor not' வகையைச் சேர்ந்தது. எனைத் தாக்கிய ஆச்சரியம் இணையமெங்கும் பரவ இங்கு இடுகிறேன். இணையத்தில் இருக்கும் இலக்கிய/சமய ஆர்வர்கள்/அறிஞர்களை இது அடையுமென்று நம்புகிறேன்.
-- லலிதாராம்
*************************************************************************
பேய்த்தொழிலாட்டி
-இரா.கலைக்கோவன்
அப்பர் பெருமானின் நான்காம் திருமுறையில் தொண்ணூற்றைந்தாம் பதிகமாக அமைந்துள்ளது வீழிமலை விருத்தம். 'மறக்கினும் என்னைக் குறிக் கோள்மினே' என வேண்டி முடியும் இந்த அருமையான பதிகத்தின் நான்காம் பாடலில் (தருமபுரம், 1957) அப்பர் புதிய தகவலொன்றைப் பொதிந்து வைத்துள்ளார். 'தீத்தொழிலான் தலை தீயில் இட்டுச் செய்த வேள்வி செற்றீர்' எனத் தொடங்கும் இப்பாடலின் இரண்டாம் அடி, 'பேய்த்தொழிலாட்டியைப் பெற்றுடையீர்' என்கிறது. இவ்வடிக்கு உரை எழுதும் முத்து சு.மாணிக்கவாசகன், 'பேயின் தொழிலை ஆள்பவரைப் பெற்றுடையவரே' என்று அப்பர் பெருமான் இறைவனைப் போற்றுவதாகக் கூறுகிறார். பேயின் தொழிலாளும் இப்பெண்மணி யார்? பேய்களின் தலைவியா? சிவபெருமான் இவரைப் பெற்றுடையவர் எனில், இப்பெண்மணி சிவபெருமானின் திருமகளா?
முத்து சு.மாணிக்கவாசகன், 'பேய் ஊர்தி உடையாள் ஒரு பெண் விநாயகர்க்குத் தங்கை முறையிற் கொள்ளப்பெறும் வரலாறு உண்டு' என்று விளக்கம் தருவதுடன் தம் விளக்கத்திற்குச் சான்றுகளாக நம்பியாண்டார் நம்பியின் திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை (பதினோராம் திருமுறை, சைவ சித்தாந்த பெருமன்றம், 1990, பக். 276-279)யிலிருந்து இரண்டு பாடல்களை முன் வைக்கிறார், இவ்விரண்டினுள் நான்காம் பாடல்,
'பேசத் தகாதெனப் பேயெரு
தும்பெருச் சாளியும்என்
றேசத் தகுந்தொழில் ஏறுவ
தேஇசை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும்
நுந்தையும் நீயும்இந்தத்
தேசத் தவர்தொழு நாரைப்
பதியுட் சிவக்களிறே'
என அமைந்துள்ளது. இப்பாடலில் பேய், எருது, பெருச்சாளி எனும் மூன்று ஊர்திகள் குறிக்கப்பட்டு, அவற்றில் ஏறுவாராக, 'நுங்கை, நுந்தை, நீ' என்பார் சுட்டப்படுகின்றனர். 'நீ' என்பது நாரைப்பதிச் சிவக்களிறான பிள்ளையாரைக் குறிப்பதால், நிரல்படி அவர் ஏறும் ஊர்தி பெருச்சாளி எனப் பொருந்த, 'நுந்தை' சிவபெருமானாகிறார். அவர் ஊர்தி எருதாகப் பொருந்துகிறது. 'நுங்கை' எனச் சுட்டப்படும் பிள்ளையாரின் தங்கைக்கு ஊர்தி 'பேய்' என்பது நம்பியாண்டார் கூற்று. பேயை ஊர்தியாகக் கொண்ட இப்பெருமாட்டி பிள்ளையாரின் தங்கை எனில் சிவபெருமானின் திருமகளன்றோ!
இரட்டை மணிமாலையின் பதினான்காம் பாடல், 'வீரணக்குடி ஏந்திழைக்கும் பூந்தார்க் குமரற்கும் நீ முன்னினை' என்று நாரைப்பதி விநாயகரைப் போற்றுகிறது.
'ஏறிய சீர்வீ ரணக்குடி
ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும்
முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி
னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப்
பதியுள் விநாயகனே'
வீரணக்குடி என்று பதிப்பு சுட்டும் ஊரை, முத்து சு.மாணிக்கவாசகன், 'வீரனற்குடி' எனக் கொண்டு குறித்துள்ளார். இந்த இரண்டு பாடங்களில் எது சரியானது?
வீரணக்குடியே சரியான பாடம் எனக் கொள்ளின், நம்பியாண்டாரின் இரண்டு பாடல்கள் வழி பிள்ளையாரின் தங்கையாக அறிமுகமாகும் இந்த ஏந்திழை, வீரணக்குடி இருப்பவர் எனக் கொள்ள நேரும். பேயை ஊர்தியாக உடைய இவரைப் பற்றி வேறெந்த தகவலும் இலக்கியங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இவர் ஊர்தியாகக் கொண்டிருக்கும் பேய் சிவபெருமானுக்கு மிக நெருங்கிய உறவாகத் திருமுறை ஆசிரியர்களால் கொண்டாடப்படுகிறது. அப்பர் பெருந்தகை, 'பேய்க் கணத்தோடு இணங்கி நின்றாடியவை' இறைவன் திருவடிகள் என்று போற்றுகிறார். பேய்கள் வாழும் காட்டிலேயே இறை நடனம் நித்தமும் நடக்கிறது. இறையாடலுக்குப் பாடுநர்களாகவும் அவ்வாடலின்போது உடன் ஆடுநர்களாகவும் அவ்வாடலுக்கு இசைக்கூட்டும் கருவிக் கலைஞர்களாகவும் கூடப் பேய்கள் திகழ்வதைக் காணமுடிகிறது. பேய்ச் சுற்றம் கொண்டவராய்ப் பேயுகந்து ஆடுநராய்க் காட்டப்படும் பெருமானின் பேய் நாட்டப் பின்னணியில் பேய்த்தொழிலாட்டி மிளர்வதைப் பொருத்திப் பார்க்கலாம்.
இதுநாள்வரையிலும் அடையாளப்படுத்தப்படவில்லை எனினும் இனி, ஆய்வாளர்கள் தமிழ்நாட்டுத் திருகோயில்களில் வீரணக்குடி ஏந்திழையைத் தேடிப் பார்க்கலாம். கல்வெட்டுகளில், சிற்பக் காட்சிகளில் பேய்த் தொழிலாட்டியைக் கண்டறிய முயற்சிக்கலாம். சைவ சமய அறிஞர்களும் திருமுறை வல்லாரும் உரிய சான்றுகளுடன் இப்பேய்த்தொழிலாட்டியை யார் என உணர்த்திக் கற்பனைகள் வளராமல் தடுக்கலாம்.
வரலாற்றில் பல முதல்களுக்குச் சொந்தக்காரராகத் திகழும் அப்பர் பெருந்தகை, சிவக்குடும்பத்தின் இளைய நங்கையை அறிமுகப்படுத்துவதிலும் முதல்வராகிச் சிறப்பது ஈண்டு கருதி மகிழத் தக்கதாகும்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.